பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, September 17, 2019

சூரா_அல்_ஃபாதிஹா

#அத்தியாயம்

#சூரா_அல்_ஃபாதிஹா

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனின் அருள்  நபிகளார் மீதும் ஈமான் கொண்ட அனைவரின் மீதும் பொழியட்டுமாக!

அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் "லவ்ஹூல் மஹ்ஃபூள்" என்ற "பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து" அல்குர்ஆனை முதல் வானத்திற்கு மொத்தமாக இறக்கி ,அதற்குப் பின் அங்கிருந்து சிறுகச் சிறுக  நபிகளார் மீது இறக்கியருளினான்.

இத்தகைய கண்ணியம் பொருந்திய வேதத்தின் ஒவ்வொரு வசனத்திற்குப் பின்னாலும் பல வரலாற்று உண்மைகள் பொதிந்திருப்பது போலவே இவற்றிற்கெல்லாம் மகுடமாக இருக்கும் அத்தியாயத்திற்கும் (அதாவது தலைப்பிற்கும்) பல வரலாற்று சம்பவங்கள் உள்ளன.

அத்தியாயங்களுக்கு வெறுமெனே பெயர்கள் மட்டும் சூட்டப்படவில்லை. அதற்கென சில வரலாறுகளும் காரணங்களும் உள்ளன. அந்த காரணங்களையும் அத்தியாயங்களில் உள்ள சிறப்புகளையும் அவற்றின் கருப்பொருளையும் இக்கட்டுரையில் தொடராக் காண்போம்.

இன்ஷா அல்லாஹ்

அத்தியாயம் 1:

திருக்குர்ஆனில் முதல் அத்தியாயம் 'சூரா அல்-ஃபாதிஹா'. "தோற்றுவாய்" என்றும் "தொடக்கம்"எனவும்  பொருள்படும்.

அத்தியாயத்தின் பெயர் காரணம்:

'அல்-ஃபாதிஹா' என்றால் தொடக்கம் என்பது பொருள். குர்ஆன் தொகுக்கப்பட்ட அடிப்படையில் இது முதல் அத்தியாயமாக இருப்பதாலும், திருக்குர்ஆனில் தொடக்கமாக இருப்பதாலும் இந்த அத்தியாயம் இப்பெயர் பெற்றுள்ளது.

அத்தியாயத்தின் வேறுபெயர்கள் :

இந்த அத்தியாயத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. அவற்றில் சில:

1.அல்-ஹம்து (புகழ்) : ஆரம்பத்தில் அல்லாஹ்வை புகழ்வதால் இப்பெயர் வந்துள்ளது.

2.அஸ்-ஸப்உல் மஸானீ (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) : தொழுகையின் அனைத்து ரகாத்களிலும் திரும்பத் திரும்ப இது ஓதப்படுவதால் இப்பெயர் வந்துள்ளது.

3.ஸலாத் (தொழுகை) : இந்த அத்தியாயத்தை ஓதுவது தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட ஒரு நிபந்தணையாக இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.

4.உம்முல் குர்ஆன் அல்லது உம்முல் கிதாப் (குர்ஆனின் தாய்) : குர்ஆனுடைய அஸ்திவாரமாக இந்த அத்தியாயம் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

அத்தியாயத்தின் சிறப்புகள் :

1.அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், "இறை நம்பிக்கையாளர்களே!உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்" என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?என்று கேட்டார்கள்.

பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் (ஸல்) : அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அலஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆனும் ஆகும் என்று சொன்னார்கள். (புகாரீ - 4474)

2.நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவரை தேள் கொட்டிவிட்டது. அவருக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர். எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!' என்று கூறினர்.

அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து : 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!' என்றார்.

அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..' என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள்.

'இதைப் பங்கு வையுங்கள்!' என்று நபிதோழர் ஒருவர் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!' என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது (அல்-ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் நபிகளார் சிரித்தார்கள். (புகாரீ - 2276)

3.இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)" என்று கூறினார்கள்.
அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை" என்று கூறினார்கள்.

அவ்வானவர் ஸலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்- ஃபாதிஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை"என்று கூறினார். (முஸ்லிம் -1472)

4.அபூஹுரைரா (ரலி) அவர்கள் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவு பெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நாங்கள் இமாமக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதுமா ஓத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்.

அடியான் "அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்" (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான்.

அடியான் "அர்ரஹ்மானிர் ரஹீம்" (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான்.

அடியான் "மாலிக்கி யவ்மித்தீன்" (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான்.

(நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.)

மேலும், அடியான் "இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்" (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.

அடியான் "இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்" (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். (முஸ்லிம் - 655)

5.நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'தவ்ராத்' வேதத்திலோ 'இன்ஜீல்' வேதத்திலோ உம்முல் குர்ஆனைப் போன்று ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கி அருளவில்லை அதுதான் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களாகும். (திர்மிதீ)

அத்தியாயத்தின் கருப்பொருள்:

*அடைப்புக் குறிக்குள் இருப்பது வசன எண்கள் ஆகும்.

அல்லாஹ்வின் திருநாமங்களில் இரண்டு பெயர்கள் இடம்பெற்றுள்ளன.(அர்ரஹ்மான் அர்ரஹீம்) .(2)

மறுமையின் ஆட்சி அதிகாரங்கள் அல்லாஹ்வுக்கே.(3)

வணக்கங்கள் யாவும் அல்லாஹ்விற்கே செலுத்த வேண்டும்.(4)

நேர்வழி அல்லாஹ்வின் கைவசம் உள்ளது.(5)

நல்லோர்களை பின் தொடர வேண்டும்.(6)

தீயவர்களின்  வழியைவிட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும்.(7)

இன் ஷா அல்லாஹ் தொடரும்...

✒Yusuf ibnu Hussain

📤 இதை அனைவருக்கும் பகிரவும்

💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]

📲 ஆதாரப்பூர்வமான நினைவூட்டல்களுக்கு

Whatsapp: https://chat.whatsapp.com/H0kjgowfEnr8LUv8RKi8t8

Facebook: www.facebook.com/hadeeskalvi

No comments:

Post a Comment