*சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா?* (Part -4)
சூனியத்திற்கு ஆற்றல் இருந்தால் அதை எனக்கெதிராக செய்யுங்கள், சூனியம் பலித்துவிட்டால் ஐம்பது இலட்சம் ரூபாய் பரிசும் அளிக்கப்படும் என்று சவால் விட்டார் பீஜே.
"உங்கள் தெய்வங்களுக்கு ஆற்றல் இருந்தால் அவற்றைக் கொண்டு எனக்கெதிராக சூழ்ச்சி செய்யுங்கள்" என்று இறைத்தூதர்கள் சவால் விட்டதைப்போல தானும் சவால் விடுவதாகக் கூறினார். [இறைத்தூதர்கள் சவால் விட்டதைப் போல் நாமும் சவால் விட முடியாது என்பதைப் பார்த்தோம்]
ஒரு சூனியக்காரனும் முன்வந்தான். பீஜேவின் சவாலை ஏற்றுக்கொள்வதாகக் கூறினான்.
தான் செய்யும் சூனியத்தின் மூலம் 48 நாட்களில் பீஜே தற்கொலை செய்து கொள்வார் அல்லது சூனியம் உண்மை என்பதை பிரச்சாரம் செய்வார் என்று கூறினான் சூனியக்காரன்.
சூனிய ஒப்பந்தம் போடப்பட்டது. 48 நாள் "சூனியத் திருவிழா" கொண்டாட்டம் எழரை லட்சம் உறுப்பினர்களாலும் கொண்டாடப்பட்டது.
பீஜே அவர்களின் சூனிய சவால் விமர்சனத்திற்குள்ளானது. பீஜேவால் எதிரியாக கருதப்பட்டவர்களால் விமர்சிக்கப்பட்டதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பீஜே மீது அக்கறை கொண்டவர்களால் விமர்சிக்கப்பட்டதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். அவர்களுக்கு விளக்கமும் கொடுத்தார்.
** சூனியத்தால் எதுவும் நிகழாது என்பதால்தான் ஐம்பது லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது என்றார்.
** போட்டிக்கு வரும்போது சூனியக்காரன் வெற்றிபெறமாட்டான் என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்தான் பந்தயம் கட்டியதாகவும் கூறினார்.
** தனக்கு நடக்கும் விஷயங்களை, சூனியக்காரன், தன்னுடைய சூனியத்தால் நிகழ்ந்ததாக கூறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னால் மட்டுமே செய்ய முடிந்த தற்கொலையையும், சூனியப்பிரச்சாரத்தையும் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
அதாவது, விதிப்படி நடக்கும் நிகழ்வுகள் தன்னுடைய சூனியத்தால்தான் நிகழ்ந்தது என்று சூனியக்காரன் கூறிவிடுவான் என்பதால்தான், தன்னுடைய உள்ளத்தை வசியம் செய்து நடக்கவே முடியாத தற்கொலையையும், சூனியம் உண்மை என்று பிரச்சாரம் செய்வதையும் தேர்ந்தெடுத்ததாக கூறினார் பீஜே.
நாம் பார்க்கப்போவது இரண்டு விஷயங்கள்தான்...
(1) போட்டிக்கு வரும்போது சூனியக்காரன் தோற்றுவிடுவான் என்று பீஜே கூறும் தவறான மொழிபெயர்ப்பு.
(2) லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும் ஏட்டை வாசித்தவரா பீஜே.
இந்த இரண்டும்தான் நாம் பார்க்க வேண்டிய விஷயம்.
போட்டிக்கு வரும்போது சூனியக்காரன் தோற்றுவிடுவான் என்று குர்ஆன் வசனம் கூறுகிறது என்றும், அதனால் சூனியக்காரனுடன் போட்டிக்கு போகலாம் என்ற பீஜேவின் கருத்தை அவருடைய முன்னாள் மற்றும் இந்நாள் ரசிகர்களும் நம்புவதால் அதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
"சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான்" என்று அல்லாஹ் கூறுவதையும், "சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்" என்று மூஸா(அலை) அவர்கள் கூறுவதையும் வைத்துதான் சூனியக்காரன் போட்டிக்கு வந்தால் வெற்றிபெறவே மாட்டான் என்று பீஜே கூறுகிறார். இதைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.
பிர்அவ்னிடம் மூஸா(அலை) அவர்கள் பேசிய சம்பாஷனைகளை நாம் ஒரு முறைப்படுத்தி பார்க்கும்போது நமக்கு கிடைப்பது...
** மூஸா(அலை) அவர்கள் அவரது சகோதரர் ஹாரூன்(அலை) அவர்களையும் கூட்டிக்கொண்டு, தன்னைக் கடவுள் என்று கூறிக்கொண்ட பிர்அவ்னிடம் சென்றார்.
** அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுடைய தூதர்தான் தாம் என்றும் அவனிடம் கூறினார்.
** அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ் அளித்த அத்தாட்சிகள் அனைத்தையும் பிர்அவ்னிடம் அவனது சபையில் காட்டுகிறார்கள்.
** அந்த அத்தாட்சிகளைக் கண்டு, அவற்றை விட பெரிய அற்புதங்களை நிகழ்த்தி தன்னுடைய கடவுள் தன்மையை நிரூபிக்க வேண்டிய பிர்அவ்ன், தான் அதற்கு சக்தியற்றவன் என்பதால் ஒரு தந்திரத்தைக் கையாண்டான்.
** மூஸா(அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை வெறும் சூனியம் என்றான்.
** மூஸா(அலை) அவர்கள் நிகழ்த்திய சூனியத்தை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் உள்ள சூனியக்காரர்களே செய்துவிடுவார்கள் என்றான்.
** அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கக்கூடிய அத்தாட்சிகளை சூனியம் என்று கூறுகிறாயா! அந்த அற்புதத்தை சூனியக்காரர்களும் நிகழ்துவார்கள் என்று கூறுகிறாயா!! அல்லாஹ்வின் அற்புதங்களுக்கு முன்னால் சூனியக்காரர்களால் வெற்றிபெறவே முடியாது என்று மூஸா(அலை) அவர்கள் கூறினார்கள்.
"உண்மையானது உங்களிடம் வந்திருக்கும்போதே (சூனியம் என்று) கூறுகிறீர்களா? இதுவா சூனியம்? அவ்வாறாயின், சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்" என்று மூஸா கூறினார். (10:77)
** மூஸா(அலை) அவர்கள் நிகழ்த்தியது போன்ற ஒன்றை சூனியக்காரர்களைக் கொண்டு நிகழ்த்துவதற்கு ஒரு போட்டியை அறிவித்து அதை நடத்துவதற்குரிய நாள் எது என்பதை தீர்மாணிப்பதை மூஸா(அலை) அவர்களிடமே விட்டுவிடுகிறான் பிர்அவ்ன்
** ஒரு பண்டிகை நாளின் பகல் நேரத்தில் மக்கள் முன்னிலையில் போட்டியை நடத்தலாம் என்று மூஸா(அலை) அவர்கள் கூறினார்கள்.
** போட்டி நடந்த அந்த நாளில் சூனியக்காரர்கள் மூஸா(அலை) அவர்களிடம் போட்டியை முதலில் துவக்குவது குறித்து கேட்டனர்.
** சூனியக்காரர்களையே முதலில் துவக்குமாறு மூஸா(அலை) அவர்கள் கூறினார்கள்.
** சூனியக்காரர்கள் தங்களுடைய சூனிய செயலை செய்து கைத்தடிகளையும் கயிறுகளையும் நெளிய வைத்தனர். [பாம்புபோல் நெளிய வைத்ததாக தப்ஸீர்களில் கூறப்படுகிறது]
** அந்த சூழ்ச்சியைக் கண்டு மூஸா(அலை) அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டதாக வசனம் கூறுகின்றது.
** அந்த நேரத்தில்தான், மூஸா(அலை) அவர்களுக்கு முன்அறிவிப்பு கூறப்பட்டதாக வசனம் கூறுகிறது.
"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (அவனது சூழ்ச்சி) எவ்விதத்தில் வந்தாலும் சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்". (20:69)
** மூஸா(அலை) அவர்கள் தமது கைத்தடியை போட்டதும் சூனியக்காரர்களின் சூழ்ச்சியை அது மிகைத்துவிட்டது [உண்மையான பாம்பாகவே மாறி அவர்கள் செய்ததை விழுங்கியதாக தப்ஸீர்களில் சொல்லப்படுகிறது]
** சூனியக்காரர்கள் தங்கள் தோல்வியை ஒத்துக்கொண்டு அல்லாஹ்வை வணங்கியவர்களாக ஸஜ்தாவில் விழுந்தார்கள்.
** சூனியக்காரர்கள் தங்களுடைய தோல்வியை ஒத்துக்கொண்டபோது
தானும் அதை ஏற்க வேண்டுமே என்ற நிலையில் பிர்அவ்ன், மூஸா(அலை) அவர்களை சூனியக்காரர்களின் குரு என்றான்.
** மூஸா(அலை) அவர்கள்தான்
அந்த சூனியக்காரர்களுக்கு சூனியத்தை கற்றுக்கொடுத்தவர் என்று பொய் கூறினான் பிர்அவ்ன்
** இதன் மூலம் சூனியக்காரர்கள் தங்களுடைய குருநாதரிடம் வேண்டுமென்றே தோற்றதைப் போன்ற ஒரு சிந்தனையை அந்த சபையில் ஏற்படுத்தி தன்னுடைய கடவுள்தன்மையை மக்களிடம் போலியாக நிலைக்க வைத்தான் பிர்அவ்ன்.
இந்த தொகுப்பில் நாம் பார்க்கவேண்டியது இரண்டு விஷயங்கள்தான்.
(1) தான் கொண்டு வந்திருக்கும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளுக்கு முன்னால் சூனியக்காரர்கள் தோற்றுவிடுவார்கள் என்று மூஸா(அலை) அவர்கள் கூறியதையும்,
(2) சூனியக்காரர்களின் சூழ்ச்சியைக் கண்டு அச்சத்தை உணர்ந்த மூஸா(அலை) அவர்களிடம், எத்தகைய சூனியத்தை கொண்டு வந்த போதிலும் சூனியக்காரன் ஜெயிக்கவே மாட்டான் என்று அல்லாஹ் கூறியதையும்தான் நாம் பார்க்க வேண்டும்.
மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வாக்குறுதியின் பிரகாரம் சூனியக்காரர்கள் தங்களது தோல்வியை ஒத்துக்கொண்டனர்.
சூனியக்காரன் தோற்பான் என்ற முன்னறிவிப்பு மூஸா(அலை) அவர்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டது.
இதை ஆதாரமாக வைத்து
சூனியக்காரர்களை அழைத்து வாடா! வாடா!! வந்து எனக்கு செய்வினை செய்யடா!!! என்று சவால் விடுவதற்கு முகாந்திரம் ஏதுமில்லை.
சூனியக்காரன் தோற்பான் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டது மூஸா(அலை) அவர்களுக்கு மட்டுமே. பீஜே அவர்களுக்கும் இந்த முன்னறிவிப்பு செல்லுபடியாகும் என்று நம்புவது ஏழரை லட்சம் உறுப்பினர்களின் நம்பிக்கையாக இருக்குமேயானால் நான் சொல்ல ஒன்றுமில்லை.
ரைட். விஷயத்துக்கு வருவோம்...
இந்த முன்னறிவிப்பை தனக்கும் உரியதாக கருதிக்கொண்டு பீஜே அறிவித்த சூனிய சவாலில் சூனியக்காரன் தோற்றானா என்பதுதான் நாம் பார்க்க வேண்டியது.
இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்...தொடரும்
பிறை மீரான்.
No comments:
Post a Comment