#தற்பெருமையை_தவிர்ப்போம்
ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடனும் தெள்ளத் தெளிவாகவும் இருக்கும் நாம், மறுமையில் நம்மை தோல்வியடைய செய்யும் முக்கியமான விஷயமொன்றில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
அது தான் தற்பெருமை, ஆணவம்.
அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள் பெருமை அல்லாஹ்வின் ஆடை. அதில் (பெருமையில்) அவனுடன் போட்டி போட முயற்சிப்பவரை அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்.(#முஸ்லிம்5114)
மற்றொரு ரிவாயத்தில், எவரது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவரால் சொர்க்கம் செல்லவே முடியாது என்றும் நபிகள் பெருமானார் கூறுகிறார்கள் (#முஸ்லிம்148) என்றால், இது விஷயமாக நாம் மிக அதிகமான அச்சத்தை கொள்ள வேண்டும்.
மற்ற அனைவரையும் விட சொர்க்கம் செல்லும் தகுதிகளை அதிக கொண்டிருக்கிற நாம், இது போன்ற தீய பண்புகள் மூலம் அந்த பாக்கியத்தை இழந்து விடக்கூடாது.
இதோ, ஆணவம் தொடர்பாய் மேலும் இரு செய்திகள் :
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. (#அல்குர்ஆன் 28:83)
ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (#திர்மிதி 1497)
இம்மையில் நமக்கு ஏற்படும் வெற்றிகள், நாம் பெறும் கல்வி, மறுமை தொடர்பாய் நாம் செய்யும் தாவாக்கள், விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் என எந்த காரியத்தையும் அல்லாஹ்வை முன்னிறுத்தியே நாம் அணுக வேண்டும்.
நமது வெற்றிகள் அவன் தந்தவை, அதில் எள்ளளவு பங்கும் நமக்கில்லை என்பதை மனதில் கொள்வோம் !!
No comments:
Post a Comment