பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, February 16, 2026

.இமாம் ஹாகிம் (ரஹ்).


இஸ்லாமிய வரலாற்றில், இமாம் புஹாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோர் ஸஹீஹ் ஹதீஸ்களைத் தொகுத்துவிட்டுச் சென்ற பிறகு, ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக மக்கள் நினைத்தார்கள்.
புஹாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் எல்லா ஸஹீஹான ஹதீஸ்களும் வந்துவிட்டனவா? என்றால், இல்லை என்பதே பதில். அவர்கள் தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டுமே தொகுத்தார்கள்.

அப்போது தான் நிஷாப்பூரிலிருந்து ஒரு இமாம் எழுந்தார். புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் சில நிபந்தனைகளை வைத்திருந்தார்கள். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட எத்தனையோ ஹதீஸ்களை அவர்கள் விட்டுவிட்டார்கள். அவற்றை நான் தேடித் தொகுப்பேன் என்று சூளுரைத்தார்.
அவர்தான் இமாம் ஹாகிம் (ரஹ்).

பெயர்: முஹம்மது பின் அப்துல்லாஹ் (அபூ அப்துல்லாஹ்).
சிறப்புப் பெயர்: அல்-ஹாகிம் அந்-நிஷாப்பூரி. (இவரை 'இப்னுல் பய்யி' என்றும் அழைப்பர்).
பிறப்பு: ஹிஜ்ரி 321-ம் ஆண்டு, பாரசீகத்தின் நிஷாப்பூர் நகரில்.
கல்வி: மிகச் சிறுவயதிலேயே தந்தையிடம் ஹதீஸ் கற்கத் தொடங்கினார். ஈராக், குராஸான், ஹிஜாஸ் (மக்கா, மதீனா) என உலகைச் சுற்றி, சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஷைக்குகளிடம் ஹதீஸ் கேட்டதாக வரலாறு கூறுகிறது.
ஆசிரியர்: ஹதீஸ் கலையின் மாபெரும் விமர்சகர் இமாம் தாரகுத்னீ இவரின் முக்கியமான ஆசிரியர்.

இமாம் ஹாகிம் என்றாலே நினைவுக்கு வருவது இந்த நூல்தான். ஹதீஸ் உலகில் இது ஒரு மைல்கல்.
முஸ்தத்ரக் என்றால் என்ன? விடுபட்டதைத் தேடிப்பிடித்துத் தொகுத்தல் என்று பொருள். புஹாரியும் முஸ்லிமும் ஒரு ஹதீஸை ஏற்க வேண்டும் என்றால், அந்த அறிவிப்பாளர் வரிசை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தரம் வைத்திருந்தார்கள். அந்தத் தரத்தில் இருந்தும், அவர்கள் தங்கள் நூலில் சேர்க்கத் தவறிய ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை நான் இதில் இணைக்கிறேன் என்றார்.

முஸ்தத்ரக் அலஸ்ஸஹீஹைனில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் உள்ளன. இவர் ஒவ்வொரு ஹதீஸுக்கும் கீழே, "இது புஹாரியின் நிபந்தனைக்குட்பட்டது", "இது முஸ்லிமின் நிபந்தனைக்குட்பட்டது" என்று குறிப்பு எழுதியிருப்பார். இமாம் ஹாகிம் ஒரு நல்ல நோக்கத்தில்தான் இதைத் தொடங்கினார். ஆனால், இந்த நூலில் நிறையப் பிழைகள் நடந்துவிட்டன என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இமாம் ஹாகிம் ஹதீஸ் விமர்சனத்தில் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தார். பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கூட, இது ஸஹீஹானது என்று தவறுதலாகத் தீர்ப்பளித்துவிட்டார். இதற்கு காரணமாக இமாம் ஹாகிம் இந்த நூலைத் தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் (முதுமையில்) எழுதினார். அப்போது அவருக்கு நினைவாற்றல் சற்றுக் குறைந்திருந்தது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஹாகிமின் நூல் அப்படியே விடப்பட்டிருந்தால், மார்க்கத்தில் பல பிழைகள் புகுந்திருக்கும் என்றும் ஒரு சில அறிஞர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால், பிற்காலத்தில் வந்த இமாம் தஹபி, இந்த நூலை முழுமையாக ஆய்வு செய்தார். ஹாகிம் எங்கெல்லாம் இது புகாரி தரத்தில் உள்ளது என்று சொன்னாரோ, அங்கெல்லாம் இமாம் தஹபி குறுக்கிட்டு, "இல்லை! இதில் வரும் அறிவிப்பாளர் பலவீனமானவர். இது இட்டுக்கட்டப்பட்டது" என்று மிகத் துல்லியமாக விமர்சித்தார். எனவே, இன்றுள்ள அறிஞர்கள் ஹாகிமின் 'முஸ்தத்ரக்'கை, தஹபியின் விமர்சனம் இல்லாமல் படிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்.

இவர் முஸ்தத்ரக்கை' மட்டும் எழுதவில்லை. ஹதீஸ் கலைக்கே இலக்கணம் வகுத்தவர் இவர். 

மஃரிபத் உலூம் அல்-ஹதீஸ். ஹதீஸ் கலையின் விதிகள் பற்றி எழுதப்பட்ட ஆரம்பகால நூற்களில் இது மிக முக்கியமானது. பிற்காலத்தில் வந்த இப்னு ஸலாஹ் போன்றவர்கள், ஹதீஸ் விதிகலை வகுக்க இந்த நூலையே அடிப்படையாகக் கொண்டனர்.

தனது ஊரான நிஷாப்பூரின் வரலாற்றையும், அங்கு வாழ்ந்த அறிஞர்களையும் பற்றி எழுதிய வரலாற்று ஆவணம்.

இமாம் ஹாகிம் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதாவது அவர் அலீ (ரலி) அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்றும், முஆவியா (ரலி) விஷயத்தில் சற்று விமர்சனப் போக்குடையவர் என்றும் கூறப்பட்டது. இமாம் இப்னு கஸிர் போன்றோர், "அவரிடம் ஷீஆக்களின் சாயல் இருந்தது உண்மைதான். ஆனால் அவர் ஸஹாபாக்களைத் திட்டும் நிலைக்குச் செல்லவில்லை. அவர் ஹதீஸில் நேர்மையானவர்" என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஹதீஸ் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்த, அதே சமயம் சில விமர்சனங்களையும் தாங்கி நின்ற அந்த இமயமலை, ஹிஜ்ரி 405-ம் ஆண்டு, ஸஃபர் மாதம் நிஷாப்பூரில் மரணமடைந்தது. அவரது மாணவரான இமாம் பைஹகீ, தனது ஆசிரியரின் மரணத்தை நினைத்து வெகுநாட்கள் துக்கத்திலிருந்தார்.

மனிதர்கள் சில பிழைகளை செய்யக்கூடியவர்கள் என்பதற்கு இமாம் ஹாகிம் ஒரு உதாரணம். அவர் செய்த அந்தத் பிழைகளால்தான், பிற்காலத்தில் இமாம் தஹபி போன்ற ஆய்வாளர்கள் உருவானார்கள். முஸ்தத்ரக் நூலில் பிழைகள் இருந்தாலும், அதில் உள்ள ஆயிரக்கணக்கான உண்மையான ஹதீஸ்கள் இன்றும் சட்டங்களுக்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அவர் திறந்தவாசல் வழியாகத்தான் பல அரிய ஹதீஸ்கள் நமக்குக் கிடைத்தன.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamHakim #Mustadrak #HadithScholar #Dhahabi #Nishapur #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment