நம்மில் அநேகம் பேருக்கு நஸாயீ என்றதுமே நினைவுக்கு வருவது, குதுபுஸ் ஸித்தாவில் (ஆறு கிரந்தங்களில்) ஒன்றாக இருக்கும் சுனன் நஸாயீ நூல் தான். ஆனால், உண்மையில் நாம் படித்துக் கொண்டிருப்பது இமாம் நஸாயீயின் அறிவுக் கடலின் ஒரு சுருக்கம் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இன்று இந்த நூலின் பின்னணியையும், இந்த 'ஸவாயிது' தொகுப்பின் அவசியத்தையும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.
இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் முதலில் தொகுத்தது 'அஸ்-சுனனுல் குப்ரா' (பெரிய சுனன்) எனும் பிரம்மாண்டமான நூலைத்தான். இதில் ஸஹீஹான (ஆதாரப்பூர்வமான), ஹஸனான, மற்றும் பலவீனமான (ஆனால் சான்றுக்குரிய) ஹதீஸ்கள், நுணுக்கமான இலல் விளக்கங்களுடன் இடம்பெற்றிருந்தன சுமார் 11,000 இற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். வரலாற்றுக் குறிப்புகளின்படி, இமாம் அவர்கள் இந்த நூலை ஒரு ஆளுநரிடம் சமர்ப்பித்தபோது, "இதிலுள்ள அனைத்தும் ஸஹீஹானவையா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாம், "இல்லை" என்று பதிலளித்தார். அப்போது அந்த ஆளுநர், "எனக்கு ஸஹீஹானதை மட்டும் தனியாகப் பிரித்துத் தாருங்கள்" என்று கேட்க, இமாம் நஸாயீ அவர்கள் அந்தப் பெரிய நூலிலிருந்து வடிகட்டித் தொகுத்த சுருக்கம்தான் அஸ்-சுனனுஸ் ஸுக்ரா (சிறிய சுனன்). இதற்கு அல்-முஜ்தபா (தேர்ந்தெடுக்கப்பட்டது) என்றும் பெயர் உண்டு. இன்று மத்ரஸாக்களிலும், பொதுவாசிப்பிலும் இருப்பது இந்த 'சிறிய' நூல்தான். ஆனால், ஆய்வாளர்களுக்குத் தீனி போடும் உண்மையான கடல் அந்த 'பெரிய' (குப்ரா) நூலில்தான் இருக்கிறது.
ஹதீஸ் கலையில் இமாம் நஸாயீ ஒரு புலி. அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் இமாம் முஸ்லிமை விடவும், ஏன் சில இடங்களில் இமாம் புஹாரியை விடவும் கூட கடுமையான நிபந்தனைகளைக் கொண்டவர். அவரது 'குப்ரா' நூலில், ஒரு ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள நுட்பமான தவறுகளை சுட்டிக்காட்டும் இடங்கள் பிரமிக்க வைக்கும். அத்தகைய அரிய குறிப்புகள் பலவும் சுருக்கப்பட்ட 'முஜ்தபா'வில் விடுபட்டிருக்கலாம்.
இப்போது என் கையில் இருக்கும் இந்த நூல் 'ஸவாயிது சுனனுல் குப்ரா'. ஆய்வுக்களத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நடைமுறைச் சிக்கல் உண்டு. நம்மிடம் ஏற்கனவே 'சுனன் நஸாயீ' (சிறியது) இருக்கும். இப்போது ஆய்வுக்காகப் பெரிய குப்ராவை வாங்கினால், அதில் பெரும்பகுதி ஏற்கனவே நம்மிடம் உள்ள சிறிய நூலில் உள்ள செய்திகளாகவே இருக்கும். இங்குதான் இந்த ஸவாயிது கைகொடுக்கிறது. இது என்ன செய்கிறது என்றால், நம்மில் பரவலாக இருக்கும் சிறிய நஸாயீ - முஜ்தபா மற்றும் மற்ற 10 நூற்களில் உள்ள ஹதீஸ்களை விட்டுவிடும். ஆனால் அவற்றில் இல்லாத பெரிய நஸாயீ மற்றும் மற்ற நூற்களில் இடம்பெற்றுள்ள தனித்துவமான ஹதீஸ்களை மட்டும் பிரித்தெடுத்துத் தருகிறது. இதனால், ஒரே நேரத்தில் இமாம் நஸாயீயின் முழுமையான இல்மை (அறிவை) அடைந்த திருப்தியும் கிடைக்கிறது. அதே சமயம் நேரமும் மிச்சமாகிறது.
என்னைப் பொறுத்தவரை, ஒரு ஆய்வாளனுக்கு மூல நூல்கள் தான் ஆக்ஸிஜன். அதிலும் குறிப்பாக, ஃபிக்ஹ் சட்டங்களை ஆய்வு செய்பவர்களுக்கு, இமாம் நஸாயீயின் பாடத் தலைப்புகளும், அவர் ஹதீஸ்களைக் கொண்டுவரும் விதமும் ஒரு தனிப் பல்கலைக்கழகம். அல்லாஹ் இந்த அறிவைத் தேடுவதையும், அதைப் பாதுகாப்பதையும் நமக்கு எளிதாக்குவானாக! இன்னும் தேடுவோம்...
இவன்,
- Abdullah Ibnu Naseer
(நிறுவனர் - பைத்துல் ஹிக்மா )
No comments:
Post a Comment