ஹதீஸ் கலை வரலாற்றில் சில இமாம்களுக்கு ஒரு தனித்துவமான சிறப்பு இருக்கும். யாராவது ஒரு மாபெரும் அறிஞரை உருவாக்கிய பெருமை ஒரு ஆசானுக்கு இருக்கும். ஆனால், ஸிஹாஹ் ஸித்தா (ஆதாரப்பூர்வமான ஆறு ஹதீஸ் நூல்கள்) என்று நாம் கொண்டாடுகிறோமே, அந்த ஆறு நூல்களின் ஆசிரியர்களுக்கும் (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா) பாடம் சொல்லிக்கொடுத்த ஒரே ஆசிரியர் யார் தெரியுமா?
அவர்தான் இமாம் குதைபா இப்னு ஸயீத் (ரஹ்).
அனைத்து மாபெரும் நதிகளும் உற்பத்தி ஆகும் ஒரு பிரம்மாண்டமான மலையைப் போன்றவர் இவர்.
நீங்கள் இமாம் புகாரியின் ஸஹீஹ் புகாரியைத் திறந்தாலும் சரி, அல்லது ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதி என எந்த நூலைத் திறந்தாலும் சரி, அங்கே முதல் ஆளாக ஹத்தஸனா குதைபா இப்னு ஸயீத்... (நமக்கு குதைபா இப்னு ஸயீத் அறிவித்தார்) என்ற வார்த்தையை நீங்கள் கடக்காமல் போகவே முடியாது. ஹதீஸ் உலகில் இவரை அனைத்துச் சாலைகளும் சந்திக்கும் மையப் புள்ளி (Intersection point) என்று சொல்லலாம்.
பெயர்: குதைபா இப்னு ஸயீத் அல்-ஸகஃபீ அல்-பல்கீ.
பிறப்பு: ஹிஜ்ரி 149 அல்லது 150-ம் ஆண்டு பிறந்தார்.
ஊர்: குராஸான் மாகாணத்தில் உள்ள (இன்றைய ஆப்கானிஸ்தான்) பல்க் என்ற பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இறப்பு: ஹிஜ்ரி 240 (தனது 90-வது வயதில் மரணமடைந்தார்).
வரலாற்றில் குதைபா இப்னு ஸயீதுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் இதுதான். இஸ்லாமிய உலகின் தூண்களாகக் கருதப்படும் ஆறு இமாம்களும் இவரிடம் அமர்ந்து ஹதீஸ் படித்துள்ளார்கள்.
இமாம் புகாரி (ரஹ்)
இமாம் முஸ்லிம் (ரஹ்)
இமாம் அபூதாவூத் (ரஹ்)
இமாம் திர்மிதி (ரஹ்)
இமாம் நஸாயீ (ரஹ்)
இமாம் இப்னு மாஜா (ரஹ்)
இவர்கள் அனைவரும் தங்களின் நூல்களில் இமாம் குதைபா வழியாக ஏராளமான ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளனர். ஒரே ஒரு மாணவர் சிறந்தவராக உருவானாலே ஆசிரியருக்குப் பெருமை. ஆறு மாமேதைகளை உருவாக்கியவரின் தரத்தை எப்படி அளப்பது?
தனது இளம் வயதில், ஹதீஸ்களைத் தேடி ஈராக், மக்கா, மதீனா, எகிப்து, ஷாம் என உலகம் முழுவதும் சுமார் 17 ஆண்டுகள் பயணம் செய்தார். மதீனாவில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் அமர்ந்து பாடம் படித்தார். எகிப்தில் இமாம் லைஸ் இப்னு ஸஅத் (ரஹ்) அவர்களிடம் பாடம் படித்தார். அவர் உலகம் முழுவதும் சுற்றி ஹதீஸ்களைச் சேகரித்துவிட்டுத் தனது சொந்த ஊரான பல்க் நகருக்குத் திரும்பியதும், ஒட்டுமொத்த உலகமும் அவரைத் தேடி பல்க் நகரை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியது.
பெரும்பாலான ஹதீஸ் இமாம்கள் வறுமையில் வாடியவர்கள் என்று நாம் படித்திருப்போம். ஆனால் இமாம் குதைபா இதற்கு ஒரு விதிவிலக்கு.
அவர் ஒரு மாபெரும் செல்வந்தர். அவருக்குச் சொந்தமாக ஏராளமான ஒட்டகங்களும், விவசாய நிலங்களும் இருந்தன. தன்னைத் தேடி வெளியூர்களிலிருந்து வரும் ஹதீஸ் மாணவர்களுக்குத் தனது சொந்தச் செலவிலேயே உணவளித்து, தங்குமிடமும் கொடுத்து உபசரிப்பார். அறிவோடு சேர்த்து உணவையும் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர்!
ஹதீஸ் கலை விமர்சனங்களில் மிகவும் கண்டிப்பானவரான இமாம் யஹ்யா இப்னு மயீன், இமாம் அஹ்மத் பின் ஹன்பல் போன்றோரால் "ஸிகா" (நம்பகமானவர்) என்று ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் குதைபா. ஒருமுறை இமாம் அஹ்மத் பின் ஹன்பலிடம் சில மாணவர்கள் வந்து, நாங்கள் யாருடைய ஹதீஸ்களை எழுதலாம்? என்று கேட்டபோது, நீங்கள் குதைபா இப்னு ஸயீதிடம் செல்லுங்கள் என்று வழிகாட்டினார்.
அவர் தனது ஊரான பல்க்கில் இருந்தபோது, பல்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் 'ஜஹ்மியா' போன்ற வழிகெட்ட கொள்கைகள் பரவத் தொடங்கின. ஆனால், இமாம் குதைபா ஒரு மலை போல நின்று, சுன்னத்தான (நபிவழியான) கொள்கை இதுதான் என்று ஹதீஸ்களின் அடிப்படையில் மக்களுக்குச் சரியான அகீதாவைப் போதித்தார்.
ஒரு மரத்தின் வேர்கள் பல திசைகளில் பரவி இருப்பதைப் போல, ஹதீஸ் கலையின் ஆணிவேர்களான புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் அனைவரும் "குதைபா" என்ற ஒற்றை ஆணிவேரில் இருந்துதான் தங்களின் ஹதீஸ் தாகத்தைத் தணித்திருக்கிறார்கள். இன்று நாம் ஒரு ஹதீஸைப் படிக்கும்போது, அந்த ஆறு இமாம்களுக்கும் கிடைக்கும் நன்மையில் ஒரு பங்கு, சத்தமே இல்லாமல் ஆப்கானிஸ்தானில் உறங்கிக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் ஆசானுக்குச் சென்றுகொண்டே இருக்கிறதா இருக்கும்!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamQutaibah #QutaibahIbnSaid #Balkh #SihahSittah #HadithScholar #TeacherOfSix #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment