பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, February 14, 2026

இப்னு ஹிப்பான்


இஸ்லாமிய அறிவுலகில், குர்ஆனுக்கு அடுத்தபடியாக நாம் பாதுகாப்பது அண்ணல் நபிகளாரின் பொன்மொழிகளையே. இந்த ஹதீஸ் கடலில், ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) என்று நம்பகத்தன்மையுடன் தொகுக்கப்பட்ட நூல்களில், புஹாரி மற்றும் முஸ்லிமுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப்படுவது ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பிறகு ஸஹீஹ் இப்னு குஸைமா!

எனது பைத்துல் ஹிக்மா நூலகத்தில் இணைந்துள்ள 'ஸவாயிது இப்னு ஹிப்பான் நூலை முன்னிட்டு, இந்த இமாம் மற்றும் அவரின் நூல் பற்றிய ஒரு பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அபூ ஹாதிம் முஹம்மத் இப்னு ஹிப்பான் அல்-பஸ்தி (இறப்பு: ஹிஜ்ரி 354) அவர்கள் நான்காம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர். இவர்  ஹதீஸ்லை அறிஞராக (முஹத்திஸ்) மட்டுமிருக்காமல் சிறந்த புவியியலாளர், மொழி ஆய்வாளர், மருத்துவர் மற்றும் தத்துவஞானியிகவும் இருந்தார். (இமாம் இப்னு ஹிப்பான் பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்) இந்த பன்முகத் திறமை அவரது ஹதீஸ் தேர்விலும், நூலின் கட்டமைப்பிலும் எதிரொலிப்பதை நாம் காணலாம்.

என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட் நூற்களில் ஸஹீப் இப்னு ஹிப்பான்‌ மற்றும் இப்னு குஸைமா என்பன தவிர்க்க முடியாத இடத்தை பெற்றவை. இப்னு ஹிப்பானின் அசல் நூலின் பெயர் அத்-தகாஸீம் வல் அன்வா. அதாவது "பிரிவுகள் மற்றும் வகைகள்".
பொதுவாக ஹதீஸ் நூல்கள் 'முஸ்னத்' (அறிவிப்பாளர்) அடிப்படையிலோ அல்லது 'சுனன்/ஜாமி' (சட்டத் தலைப்புகள், பல்துறை தலைப்புகள்) அடிப்படையிலோ அமைந்திருக்கும். ஆனால், இப்னு ஹிப்பான் ஒரு புதிய, மிகவும் சிக்கலான முறையை அறிமுகப்படுத்தினார். அவர் தனது நூலை 5 பிரிவுகளாகவும், 400 வகைகளாகவும் பிரித்தார்.
உதாரணத்திற்கு, தொழுகை பற்றிய ஒரு ஹதீஸை தேட வேண்டுமென்றால், அது ஃபிக்ஹ் தலைப்பில் இருக்காது. மாறாக, அந்த ஹதீஸ் ஒரு கட்டளையா, தடையா,அல்லது செய்தியா;என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும். இது சாதாரண மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. நூலின் இந்தச் சிக்கலான அமைப்பைப் பார்த்து, பிற்காலத்தில் வந்த அறிஞர் அமீர் அலாவுத்தீன் அலி இப்னு பலூபான் அவர்கள், இதை முறைப்படுத்தி, நமக்குத் தெரிந்த 'ஃபிக்ஹ்' தலைப்புகளின் கீழ் கொண்டு வந்தார். அந்த நூல்தான் "அல்-இஹ்ஸான் ஃபி தக்ரீபி ஸஹீஹ் இப்னு ஹிப்பான்". இன்று நாம் படிக்கும் பெரும்பாலான சஹீஹ் இப்னு ஹிப்பான் பிரதிகள் இந்த அடிப்படையிலேயே உள்ளன.

இப்னு ஹிப்பான் நூலை சுருக்கி அதில் இடம்பெற்றுள்ள ஸவாயிதான கூடுதலான செய்திகளை மட்டும் தொகுத்துள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு நூல் உண்டு. அதன் முழுப்பெயர் 'மவாரித் அல்-லம்ஆன் இலா ஸவாயிது இப்னு ஹிப்பான்'. இதைத் தொகுத்தவர் இமாம் அல்-ஹைதமி (ரஹ்). ஆய்வாளர்களுக்கு, ஏற்கனவே புகாரி மற்றும் முஸ்லிமில் உள்ள ஹதீஸ்கள் மனப்பாடமாகத் தெரிந்திருக்கலாம். அவர்களுக்குத் தேவை, "புகாரி, முஸ்லிமில் இல்லாத, ஆனால் இப்னு ஹிப்பானில் மட்டும் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்திகள் எவை?" என்பதுதான்.
இந்த 'ஸவாயிது' நூல் அதைத்தான் செய்கிறது:

புகாரி, முஸ்லிமில் வந்த ஹதீஸ்களை நீக்கிவிடும். இப்னு ஹிப்பானின் தனித்துவமான அறிவிப்புகளை (Unique Narrations) மட்டும் வடிகட்டித் தரும். இதனால் ஒரு ஆய்வாளரின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. அரிதான செய்திகள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் இதில் அதிகம் கிடைக்கும். இப்னு ஹிப்பானின் நிபந்தனையும், விமர்சனமும் ஹதீஸ் கலை விதிகளின்படி, இப்னு குஸைமாவுக்கு அடுத்தபடியாக இப்னு ஹிப்பான் வைக்கப்படுகிறார். இருப்பினும், அறிஞர்கள் இவரிடம் ஒரு சிறிய 'தஸாஹுல்' (மென்போக்கு/Lenience) இருப்பதாகக் குறிப்பிடுவார்கள்.

மஜ்ஹூல் (அறியப்படாதவர்) பற்றிய விதி: ஒரு அறிவிப்பாளரைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை, அவர் நம்பகமானவர் என்று யாரும் சொல்லவும் இல்லை என்றால், மற்ற இமாம்கள் அவரை 'மஜ்ஹூல்' என்பார்கள். ஆனால், இப்னு ஹிப்பான் அவரை நம்பகமானவர் என்று ஏற்றுக்கொள்வார். எனவே, இப்னு ஹிப்பானின் தனித்துவமான ஹதீஸ்களை ஆய்வு செய்யும்போது, இந்த விதியை மனதில் கொண்டு அணுகுவது ஆய்வாளர்களுக்கு அவசியம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

படத்தில் நான் இணைத்திருக்கும் ஸவாயிது இப்னு ஹிப்பானில் 9 கிரந்தங்களில் இல்லாத மேலதிக செய்திகள் பதிவாகியுள்ளன. 300 க்கும் மேற்மட்ட ஸவாயிதான செய்திகளை தொகுத்து தமிழகத்லை சேர்ந்த அல்முதர்ஜிம் பதிப்பகம் வெளியிட்டுள்ளலு. ஸவாயிது இப்னு ஹிப்பானை வெறும் நூலாக பார்க்க கூடாது.அது ஒரு ஆய்வுக்களம். இமாம் நஸாயீயின் நுணுக்கத்தையும், இமாம் முஸ்லிமின் ஒழுங்கையும் தாண்டி, இப்னு ஹிப்பான் தனது அறிவார்ந்த பகுப்பாய்வின் மூலம் ஹதீஸ்களைத் தொகுத்த விதம் அற்புதமானது. எனது 'பைத்துல் ஹிக்மா' நூலகத்தில், ஆறு கிரந்தங்களுக்கு அப்பால் நின்று இஸ்லாமிய வரலாற்றையும் சட்டத்தையும் ஆய்வு செய்ய இந்த நூல் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்!

என்றும் தேடலுடன்,

- Abdullah Ibnu Naseer 
(பைத்துல் ஹிக்மா நூலகம்)

No comments:

Post a Comment