*ஸிஹ்ரு - சூனியம்* (part -1)
"சூனியம்" என்ற சாதாரனமான இந்த வார்த்தை தற்போது, ஒருவரை முஸ்லிமா? அல்லது காபிரா? என்று தீர்மாணிக்கும் சக்தி வாய்ந்த வார்த்தையாக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழ்பேசும் நல்லுலகத்தில் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு வார்த்தைதான் "சூனியம்". கவனக்குறைவாக கையாண்டால் நமக்கும் காபிர் ஃபத்வா நிச்சயம் உண்டு. ஆதலால் கவனத்துடன் சூனியத்தை கையாள்வோம்.
*சூனியக் குழப்பம்*
சுமார் 15 வருடங்களுக்கு முன்புதான் சூனியத்திற்கு சூனியம் பிடித்தது. உப்பு சப்பில்லாத எந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுத்து அதை வெற்றிகரமாக மாற்றும் வித்தை தெரிந்த பீஜே அவர்கள் சப்தமாக ஆமீன் கூறுதல், விரல் அசைத்தல், நெஞ்சில் கைகட்டுதல் போன்றவற்றை கையிலெடுத்து வெற்றிகரமாக ஆக்கியவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அதன் தொடர்ச்சியாக சூனியத்தை கையிலெடுத்தார். அதில் உப்பு காரம் என அனைத்து மசாலாக்களையும் சேர்த்து வெற்றிகரமான ஒரு கலவையாக அதை ஆக்கினார்.
"சூனியத்திற்கு தாக்கம் (சக்தி) இருக்கிறதா?" என்றொரு அதிரடி கேள்வியை எழுப்பினார். [அடிமுட்டாள்தனமான இந்த கேள்வியை விரிவாக பின்னர் பார்ப்போம்]
அவ்லியாக்களுக்கு சக்தி இருக்கிறது என்று நம்பும் கூட்டத்தை இந்த கேள்வி பாதிக்கவில்லை. சூனியத்திற்கு சக்தி உண்டு என்றும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வழக்கம்போல் அந்த கூட்டம் கூறியது.
தவ்ஹீத் பேசும் சலபு கூட்டத்தைதான் இந்த கேள்வி பாதித்தது. குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆய்வு செய்துவிட்டு "அல்லாஹ் நாடினால் சூனியத்திற்கு தாக்கம் தருவான்" என்றனர் சலபுகள்.
இதற்குப் பிறகுதான் பீஜே அவர்களின் "சூனிய ஆட்டம்" தொடங்கியது. இந்த ஆட்டத்தின் மூலம் தமிழ்பேசும் நல்லுலகத்தில் சூனியம் தொடர்பாக மூன்று விதமான கருத்துக்கள் உருவாகக் காரணமாக மாறினார் பீஜே.
(1) சூனியம் என்பது உண்மை, அதற்கு தாக்கம் உண்டு.
(2) சூனியம் இருக்கிறது, அல்லாஹ் நாடினால் அதற்கு தாக்கத்தை தருவான்.
(3) சூனியம் என்பது பொய், அதற்கு எந்த தாக்கமும் இல்லை.
இந்த மூன்று கருத்துக்களையும் விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்பாக இந்த "சூனிய சிந்தனை" பீஜே அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
*ஆரம்பகால ஏகத்துவம்*
இயக்கங்கள் இல்லாமல் ஒரே குடையின்கீழ் ஏகத்துவத்தை பரப்பிய ஆரம்பகாலத்தில் சூனியம் தொடர்பாக அனைத்துதவ்ஹீத்வாதிகளும் (பீஜே உட்பட) ஒரே கருத்தில்தான் இருந்தனர்.
"சூனியம் என்பது உண்மை, நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மை, தனக்கு வைக்கப்பட்ட சூனியத்தை அகற்றுவதற்கு நபிகளாருக்கே சக்தி இல்லை, அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த பிறகே நபிகளாருக்கு சூனியம் அகன்றது, ஆகவே, அவ்லியாக்களிடம் கேட்காமல் அல்லாஹ்விடம் கேளுங்கள்"
இதுதான், சூனியம் தொடர்பாக தவ்ஹீத்வாதிகளின் பொதுவான கருத்தாக இருந்தது.
இந்நிலையில்தான், சூனிய மறுப்புக் கொள்கையை கையிலெடுத்தார் பீஜே.
சூனிய மறுப்புக் கொள்கையை பீஜே அவர்கள் கையிலெடுக்கக் காரணமாக அமைந்தது சல்மான் ருஷ்டியின் ஒரு புத்தகம்தான்.
*சாத்தானின் கவிதைகள்*
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்ததாக கூறப்பட்ட ஒரு பொய்யான செய்திக்கு கண், காது, மூக்கு வைத்து சாத்தானின் கவிதைகள் என்ற ஒரு கற்பனையைக் கதையை இயற்றினான் சல்மான் ருஷ்டி என்பவன்.
குர்ஆன் 53:19, 53:20 ஆகிய இரு வசனங்களிலும் இடம்பெற்றிருக்கும் லாத், உஸ்ஸா, மனாத் ஆகிய போலி தெய்வங்களின் பெயர்களைத் தொடர்ந்து "அவைகளிடம் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கதுதான்" என்றொரு வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதியதாகவும் பின்னாளில் அந்த வசனம் நீக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதுதான் அந்த பொய்யான செய்தி
நபி(ஸல்) அவர்களை இப்படி ஒரு வசனத்தை ஷைத்தான் ஓத வைத்துவிட்டான் என்பதுதான் அந்த கற்பனை.
இப்படி ஒரு கற்பனைக்கு இடம் தருவதற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக சொல்லப்படும் ஹதீஸும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று எண்ணினார் பீஜே. நபி(ஸல்) அவர்கள் தான் செய்யாததை செய்ததாக எண்ணும்படி அவருக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை சொல்வதுதான் அந்த ஹதீஸ்.
நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் சூனியம் மூலம் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது உண்மையென்றால், நபிகளாருக்கு வந்த வஹியிலும் சந்தேகம் வருமே என்று ஒரு ஃபித்னாவை எழுப்பினார் பீஜே.
"வஹியில் சந்தேகம்" என்ற
இல்லாத ஒரு ஃபித்னாவை உருவாக்கி அதன்படி எதிரிகள் சந்தேகம் கொள்வார்களே என்ற கற்பனையான அச்சத்தை விதைத்து தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சூனியம் செய்தார் பீஜே.
என்ன! பீஜே சூனியம் செய்தாரா!!
சூனியம் என்பது பொய்! சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்பவன் காபிர்!! என்று ஃபத்வா கொடுத்த பீஜே சூனியம் செய்தாரா???
என்று ஆச்சர்யத்துடன் யாரோ கேட்பது காதில் விழுகிறது.
ஆம். பீஜே சூனியம் செய்தார்.
இன்ஷா அல்லாஹ் சூனியம் தொடரும்...
பிறை மீரான்.
No comments:
Post a Comment