இளமையின் ஆசைகளையும், கனவுகளையும் தன் குடும்பத்தின் பொறுப்புகளுக்காக முகம் சுளிக்காமல் தியாகம் செய்த இளைஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? என் வாழ்க்கை, என் விருப்பம் என்று சுயநலம் தேடும் இன்றைய உலகிற்கு மத்தியில், தியாகம் என்பது போர்க்களத்தில் உயிர் கொடுப்பது மட்டுமல்ல, தன் குடும்பத்திற்காகத் தன் வாழ்நாளின் இன்பங்களை விட்டுக் கொடுப்பதும் மாபெரும் தியாகம்தான் என்பதை நிரூபித்தவர்தான் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி).
உஹத் போர்க்களம் முடிகிறது. இஸ்லாமியப் படையில் மாபெரும் இழப்பு. ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் போரில் ஷஹீத் ஆக்கப்படுகிறார்கள். இறப்பதற்கு முன் தந்தை தன் மகனிடம் மிகப்பெரிய செல்வத்தை விட்டுச் செல்லவில்லை. மாறாக, கழுத்தை நெரிக்கும் அளவிற்கான பெரும் கடனையும், திருமணமாகாத ஏழு (சில அறிவிப்புகளில் ஒன்பது) பெண் குழந்தைகளையும்தான்!
கற்பனை செய்து பாருங்கள்... விளையாட்டுப் பருவத்தைக் கூட முழுமையாகத் தாண்டாத 18 அல்லது 19 வயது இளைஞர் ஜாபிர். ஒரே நாளில் ஒரு பெரிய குடும்பத்தின் சுமை அந்த இளம் தோள்களில் விழுகிறது. தந்தையை இழந்த கண்ணீர் காய்வதற்குள், கடன்காரர்களின் நெருக்கடி ஒருபுறம், ஆதரவற்ற சகோதரிகளின் எதிர்காலம் மறுபுறம். அந்த இளைஞனுக்குத் திருமண வயது வருகிறது. எந்த ஒரு இளைஞனுக்கும் தன் திருமணத்தைப் பற்றி ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால் ஜாபிர் (ரலி) ஒரு நடுத்தர வயதுடைய, விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். இந்தச் செய்தி அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் காதுகளுக்குச் செல்கிறது.
ஒரு பயணத்தின் போது, ஜாபிர் (ரலி) அவர்களை அருகில் அழைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிவோடு கேட்கிறார்கள்:
ஜாபிர்! திருமணம் செய்து கொண்டீரா?
ஆம் இறைத்தூதரே என்றார் ஜாபிர்.
கன்னியையா? அல்லது திருமணமானவளையா? என்று நபிகளார் கேட்டார்கள்.
திருமணமானவளைத்தான் (விதவையைத்தான்) மணந்தேன்" என்று ஜாபிர் (ரலி) பதிலளித்தார்.
அண்ணலார் கேட்டார்கள், உம்மோடு கொஞ்சி விளையாடவும், நீர் அவளோடு கொஞ்சி விளையாடவும் ஒரு கன்னிப் பெண்ணை நீர் மணந்திருக்கக் கூடாதா?
அப்போது ஜாபிர் (ரலி) அளித்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதில், அவர் உள்ளத்தில் இருந்த முதிர்ச்சியையும் தியாகத்தையும் உலகிற்குக் காட்டியது.
இறைத்தூதரே! என் தந்தை உஹத் களத்தில் கொல்லப்பட்டு விட்டார். எனக்கு பல சகோதரிகள் உள்ளனர். அந்தச் சிறுமிகளைப் போன்றே வயதுடைய இன்னொரு சிறுபெண்ணை நான் வீட்டிற்கு அழைத்து வர விரும்பவில்லை. என் சகோதரிகளுக்குத் தலைவாரி விடவும், அவர்களைப் பராமரிக்கவும், அவர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுத் தரவும் பக்குவமான ஒரு மூத்த பெண்ணையே நான் தேர்ந்தெடுத்தேன்! என்றார்.
சுபஹானல்லாஹ்! தன் இளமைக்கால ஆசைகளைத் தன் சகோதரிகளின் கண்ணியத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எவ்வளவு அழகாகக் குழிதோண்டிப் புதைத்தார் அந்த இளைஞர்! ஜாபிர் (ரலி) அவர்களின் இந்தப் பதிலைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயம் நெகிழ்ந்தது. அந்தத் தியாக இளைஞனுக்காக உளமாரப் பிரார்த்தனை செய்தார்கள்.
தந்தையின் கடனை அடைக்க முடியாமல் ஜாபிர் (ரலி) தவித்தபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரில் வந்து ஜாபிருடைய பேரீச்சம் தோட்டத்தில் நடந்து, அந்தப் பழங்களில் 'பரக்கத்' (அருள்) வேண்டி துஆ செய்தார்கள். அந்த ஆண்டு விளைந்த பழங்களைக் கொண்டு தந்தையின் ஒட்டுமொத்த கடனும் அடைபட்டு, இன்னும் பல மாதங்களுக்குத் தேவையான பழங்களும் மீதமிருந்தன. ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்களின் மெலிந்த ஒட்டகத்தை நபிகளார் விலைபேசி வாங்கிவிட்டு, அதற்கான பணத்தையும் கொடுத்து, அந்த ஒட்டகத்தையும் அவருக்கே அன்பளிப்பாகத் திருப்பிக் கொடுத்தார்கள். இவையெல்லாம், தியாகத்தின் உருவமான அந்த இளைஞர் மீது நபிகளார் வைத்திருந்த எல்லையில்லா அன்பின் வெளிப்பாடுகள்!
இஸ்லாத்திற்காக நாம் எதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்? குடும்பத்தின் பொறுப்புகள் வரும்போது முகம் சுளிக்கிறோமா? அனாதைகளாக நிற்கும் நம் சொந்தங்களுக்கு உதவி செய்யத் தயங்குகிறோமா? என் வாழ்க்கை மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று குறுக்கிக் கொள்கிறோமா? தன் ஆசைகளை அழித்து, பொறுப்புகளைச் சுமந்த ஜாபிர் (ரலி) அவர்களை வரலாறு இன்றும் நாயகனாகப் போற்றுகிறது.
மதீனாவின் மஸ்ஜிதுந் நபவியில் தூணோடு சாய்ந்து அமர்ந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஹதீஸ்களைக் கற்பிக்கும் பெரும் அறிஞராக அவரை அல்லாஹ் உயர்த்தினான். பிறருக்காக நாம் செய்யும் எந்தத் தியாகமும் இறைவனிடம் வீணாவதில்லை. குடும்பத்தினருக்காக வியர்வை சிந்துவதும், ஆசைகளைச் சுருக்கிக் கொள்வதும் கூட ஆகச்சிறந்த தர்மமே! ஜாபிர் (ரலி) அவர்களின் அந்தத் தியாக மனப்பான்மையை அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!
✍️ Abdullah Ibnu Naseer
#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #JabirIbnAbdullah #Sacrifice #FamilyResponsibility #YouthInIslam #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment