பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

ஸிஹ்ரு - சூனியம்* (part -4)

*ஸிஹ்ரு - சூனியம்*  (part -4)

இறைத்தூதர்களுக்கு எதிராக கூறப்பட்ட "மஸ்ஹுரா" என்று வார்த்தை என்ன அர்த்தத்தில் கூறப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

*இஸ்லாத்தின் பார்வையில்
தீயசக்தி*

அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படும் மற்ற அனைத்தும் தீயசக்திகள் என்பது இஸ்லாம் வகுத்த கோட்பாடு.

ஏக இறைவனை மறுத்து அந்த தீயசக்திகளை வணங்குபவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக தூதர்கள் அனுப்பப்பட்டனர்.

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ ...(16:36)

"அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்...(16:36)

*மறுப்பாளர்கள் -தீயசக்தி*

மறுப்பாளர்கள் தீயசக்தியை இருவேறு விதங்களில் விளங்கியிருக்கின்றனர்.

(1) தாங்கள் வணங்குபவற்றைத் தவிர்த்து
மற்றவையெல்லாம் தீயசக்திகள் என்பது மறுப்பாளர்களின் ஒரு கோட்பாடு.

(2) நல்லதைத் தருபவை நல்லசக்தி என்றும்,  கெடுதியைத் தருபவை தீயசக்தி என்றும் கருதி, நல்லசக்தியை வணங்குவதன் மூலம் நன்மை பெறமுடியும் என்றும், தீயசக்தியை வணங்குவதன் மூலம் அவற்றின் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்பது மறுப்பாளர்களின் பிரிதொரு கோட்பாடு.

*இறைத்தூதர்கள்*

இறைத்தூதர்கள் அனைவருமே அல்லாஹ் ஒருவன் என்பதையும், நியாயத்தீர்ப்பு இருக்கிறது என்பதையும், அதற்குப் பிறகு முடிவில்லா வாழ்க்கை இருக்கிறது என்பதையும் கூறுபவர்களாக இருந்தார்கள்.

இதை தங்களின் கடவுள்களுக்கு எதிரானதாக அம்மறுப்பாளர்கள் பார்த்தனர். இறைத்தூதர்களைப் பற்றி மறுப்பாளர்கள் கூறியதை குர்ஆனும் விவரிக்கிறது.

"எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்காக எங்களிடம் வந்துள்ளீரா?...(46:22)

"நாம் நமது தெய்வங்கள் மீது உறுதியாக இல்லாதிருந்தால் இவர் அவற்றை விட்டு நம்மைத் திருப்பியிருப்பார்''...(25:42)

"ஹூதே! நீர் எங்களிடம் எந்தச் சான்றையும் கொண்டு வரவில்லை. நீர் சொல்வதற்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடுவோராக இல்லை. நாங்கள் உம்மை நம்புவோராகவும் இல்லை'' (11:53)

"உங்கள் கடவுள்களை விட்டுவிடாதீர்கள்! வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகியவற்றை விட்டுவிடாதீர்கள்!'' என்று அவர்கள் கூறுகின்றனர். (71:23)

"இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர்...(7:127)

"பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா?'' என்று கேட்கின்றனர்.(37:36)

"(இவரை விட்டும்) சென்று விடுங்கள்! உங்கள் கடவுள்கள் விஷயத்தில் உறுதியாக இருங்கள்! இது ஏதோ எதிர்பார்ப்பில் கூறப்படும் விஷயமாக உள்ளது'' என்று அவர்களில் பிரமுகர்கள் கூறினர்.(38:6)

இறைத்தூதர்களை 'தங்களுடைய கடவுள்களுக்கு எதிரானவர்கள்' என்று மறுப்பாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் கூறியதை குர்ஆன் விவரிக்கிறது.

இறைத்தூதர்களை பொய்யர்கள் என்று மறுப்பாளர்கள் கூறுவார்கள். பின்னர் பைத்தியம் என்பார்கள். இறைவனிடமிருந்து பெற்ற அற்புதங்கள் மூலம் அவர்கள் பொய்யர்களும் அல்ல பைத்தியமும் அல்ல என்பது தெளிவாகும்போது, இறைத்தூதர்களை "மஸ்ஹூரா" என்று அழைப்பார்கள். அதாவது "ஸிஹ்ரு செய்யப்பட்டவர்கள்" என்று அழைப்பார்கள்.

தாங்கள் வணங்கும் கடவுள்களை விட்டுவிடுமாறு கூறும் இறைத்தூதர்களை அவ்வாறு கூற வைப்பது "தீயசகக்திகள்தான்" என்ற கருத்தை பரப்புவார்கள் மறுப்பாளர்கள்.

"எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்'' என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்)...(11:54)

தீயசக்திகளால் வசப்படுத்தப்பட்ட மனிதர்கள்தான் தங்களுடைய கடவுள்களுக்கு எதிராக நம்மைத் திருப்புகிறார்கள் என்று மறுப்பாளர்கள் திசைதிருப்புவார்கள். அதாவது, இறைத்தூதர்களை "தீயசக்தியால் வசப்படுத்தப்பட்டவர்கள்" என்ற அர்த்தத்தில்தான் "மஸ்ஹூரா" என்று அழைத்தார்கள்.

அல்லாஹ்வின் நாட்டப்படி இறைத்தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்களை "ஸிஹ்ரு" என்றனர் மறுப்பாளர்கள். அதாவது, இறைத்தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்களை "தீயசக்திகளின் வசப்படுத்தும்(மாயச்) செயல்" என்றனர்.

அதையும் மீறி இறைத்தூதர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படும்போது அத்தூதர்களை "ஸாஹிருன்" என்றும் அழைத்தார்கள். "தீயசக்திகளைக் கொண்டு மக்களை வசப்படுத்துபவர்" என்ற அர்த்தத்திலேயே ஸாஹிருன் என்று அழைத்தனர்.

தங்கள் கருத்தை ஏற்பவன் மட்டுமே இந்தியன், தங்கள் கருத்தை ஏற்காதவன் ஆன்டி இன்டியன் ஒரு கட்சி கூறுவதுபோன்றும், உலகத்தில் எது நடந்தாலும் அது "இலுமினாட்டி சதி" என்று கூறும் அறிவாளிகளைப்போலவும் நடந்து கொண்ட அந்த மறுப்பாளர்கள் அல்லாஹ்வையும், அவனது அத்தாட்சிகளையும், அவனது தூதர்களையும் மறுப்பதற்கு பயன்படுத்திய வார்த்தை "தீயசக்தி".

** ஸிஹ்ரு
** ஸாஹிருன்
** மஸ்ஹுர்

என்பவைகளை அம்மறுப்பாளர்கள் பயன்படுத்திய விதத்தை குர்ஆன் விவரிக்கிறது. அதைப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்

No comments:

Post a Comment