ஹதீஸ் கலையில் சஹாபாக்களுக்குப் பிறகு தாபியீன்களின் பங்கு அளப்பரியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாத குறையைத் தீர்ப்பதற்காக, சஹாபாக்களைத் தேடித் தேடிச் சென்று அறிவைப் பருகியவர்கள்தான் இந்தத் தாபியீன்கள். அவர்களில் ஈராக் மண்ணின் அறிவுச் சூரியனாக, அறிஞர்களுக்கெல்லாம் மாபெரும் ஆசானாகத் திகழ்ந்தவர்தான் இமாம் ஆமிர் அஷ்-ஷஅபீ (ரஹ்).
பெயர்: ஆமிர் இப்னு ஷராஹீல் அஷ்-ஷஅபீ.
காலம்: உமர் (ரலி) அவர்களின் கிலாஃபத்தில் (சுமார் ஹிஜ்ரி 17-ல்) பிறந்தார். ஹிஜ்ரி 104-ல் மரணமடைந்தார்.
ஊர்: ஈராக்கின் கூஃபா நகரம்.
ஷஅபீ அவர்களின் ஆகப்பெரிய சிறப்பே இதுதான். வரலாற்றில் எந்தத் தாபியீயும் இவ்வளவு பெரிய சஹாபாக்களின் கூட்டத்தைச் சந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே. அவரே கூறுகிறார்: நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஐந்நூறு (500) பேரை நேரில் சந்தித்துள்ளேன்! அலி (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அன்னை ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி) என மாபெரும் சஹாபாக்களின் வகுப்புக்களில் அமர்ந்து நேரடியாகக் கல்வி பயின்றார். சஹாபாக்களின் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் இவர்.
ஷஅபீ அவர்களின் மனப்பாட சக்தி அன்றைய உலகையே மிரள வைத்தது. அவர் கையில் எப்போதுமே ஏடுகளோ, குறிப்பேடுகளோ இருந்ததில்லை. அவர் கூறுவார்: நான் இதுவரை எந்தவொரு கறுப்பையும் வெள்ளையில் (காகிதத்தில் மையால்) எழுதியதில்லை. என் காதுகள் எதைக் கேட்டதோ, அதை என் இதயம் அப்படியே மனப்பாடம் செய்துகொண்டது. ஒரு மனிதர் எனக்கு ஒரு ஹதீஸைச் சொன்னால், அதை அவர் எனக்கு இரண்டாவது முறை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை!
அந்த அளவுக்குக் கூர்மையான நினைவாற்றல்! குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி, அரபுகளின் கவிதைகள், போர் வரலாறுகள், கணிதம் என அனைத்திலும் வல்லவராக இருந்தார்.
ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது, ஆமிர் அஷ்-ஷஅபீ அவர்கள் ஒரு கூட்டத்தினருக்குப் போர் வரலாறுகளை (மகாஸி) விவரித்துக் கொண்டிருந்தார். அதை ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்த இப்னு உமர் (ரலி) கூறினார்: நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அந்தப் போர்களில் கலந்துகொண்டுள்ளேன். ஆனால், நேரில் பார்த்த என்னை விட, நேரில் பார்க்காத ஷஅபீ அதை மிகத் துல்லியமாக விவரிக்கிறார்! சஹாபாக்களே வியக்கும் அளவுக்கு அவரின் கல்வி ஆழமாக இருந்தது.
ஷஅபீ எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், தற்பெருமை சிறிதும் இல்லாதவர். அவரிடம் ஒருவர் வந்து ஒரு மார்க்கச் சட்டத்தைக் கேட்டார். அதற்கு ஷஅபீ, எனக்குத் தெரியாது என்றார். உடனே வந்தவர், நீங்கள் ஈராக்கின் மிகப்பெரிய முஃப்தியாயிற்றே, உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு ஷஅபீ மிக அழகாகப் பதிலளித்தார்: வானவர்கள் (மலக்குகள்) அல்லாஹ்விடம் 'நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது' என்று சொன்னபோது வெட்கப்படவில்லை. நான் மட்டும் 'தெரியாது' என்று சொல்ல ஏன் வெட்கப்பட வேண்டும்? எனக்குத் தெரியாது என்று சொல்வது கல்வியின் சரிபாதி என்ற புகழ்பெற்ற வாசகத்தை வாழ்ந்து காட்டியவர் அவர்.
உமைய்யா கலிஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் இவரைத் தனது தூதராகப் பைஸாந்திய (ரோம்) மன்னரிடம் அனுப்பி வைத்தார். அவரின் அறிவுக்கூர்மையைப் பார்த்த ரோம் மன்னர், அரபுகளில் இப்படி ஒரு அறிவாளியா! என்று வியந்தார். பின்னர் வந்த கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், கூஃபா நகரத்தின் முழுமையான நீதிபதியாக ஆமிர் அஷ்-ஷஅபீ அவர்களைத்தான் நியமித்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை, 500 சஹாபாக்கள் வழியாகத் தன் நெஞ்சில் உள்வாங்கி, அடுத்த தலைமுறைக்கு எந்தவொரு குறையுமில்லாமல் கடத்திய பொக்கிஷப் பெட்டிதான் ஆமிர் அஷ்-ஷஅபீ. நாம் இன்று கையில் வைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களின் நம்பகத்தன்மை, இப்படிப்பட்ட நினைவாற்றல் மிக்க தாபியீன்களின் நெஞ்சங்களில்தான் பாதுகாக்கப்பட்டது என்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்க்க முடிகிறது!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamShabi #Kufa #Tabiin #HadithScholar #GoldenChain #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment