பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 11, 2026

ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத்.


இமாம் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் பற்றி பார்த்தோம். இன்று அவரின் சமகாலத்தை சேர்ந்த இன்னொரு தவிர்க்கமுடியாத அறிஞரை பற்றி பார்க்கவிருக்கிறோம். ஷேக் அல்பானிக்கு (ரஹ்) அடுத்தபடியாக, நவீன காலத்தில் ஹதீஸ் கலையில் தவிர்க்க முடியாத பெயர் ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத்.

இவரை கையெழுத்துப் பிரதிகளின் பாதுகாவலர் என்று அழைக்கலாம். இஸ்லாமிய நூற்கள் பல நூற்றாண்டுகளாகக் கையெழுத்துப் பிரதிகளாகவே (Manuscripts) இருந்து வந்தன. அவற்றில் பல சிதிலமடைந்தும், பிழைகளுடனும் இருந்தன. அவற்றை நவீன அச்சுக்கு ஏற்றவாறு, பிழைகளைத் திருத்தி, மூல நூலோடு ஒப்பிட்டு, தரமான பதிப்புகளாக வெளியிடும் தஹ்கீக் (தஹ்கீக் - ஆய்வு மற்றும் சரிபார்ப்பு) கலையில் இமாலயச் சாதனை படைத்தவர் ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத்.

பிறப்பு: 1928-ம் ஆண்டு, சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பிறந்தார்.
வம்சாவளி: இவரது குடும்பம் அல்பேனியா நாட்டைச் சேர்ந்தது (எனவேதான் 'அர்ணாவூத்' என்று அழைக்கப்படுகிறார்). அல்பேனியாவிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைப் பேணுவதற்காக இவரது குடும்பம் சிரியாவிற்குப் புலம்பெயர்ந்தது.

சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்தார். பிறகு டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசல்களில் அரபு இலக்கணம் (நஹ்வு, ஸர்ஃப்), இலக்கியம் மற்றும் பாலஃகா (Balagha - சொல்லாணித் திறன்) ஆகியவற்றை ஆழமாகக் கற்றார். அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற பிறகு, ஹதீஸ் கலையில் ஈடுபாடு கொண்டு, இஸ்லாமியச் சட்டத் துறை மற்றும் ஹதீஸ் ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் ஹதீஸ்களைத் தரம்பிரிப்பதில் (ஸஹீஹ்/ளயீப்) அதிக கவனம் செலுத்தினார் என்றால், ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத் அவர்கள் மூல நூற்களைச் சரிபார்ப்பதில் கவனம் செலுத்தினார்.

இவரது ஆய்வு முறை தனித்துவமானது. ஒரு நூலை ஆய்வு செய்யும்போது, உலகெங்கிலும் உள்ள நூலகங்களில் இருக்கும் அந்நூலின் பழமையான கையெழுத்துப் பிரதிகளைத் திரட்டுவார். தனி மனிதராகச் செயல்படாமல், முஅஸ்ஸஸத் அல்-ரிஸாலா என்ற ஆய்வு மையத்தின் மூலம் ஒரு பெரிய ஆய்வுக்குழுவை உருவாக்கினார். நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை வைத்துப் பிழைகளைத் திருத்தினார். ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது, அதன் அடிக்குறிப்பில் ஹதீஸின் தரம், அறிவிப்பாளர்களின் நிலை, மாற்று அறிவிப்புகள் ஆகியவற்றை மிக விரிவாகக் குறிப்பிடுவார். இவர் தனது வாழ்நாளில் சுமார் 240-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். அவற்றில் இஸ்லாமிய உலகமே வியந்து பார்க்கும் சில படைப்புகள்: முஸ்னத் அஹ்மத் பின் ஹன்பல் : இதுவே இவரின் வாழ்நாள் சாதனை. இமாம் அஹ்மத் பின் ஹன்பலின் முஸ்னத் நூல் சுமார் 28,000 ஹதீஸ்களைக் கொண்டது. இதை ஆய்வு செய்து, 50 பாகங்களாக வெளியிட்டார். நவீன காலத்தில் அச்சிடப்பட்ட ஹதீஸ் நூற்களிலேயே இதுதான் மிகப்பிரம்மாண்டமான மற்றும் துல்லியமான பதிப்பாகக் கருதப்படுகிறது.

ஸியர் அஃலாம் அல்-நுபலா. இமாம் தஹபி எழுதிய வரலாற்றுச் சுருக்க நூல் இது. இதை 25 பாகங்களில், மிகத் துல்லியமான அடிக்குறிப்புகளுடன் வெளியிட்டார். வரலாற்று மாணவர்களுக்கு இது ஒரு முதன்மை ஆதாரமாகத் திகழ்கிறது.

ஸஹீஹ் இப்னு ஹிப்பான். இமாம் இப்னு ஹிப்பானின் நூலை 18 பாகங்களில் ஆய்வு செய்து வெளியிட்டார். இப்னு ஹிப்பானின் ஹதீஸ் வரிசைமுறை சிக்கலானது. அதை எளிமைப்படுத்தி, ஹதீஸ்களின் தரத்தையும் இதில் பதிவு செய்துள்ளார். ஷரஹ் அஸ்-சுன்னா. இமாம் அல்பகவியின் இந்த நூலை 16 பாகங்களில் வெளியிட்டார். ஸாதுல் மஆத். இமாம் இப்னுல் கய்யிம் எழுதிய இந்நூலை, ஷேக் அப்துல் காதர் அல்-அர்ணாவூத் உடன் இணைந்து 5 பாகங்களில் மிகச்சிறப்பாகப் பதிப்பித்தார்.

அல்பானி மற்றும் அர்ணாவூத் இருவரும் அல்பேனியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் டமாஸ்கஸில் வாழ்ந்த சமகாலத்தவர்கள். இருவருக்கும் ஹதீஸ் தரம்பிரித்தலில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஷேக் ஷுஐப், ஹதீஸ் விதிகளில் ஹனஃபி மற்றும் ஷாஃபி மத்ஹபின் முற்கால அறிஞர்களின் முறையைச் சற்று அதிகமாகப் பேணினார். ஆயினும், ஷேக் அல்பானியின் சேவையை இவர் மதித்தார். அல்பானி இல்லையென்றால், இந்த நூற்றாண்டில் ஹதீஸ் கலை மக்களிடம் சென்றடைந்திருக்காது என்று வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.

சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக, தனது இறுதிக்காலத்தில் ஜோர்டான் நாட்டின் அம்மான் நகருக்குக் குடிபெயர்ந்தார்.
ஹிஜ்ரி 1438 (கி.பி 2016), அக்டோபர் 27 அன்று தனது 88-வது வயதில் காலமானார்.

இன்று நாம் புத்தகக் கடைகளில் அல்லது நூலகங்களில் மிக அழகாக அச்சிடப்பட்ட, வாசிப்பதற்கு இலகுவான ஹதீஸ் நூற்களைப் பார்க்கிறோம் என்றால், அந்த எழுத்துக்களுக்குப் பின்னால் ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத் அவர்களின் பல ஆண்டுகால உழைப்பு உள்ளது. அவர் உருவாக்கிய தஹ்கீக் (ஆய்வு) முறைமை, இனி வரும் காலங்களில் ஹதீஸ் பதிப்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும்.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#HadithScholar #ShuaibAlArnaut #MusnadAhmad #Tahqiq #IslamicScholar #History #Syria #Jordan #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment