பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, February 2, 2026

ஷபே பராஅத் இரவு பற்றி அறிந்து கொள்ளுவோம்


💞 ஷபே பராஅத் இரவு பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• ஷஃபான் மாதத்தின் 15வது தினத்தை ஷபே பராஅத் இரவு, பரக்கத் பொருந்திய இரவு என்று கூறி அன்றைய நாளையும், இரவையும் சிறப்பித்து கொண்டாடுவார்கள். 

• அன்றைய நாளை மஹ்ரிப் நேரத்தில் சிறப்பு துஆ, பயான், அன்றைய நாளில் புதிய ஆடை, விஷேச உணவுகள் சிறப்பு தொழுகை, சிறப்பு நோன்பு என்று அன்றைய இரவை சிறப்பிப்பார்கள்.

• இது மட்டுமில்லாமல் பள்ளி, வீடுகளில் மஹ்ரிப் பிறகு மூன்று யாசின்கள் ஓதி, சிறப்பு துஆ செய்து உணவுகள் பரிமாறுவார்கள்! ஒவ்வொரு யாசின் ஓதும் போதும் ஒவ்வொரு சிறப்பு கூறுவார்கள்!

• இது மட்டுமல்லாமல் ஷஃபான் 15 வது இரவு சிறப்புக்குரிய ஒன்று என்றும், ஒரு சில ஹதீஸ்கள் வந்துள்ளன, ஆனால் அவை அனைத்துமே (ளஈஃப்) மிக பலவீனமானவை அல்லது மௌளூ (இட்டுக்கட்டப்பட்ட) செய்திகளாகவே உள்ளன! இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

💟 பராஆத் இரவு தோன்றிய வரலாறு :

• ஷாபான் 15 த்தாம் நாளை பராஆத் இரவு என்று ஒரு கொண்டாட்ட தினமாக குறிப்பாக அறிமுகப்படுத்தியவர்கள் (நெருப்பு மூட்டி) “பராமிகாக்கள்" ஆவார்கள்.

அல்ஹாபிழ் அபுல் கத்தாப் இப்னு தஹிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

• இஸ்லாத்தை சார்ந்த சில பித்அத்வாதிகள், மஜுஸி (நெருப்பு வணங்கிகளின் வழிமுறைகளை பின்பற்றினார்கள் அது மட்டும் அல்லாமல் அவர்கள் கொள்கைகளை தூய இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டு வந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை  வீணாகவும் விளையாட்டாகவும் எடுத்து கொண்டார்கள்.

• இந்த ஷாபான் மாதத்தில் 15 ஆம் நாளை சிறப்பு நாளாக பராமிக்காக்களின் காலத்தில் தான் ஏற்படுத்தினார்கள்! அவர்கள் தான் நெருப்பு வணக்கத்தின் அடிப்படைகளை இஸ்லாத்தில் புகுத்தினார்கள்!

• ஷியா கொள்கை கொண்ட முஹம்மத் பின் அலீ பின் ஹலப் ஆபூ காலிப் என்பவன் முதன் முதலில் ஷாபான் நடுப்பகுதியை வித்தியாசமான முறையில் இனிப்பு பண்டங்கள் - உணவுகள் மூலமாக பண்டிகைத் போன்று உருவாக்கினான்!

(நூல் : அல்கயாத் அல்முஹ்தனவா வ மவ்ப்புல் இஸ்லாம் மீஹைா : 210)

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

•  ஒரு காலத்திலிருந்து 
இன்னொரு காலத்திற்கும் ஏற்றால் போல் ஷாபான் நடுப்பகுதியை வித்தியாசமாக கொண்டாட ஆரம்பம்பித்தார்கள்!

 • ஆரம்ப காலத்தில் ஷாபான் 15 ம் நாளை மெழுகுவர்த்திகள், தீப்பந்தங்கள், பள்ளிவாயல்களில் விளக்குகள் பற்றவைத்து கொண்டாடினார்கள் !

• இந்த இரவில் மட்டும் அமல் செய்யவும் அல்லாஹ்வை ஞாபகமூட்டுவதற்காகவும் என்று மக்கள் ஒன்றுகூட ஆரம்பம் செய்தார்கள்! அதனுடன் சேர்த்து கப்ருகளையும் ஜியாரத் செய்யவும் ஆரம்பம் செய்தார்கள்!

• வீடுகளில் இந்த தினத்தில்
இனிப்புப்பண்டங்களும் , சிறப்பு உணவு சமைத்தல், அந்த நாளுக்குகேன்று வீட்டை அழங்காரம் செய்ய ஆரம்பம் செய்தார்கள் 

(நூல் : இக்திழாஉ அஸ்சிராத்தல் முஸ்தகீம் : 12/128)

• இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் அடிப்படை விதி இது தான்! 1) நபி (ஸல்) அவர்கள் ஒன்றை சொல்லவும் இல்லை செய்யவும் இல்லை, 2) ஸஹாபாக்கள் செய்யவில்லை, 3) தாபிஈன்களின், தபா தாபிஈன்களின் பொதுநடைமுறைகளிலும் இது இல்லை! தொடர்ந்து மூன்று தலைமுறைகளிலும் தெளிவான ஆதாரம் இல்லை என்றால் அது ஒரு இபாதத் (அமல்) ஆக நிரூபிக்கப்படாது!

• ஷபே பராஅத் இரவு பற்றி ஸஹீஹான எந்த ஆதாரமும் கிடையாது! ஷபே பராஅத் என்ற ஒரு பெயர் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களிலும் கிடையாது! இது தெளிவான பித்அத் (புதுமை) ஆகும்!

💟 ஷபே பராஅத் இரவு சிறப்பு பற்றி ஹதீஸ்கள் :
 
• ஷபே பராஅத் இரவு என்று குறிப்பிட்டு இல்லாமல், ஷஃபான் 15வது நாளை குறிப்பிட்டு, சில ஹதீஸ்களும் இன்னும் ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் வந்துள்ளன! அனைத்தையும் இங்கு குறிப்பிடுவது கடினம், சில பிரபலமான செய்திகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்!

1)  ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹ், தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை கொள்பவன் 2. கொலை செய்தவன்!

• இந்த ஹதீஸ் இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பான் ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது. இது மிகவும் பலவீனமான ஹதீஸ் இந்த ஹதீஸை இமாம் அல் முன்திரி (ரஹ்), அல் பைஹகி (ரஹ்), இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்) ஆகிய அனைவரும் பலவீனம் என்றே கூறியுள்ளார்கள்!

(நூல் : அத்தர்கீப் வத் தர்ஹீப்)

2) ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகின்றேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• மேலே உள்ள ஹதீஸ் இப்னுமாஜா, பைஹகி ஆகிய ஹதீஸ் நூல்களில் வந்துள்ளது! இது மிகவும் பலவீனமான ஹதீஸ் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் இமாம் அல்பானி (ரஹ்), நவவி (ரஹ்), இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தஹபி (ரஹ்) ஆகிய அனைவரும் கூறியுள்ளார்கள்!

(நூல்கள் : ஸில்ஸிலதுல் அஹாதீஸிழ் ழஈபா, அல்-முஜமூ, மிஜானுள் திடல் பி நஹ்திர் ரிஜால்) 

3) தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

(அல் குர்ஆன் : 44:2-4)

• மேலே உள்ள அல்குர்ஆன் வசனம் ஷபே பராஅத் இரவை குறித்தே அருளப்பட்டுள்ளது. என்று இதை ஆதரிக்ககூடியவர்கள் கூறுகிறார்கள். 

• ஆனால் இந்த வசனம் லைலத்துல் கத்ர் இரவை பற்றியே குறிப்பிடுகிறது என்பதை இப்னு உமர் (ரழி), முஜாஹித் (ரழி), அபூ மாலிக் (ரழி), அத்-தஹ்ஹாக் (ரழி) ஆகிய ஸஹாபாக்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்!

(நூல்கள் : தப்ஸிர் இப்னு கசிர் : சூரத்துல் துகானின் ஆரம்ப வசனத்தின் விளக்க உரை)

4) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீவு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் திர்மிதி,இப்னு மாஜா போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது! இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானது என்று இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), அல்பானி (ரஹ்) ஆகிய ஹதீஸ் கலை அறிஞர்களும் மேலும் இது பலஹீனமான ஹதீஸ் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்!

(நூல்கள் : திர்மிதி,ஷுஅபுல் ஈமான், அல்-முதனாஹியா பி அல்-அஹாதீஸ் அல்-வாஹியா, ஸில்ஸிலதுல் அஹாதீஸிழ் ழஈபா)

5) யார் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப் பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்!

• மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஒரு செய்தி அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான எந்த ஒரு ஹதீஸ் நூலிலும் நேரயாகவோ அல்லது மறைமுகமாகவோ இடம்பெறவில்லை! இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய்யான செய்தியாகும்! நபி (ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பெரும் பாவமாகும்!

ஸலமா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :

நான் கூறாத ஒன்றை கூறினார்கள் என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 109)

6) ஐந்து நாட்களின் இரவுகளில் கேட்க்கப்படும் துஆக்கள் மறுக்கப்படமாட்டாது: 1) ரஜப் மாதத்தின் முதல் இரவு, 2) ஷஃபானின் 15வது இரவு, 3) ஜும்ஆ இரவு, 4) நோன்புப் பெருநாள் இரவு, 5)உழ்ஹியாப் பெருநாள் இரவு என்று நபியவர்கள் கூறினார்கள். 

• இந்த ஹதீஸ் தாரீகு இப்னு அஸாகிர் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது! இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமான ஹதீஸ் என்றும் இந்த ஹதீஸ் நிராகரிக்கப்பட்டது என்றும் இமாம் அல்பானி (ரஹ்), இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்), இமாம் இப்னுல் ஜௌஸி (ரஹ்), இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளார்கள்!

(நூல்கள் : ஸில்ஸிலதுல் அஹாதீஸிழ் ழஈபா, இக்திதாஉஸ் ஸிராத்தில் முஸ்தகீம், லதாஇஃபுல் மஆரிஃப், அல் இலல் அல் முதநாஹிய்யா)

• மேலே குறிப்பிட்டதை விட அதிகமான செய்திகள் உள்ளன ஆனால் அவற்றை எடுத்து அமல் செய்யும் அளவிற்கு அந்த செய்திகள் பலமாக இல்லை. 

• இந்த இரவில் நாம் குறிப்பிட்டு எந்த விதமான அமல்களும் செய்ய வேண்டியது கிடையாது! மற்ற நாட்களை போல் இந்த நாட்களையும் நம்முடைய சக்திக்கு இயன்ற அளவுக்கு அமல்களை செய்தாலே போதுமானது!

No comments:

Post a Comment