பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, February 20, 2026

இமாம் அபூபக்ர் அல்-பஸ்ஸார்.


பொதுவாக முஸ்னத் வகை நூல்கள் என்றால் என்ன? அபூபக்கர் (ரலி) அறிவித்தவை, உமர் (ரலி) அறிவித்தவை என்று நபித்தோழர்களின் பெயர்களின் கீழ் ஹதீஸ்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் பெரும்பாலும் சரி, தவறு பற்றிய விமர்சனங்கள் இருக்காது. ஒரு தகவல் களஞ்சியம் போல இருக்கும். ஆனால், ஒரு இமாம் வந்தார். நான் ஹதீஸ்களை அடுக்கி மட்டும் வைக்கமாட்டேன். ஒவ்வொரு ஹதீஸையும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் போல வெட்டி ஆராய்ச்சி செய்வேன் என்றார்.

அவர்தான் இமாம் அபூபக்ர் அல்-பஸ்ஸார்.
1. யார் இந்த பஸ்ஸார்?

பெயர்: அஹ்மத் பின் அம்ர் பின் அப்துல் காலிக் அல்-பஸ்ஸார்.
ஊர்: ஈராக்கின் புகழ்பெற்ற 'பஸ்ரா' நகரத்தைச் சேர்ந்தவர்.
காலம்: ஹிஜ்ரி 3-ம் நூற்றாண்டு (இறப்பு: ஹிஜ்ரி 292). இவர் இமாம் நஸாயீ, இமாம் அபூயஃலா ஆகியோரின் சமகாலத்தவர்.
பயணப் பிரியர்: ஹதீஸ் கலைக்காகத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவழித்தவர். ஈராக், ஈரான் (இஸ்ஃபஹான்), சிரியா, எகிப்து, ஹிஜாஸ் (மக்கா-மதீனா) என உலகைச் சுற்றிவிட்டு, இறுதியில் பாலஸ்தீனத்தில் வந்து தங்கினார்.

இவருடைய நூல் முஸ்னத் அல்-பஸ்ஸார் என்று அழைக்கப்பட்டாலும், அறிஞர்கள் இதற்கு வைத்த செல்லப்பெயர் "அல்-பஹ்ருஸ்-ஸக்கார்" (நிரம்பி வழியும் கடல்). ஏன் இந்தப் பெயர்? இது ஒரு சாதாரண முஸ்னத் நூலல்ல. ஒரு ஹதீஸைக் கொண்டு வருவார். கொண்டு வந்துவிட்டு சும்மா இருக்க மாட்டார். இந்த ஹதீஸ் இந்த நபித்தோழர் வழியாக இந்த ஒரு பாதையில் மட்டும்தான் வந்துள்ளது" என்று அதன் தனித்துவத்தைச் சொல்வார். அல்லது, இந்த அறிவிப்பாளர் தொடரில் இவர் இருக்கிறார். அவரைப் பற்றி அறிஞர்களின் கருத்து இது..." என்று விமர்சிப்பார். சில நேரங்களில் அந்த ஹதீஸில் உள்ள மறைமுகமான குறைகளை சுட்டிக்காட்டுவார். சுருக்கமாகச் சொன்னால், இது ஹதீஸ் தொகுப்பு நூல் மட்டுமல்ல; ஒரு ஹதீஸ் ஆய்வுக் கூடம் என்றும் சொல்லலாம். 

இமாம் பஸ்ஸாரின் சிறப்பு இதுதான். அவர் ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "லா நஃலமுஹு இல்லா மின் ஹாதல் வஜ்ஹ்" (இந்தப் பாதையைத் தவிர வேறு வழியில் இந்த ஹதீஸ் வந்ததாக நமக்குத் தெரியவில்லை). இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் எவ்வளவு அரியது (ஃஙரீப்) என்பதை உலகுக்கு உணர்த்தினார். ஹதீஸ் கலையில் "இலல்" (நுண்ணிய குறைகள்) பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவரது நூல் ஒரு தங்கச் சுரங்கம். இமாம் பஸ்ஸார் ஒரு மிகப்பெரிய ஹதீஸ் حافظ (நினைவாற்றல் மிக்கவர்). நேர்மையானவர்.
இருப்பினும், அவர் மீது ஒரு சிறிய விமர்சனமும் உண்டு. அவர் தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் நிறையப் பயணம் செய்தார். பயணங்களின்போது கையில் புத்தகங்கள் இல்லாமல், தனது நினைவாற்றலை மட்டுமே நம்பி ஹதீஸ்களை அறிவித்தார். இதனால், முதுமை மற்றும் பயணக் களைப்பு காரணமாக, சில ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் அவருக்குச் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டன.

இமாம் தாரகுத்னீ கூறுகிறார்: பஸ்ஸார் நேர்மையானவர், நம்பகமானவர். ஆனால் பயணங்களில் புத்தகங்கள் இல்லாததால் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டன. இருப்பினும், அவர் வேண்டுமென்றே தவறு செய்யவில்லை என்பதால், அறிஞர்கள் அவரை ஒரு முக்கிய ஆதாரமாகவே கருதுகிறார்கள்.

தனது வாழ்நாள் முழுவதும் ஹதீஸ் தேடி அலைந்த அந்த ஞானி, இறுதியாக பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் வந்து தங்கினார். அங்கேயே ஹிஜ்ரி 292-ம் ஆண்டு மரணமடைந்தார்.

இமாம் அஹ்மத், இமாம் அபூயஃலா போன்றோர் ஹதீஸ்களைப் பாதுகாக்கும் சேமிப்புக் கிடங்குகளை கட்டினார்கள். ஆனால் இமாம் பஸ்ஸார், அந்தச் சேமிப்புக் கிடங்கில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தரச்சான்றிதழ் வழங்கும் அதிகாரியாகச் செயல்பட்டார். 

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamBazzar #MusnadBazzar #Basra #HadithCritic #Ilal #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment