*சூனியம் - ஸிஹ்ரு* (Part -8)
மனிதர்களுக்கு உலகில் நடக்கும் "அமானுஸ்ய நிகழ்வுகளை" புறந்தள்ளிவிட்டு சூனிய முடிச்சுகளை அவிழ்க்க முடியாது. இந்த "நிகழ்வுகளை" முற்றிலும் புறந்தள்ளிவிட்டுதான் தனது சூனியக் கொள்கையை நிலைநிறுத்த முயல்கிறார் பீஜே. அந்த நிகழ்வுகள் புறந்தள்ளக்கூடியதல்ல. அந்த நிகழ்வுகள்தான் "சூனியம் பலிக்கும்" என்றும் "அல்லாஹ் நாடினால் சூனியம் பலிக்கும்" என்றும் கருத்துக்கள் உருவாகக் காரணமாக அமைந்திருப்பவை. அவற்றையும் அலசுவோம்.
எதையெல்லாம் ஸிஹ்ரு (சூனியம்) என்று அழைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் சூனிய முடிச்சுக்களை அவிழ்க்க முடியாது. அதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஸிஹ்ரு என்ற அரபு வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். அவை,
(1) பார்ப்பவர் கண்களை தந்திரமாக
மயக்குதல் (மேஜிக்)
(2) பேச்சின் மூலம் கேட்பவர் சிந்தனையைக் கவர்தல் (பயான்)
(3) தீய சக்திகள் மூலம் அமானுஷ்யங்களை நிகழ்த்துதல் (சூனியம்)
இவற்றுள் முதலாவது மற்றும் இரண்டாவதைப் பற்றி நாம் பார்த்துவிட்டோம். நாம் பார்க்கப்போவது மூன்றாவதைப்பற்றித்தான்.
ஸிஹ்ரு என்ற வார்த்தையை "சூனியம்" என்று மொழிபெயர்த்தாலும் இந்த வார்த்தைக்குள் பில்லி, ஏவல், செய்வினை, வசியம், மாயம், மந்திரம் போன்ற அனைத்து அமானுஸ்ய விஷயங்களும் அடங்கிவிடும். அதாவது, தீய சக்திகளால் நிகழும் அமானுஸ்ய செயல்களைத்தான் "சூனியம்" என்று அழைக்கிறார்கள்.
உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களும் சூனியத்தை தீயசக்திகள்தான் நிகழ்த்துகின்றன என்பதில் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள்.
"தீயசக்திகள் ஆட்கொள்வதால் நிகழும் அமானுஸ்யம்" என்பதுதான் சூனியத்திற்கு அவர்கள் தரும் வரைவிலக்கணம்.
தீயசச்திகள் ஆட்கொள்வதை இரண்டு வகையாக பிரிக்கின்றனர்.
(1) தீய சக்திகள் தாமாகவே அமானுஸ்யங்களை நிகழ்த்துவது.
(2) தீய சக்திகளை மனிதர்கள் வசப்படுத்தி அதைக் கொண்டு பிறருக்கு கேடு விளைவிப்பது.
தீய சக்திகள் தாமாகவே அமானுஸ்யங்களை நிகழ்த்துவது என்பதில், பேயாக வருவது, அருள் வந்து குறி சொல்வது போன்றவைகள் அடங்கும்.
தீய சக்திகளை வசப்படுத்தி அவற்றை பிறர் மீது ஏவி விடுவது என்பதில், ஒருவருடைய கை கால்களை முடக்கிப்போடுவது, ஒருவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது, ஒருவரை வசியம் செய்வது, ஒருவரை பைத்தியமாக்குவது போன்றவைகள் அடங்கிவிடும்.
தீயசக்திகளை வசப்படுத்தி வைத்து அவற்றை ஏவி விடுவதாக கூறுபவனைத்தான் சூனியக்காரன் என்று அழைக்கிறார்கள்.
ரைட். மெயின் மேட்டருக்குப் போவோம்.
சூனியக்காரனின் சூனியம் பலித்துவிடுவதாக மறுப்பாளர்கள் நம்புகிறார்கள். சூனியத்தை அவர்கள்
ஏன் நம்புகிறார்கள்?
பேய் பிடித்ததாக நினைக்கும் ஒருவரை சூனியக்காரனிடம் அழைத்துச் சென்றால் சூனியம் செய்து அந்த பேயை சூனியக்காரன் விரட்டுவதால் மறுப்பாளர்கள் சூனியத்தை நம்புகிறார்கள்.
தனக்கு அநீதி இழைத்த ஒருவருக்கு எதிராக சூனியக்காரனிடம் உதவி கோரினால் அவன் செய்யும் சூனியம் மூலம் எதிரியை முடக்கிப்போட முடிவதால்
மறுப்பாளர்கள் சூனியத்தை நம்புகிறார்கள்.
தன்னுடைய வீட்டில் நிகழும் தொடர் துன்பங்களுக்காக சூனியக்காரனிடம் சென்றால் அவன் சூனியம் செய்து வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டிவிடுவதால், அதன்மூலம் துன்பம் நீங்குவதால் மறுப்பாளர்கள் சூனியத்தை நம்புகிறார்கள்.
மறுப்பாளர்கள் சூனியத்தை நம்புவதால் நமக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், முஸ்லிம்களுள் பெரும்பாலானோரும் அப்படி நினைக்கிறார்களே! அதன் நிலை என்ன?
முஸ்லிம்களுள் பெரும்பாலோனர் சூனியத்தை நம்புவதற்கு ஒரு காரணமிருக்கிறது. நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டு அதன் மூலம் அன்னாருக்கு பாதிப்பு ஏற்பட்டு பின்னர் அதை அல்லாஹ் நீக்கியதாக கூறப்படும் ஒரு வரலாற்றுச் சம்பவம்தான் முஸ்லிம்களுள் பெரும்பாலோனர் சூனிய முடிச்சில் சிக்குவதற்கு காரணம்.
நபிகளாருக்கு வைக்கப்பட்டதாக கூறப்படும் சூனியத்தின் முடிச்சை அவிழ்த்துவிட்டால் போதும். ஆனால், அதற்கு முன்பாக நமக்கு நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியிருக்கிறது. அவற்றைப் பார்ப்போம்...
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.
No comments:
Post a Comment