ஒருவர் நிறைய இபாதத் செய்யலாம், நிறைய ஹதீஸ்களை மனனம் செய்திருக்கலாம். ஆனால், நான் ஒரு பெரிய அறிஞர், பெரிய மார்க்கப் பற்றுள்ளவன் என்ற எண்ணம் அவருக்குள் சிறு துளியளவாவது எட்டிப் பார்க்கும். ஆனால், தன்னுடைய நன்மைகளை, மார்க்கப் பற்றை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதில் ஒரு மனிதர் எவ்வளவு கவனமாக இருக்க முடியும் என்பதற்கு இமாம் அய்யூப் ஒரு நடமாடும் உதாரணம்!
பெயர்: அய்யூப் பின் அபீ தமீமா கய்சான்.
சிறப்புப் பெயர்: அபூபக்கர்.
காலம்: ஹிஜ்ரி 66 அல்லது 68-ல் பிறந்து, ஹிஜ்ரி 131-ல் மரணமடைந்தார் (இப்னுல் அவ்ன் அவர்களின் காலத்தவர்).
பெயர்க்காரணம் ('ஸக்தியானி'): அரபு மொழியில் 'ஸக்தியான்' என்றால் பதனிடப்பட்ட தோல் என்று அர்த்தம். இவர் தோல் வியாபாரம் செய்து வந்ததால் இந்தப் பெயர் பெற்றார். மார்க்கக் கல்வியை வருமானத்துக்காகப் பயன்படுத்தாமல், சொந்தமாக வியாபாரம் செய்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்.
இமாம் அய்யூப் அவர்கள் ஹஸன் அல்-பஸரீ, முஹம்மது இப்னு ஸீரீன் போன்ற மாபெரும் அறிஞர்களிடம் பாடம் படித்தவர். அனஸ் பின் மாலிக் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களை நேரில் சந்தித்த தாபியீ ஆவார். அவருடைய ஆசிரியர் ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, பெருமையோடு சொல்வார்:
அய்யூப், பஸ்ரா இளைஞர்களின் தலைவர் (ஸய்யிது ஷபாபி அஹ்லில் பஸ்ரா)!
இமாம் அய்யூப் அவர்களின் வாழ்வில் ஆகச்சிறந்த பண்பு அவருடைய இக்லாஸ். அவர் தனது மாணவர்களுக்கு ஹதீஸ்களை வாசித்துக் காட்டும்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நினைவால் நெஞ்சம் நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். ஆனால், தான் அழுவதை மாணவர்கள் பார்த்துவிட்டால் இவர் பெரிய பக்தியாளர் என்று தன்னை புகழ்ந்துவிடுவார்கள் எனப் பயப்படுவார்.
எனவே, கண்ணீர் வரும்போது அதை மறைப்பதற்காக, தனக்குக் கடுமையாகச் சளி பிடித்திருப்பது போல மூக்கைச் சிந்துவார். சளியை உறிஞ்சுவது போலச் சத்தம் எழுப்பிக்கொண்டே, இந்தச் சளிக்கு என்னவோ ஆகிவிட்டது, கடுமையாகத் தொந்தரவு செய்கிறது என்று சொல்லித் தன் அழுகையைத் தந்திரமாக மறைத்துவிடுவார். இறைவனுக்காகச் சிந்தும் கண்ணீரைக் கூட உலக மக்கள் பார்த்துவிடக் கூடாது என்பதில் எவ்வளவு பெரிய பேணுதல் பாருங்கள்!
இமாம் அய்யூப் அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா, மதீனாவுக்கு அடிக்கடி பயணம் செய்வார். அப்போது மதீனாவில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் இவரைச் சந்தித்திருக்கிறார்கள். இமாம் மாலிக் கூறுகிறார்: நான் அய்யூப் அஸ்-ஸக்தியானியைப் பார்த்திருக்கிறேன். அவரிடம் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டால் போதும், அவர் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுவார். அதைப் பார்க்கும் எனக்கே அவர் மீது இரக்கம் ஏற்படும். அவரின் இந்தப் பண்பைப் பார்த்த பிறகுதான் நான் அவரிடமிருந்து ஹதீஸ்களை எழுதத் தொடங்கினேன்.
பஸ்ரா நகரம் கல்வியின் மையமாக இருந்தாலும், அங்கே கத்ரிய்யா (விதியை மறுப்பவர்கள்), முஃதஸிலா போன்ற பல புதிய கொள்கை வேறுபாடுகளும் தோன்றின. ஆனால், இமாம் அய்யூப் அவர்கள் சுன்னத்தான (நபிவழியான) அகீதாவில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளவில்லை. சுன்னத்தை உயிர்ப்பிப்பதிலும், பித்அத்களை (நூதன அனாச்சாரங்களை) எதிர்ப்பதிலும் அவர் ஒரு சிங்கமாகச் செயல்பட்டார்.
ஒரு பித்அத்வாதியின் முகத்தைப் பார்ப்பதை விட எனக்கு மரணம் எவ்வளவோ மேலானது என்று அவர் அடிக்கடி கூறுவார்.
இவரிடம் பாடம் படித்தவர்கள் சாதாரண ஆட்கள் அல்ல. சுஃப்யான் அஸ்-ஸவ்ரீ, ஷுஅபா இப்னுல் ஹஜ்ஜாஜ், ஹம்மாத் பின் ஸைத் மற்றும் அபூஹனீஃபா படித்துள்ளனர். பஸ்ராவின் இன்னொரு மாமேதையான இப்னுல் அவ்ன் தன்னிடம் வருபவர்களிடம் சொல்வார்: "நீங்கள் அய்யூபிடம் சென்று ஹதீஸ் படியுங்கள். அவரை விடச் சிறந்த ஒருவரை நான் பார்த்ததில்லை."
இன்று நாம் ஒரு சிறு நன்மையைச் செய்தாலும் அதை நாலு பேருக்குத் தெரியும்படி செய்ய வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால், இமாம் அய்யூப் அஸ்-ஸக்தியானி போன்றவர்கள், தங்களின் மாபெரும் அறிவையும், இறையச்சத்தையும் ஒரு சாதாரண தோல் வியாபாரி என்ற போர்வையில் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். ஹதீஸ் கலை என்பது ஏடுகளை மனப்பாடம் செய்வதாக மட்டுமிருக்கவில்லை. அது மனிதனின் அகந்தையை அழித்து, இறைவனுக்கு முன்னால் அவனை மண்டியிடச் செய்யும் ஒரு அற்புதமான பயணம் என்பதற்கு இவரே சாட்சி!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamAyyub #AlSakhtiyani #Basra #Tabiin #HadithScholar #Ikhlas #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment