*நபிகளாருக்கு சூனியம் - ஒரு விளக்கம்* (Part -1)
நபி(ஸல்) அவர்கள் யூதன் ஒருவனின் சூனியத்தால் பலஹீனப்பட்டு பின்னர், அல்லாஹ்வின் உதவியால் அன்னார் நிவாரணம் அடைந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
இந்த வரலாற்றுச் செய்தி ஹதீஸ் கிரந்தகங்களில் இடம்பெற்றிருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
1400 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படும் ஒரு நிகழ்வு நடந்ததா அல்லது நடக்கவில்லையா என்பதை நாம் கூறுவதற்கு வழியேதுமில்லை.
கிடைக்கின்ற செய்திகளின் அடிப்படையில்தான் நாம் முடிவுகளை எடுக்க முடியும்.
ஹதீஸ்களை அணுகுவதில் நிலவும் மூன்று நிலைகளை பார்ப்போம்...
(1) அரபு மொழியில் பேசுவதையெல்லாம் ஹதீஸ் என்று நினைக்கும் ஒரு நிலை (சுன்னத் ஜமாத்)
ஹதீஸ் என்று சொன்னால் போதும். கண்ணை மூடி அதை நம்பும் ஒரு கூட்டம்.
(2) குர்ஆனின் பாதுகாப்பைப் போலவே ஹதீஸ்களின் பாதுகாப்பையும் நம்பும் ஒரு நிலை (ஸலபுகள்)
புஹாரி முஸ்லிம் போன்ற கிரந்தகங்களில் இடம்பெற்றாலே போதும், அந்த ஹதீஸ்களை கண்ணை மூடி ஏற்று ஆகவேண்டும் என்று கூறும் ஒரு கூட்டம்.
(3) தங்களுடைய சிந்தனைக்கு ஏற்க முடியாமல் போனால் அந்த ஹதீஸை மட்டும் மறுக்கும் ஒரு நிலை (பீஜே மற்றும் அவருடைய கிளையினர்)
"குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்படக்கூடாது" என்று புதிதாக கண்டுபிடித்ததைப்போன்று, தங்களது கொள்கைக்கு ஒத்துவராத ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரணாக சித்தரிப்பதே இந்த வகையினரின் நிலை.
இந்த மூன்றிலும் சிக்காமல் இருப்பதே நலம்.
அதேபோன்று, ஹதீஸ் கலையின் விதிகளை பயன்படுத்தி ஒரு ஹதீஸை சரியானதென்றும், அதே ஹதீஸை பிழையானதென்றும் கூறும் வாய்ப்பும் இருக்கிறது. இரண்டு தரப்பின் வாதமும் நியாயமாக இருப்பது போன்றே தோன்றவும் செய்வதால் ஹதீஸை பலப்படுத்துவதையோ அல்லது பலவீணப்படுத்துவதையோ தவிர்ப்போம்.
"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படாது" என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. குர்ஆனுக்கு முரண்படுவதுபோல் ஹதீஸை கற்பனை செய்வதும் கூடாது. குர்ஆனுக்கு முரணாக கற்பனை செய்வதற்கு இடமளிக்கும் வகையில் பல ஹதீஸ்கள் இருந்தபோதிலும் அவைகளை முரண்பாடில்லாத வகையில் புரிந்து கொள்வதையே சரியான வழிமுறையாக உலக முஸ்லிம்களால் கருதப்படுகிறது.
ரைட். விஷயத்துக்கு வருவோம்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதும், நபிகளார் பாதிக்கப்பட்டதும், இறைவனிடமிருந்து நிவாரணம் கிடைத்ததும் உண்மையாக நடந்தவையாகவே கருதுவோம். இவற்றை குர்ஆனுக்கு முரணில்லாத வகையில் புரிய முடியுமா என்பதைப் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் அனைத்து அறிவிப்புகளும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்தே வருகிறது.
அன்னையிடமிருந்து பெறப்பட்ட அந்த செய்தி பல்வேறுவிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த செய்தியை புறக்கணிக்க வேண்டும் என்பதே பீஜே மற்றும் அவரது கிளையினரின் வாதம்.
ஒரே ஹதீஸ் பல விதமாக பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அவற்றை கோர்வையாக்கி முழுமைப்படுத்தி ஒரு முடிவுக்கு வருவதுதான் சிறந்த நடைமுறையே தவிர, அந்த காரணத்தைக் காட்டி அது ஹதீஸே அல்ல என்று புறக்கணிப்பது தவறான முன்னுதாரனமாகவே அமையும்.
அந்த வகையில், "நபிகளாருக்கு சூனியம்" தொடர்பான அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவித்தலை கோர்வைப் படுத்தி முழுமையாக்கி அதில் போடப்பட்டிருக்கும் முடிச்சுக்களை அவிழ்ப்போம்.
(1) நபி(ஸல்) அவர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்.
(2) செய்யாததை செய்ததாக எண்ணும் அளவிற்கு அந்த நோய்வாய்ப்படுதல் இருந்திருக்கிறது.
(3) அந்த நோய்வாய்ப்படுதல் சில காலம் இருந்திருக்கிறது.
(4) அந்த நோயிலிருந்து நிவாரணம் வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவராக இருந்திருக்கிறார்கள்.
(5) அன்னாருக்கு அந்த நோயை அல்லாஹ் குணப்படுத்திவிடுகிறான்.
இதற்குப் பிறகு, நபி(ஸல்) அவர்கள் கனவில் நடந்ததாக கூறியதாவது...
(6) இரு வானவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதை கனவில் கண்டிருக்கிறார்கள்.
(7) தனக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்ததாக அவ்விருவரும் பேசியதாக நபிகளார் கூறினார்கள்.
(8) பேரீத்தம் பாளைக்குள் சூனியப் பொருட்களை வைத்து ஒரு கினற்றில் வீசப்பட்டிருப்பதாக அவ்விருவரும் பேசியதையும் கூறுகிறார்கள்.
கனவில் கண்ட இந்த செய்தியை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறும்போது அல்லாஹ் தனக்கு நிவாரணம் அளித்துவிட்டதையும் சேர்த்தே கூறுகிறார்கள்.
அதற்குப் பிறகு, கினற்றுக்குப் போனபோது நடந்ததையும் அன்னையிடம் கூறியிருக்கிறார்கள்.
(9) அந்த கினற்றை கண்டுபிடித்து அதில், அவ்விருவரும் கூறிய சூனியப் பொருட்கள் இருந்ததை உறுதி செய்கிறார்கள்.
(10) இறுதியாக, மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக அந்த கினற்றை தூர்த்துவிட கூறிவிட்டார்கள்.
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்த ஒரு செய்தி பலவிதமாக பதிவாகியிருந்தாலும் அவற்றை தொகுத்து மேற்கண்ட கருத்துக்களை அடைய முடிகிறது.
நோய் வருவதும் அது நீங்குவதும் விதிப்படியே. அந்த வகையில், நபிகளாருக்கு நோய் வந்ததும் அதில் இருந்து அன்னார் நிவாரணம் அடைந்ததும் விதிப்படியே.
செய்யாததை செய்ததாக எண்ணும் அளவிற்கு அந்த நோய் இருந்தது என்பதுதான் அதில் உள்ள முடிச்சு.
இது ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டம். உள்ளத்தில் அவன் ஏற்படுத்தும் குழப்பம். நமக்கு ஏற்படும் ஷைத்தானிய குழப்பம் போலவே நபி(ஸல்) அவர்களுக்கும் ஷைத்தான் குழப்பம் ஏற்படுத்துவான்.
அல்லாஹ் நாடியோரை ஷைத்தானால் வழிகெடுக்க மட்டும்தான் முடியாதே தவிர அவர்களுடைய உள்ளத்தில் ஊசலாட்டம் ஏற்படுத்த அவனால் முடியும்.
ஷைத்தானால் உள்ளங்களில் குழப்பம் ஏற்படுத்த முடியும். அந்த குழப்பத்தைக்கொண்டு அல்லாஹ் நாடியவர்களை மட்டும் அவனால் வழிகெடுக்க முடியாது. மற்றவர்களை வழிகெடுப்பான்.
அந்த வகையில், நபி(ஸல்) அவர்களுக்கு, 'செய்யாததை செய்ததாக குழப்பம் ஏற்பட்டது' என்பது ஒரு ஷைத்தானிய செயல்.
ஷைத்தான் ஏற்படுத்திய அந்த ஊசலாட்டத்தை அல்லாஹ் நீக்கிவிட்டான்.
நபி(ஸல்) அவர்களுக்கு விதிப்படி ஏற்பட்ட நோயானது விதிப்படியே நீங்கியும் விட்டது.
இப்படி புரிந்து கொள்வதில் எவருக்கும் பிரச்சினை இல்லைதான்.
ஆனால், "நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்று தொடங்கும் அந்த வாசகத்தின் முடிச்சை அவிழ்க்காமல் நான் என்ன சொன்னாலும் உங்கள் மனது ஏற்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.
அந்த முடிச்சை அவிழ்ப்போம். இன்ஷா அல்லாஹ்
பிறை மீரான்.
No comments:
Post a Comment