பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, February 15, 2026

அஹ்மத் பின் அல்-ஹுசைன் அல்-பைஹகீ.


ஃபிக்ஹ் (சட்டம்) வேறு, ஹதீஸ் வேறு என்று மக்கள் பிரித்து வைத்திருந்த காலம் அது. சட்டங்கள் என்றால் அது இமாம்களின் ராய் (சுய கருத்து)" என்றும், ஹதீஸ் என்றால் அது அறிவிப்பாளர் தொடர் என்றும் ஒரு மாயை இருந்தது.
அந்த மாயையை உடைத்தெறிந்தவர் இமாம் பைஹகீ (ரஹ்). எந்தவொரு சட்டமாக இருந்தாலும், அதற்கு அடிப்படையாக ஒரு 'நபிமொழி' (ஆதாரம்) இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிரூபித்தவர் இவர்.

பெயர்: அஹ்மத் பின் அல்-ஹுசைன் அல்-பைஹகீ.
பிறப்பு: ஹிஜ்ரி 384-ம் ஆண்டு, பாரசீகத்தின் 'பைஹக்' மாவட்டத்தில் உள்ள குஸ்ராபாத் என்ற ஊரில் பிறந்தார்.
கல்வி தாகம்: இவர் ஒரு இடத்தோடு முடங்கிவிடவில்லை. குராஸான், பக்தாத், கூஃபா, மக்கா, மதீனா என அலைந்து திரிந்து, சுமார் 100-க்கும் மேற்பட்ட ஹதீஸ் கலை வல்லுநர்களிடம் பாடம் பயின்றார். இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்களின் தலைசிறந்த மாணவர் இவர்தான்.

இமாம் பைஹகீயின் வாழ்நாள் சாதனை அஸ்-சுனன் அல்-குப்ரா என்ற நூலாகும். மற்ற ஹதீஸ் நூற்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
புகாரி, முஸ்லிம் போன்ற நூற்கள் "ஸஹீஹான ஹதீஸ்களை" மட்டும் தொகுத்தன. ஆனால் இமாம் பைஹகீயின் நோக்கம், "சட்டங்களுக்கான ஆதாரங்களைத் தொகுப்பது". தொழுகையில் கையை உயர்த்த வேண்டுமா? பாங்கு சொல்லும்போது விரலை எங்கே வைக்க வேண்டும்?இப்படி ஒவ்வொரு செயலுக்கும் நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? சஹாபாக்கள் என்ன செய்தார்கள்? என்பதைத் தேடித் தேடித் தொகுத்தார்.
சுமார் 22,000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்களைக் கொண்ட பிரம்மாண்டமான தொகுப்பு இது. இமாம் இப்னு ஸலாஹ் கூறுகிறார்: எமக்குத் தெரிந்த வரையில், சட்டதிட்டங்களுக்கு ஆதாரம் காட்டுவதில் பைஹகீயின் இந்த நூலுக்கு நிகரான ஒரு நூல் உலகில் இல்லை."

பலரும் இவரை ஷாஃபி மத்ஹபின் தீவிர ஆதரவாளர் என்று நினைப்பதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அவர் இமாம் ஷாஃபியின் சட்ட தீர்ப்புக்களை ஏற்க காரணம், "இமாம் ஷாஃபியின் சட்டங்கள் பெரும்பாலும் ஹதீஸை ஒட்டியே இருந்தன" என்பதுதானே தவிர, கண்மூடித்தனமான பற்று (தக்லீத்) அல்ல. சில இடங்களில் இமாம் ஷாஃபியின் கூற்றுக்கு மாற்றமான ஹதீஸ் கிடைத்தால், "ஹதீஸ் தான் எனக்கு முக்கியம்" என்று துணிச்சலாக மாற்றுக் கருத்தையும் பதிவு செய்துள்ளார். அதனால்தான் இமாம் தஹபி, "பைஹகீ நினைத்திருந்தால் தனக்கென ஒரு தனி வழிமுறையை (இஜ்திஹாக்) உருவாக்கியிருப்பார்" என்று புகழ்கிறார்.

இவர் ஹதீஸ் கலையின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்: தலாஇல் அந்-நுபுவ்வா. நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களை, கட்டுக்கதைகள் இல்லாமல் ஆதாரப்பூர்வமான செய்திகளாகத் தொகுத்த நூல் இது. சீறா (வரலாறு) எழுதுபவர்களுக்கு இதுவே அடிப்படை.

ஷுஅபுல் ஈமான் : ஈமான் என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது என்ற ஹதீஸின் அடிப்படையில், ஒவ்வொரு கிளையையும் விரிவாக விளக்கிய நூல்.

இவரின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு ஹதீஸைப் பதிவு செய்தால் மட்டும் போதாது. அதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? அறிவிப்பாளர் யாராவது பலவீனமானவரா? என்பதையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டுவார். ஹதீஸ் இல்லாத சட்டங்களை மக்கள் பின்பற்றக்கூடாது என்பதில் இவர் குறியாக இருந்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..." என்ற வார்த்தையைச் சுமந்து திரிந்த அந்த மகான், ஹிஜ்ரி 458-ம் ஆண்டு மரணமடைந்தார்.

சட்டங்கள் என்பது மனிதர்களின் மூளையில் உதிப்பவையல்ல மாறாக அவை வஹீ ( இறைச்செய்தி) எனும் கடலிலிருந்து எடுக்கப்பட வேண்டிய முத்துக்கள் என்பதை இமாம் பைஹகீ தனது 'சுனன்' நூல் மூலம் நிரூபித்தார்.

நபிமொழியின் பாதுகாவலர் இமாம் பைஹகீ! 

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamBayhaqi #SunanAlKubra #HadithScholar #SunnahDefender #DalailAlNubuwwah #IslamicHistory #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment