பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, September 29, 2019

ஹதீஸ் மறுப்பு (Part -1)

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -1)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்றொரு இயக்கம் தமிழ்பேசும் உலக மக்கள் அனைவராலும் அறியப்படும் ஒரு பேரியக்கம். ஷிர்க்கை பகிரங்கமாக எதிர்க்கும் ஒரு இஸ்லாமிய இயக்கம்.

நுனுக்கமான சர்ச்சைகளை எழுப்பி அதன் மூலம் தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் எப்போதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு இயக்கம்.

அந்த இயக்கத்தின் ஸ்தாபகர் தற்போது வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் இருந்த காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டவைகள் ஒரு நபரின் கருத்து மட்டுமே அல்ல என்றும், அந்த நடைமுறைகளுள் எந்த ஒன்றையும் மீளாய்வு செய்யத் தேவையில்லை என்றும், அவற்றுள் ஏதாவது பிழையான விஷயம் இருக்குமேயானால் அவை சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றை சரி செய்து கொள்ள தயாராக இருப்பதாக அந்த இயக்கம் அறிவித்துவிட்டதால் அந்த இயக்கம் நடைமுறைப்படுத்தும் அனைத்தையும் அந்த இயக்கத்தின் கருத்தாகவே கருதுவோம்.

தொப்பி, சப்தமாக ஆமீன், நெஞ்சில் கைகட்டுதல், ஜக்காத், தனிப்பள்ளி போன்ற சர்ச்சைகளின் தொடர்ச்சியாக ஒரு புதிய சர்ச்சையை தொடங்கியது TNTJ.

"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுகிறது" என்றொரு புதிய சர்ச்சையை கிளப்பியது TNTJ.

குரானுக்கு முரண்படக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அறிவித்தது TNTJ.

வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் இப்படி ஒரு ஹதீஸ் மறுப்பு நிலையில் அந்த அமைப்பு இருந்ததில்லை.

பிறகு, இந்த முடிவை TNTJ ஏன் எடுத்தது?

ஆரம்பகாலத்தில், 'குர்ஆனுக்கு முரணாக ஹதீஸை புரிந்து கொள்ளக் கூடாது' என்ற கொள்கையில்தான் அந்த அமைப்பு இருந்தது.

குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே மார்க்கத்தின் மூலஆதாரம் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த நிலையில், மக்களை ஏமாற்றி தர்ஹா, தாயத்து, தட்டு, பாத்திஹா என வருமானம் பார்த்தவர்களும் தங்களுடைய செயல்களுக்கு ஹதீஸ்களில் இருந்து ஆதாரங்களை அள்ளிப்போட்டனர்.

கண்ணேறு மற்றும் சூனியம் என இரண்டு விஷயங்களிலும் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றிருந்த மக்களுக்கு அந்த ஆதாரங்கள் போதுமானதாக இருந்தது. அந்த நம்பிக்கையை உடைப்பதற்காக அது தொடர்பான ஹதீஸ்களை ஆய்வுசெய்து அவை ஹதீஸே அல்ல என்று முடிவு செய்தது TNTJ.

ஆயினும், தங்களை ஹதீஸ் மறுக்கும் கூட்டத்தில் இணைத்துவிடுவார்களோ என்று அஞ்சி அவற்றை பகிரங்கப்படுத்தவில்லை. சிறிது சிறிதாகவே அந்த ஹதீஸ் மறுப்பு பகிரப்பட்டது.

பின்னாளில், அஹ்லே குர்ஆன் (குர்ஆன் மட்டும்) கூட்டம், காதியாணிகள், கிறிஸ்தவ குழு போன்றோருடன் விவாதம் செய்ததற்குப் பிறகே ஹதீஸ் மறுப்பு என்பதை தனது கொள்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொண்டது TNTJ.

பிற மத வேதங்களில் இருக்கும் ஆபாசங்களை பட்டியலிட்டது TNTJ. ஒருவரின் நம்பிக்கையை விமர்சித்தால் அவர் பதிலுக்கு நமது நம்பிக்கையை விமர்சிப்பார். அந்த அடிப்படையில், இஸ்லாத்தில் ஆபாசத்தை தேடினர் பிற மதத்தினர். அவர்களுக்கு சிக்கியது ஸாலிம்(ரலி) பால்குடி ஹதீஸ் மற்றும் உம்மு ஹராம்(ரலி) பேன் பார்த்த ஹதீஸ்.

"சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது" என்ற பைபிள் வாசகத்தைக் காட்டி கிறிஸ்தவர்களை விஷம் குடிக்கச் சொன்னது TNTJ.
பதிலுக்கு, அவர்கள் அஜ்வா பேரீத்தம் பழம் ஹதீஸை கையில் எடுத்தனர்.

இவற்றையெல்லாம் நாங்கள் எப்போதோ மறுத்து விட்டோமே என்று அவர்களை திணறடித்தது TNTJ. அதற்குப் பிறகே அந்த அமைப்பின் ஹதீஸ் மறுப்பு கொள்கை பகிரங்கமானதாக மாறியது.

தங்களுடைய பிரச்சாரத்திற்கு தடையாக இருக்கும் ஹதீஸ்களை மறுக்கும் நடைமுறை தொடங்கியது. அதற்கு கையிலெடுத்த ஆயுதம்தான் "குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுகிறது".

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment