பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

நபிகளாருக்கு சூனியம் - 3

*நபிகளாருக்கு சூனியம் - ஒரு விளக்கம்* (Part -3)

நபி(ஸல்) அவர்கள் விதிப்படி நோயுற்றார்கள். விதிப்படி அதில் இருந்து நிவாரணம் அடைந்தார்கள். இதில், "நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்ற வாசகத்துடன் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அந்த செய்தியை கூறியதுதான் அதில் உள்ள மிகப் பெரிய முடிச்சு. இந்த முடிச்சை அவிழ்ப்போம்.

நபிகளாருக்கு நோய் ஏற்பட்டபோது அவர்கள் அல்லாஹ்விடம் நிவாரணம் கேட்டவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். அன்னாருக்கு எதிராக யூதன் செய்த சூனியம் நபிகளாருக்கும் தெரியாது.

அதனால், நபிகளாருக்கு அந்த நோய் இருந்த வரையிலும் "நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்ற வாசகத்தை எவரும் கூறியிருக்கவே முடியாது. நபிகளார் நிவாரணம் அடைந்த நிலையில்தான் கனவில் நடந்ததை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள். அதற்குப் பிறகுதான் யூதன் ஒருவனால் சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தியே அன்னைக்கும் தெரியவருகிறது.

ஒரு சம்பத்தை நினைவு கூறும்போது அந்த சம்பவத்தை அடையாளப்படுத்தி கூறுவது அரபுலகத்தின் நடைமுறை.

"நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்" என்று மொட்டையாக கூறும்போது பல கேள்வி எழும். ஜும்ஆவில் நிகழ்த்திய உரை? பெருநாள் உரை? எந்த இடத்தில் நிகழ்த்திய உரை?
எப்போது நிகழ்த்திய உரை?  இப்படியாக பல கேள்விகள் எழும்.

"ஹஜ்ஜத்துல் விதா"வில் நிகழ்த்திய உரை என்று சொன்னால் போதும்! அந்த நிகழ்வுகள் அனைத்தும் நம் கண்முன்னே ஓடும். நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்தபோது அரபா பெருவெளியில் நிகழ்த்திய உரைதான் "இறுதிப் பேருரை" எனப்படுகிறது.

அரபாவில் நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியபோது அந்த உரையை "இறுதி உரை" என்று எவரும் அடையாளப்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்கள் இறந்ததற்குப் பிறகே அன்னார் செய்த ஹஜ் "இறுதி ஹஜ்" என்றும், அங்கு அன்னார் நிகழ்த்திய உரை "இறுதிப் பேருரை" என்றும் அடையாளப்படுத்தப்பட்டது. ஒரு நிகழ்வை அடையாளப்படுத்தி பெயரிடுவது அரபுலகத்தில் சாதாரணமான ஒன்றே.

நபி(ஸல்) அவர்கள் எத்தனையோ தடவை நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். "நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள்" என்று மொட்டையாக கூறாமல் அந்த நோய்வாய்ப்படுதலோடு தொடர்புடைய சம்பவத்தைக் கொண்டு அது அடையாளப்படுத்தப்படுகிறது. 

நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டதும் உண்மை. அதேநேரத்தில் யூதன் ஒருவனால் சூனியம் செய்யப்பட்டதும் உண்மை.

அந்த நிகழ்வு "நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது" என்ற வாசகத்தின் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது.

விதிப்படி நடக்கும் நிகழ்வுகளுள் நல்லவற்றை அல்லாஹ் நிகழ்த்தினான் என்றும், கெட்டவற்றை ஷைத்தான் நிகழ்த்தினான் என்றும் கூறுவதுதான் இஸ்லாமிய நடைமுறை.

"நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது,...
(38:42)

அய்யூப்(அலை) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ஷைத்தான் தன்னை தீண்டிவிட்டான் என்றே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்துதான் என்பது தெரிந்தாலும்,  விதிப்படி நிகழும் கெட்டவற்றை ஷைத்தானுடன் முடிச்சிடுவது இஸ்லாமிய நடைமுறைதான்.

ஆகவே, விதிப்படி நபிகளாருக்கு ஏற்பட்ட நோயை, ஷைத்தானிய சூனியத்துடன் முடிச்சிட்டு "நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்று அந்த நிகழ்வை அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியது ஒரு அடையாளப்படுத்துதல் மட்டுமே.

"நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்ற அந்த நிகழ்வில் சூனியம் தொடர்பான பல மூடநம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன.

ஒருவருக்கு எதிராக வைக்கப்பட்ட சூனியத்தை சூனியக்காரனிடம் சென்றுதான் அகற்ற வேண்டும் என்ற மூட நம்பிக்கையில் இருந்த அந்த மக்களுக்கு, அல்லாஹ்விடம் உதவி தேடுவதன் மூலமாக மட்டுமே ஷைத்தானிய தீங்கிலிருந்து விலக வேண்டும் என்ற உண்மை  "நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்ற சம்பவத்தின் மூலம் தெளிவாக்கப்படுகிறது.

அல்லாஹ் நிவாரணம் அளித்த பிறகும் அந்த கினற்றுக்கு நபிகளார் சென்றதை "சூனியப் பொருட்களை அடையாளம் கண்ட பிறகே நிவாரணம் அடைந்தார்கள்" என்று முடிச்சு போடுகிறார்கள்.

இறைத்தூதர்களின் கனவும் வஹீ என்பதைப் பார்த்தோம். கனவை உண்மைப் படுத்துவது தூதர்களின் கடமை. இபுறாஹிம்(அலை) அவர்கள் தான் கண்ட கனவை உண்மைப்படுத்தினார்கள். அதுபோலவே இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் தான் கண்ட கனவை உண்மைப்படுத்தினார்கள்.

சூனியப் பொருட்கள் இருந்த கினற்றை அடையாளம் கண்டு, சூனியப் பொருட்களையும் உறுதி செய்து அந்த கினற்றை முடிவிடவும் உத்தரவிட்டார்கள்.

சூனியம் என்ற ஷைத்தானிய செயலை செய்பவர்களின் வரலாற்றிலேயே, சூனியம் செய்தவன் எந்த பொருட்களில் சூனியம் செய்தானோ அந்த சூனியப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது "நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்ற நிகழ்வில் மட்டுமே.

[வைக்கப்பட்ட சூனியத்தை அகற்றுகிறேன் என்று கூறும் சூனியக்காரன், தான் மறைத்து வைத்திருக்கும் பொருட்களைத்தான் வெளிப்படுத்துவானே தவிர வைக்கப்பட்ட சூனியப் பொருட்களை அகற்றுகிறான் என்பது பொய்]

"நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்று தொடங்கும் செய்தி நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான மற்றுமொரு அத்தாட்சியே.

முற்றும்.

பிறை மீரான்.

No comments:

Post a Comment