பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 25, 2026

சுனன் இப்னுமாஜா


என்னுடைய ஹதீஸ் சேகரிப்பில் ஸஹீஹ் முஸ்லிமுக்கு பிறகு அதிக தடவை வாசித்து கிரந்தம் என்றால் அது சுனன் இப்னுமாஜா கிரந்தமாகத் தான் இருக்கும்.  இஸ்லாமிய உலகின் புகழ்பெற்ற ஆறு பிரதான ஹதீஸ் தொகுப்புகளான குதுபுஸ் சித்தாவில் இறுதியாக, அதாவது ஆறாவது நூலாக இடம்பிடித்திருக்கும் இந்த நூல், பல வரலாற்று சுவாரஸ்யங்களையும், ஹதீஸ் கலையின் ஆழமான பரிமாணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. வாருங்கள், இந்த நூலின் தனித்துவங்களை விரிவாகப் பார்ப்போம்.

இமாம் அபூ அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யஸீத் இப்னு மாஜா அல்-கஸ்வீனி (ரஹ்). ஹிஜ்ரி 209-ல் ஈரானின் 'கஸ்வீன்' நகரில் பிறந்தார். தனது 21-வது வயதில் ஹதீஸ்களைத் தேடி ஈராக், பஸ்ரா, கூஃபா, பாக்தாத், மக்கா, சிரியா, எகிப்து என அக்கால இஸ்லாமிய உலகின் மாபெரும் கல்வி மையங்களுக்குப் பயணம் செய்து அரிய பல ஹதீஸ்களைத் திரட்டினார்.

ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ ஆகிய ஐந்து நூல்களை மட்டுமே பிரதானமாகக் கருதினர். ஆறாவது நூலாக இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் 'முவத்தா'வையோ அல்லது இமாம் தாரிமி (ரஹ்) அவர்களின் 'சுனன் தாரிமி'யையோதான் பலரும் குறிப்பிட்டனர். ஆனால், ஹிஜ்ரி 5-ஆம் நூற்றாண்டில் வந்த இமாம் இப்னுல் கைஸரானி (ரஹ்) போன்ற அறிஞர்கள்தான் 'சுனன் இப்னு மாஜா'வை ஆறாவது நூலாக அதிகாரப்பூர்வமாக இணைத்தார்கள். ஏன் தெரியுமா? மற்ற ஐந்து நூல்களிலும் இல்லாத பல புதிய, தனித்துவமான ஹதீஸ்கள் இதில் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம்!

நேர்த்தியான அத்தியாய அமைப்பு: இப்னு மாஜா நூலின் மிகப் பெரிய பலமே அதன் நேர்த்தியான கட்டமைப்புதான். ஃபிக்ஹ் சட்டங்களுக்கு ஏற்ப, தேடுபவர்கள் மிக எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையில் அத்தியாயங்களையும், தலைப்புகளையும் இமாம் அவர்கள் மிக அழகாகத் தொகுத்துள்ளார். மார்க்கப் பணிகளிலும், தாஃவா களத்திலும் செயல்படுபவர்களுக்கும், மாணவர்களுக்கு மார்க்கச் சட்டங்களை விளக்குபவர்களுக்கும் இந்த நூலின் கட்டமைப்பு ஒரு வரப்பிரசாதம்.
 
தனித்துவமான ஹதீஸ்கள்: புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட மற்ற ஐந்து நூல்களிலும் இடம்பெறாத சுமார் 1,300-க்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இமாம் இப்னு மாஜா தனது நூலில் பதிவு செய்துள்ளார். இவை 'ஸவாயித்' என அழைக்கப்படுகின்றன. இஸ்லாமிய வரலாற்றையும், சட்டங்களையும் விரிவாக ஆய்வு செய்ய இந்த ஸவாயித் ஹதீஸ்கள் பெருமளவு உதவுகின்றன.

ஹதீஸ்களின் தரம் குறித்த விமர்சனம்: ஒரு ஹதீஸ் ஆய்வாளனாக நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான புள்ளி இது. இந்த நூலில் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) மற்றும் ஹஸன் (அழகானது) தரத்திலான ஹதீஸ்கள் ஏராளமாக இருந்தாலும், மற்ற ஐந்து நூல்களை ஒப்பிடும்போது இதில் பலவீனமான (ளயீஃப்) ஹதீஸ்களின் எண்ணிக்கை சற்று அதிகம். சில மிகைப்படுத்தப்பட்ட, மிகவும் பலவீனமான செய்திகளும் இதில் ஊடுருவியுள்ளன. இதனாலேயே ஹதீஸ் கலை அறிஞர்கள் இதனை குதுபுஸ் சித்தாவின் 'ஆறாவது' இடத்திற்குத் தள்ளினர். (எனவே, இந்த நூலில் உள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளும் முன், ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த குறிப்பிட்ட ஹதீஸின் தரம் குறித்து என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை நாம் சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும்).

பலவீனமான செய்திகள் சில கலந்திருந்தாலும், இஸ்லாமியச் சட்டவியலுக்கும், நபிமொழிகளின் விரிவான தொகுப்புக்கும் இமாம் இப்னு மாஜா அவர்கள் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. மார்க்கத்தின் மூல ஆதாரங்களைத் தேடும் மாணவர்களுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத களஞ்சியம்.

(படத்தில் 1,2,4,5 என்று இருப்பதை நீங்கள் காணலாம். அது ஏனெனில் ரஹ்மத் பதிப்பகம் ஆரம்பத்தில் இப்னுமாஜாவை மூன்று அல்லது நான்கு பாகங்களாக வெளியிட தீர்மானித்திருந்தார்கள். பின்பு அதை 5 பாகங்களாக மாற்றி வெளியிட்டுள்ளார்கள். இரண்டாம் பாகத்தை இரண்டாக பிரித்து அவர்களால் மூன்றாம் பாகமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே நான் மூன்றாம் பாகத்தை வாங்கவில்லை) 

- Abdullah Ibnu Naseer

No comments:

Post a Comment