ஸிஹாஹ் ஸித்தாவில் எனக்கு விருப்பமான கிதாபை பற்றி தான் இன்று நாம் பார்க்க மோஙிறோம. ஹதீஸ் உலகின் அசைக்க முடியாத இரண்டு தூண்களில் ஒன்றான ஸஹீஹ் முஸ்லிம் நூல் வரலாற்றையும், மார்க்கச் சட்டங்களையும் எந்தவித சமரசமுமின்றி துல்லியமாக அணுக நினைக்கும் எந்தவொரு ஆய்வாளனுக்கும் புகாரிக்கு அடுத்து (சில நுட்பங்களில் புகாரியையே மிஞ்சும்) ஒரு மாபெரும் வழிகாட்டி இந்த நூல்தான். ஹதீஸ் கலை வரலாற்றில் இதன் கட்டமைப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இன்று சற்று மிக விரிவாகவே அலசுவோம். வாருங்கள்!
இமாம் அபுல் ஹுஸைன் முஸ்லிம் இப்னு அல்-ஹஜ்ஜாஜ் அந்-நைஸாபூரி (ரஹ்). ஹிஜ்ரி 204 அல்லது 206-ல் குராசான் மாகாணத்தின் புகழ்பெற்ற கல்வி மையமான நைஸாபூர் - தற்போதைய ஈரான்) நகரில் பிறந்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் புகாரி போன்ற மாமேதைகளிடம் நேரடியாகக் கல்வி பயின்றவர். குறிப்பாக, இமாம் புகாரியைத் தனது ஆசானாக ஏற்று, அவரிடம் ஹதீஸ் கலையின் நுட்பங்களைக் கற்றுக் குடித்தவர் இமாம் முஸ்லிம்.
இந்த நூல் ஒரே இரவில் தொகுக்கப்பட்டதல்ல. இமாம் முஸ்லிம் அவர்கள் தான் திரட்டிய சுமார் 3,00,000 (மூன்று லட்சம்) ஹதீஸ்களைத் தன் வாழ்நாளில் தொடர்ச்சியாக 15 வருடங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தி, அதிலிருந்து மிகவும் ஆதாரப்பூர்வமான சுமார் 4,000 ஹதீஸ்களை (மீண்டும் மீண்டும் வந்தவற்றைத் தவிர்த்து) மட்டுமே தேர்ந்தெடுத்து இந்த அல்-முஸ்னத் அஸ்-ஸஹீஹ் என்ற நூலை உருவாக்கினார்.
(ஸஹீஹ் முஸ்லிம் நூலில் எத்தனை ஹதீஸ்கள் எழுதப்பட்டுள்ளன என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உள்ளது. சிலர் 7275 என்றும் சிலர் 3000 என்றும் சிலர் 5731 என்றும் கூறுகின்றனர். ஏனெனில் ஹதீஸ்களை எண்ணுவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்கு காரணம்! இன்ஷா அல்லாஹ் இது பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்)
இமாம் புகாரியின் நூலுக்கும் இமாம் முஸ்லிமின் நூலுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டால்தான், இந்த நூலின் மகத்துவத்தை நாம் முழுமையாக உணர முடியும்.
1. ஹதீஸ்களைத் தேடும் ஆய்வாளர்களுக்கான சொர்க்கம். இமாம் புகாரி அவர்கள் ஒரு ஹதீஸை அதன் சட்டங்களுக்கு (ஃபிக்ஹ்) ஏற்ப பல்வேறு அத்தியாயங்களில் பிரித்துப் பதிவு செய்வார். ஒரு ஹதீஸின் ஒரு பகுதியைத் தொழுகை அத்தியாயத்திலும், மறு பகுதியை வியாபார அத்தியாயத்திலும் வைத்திருப்பார். ஆனால் இமாம் முஸ்லிம் அப்படிச் செய்ய மாட்டார். ஒரு ஹதீஸை எடுத்தால், அந்த ஹதீஸ் எத்தனை அறிவிப்பாளர் தொடர்களின் (இஸ்னாத்) மூலமாக வந்திருக்கிறது, அதன் வார்த்தைகளில் (மத்ன்) என்னென்ன மாற்றங்கள் உள்ளன என்பதை ஒரே இடத்தில் மொத்தமாகக் கொண்டு வந்து நிறுத்திவிடுவார். இதனால், ஒரு ஹதீஸின் முழுப் பின்னணியையும், வார்த்தை வித்தியாசங்களையும் ஒரே பார்வையில் ஒப்பிட்டுப் பார்க்க ஆய்வாளர்களுக்கு இது மிகப்பெரிய வசதி!
2. தலைப்புகளைக் கொடுக்காத இமாம். ஸஹீஹ் முஸ்லிமில் இன்று நாம் காணும் அத்தியாயத் தலைப்புகள் இமாம் முஸ்லிம் அவர்களால் வைக்கப்பட்டவை அல்ல! இமாம் முஸ்லிம் அவர்கள் ஹதீஸ்களை மட்டுமே தொகுத்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த புகழ்பெற்ற அறிஞர் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்தான் அந்த ஹதீஸ்களின் மையக்கருத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற மிகச் சிறந்த தலைப்புகளைச் சூட்டினார்.
3. வரலாற்றுச் சிறப்புமிக்க முகவுரை. குதூபுஸ் சித்தா நூல்களில் இமாம் முஸ்லிம் செய்த மிகச்சிறந்த காரியம், தனது நூலுக்கு அவர் எழுதிய மிக நீண்ட முகவுரையாகும். ஒரு ஹதீஸை எப்படி அணுக வேண்டும், அறிவிப்பாளர்களின் தரத்தை எப்படி எடைபோட வேண்டும், தான் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த நூலைத் தொகுத்தேன் என்ற ஹதீஸ் கலையின் விதிகளை (உஸுலுல் ஹதீஸ்) அதில் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
4. அன்அனா அறிவிப்புகளின் நிபந்தனை. இது ஒரு மிக நுட்பமான ஹதீஸ் கலை விதி. இரு அறிவிப்பாளர்கள் (உதாரணமாக A என்பவரும் B என்பவரும்) ஒருவரையொருவர் சந்தித்து ஹதீஸைக் கேட்டதாகத் தெளிவாகக் கூறாமல், அவர் கூற நான் கேட்டேன் என்பதற்குப் பதிலாக அவர் மூலமாக (அன்) என்று அறிவிக்கும்போது,
இமாம் புகாரியின் நிபந்தனை: அவர்கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்திருக்க வேண்டும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட வேண்டும்.
இமாம் முஸ்லிமின் நிபந்தனை: அவர்கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று உறுதியானாலே போதும். அவர்கள் சந்தித்தது நிரூபிக்கப்படாவிட்டாலும் நான் ஏற்றுக்கொள்வேன் என வாதிடுகிறார். இந்த நுட்பமான விதியைத் தனது முகவுரையில் இமாம் முஸ்லிம் மிகக் கடுமையாக வாதிட்டு நிறுவியுள்ளார்.
இமாம் முஸ்லிம் அவர்களின் மரணம் கூட அவரது ஆழமான தேடலில்தான் நிகழ்ந்தது. ஒருமுறை ஒரு ஹதீஸைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, அந்த ஹதீஸ் தனது சேகரிப்பில் இருப்பதை உணர்ந்த அவர், இரவு முழுவதும் ஒரு பேரீச்சம்பழக் கூடையை அருகில் வைத்துக்கொண்டு, அந்த ஹதீஸைத் தேடிக் கொண்டே பழங்களைச் சாப்பிட்டிருக்கிறார். விடியும் போது கூடை காலியாகி, அந்த அதிகப்படியான உணவின் தாக்கத்தாலேயே அவர் மரணமடைந்தார் (ஹிஜ்ரி 261) என்று வரலாறு கூறுகிறது. அறிவிற்காகத் தன்னை அர்ப்பணித்த மாபெரும் தியாகம் இது.
ஸஹீஹ் முஸ்லிம் அது மனித மூளையின் நேர்த்தியான கட்டமைப்புக்கும், அறிவுப்பூர்வமான ஆவணப்படுத்தலுக்கும் மிகச்சிறந்த உதாரணம். இஸ்லாமியத் தத்துவங்களையும், நபி வரலாற்றையும் ஆழமாகப் படிக்க நினைக்கும் நமக்கு, இமாம் முஸ்லிமின் இந்த அறிவுப் பெட்டகம் ஒரு வரப்பிரசாதம். தொடர்ச்சியான இந்த நூலறிமுகங்கள் உங்கள் சிந்தனைக்குத் தீனியிட்டிருக்கும் என நம்புகிறேன். ஸஹீஹ் முஸ்லிமின் இந்தத் தொகுப்பு முறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
அன்புடன்,
- Abdullah Ibnu Naseer
No comments:
Post a Comment