பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, February 21, 2026

இமாம் தஹபி


தஹப் என்றால் அரபு மொழியில் தங்கம் என்று பொருள். இமாம் தஹபியின் தந்தை ஒரு பொற்கொல்லர். அவர் தங்கத்தை உரசிப் பார்த்து தரம் பிரிப்பார். ஆனால், அவரது மகனோ ஹதீஸ் அறிவிப்பாளர்களை உரசிப் பார்த்து, "இவர் தங்கம் போன்றவர், இவர் தகரம் போன்றவர்" என்று தரம் பிரித்தார்! அவரின் சிறப்பே பெயரிலும் தங்கம்; அவரின் எழுத்துக்களும் தங்கம்!

1. பிறப்பும் கல்வியும் (டமாஸ்கஸின் மாணிக்கம்)
பெயர்: முஹம்மது பின் அஹ்மத் பின் உஸ்மான்.
சிறப்புப் பெயர்: ஷம்ஸுத்தீன் (மார்க்கத்தின் சூரியன்), அத்-தஹபீ
பிறப்பு: ஹிஜ்ரி 673-ம் ஆண்டு, சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பிறந்தார்.
கல்வி: தனது 18-வது வயதிலேயே ஹதீஸ் கலையில் ஆழமாகக் காலடி வைத்தார். சிரியா, எகிப்து, ஹிஜாஸ் எனப் பயணம் செய்து சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் கல்வி பயின்றார்.

இமாம் தஹபி வாழ்ந்த காலம் இஸ்லாமிய அறிவுலகின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. அப்போது டமாஸ்கஸில் மூன்று மாபெரும் தூண்கள் இருந்தார்கள்.

இமாம் இப்னு தைமியா (மாபெரும் சிந்தனையாளர், மார்க்க அறிஞர்).
இமாம் அல்-மிஸ்ஸி (ஹதீஸ் கலை மாமேதை).
இமாம் தஹபி (ஹதீஸ் மற்றும் வரலாற்றுத் துறை நாயகன்).

இந்த மூவரும் சமகாலத்தவர்கள், நெருங்கிய நண்பர்கள். இப்னு தைமியாவின் சிந்தனைத் தாக்கமும், அல்-மிஸ்ஸியின் ஹதீஸ் ஆய்வுத் தாக்கமும் தஹபியிடம் பெருமளவு காணப்பட்டது என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இமாம் தஹபி ஒரு நடமாடும் நூலகம் என்று கூறலாம். அவர் எழுதிய நூற்களின் பட்டியலைப் பார்த்தாலே தலைசுற்றும். ஹதீஸ் மற்றும் வரலாற்றுத் துறையில் அவர் படைத்த முக்கிய நூற்கள்:

தாரீக் அல்-இஸ்லாம் (இஸ்லாமிய வரலாறு):
இது இவரின் பிரம்மாண்டமான படைப்பு. இஸ்லாமிய வரலாற்றை நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல், தன் காலம் (ஹிஜ்ரி 700-கள்) வரை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். சுமார் 50-க்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட மாபெரும் கலைக்களஞ்சியம் இது.

சியர் அஃலாமின் நுபுலா: அறிஞர்கள், ஆட்சியாளர்கள், இமாம்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் அற்புத நூல். மொத்தம் 20-க்கும் மேற்பட்ட பாகங்கள். இன்று நாம் இமாம்களைப் பற்றிப் பேசும் பெரும்பாலான தகவல்கள் இந்த நூலிலிருந்து பெறப்பட்டவைதான். ஒருவரைப் பற்றி விவரிக்கும்போது அவரது நிறைகுறைகளை மிக அழகாக அலசுவார்.

மீஸானுல் இஃதிதால் (நீதத்தின் தராசு): ஹதீஸ் கலையில் இது ஒரு அணு ஆயுதம்! ஹதீஸ்களை அறிவித்த பலவீனமான" அறிவிப்பாளர்களைப் பற்றி மட்டும் அலசும் நூல் இது. சுமார் 9,000-க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்களை இதில் தோலுரித்துக் காட்டியுள்ளார். இந்த நூல் இல்லாமல் ஹதீஸ் விமர்சனக் கலையை எவரும் முழுமையாகப் படிக்க முடியாது.

தத்கிரத் அல்-ஹுஃப்பாத்: ஹதீஸ்களை மனனம் செய்த மாபெரும் இமாம்களின் (ஹாபிழ்கள்) வாழ்க்கை வரலாற்றை மட்டும் குறிக்கும் தனித்துவமான நூல்.

அல்-கபாயிர் (பெரும் பாவங்கள்): இது பாமர மக்களுக்காக அவர் எழுதிய நூல். இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பெரும் பாவங்கள் என்னென்ன என்பதை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் மிக எளிமையாக விளக்கியுள்ளார். இன்றும் உலகெங்கும் அதிகம் வாசிக்கப்படும் நூல் இது.

4. முஸ்தத்ரக்கின் அறுவை சிகிச்சை (தல்ஹீஸுல் முஸ்தத்ரக்) சென்ற பதிவுகளில் ஒன்றில் இமாம் ஹாகிம் எழுதிய 'முஸ்தத்ரக்' நூலைப் பற்றிப் பார்த்தோம். அதில் அவர் பலவீனமான ஹதீஸ்களை எல்லாம் 'ஸஹீஹ்' என்று தவறாகக் கூறியிருந்தார்.
அந்த நூலை முழுமையாக 'எக்ஸ்-ரே' எடுத்து, "இது ஸஹீஹ் அல்ல, இது இட்டுக்கட்டப்பட்டது (மவ்ளூ)" என்று இமாம் ஹாகிமின் தவறுகளைத் திருத்தி எழுதியவர்தான் இமாம் தஹபி. தஹபியின் இந்தச் சுருக்கம் இல்லையென்றால், இன்று முஸ்தத்ரக் நூல் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இமாம் தஹபியின் ஆகச்சிறந்த பண்பு அவரது நேர்மை. வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்தவர்களைப் புகழ்வார்கள், பிடிக்காதவர்களை மட்டம் தட்டுவார்கள். ஆனால் தஹபி ஒரு உண்மையான தராசு போன்றவர். தனக்குக் கொள்கை ரீதியாக முரண்பட்ட அறிஞர்களைப் பற்றி எழுதும்போது கூட, அவர்களின் கல்வி ஞானத்தைப் பாராட்டுவார். அதேசமயம், தனது சொந்த ஆசிரியராகவே (உ-ம்: இப்னு தைமியா) இருந்தாலும், அவரிடம் உள்ள சில கடுமைகளை விமர்சிக்கவும் அவர் தயங்கியதில்லை. சத்தியம் மட்டுமே அவருக்கு முக்கியமாக இருந்தது.

தனது வாழ்நாள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்கங்களைப் படித்து, எழுதிய அந்த மாமேதையின் கண்கள், அவரின் இறுதிக்காலத்தில் (ஹிஜ்ரி 741-ல்) பார்வையை இழந்தன. அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகள் பார்வையற்ற நிலையிலேயே மாணவர்களுக்குப் பாடம் போதித்தார்.
இறுதியாக, ஹிஜ்ரி 748-ம் ஆண்டு டமாஸ்கஸ் மண்ணில் அந்தப் பொன்மகன் மரணமடைந்தார்.

ஹதீஸ் கலை என்பது வெறும் செய்திகளைச் சுமப்பதல்ல. அச்செய்திகளைச் சுமந்த மனிதர்களின் நாடித் துடிப்பை அறிவது. அந்த மனிதர்களின் நாடித் துடிப்பை மிகத் துல்லியமாக அளந்து சொன்ன 'ஸ்கேனிங் மெஷின்' தான் இமாம் தஹபி! அவர் விட்டுச்சென்ற அந்த 'தராசு' இன்றும் நீதத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamDhahabi #SiyarAalamAlNubala #MizanAlItidal #HadithCritic #Damascus #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment