*சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா?* (Part - 1)
சும்மா கிடந்த சூனியத்தை சில ஆண்டுகளுக்கு முன்புதான் சுண்டி எழுப்பினார் பீஜே அவர்கள்.
சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா? என்றொரு அதிரடியான கேள்வியை எழுப்பினார். அவருடைய பேச்சை அப்படியே ஒப்பிக்கும் எழரை லட்சம் உறுப்பினர்களும் அந்த கேள்வியை உலகமெங்கும் தமிழ்பேசும் மக்களிடம் தெறிக்க விட்டனர்.
இந்த கேள்வி சரியான கேள்வியா? என்பதைப் பார்ப்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.
தாஃவா களத்தில் இருப்பவர்கள், அறியாமையில் இருக்கும் மக்களின் சிந்தனையைத் தூண்டும் அறிவுபூர்வமான கேள்விகள் கேட்க வேண்டும். நாம் கேட்கும் கேள்விகள் மூலம் அவர்களுடைய சிந்தனை தூண்டப்பட்டு உண்மையை உணரக்கூடியவர்களாக அவர்கள் மாற வேண்டும். அதைவிடுத்து அறிவீனமான கேள்விகளை கேட்டால் அவர்கள் சத்தியத்தை ஏற்காமல் அசத்தியத்தை நிறுவுவதற்கே முனைவார்கள். அதாவது, நாம் கேட்கும் கேள்வி அவர்களை திருத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர திரும்பவும் அந்த தவறிலேயே அவர்களை இருக்க வைப்பதாக இருக்கக் கூடாது.
அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்து மக்களை முஷ்ரிக்காக மாற்றிய ஒரு கேள்வியைப் பார்ப்போம்.
மவ்லித் என்ற அறியாமை அகற்றப்படவேண்டும். நல்ல விஷயம்தான். அதை உண்மை என்றும் நன்மை என்றும் நம்பும் மக்களிடம் நாம் தாஃவா செய்ய வேண்டிய விதம் என்னவாக இருக்கவேண்டும்?
அறிவுபூர்வமாகவா? அல்லது அறிவீனமாகவா?
"முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் அவர் காட்சி தருவார் என்று முஹைதீன் மவ்லிதில் வருகிறது. எங்கே அவரை அழைத்துக் காட்டுங்கள்" என்று பீஜே அவர்களின் தரப்பில் ஒரு அறிவுபூர்வமான கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வியின் நோக்கம் என்னவென்றால், முஹைதீன் ஆண்டவர் கேட்கமாட்டார், அதனால் அவர் வரமாட்டார் என்பதை நிரூபிப்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி இது. இதன் மூலம், முஹைதீன் ஆண்டவர் வரமாட்டார் என்பதை புரிந்து கொண்டு மவ்லிது பார்ட்டிகள் மவ்லிதை விட்டுவிடுவார்கள் என்ற நோக்கத்தில் கேட்கப்பட்ட கேள்வி.
ஆனால், இந்த கேள்வி அவர்கள் பிரார்த்திக்கும் முஹைதீன் ஆண்டவரின் இயலாமையை வெளிப்படுத்தும் கேள்வி. இந்த கேள்வி முஹைதீன் ஆண்டவரை கேலி செய்வதாக அவர்கள் நினைக்கும் கேள்வி. அவர்கள் பிரார்த்திக்கும் எந்த ஒன்றையும் கேலி செய்தால் அவர்கள் பதிலுக்கு அல்லாஹ்வை கேலி செய்வார்கள்.
முஹைதீன் ஆண்டவர் இங்கு வருவது இருக்கட்டும்! எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எப்படி அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் அல்லாஹ் பதிலளிப்பான் என்று நீங்கள் கூறுகிறீர்களே!! அது உண்மையானால் அல்லாஹ்வை அழைத்துக் காட்டுங்கள்!!! என்று பீஜேவுக்கு பதிலளித்தனர்.
அதாவது, "நீங்கள் அல்லாஹ்வை அழைத்துக் காட்டுங்கள். நாங்கள் முஹைதீனை அழைத்துக் காட்டுகிறோம்'' என்று பீஜேவுக்கு பதிலளித்தனர்.
மற்றவர்கள் பிரார்த்திக்கும் எந்த ஒன்றையும் கேலி செய்யக்கூடாதென அல்லாஹ் கூறிவிட்டான். அதையும் மீறி அவற்றை கேலி செய்தால் அவர்கள் அல்லாஹ்வைத்தான் ஏசுவார்கள் என்பதையும் கூறிவிட்டான்.
"அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்..." (6:108)
மக்களை சத்தியத்தின்பால் வென்றெடுக்கிறேன் என்று கூறி அறிவீனமான ஒரு கேள்வியைக் கேட்டு அந்த மக்களை அசத்தியத்திலேயே நிலைபெறச் செய்ததுதான் பீஜே அவர்களின் கேள்வியால் நிகழ்ந்தது.
முஹைதீனை அழைத்துக் காட்டு என்று பீஜே கேட்டவுடன், பதிலுக்கு அல்லாஹ்வை அழைத்துக் காட்டு என்று மவ்லித் பார்ட்டிகள் கூறியவுடன்...
பார்த்தீர்களா! இந்த வழிகெட்ட கூட்டத்தை!!
அல்லாஹ்வை கூப்பிடச் சொல்கிறார்கள்!!! என்று கூப்பாடு போட்டார் பீஜே. இதன் மூலம் அவர்கள் வாயாலேயே அவர்களை வழிகெட்ட கூட்டமாக மாற்றினார் பீஜே.
இந்த அறிவீனமான கேள்வியால் பீஜே நிறுவியது என்ன என்று தெரியுமா?
முஹைதீனும் வரமாட்டார், அல்லாஹ்வும் வரமாட்டான் என்பதைத்தான் அந்த கேள்வியின் மூலம் நிறுவினார் பீஜே.
இதைத்தான் ஏழரை லட்சம் உறுப்பினர்களும் அறிவுபூர்வமான கேள்வி என்று அங்கலாய்த்தனர்.
என்னுடைய பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஒரு முஸ்லிம் மாணவன் ஒரு மாற்றுமத மாணவனிடம், உன்னுடைய கடவுளுக்கு சக்தி இருக்கிறதா? என்று ஒரு கேள்வி கேட்டான்.
அதற்கு, அந்த மாற்று மத மாணவன் ஒரு கதை சொன்னான்.
முன்னொரு காலத்தில் அவனுடைய கடவுளும் அல்லாஹ்வும் நண்பர்களாக இருந்தார்களாம். இரண்டு பேரும் யார் சக்திவாய்ந்தவர்கள் என்பதை பார்ப்போம் என்று தங்களுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டார்களாம். ஒருவரையொருவர் அறைந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டதாம். முதலில் அவனுடைய கடவுளை அல்லாஹ் அறைந்தாராம். வாங்கிய அறையில் ஒரு ஊரில் விழுந்தாராம். அந்த ஊரிலியே தங்கி மக்களுக்கு அருள் பாலிக்க ஆரம்பித்துவிட்டாராம் அவனுடைய கடவுள்.
பிறகு, அவனுடைய கடவுள் அல்லாஹ்வை அறைந்தாராம் (அஸ்தஃபிருல்லாஹ்). அல்லாஹ் எங்கே போனார் என்றே தெரியவில்லையாம்.
நிலைத்து நிற்கும் என்னுடைய கடவுளுக்கு ஆற்றல் இருக்கிறதா! அல்லது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத உன்னுடைய அல்லாஹ்வுக்கு ஆற்றல் இருக்கிறதா!! என்று கேட்டான் அந்த மாற்றுமத மாணவன்.
இதற்கு பதிலளிக்க எந்த வகையில் முயன்றாலும் அல்லாஹ்வின் கண்ணியத்தை குறைப்பதாகவே அமையும்.
தாஃவா களத்தில் நம்முடைய கேள்வி அறிவுபூர்வமானதாகவும், விவேகத்துடனும் இருக்க வேண்டும் என்றும், விவாதம் செய்வதாக இருந்தால் அழகிய முறையில் இருக்க வேண்டும் என்றும் குர்ஆன் வசனம் வலியுறுத்துகிறது.
"விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!" ... (16:125)
அழகிய முறையில் விவாதம் செய்ய முடியவில்லையென்றால் அமைதியாக இருந்துவிட வேண்டியதுதான். அதைவிடுத்து "என் புருஷனும் போனானாம் கச்சேரிக்கு" என்ற ரீதியில் அறிவீனமான கேள்விகளை கேட்டு விவாதம் செய்கிறேன் என்ற பெயரில் தாஃவா களத்தை சூடாகவே வைத்திருக்கும் வேலையைச் செய்யக்கூடாது.
இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி எழும்?
இறைத்தூதர்கள் பலரும் இத்தகைய கேள்விகளை மறுப்பாளர்களிடம் கேட்டிருப்பதாக குர்ஆன் வசனம் கூறுகிறதே!
இறைத்தூதர்கள் கேட்ட அந்த கேள்விகளும் அறிவுபூர்வமான கேள்விகள் இல்லை என்றா சொல்கிறாய்!! என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
அந்த வசனங்களையும் பார்ப்போம்...
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
பிறை மீரான்.
No comments:
Post a Comment