இஸ்லாமிய உலகில் மிகவும் நம்பகமானதும், துல்லியமானதுமான ஒரு மாபெரும் அறிவுப் பெட்டகம்தான் ஸஹீஹ் புகாரி. இது ஒரு காலத்தின் கண்ணாடி. பல ஆயிரம் மைல்கள் பயணித்து, மனித மூளையின் சாத்தியக்கூறுகளைத் தாண்டி இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் நிகழ்த்திய இந்த வரலாற்றுச் சாதனையை இன்று சற்று ஆழமாகப் பார்ப்போம்.
இமாம் அபூ அப்தில்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்-புகாரி (ரஹ்). ஹிஜ்ரி 194-ல் உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவர் தனது 10 வயதிலேயே ஹதீஸ்களை மனனம் செய்யத் தொடங்கினார். சுமார் ஒரு லட்சம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும், இரண்டு லட்சம் பலவீனமான ஹதீஸ்களையும் அறிவிப்பாளர் தொடர்களுடன் அப்படியே மனனம் செய்திருந்த ஒரு நடமாடும் கணினி அவர்!
அவரது ஆசானான புகழ்பெற்ற ஹதீஸ் அறிஞர் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்கள் ஒருமுறை, ஆதாரப்பூர்வமான (ஸஹீஹ்) ஹதீஸ்களை மட்டுமே கொண்டு சுருக்கமான ஒரு நூலை யாராவது தொகுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று தன் மாணவர்களிடம் கூறினார். இந்த வார்த்தை இமாம் புகாரியின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது எனவே தான் ஸஹீஹ் புகாரி என்ற மாபெரும் கிரந்தமும் உருவானது.
தான் திரட்டி வைத்திருந்த சுமார் 6,00,000 (ஆறு லட்சம்) ஹதீஸ்களிலிருந்து மிகக் கடுமையாக வடிகட்டி, மீண்டும் மீண்டும் வந்த ஹதீஸ்களையும் சேர்த்து சுமார் 7,563 / 7,275 ஹதீஸ்களை மட்டுமே இதில் இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார். இந்த நூலைத் தொகுக்க அவருக்கு 16 வருடங்கள் பிடித்தன!
நாம் முன்பே ஸஹீஹ் முஸ்லிம் பதிவில் பார்த்தது போல, இமாம் புகாரியின் நிபந்தனை மிகக் கடுமையானது. இரு அறிவிப்பாளர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தால் மட்டும் போதாது, அவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்துப் பேசியிருக்க வேண்டும் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இருக்க வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார்.
ஸஹீஹ் புகாரியின் மிகச் சிறந்த சிறப்பம்சமே அதன் அத்தியாயத் தலைப்புகள்தான். ஒரு ஹதீஸை எந்தத் தலைப்பின் கீழ் வைக்கிறார் என்பதிலேயே தனது மார்க்கச் சட்ட நிலைப்பாட்டை அவர் தெளிவாகச் சொல்லிவிடுவார். சில நேரங்களில் தலைப்புகளில் ஒரு குர்ஆன் வசனத்தையோ அல்லது சஹாபாக்களின் கூற்றையோ வைத்துவிட்டு, ஹதீஸை உள்ளே பதிவு செய்வார்.
அறிவியலும் தொழில்நுட்பமும் வளராத அந்த இருண்ட காலத்தில், ஒட்டகங்களின் மீதும் நடந்தும் பல தேசங்களைக் கடந்து, மனித மூளையின் அளப்பரிய ஞாபக சக்தியைக் கொண்டு தொகுக்கப்பட்ட இந்த "ஸஹீஹ் புகாரி", இஸ்லாமிய அறிவார்ந்த மரபின் அழிக்க முடியாத அடையாளம்.
இந்த ஆறு முக்கிய ஹதீஸ் நூல்களின் பயணத்தில் நாம் கற்றுக்கொண்ட வரலாற்றுச் சுவடுகள் வாசகர்களாகிய உங்களின் தேடலுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவும் இக்காலத்தில், ஆதாரங்களை நோக்கித் திரும்புவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த இமாம்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
- Abdullah Ibnu Naseer
No comments:
Post a Comment