*சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா?* (Part -6)
பீஜேவுடன் சூனிய சவாலுக்கு வந்த சூனியக்காரன் தோற்றானா?
இதுதான் கேள்வி.
இதற்கான பதில்...
சூனியக்காரன் தோற்பானா?
கேள்வி கேட்டால் கேள்வியையே பதிலாகத் தருகிறாயே! என்று கேட்பது எனக்குக் கேட்கிறது.
சூனியக்காரன் தோற்பானா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்தால் பீஜேவிடம் சூனியக்காரன் தோற்றானா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.
*சூனியக்காரன் தோற்பானா?*
அரசியல்வாதியாக மாறுவதற்கு தகுதியென்ன என்று ஒரு அறிஞரிடம் கேட்கப்பட்டது.
"மக்களுக்கு அடுத்த வருடம் என்ன செய்வேன் என்று வாக்குறுதி கொடுக்கத் தெரியனும்" அதுதான் தகுதி என்றார் அறிஞர்.
வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்றால் என்ன செய்வது என்றும் கேட்கப்பட்டது.
"வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததற்கு ஏதாவது கதை சொல்லத் தெரியனும்" என்றார் அறிஞர்.
"உதாரணமாக, அடுத்த வருடம் ஒரு பாலம் கட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்தபிறகு, பாலம் கட்டப்பட்டால் அது தன்னுடைய முயற்சியால்தான் கட்டப்பட்டது என்று கூற வேண்டும். பாலம் கட்டப்படாமல் இருந்தால் அது எதிர்க்கட்சிகளின் சதி என்று ஏதாவது கதை சொல்லி தப்பித்துக்கொள்ள வேண்டும்" என்றார் அறிஞர்.
சோதிடனாக மாறுவதற்கு தகுதியென்ன என்றும் அந்த அறிஞரிடம் கேட்கப்பட்டது.
"நாளை இன்ன இன்னது நடக்கும் என்று சொல்லத் தெரியனும்" என்றார் அறிஞர்.
நாளை இன்னது நடக்கும் என்று கூறியது நடக்காமல் ஆகிவிட்டால் என்ன செய்வது என்றும் கேட்கப்பட்டது.
"அது ஏன் நடக்கவில்லை என்பதற்கு ஏதாவது கதை சொல்லத் தெரியனும்" என்றார்.
"உதாரணமாக, நாளை மழை பெய்யும் என்று கூறிவிட்ட பிறகு, உண்மையிலேயே மழை பெய்தால் நான் கூறிய சோதிடம் பலித்துவிட்டது என்று கூற வேண்டும். மழை பெய்யவில்லை என்றால் இன்ன இன்ன கிரகங்கள், இன்ன இன்ன நட்சத்திரங்கள் நிலை மாறியதால் மழை பெய்யவில்லை என்று ஏதாவது கதையை சொல்லனும்" என்று தெளிவாக விளக்கினார் அறிஞர்.
அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார் என்பது நமது உறுதியான நம்பிக்கை. அதனால், நாம் இதுபோன்ற விஷயங்களை காது கொடுத்து கேட்கப்பதில்லை.
ஆனால், நாளை நடப்பதை சோதிடனால் அறிய முடியும் என்று நம்பும் மக்களுக்கு அவன் கூறும் கதையையும் ஏற்பதில் எந்த பிரச்சினையுமில்லை. அதனால், அவன் கூறும் கதையில் குற்றம் கண்டுபிடித்து அதை அந்த அப்பாவி மக்களிடம் விளக்குவது என்பது அர்த்தமற்றது.
ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் சோதிடம் பார்த்து இப்படி செய்! அப்படி செய்!! என்று அவர்களுக்கு எதிர்கால ஆலோசனை கூறுகிறாயே! அதற்கு தட்சணையும் வாங்குகிறாயே!! அவர்களிடம் காசு வாங்குவதற்காக கையேந்துவதற்குப் பதிலாக நீயே பணக்காரனாக ஆவதற்கு உன்னுடைய சோதிடம் மூலம் கணிக்கக்கூடாதா? என்று அவனிடம் கேட்கப்பட்டது.
"சோதிடத்தின் மூலம் எனது எதிர்காலத்தை அறிந்து கொண்டேன். அதில் நான் சோதிடனாகவே இருப்பேன் என்பதை அறிந்து கொண்டேன். அதனால் நான் சோதிடனாகவே இருக்கிறேன்" என்று கூறினான் சோதிடன்.
சோதிட நம்பிக்கை இல்லாத மக்களுக்கு இது வெறும் கதை மட்டுமே. ஆனால், சோதிட நம்பிக்கை உள்ள மக்களுக்கோ அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் சத்திய வாக்கு.
ஆக, ஒரு சோதிடனை மடக்குவதாக நினைத்துக்கொண்டு நாம் கேட்கும் கேள்விகள் அந்த சோதிடத்தை நம்பும் மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வைப்பதாக இருந்தால் அந்த கேள்விகள் அறிவுபூர்வமான கேள்விகள் அல்ல.
ரைட். விஷயத்துக்கு வருவோம்.
சூனியக்காரன் தன்னைப் பற்றி என்னதான் சொல்கிறான்?
"தீயசக்திகளை வணங்கி அவற்றிடமிருந்து உதவி பெறுவதன் மூலம் ஒருவருக்கு நன்மையையோ அல்லது தீமையையோ தன்னால் செய்ய முடியும்" என்பதுதான் சூனியக்காரன் தன்னைப் பற்றி கூறும் விளக்கம்.
அதாவது, அவன் செய்யும் சூனியத்தால் ஒருவருக்கு நல்லதையோ அல்லது கெட்டதையோ நிகழ்த்த முடியும் என்கிறான் சூனியக்காரன்.
இதை தான் நிகழ்த்துவதாக சூனியக்காரன் எப்படி கூறுகிறான்?
** குழந்தை இல்லாத ஒருவருக்கு சூனியம் செய்கிறான், குழந்தை பிறக்கிறது.
** தீராதநோய் உள்ள ஒருவருக்கு சூனியம் செய்கிறான், நோய நீங்குகிறது.
** ஒருவருக்கு கைகால் விளங்காமல் போவதற்கு சூனியம் செய்கிறான், விளங்காமல் போகிறது.
அவன் சூனியம் செய்து அந்த காரியங்கள் நிகழ்ந்தால் அது தன்னுடைய சூனியத்தால் நிகழ்ந்ததென்று சூனியக்காரன் உரிமை கோருவான். சூனியத்தால் நிகழ்வுகள் நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் மக்கள் அவனை நம்புவார்கள்.
அந்த காரியங்கள் நிகழாமல் போனால் சூனியக்காரன் என்ன செய்வான்?
அந்த காரியங்கள் நிகழாமல் போனால் சூனியக்காரன் தொழிலை விட்டே ஓடிவிடுவான் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
** குழந்தை இல்லாத ஒருவருக்கு சூனியம் செய்கிறான், குழந்தை பிறக்கவில்லை.
** தீராதநோய் உள்ள ஒருவருக்கு சூனியம் செய்கிறான், நோய நீங்கவில்லை.
** ஒருவருக்கு கைகால் விளங்காமல் போவதற்கு சூனியம் செய்கிறான், விளங்காமல் போகவில்லை.
இப்போது என்ன சொல்வான் சூனியக்காரன்?
"என்னிடம் உள்ளதை விட ஒரு பெரிய சக்தி அவருக்கு எதிராக சூனியம் செய்யவிடாமல் தடுக்கிறது" என்று கூறி எளிதாக கடந்து சென்றுவிடுவான் சூனியக்காரன்.
அவன் சொல்லும் இந்த கதை நமக்கு காமெடியாகத் தெரியலாம். ஆனால், சூனியத்தால் காரியம் நிகழும் என்ற நம்பிக்கையில் உள்ள மக்களுக்கு அவர்களின் நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும் வாசகம் இது.
சூனியக்காரனை போட்டிக்கு அழைத்து, அவன் சூனியம் செய்து அதில் ஒரு காரியம் நிகழ்ந்தால் அது தன்னுடைய சூனியத்தால்தான் நிகழ்ந்தது என்பான். அவன் சூனியம் செய்து அவன் சொன்ன காரியம் ஏதும் நிகழவில்லையென்றால் தன்னை சூனியம் செய்ய விடாமல் ஏதோ ஒரு சக்தி தடுக்கிறது என்பான்.
ஆக, போட்டிக்கு வந்தாலும் சூனியக்காரன் தோற்றதாகக் கூறமாட்டான். சூனியத்தால் காரியம் நிகழ்வதாக நம்பும் மக்களும் சூனியக்காரன் தோற்றதாகக் கூற மாட்டார்கள்.
ஒருவருக்கு சூனியம் செய்து அந்த காரியம் நிகழ்ந்தால் அதை தன்னுடைய சூனியத்துடன் முடிச்சிடுவான் சூனியக்காரன். அந்த காரியம் நிகழவில்லையென்றால் தன்னை விட பெரிய சூனியக்காரன் அவரை காப்பாற்றுகிறான் என்பான். ஆக, சூனியக்காரன் எப்போதும் தோற்கவே மாட்டான்.
மூஸா(அலை) அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்து கொடுக்கப்பட்டது போலவே தங்களுடைய தோல்வியை ஒத்துக்கொண்ட அந்த சூனியக்காரர்களைத் தவிர்த்து தன்னுடைய தோல்வியை ஒத்துக் கொள்ளும் சூனியக்காரன் உலகில் எவனும் இல்லை. அதனால் போட்டிக்கு வந்தால் சூனியக்காரன் தோற்பான் என்ற பேச்சிற்கே இடமில்லை.
பீஜேவிடம் சவாலுக்கு வந்த சூனியக்காரன் தோற்றானா?
பீஜே அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட அந்த காலகட்டத்தின் சுமார் பாதி நாட்கள் கடந்த பிறகு "இன்னும் உனது சூனியம் வேலை செய்யத் தொடங்கவில்லையா?" என்று பீஜேவின் ஆதரவாளர்களால் சூனியக்காரனிடம் கேட்கப்பட்டதாம்.
"என்னைவிட பெரிய சூனியக்காரனை வைத்து பீஜே பாதுகாப்பு தேடியிருக்கிறார், அதனால்தான் என்னுடைய சூனியம் வீரியம் பெறாமல் இருக்கிறது" என்றானாம் அந்த சூனியக்காரன்.
அதுமட்டுமல்லாமல், என்னை சூனியம் செய்ய விடாமல் பீஜேவின் ஆட்கள் தடுக்கிறார்கள் என்றும் கூறினாம் அந்த சூனியக்காரன்.
சூனியக்காரர்கள் தோற்கமாட்டார்கள் என்ற பொதுவிதியின் கீழ்
பீஜேவின் சூனிய சவாலை எதிர்கொண்ட சூனியக்காரனும் வழக்கம்போல தோற்கவில்லை. சூனியத்தால் காரியம் நிகழும் என்று நம்பும் மக்கள், பீஜேவுக்கு சூனியம் பலிக்காமல் போனதற்கு சூனியக்காரன் கூறிய கதையை நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
பீஜேவின் சூனிய பந்தயம் சூனியகட்சியினரின் நம்பிக்கையை அதிகரிக்க செய்ததே தவிர குறைக்கவில்லை.
மொத்தத்தில் "சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா?" என்ற கேள்வி ஒரு அறிவுபூர்வமான கேள்வி அல்ல.
பீஜே அவர்களின் இந்த அறிவீனமான கேள்வியால் பாதிக்கப்பட்டது ஸலபுகள்தான் என்றால் அது மிகையில்லை.
சூனியத்தால் ஏற்பட்ட நோயை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று அப்பாவித்தனமாக இன்னமும் கூறிக்கொண்டேயிருக்கின்றனர்.
"சூனியத்தால் காரியம் நிகழும்" என்று நம்புவது இணைவைப்பு. இதை அறியாமல் சூனியத்தால் காரியம் நிகழ்வதாக நம்பும் ஸலபுகள் "லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்" என்ற கலிமாவை மொழிந்துகொள்ளட்டும்.
முற்றும்.
பிறை மீரான்
https://m.facebook.com/story.php?story_fbid=703387043417767&id=100012394330588
No comments:
Post a Comment