இமாம் அஹ்மத் மட்டும் அன்று பொறுமை காக்காமல் இருந்திருந்தால், இன்று இஸ்லாம் என்ற மார்க்கம் உருமாறிப் போயிருக்கும் என்று அன்றைய மாபெரும் அறிஞர்கள் கண்ணீரோடு சாட்சி சொல்கிறார்கள் என்றால், அவர் எப்படிப்பட்ட உறுதியானவராக இருந்திருக்க வேண்டும்?
பெயர்: அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் அஷ்-ஷைபானி.
பிறப்பு: ஹிஜ்ரி 164-ம் ஆண்டு, பக்தாதில் பிறந்தார்.
குழந்தைப் பருவம்: இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். இவரை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றார் தாய் ஸஃபிய்யா பின்த் மைமூனா. அந்தத் தாயின் தியாகம்தான், பின்னாளில் உலகைக் காக்கும் ஒரு இமாமை உருவாக்கியது. அதிகாலையிலேயே மகனை எழுப்பி, கடும் குளிரிலும் சுடுநீர் வைத்துக் கொடுத்து, குர்ஆன் வகுப்பிற்கும், ஹதீஸ் வகுப்பிற்கும் அந்தத் தாயே மகனை அழைத்துச் செல்வார். தன்னுடைய 15-வது வயதிலேயே ஹதீஸ் கலையில் முழுமையாக இறங்கினார் அஹ்மத்.
ஹதீஸைத் தேடி கூஃபா, பஸ்ரா, மக்கா, மதீனா என அலைந்த இமாம் அஹ்மத், யமன் நாட்டில் இருக்கும் மாபெரும் அறிஞர் 'அப்துர் ரஸ்ஸாக் அஸ்-ஸன்ஆனி' அவர்களைச் சந்திப்பதற்காகப் பக்தாதிலிருந்து நடந்தே (பல மாதங்கள்) யமனுக்குப் பயணம் செய்தார்! பயணத்தின் பாதியிலேயே கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டது. இமாம் அஹ்மத் நினைத்திருந்தால் யாரிடமாவது உதவி கேட்டிருக்கலாம். மக்கள் அள்ளிக் கொடுத்திருப்பார்கள். ஆனால், தன் சுயமரியாதையை விடாத அந்த இளைஞர், பயண வழியில் சுமை தூக்கும் கூலியாளாகவும், துணி நெய்யும் தொழிலாளியாகவும் வேலை செய்து, சிறுகச் சிறுகக் காசு சேர்த்து யேமனை அடைந்தார். அவரின் வறுமையைப் பார்த்து இமாம் அப்துர் ரஸ்ஸாக் ஒரு பை நிறைய தங்கக் காசுகளைக் கொடுத்தபோது, "என் மார்க்கக் கல்விக்கு விலை வேண்டாம்" என்று அதை நாசூக்காக மறுத்துவிட்டார் அந்த மாபெரும் மனிதர்!
இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் பக்தாதில் இருந்தபோது இமாம் அஹ்மதின் திறமையைப் பார்த்து வியந்துபோனார். இருவருக்கும் இடையில் இருந்த ஆசான் - மாணவர் உறவு அளப்பரியது. இமாம் ஷாஃபியீ பக்தாத்தை விட்டு எகிப்து செல்லும் போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வார்த்தையைக் கூறினார்:
நான் பக்தாத்தை விட்டுச் செல்கிறேன். ஆனால் அங்கே அஹ்மத் இப்னு ஹன்பலை விடச் சிறந்த அறிவாளியையோ, சிறந்த மார்க்கப் பற்றாளனையோ கண்டதே இல்லை!
இமாம் அஹ்மதின் வாழ்க்கையை இந்தச் சம்பவத்தைத் தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது. அன்றைய அப்பாஸிய கலீஃபா அல்-மஃமூன் ஒரு வழிகெட்ட கொள்கையை (முஃதஸிலா) அரசக் கொள்கையாக அறிவித்தான். அதாவது, "குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தையல்ல. அது வெறும் படைப்பு (படைக்கப்பட்டது)" என்று நம்ப வேண்டும் என்றான்.
இதை ஏற்காத அறிஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். வாளுக்குப் பயந்து பல அறிஞர்கள் "ஆம், குர்ஆன் படைக்கப்பட்டதுதான்" என்று ஒப்புக்கொண்டு உயிர் தப்பினர். ஆனால் இமாம் அஹ்மத் சிங்கம் போலக் கர்ச்சித்தார். "குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை. அது படைக்கப்பட்டதல்ல. என் கழுத்தில் வாளை வைத்தாலும் நான் இதை மாற்றிக்கொள்ள மாட்டேன்!"
மஃமூனுக்குப் பிறகு வந்த கலிஃபா 'அல்-முஃதஸிம்' காலத்தில் இமாம் அஹ்மத் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார். சுமார் 28 மாதங்கள் இருட்டறையில் விலங்கிடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ரமலான் மாதம், நோன்பாளியாக நின்றுகொண்டிருந்த இமாம் அஹ்மதின் கைகளைச் சங்கிலியால் கட்டி, முரட்டுத்தனமான வீரர்களைக் கொண்டு சவுக்கால் அடித்தனர். அவரின் முதுகுத் தோல்கள் கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் மயங்கி விழுவார்; மீண்டும் எழுப்பி அடிப்பார்கள்.
இத்தனை கொடூரங்களுக்கு மத்தியிலும் அவர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியில் ஆட்சியாளர்களே அவரின் உறுதியைக் கண்டு பயந்துபோய் அவரை விடுதலை செய்தனர். அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, கலிஃபா 'அல்-முத்தவக்கில்' ஆட்சிக்கு வந்தார். அவர் இமாம் அஹ்மதை மிகவும் கண்ணியப்படுத்தி, மூட்டை மூட்டையாகப் பொற்காசுகளை அன்பளிப்பாக அனுப்பினார். ஆனால், இமாம் அஹ்மத் அந்தத் தங்கக் காசுகளைத் தொடக்கூட மறுத்துவிட்டார்!
அவருடைய மாமா மற்றும் மகன்கள் அரசுப் பொறுப்புகளை ஏற்றுப் பணம் சம்பாதித்தபோது, அவர்களின் வீட்டில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதைக்கூட இமாம் அஹ்மத் தவிர்த்துவிட்டார். அந்த அளவுக்கு உலக சுகபோகங்களைத் தூக்கி எறிந்து வாழ்ந்தார்.
சுமார் 7,50,000 ஹதீஸ்களை அலசி ஆராய்ந்து, அதிலிருந்து சுமார் 30,000 ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து 'முஸ்னத் அஹ்மத்' என்ற பிரம்மாண்டமான நூலை அவர் உருவாக்கினார். அவருடைய மகன் அப்துல்லாஹ் இதை முழுமையாகத் தொகுத்து உலகிற்குக் கொடுத்தார். இந்த நூல் ஹதீஸ் உலகின் ஆகப்பெரிய சொத்து! இன்னும் எண்ணற்ற பல நூற்களை இந்த உம்மத்திற்காக எழுதிச் சென்றார்கள்.
தனது வாழ்நாளெல்லாம் ஹதீஸுக்காகவும், சரியான கொள்கைக்காகவும் தன்னை உருக்கிக் கொண்ட அந்த மெழுகுவர்த்தி, ஹிஜ்ரி 241-ம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம், தனது 77-வது வயதில் பகுதாதில் அணைந்தது. அவர் வழிகெட்டவர்களைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லியிருந்தார்:
"எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான வித்தியாசம், எங்கள் ஜனாஸாக்களில்தான் (இறுதிப் பயணத்தில்) தெரியும்!" (بيننا وبينكم يوم الجنائز)
அது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா?
இமாம் அஹ்மதின் ஜனாஸாவில் மட்டும் சுமார் 13 இலட்சம் மக்கள் (ஆண்கள் 8 இலட்சம், பெண்கள் 6 இலட்சம்) கலந்துகொண்டார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்! இஸ்லாமிய வரலாற்றில் அதுவரை அப்படியொரு மக்கள் கூட்டத்தை எந்த ஆட்சியாளரின் மரணமும் பார்த்ததில்லை. அவரின் ஜனாஸாவைப் பார்த்துவிட்டுப் பகுதாதில் வாழ்ந்த சுமார் 20,000 யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்!
நான் இன்று நிம்மதியாக வீடுகளில் அமர்ந்துகொண்டு "குர்ஆன் அல்லாஹ்வின் இறைவசனம்" என்று ஓதிக்கொண்டிருக்கிறேன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளை முஸ்னத் அஹ்மத் நூலூடாக வாசித்துக்கொண்டு இருக்கிறேன் என்றால், அதன் பின்னால் சவுக்கடிகளைத் தாங்கிய இமாம் அஹ்மதின் கிழிந்த முதுகு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அறிவோடு சேர்த்து, அசைக்க முடியாத கொள்கை உறுதியும் சேர்ந்ததால்தான், அவர் இன்றும் "இமாமு அஹ்லுஸ் சுன்னா" (சுன்னாவின் தலைவர்) என்று நெஞ்சார அழைக்கப்படுகிறார்!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamAhmad #AhmadIbnHanbal #MusnadAhmad #Mihna #Baghdad #LionOfSunnah #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment