நான் வாங்கிய முதல் சுனன் ஹதீஸ் கிதாப்! ஆம் அது சுனன் அபூதாவூத். 2018 இல் செப்டம்பர் அல்லது அக்டோபர் காலப்பகுதியில் (எந்த மாதம் என்பதை மறந்துவிட்டேன். என் 15வது வயதில்) வாங்கினேன்.
அந்த காலத்தில் தான் சுனன், ஜாமிஉ, முஸ்னத் வகையறாக்கள் பற்றியும் அறிந்து வைத்திருந்தேன். எனவே சுனன் பிரிவில் முதலாவதாக எழுதப்பட்ட அபூதாவூத் எனக்கு விருப்பமான கிரந்தமாக மாறியிருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.
(இன்ஷா அல்லாஹ் சுனன், ஜாமிஉ, முஸ்னத் அதே போல முதவாதிர், ஸஹீஹ், ஹசன் பற்றியும் நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்)
இனி இன்று நூலறிமுகம் தொடரில் சுனன் அபூதாவூத் நூலை பற்றி பார்ப்போம்.
சுனன் அபூதாவூத் - இஸ்லாமியச் சட்டவியலின் (ஃபிக்ஹ்) திறவுகோல் எனலாம். வரலாற்றையும், சமூக நிகழ்வுகளையும் நாம் ஆழமாகப் படிக்கும்போது, நமக்கு வழிகாட்டும் மிக முக்கியமான அடிப்படைகள் ஹதீஸ் கலைப் படைப்புகள். எனது பைதுல்-ஹிக்மா நூலகத்தில் உள்ள நூல்களைப் புரட்டும்போதெல்லாம், என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு பிரம்மாண்டமான தொகுப்புதான் சுனன் அபூதாவூத். இஸ்லாமியச் சட்டங்கள் எவ்வாறு ஹதீஸ்களிலிருந்து பெறப்பட்டன என்ற வரலாற்றைத் தேடும் எந்தவொரு ஆய்வாளனுக்கும், இந்த நூல் ஒரு மாபெரும் கடல் போன்றது. வாருங்கள், இந்த நூலின் சிறப்புகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த நூலை எழுதிய இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்களின் முழுப்பெயர் சுலைமான் இப்னு அல்-அஷ்அத் அஸ்-ஸிஜிஸ்தானி. ஹிஜ்ரி 202-ல் சிஜிஸ்தானில் பிறந்த இவர்கள், ஹதீஸ்களைத் தேடி மக்கா, மதீனா, ஈராக், எகிப்து, சிரியா என அன்றைய இஸ்லாமிய உலகின் பல தேசங்களுக்குப் பயணம் செய்தார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் தலைசிறந்த மாணவர்களில் இவரும் ஒருவர்.
இமாம் அவர்கள் சாதாரணமாக இந்த நூலைத் தொகுத்துவிடவில்லை. தனது வாழ்நாளில் அவர் திரட்டிய சுமார் 5,00,000 (ஐந்து லட்சம்) ஹதீஸ்களைக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தி, வடிகட்டி, அதிலிருந்து வெறும் 4,800 ஹதீஸ்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இந்த சுனன் தொகுப்பை உருவாக்கினார். (என்னிடம் இருக்கும் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ள அபூதாவூத் அரபு & தமிழ் மொழிப்பெயர்ப்பில் 4590 ஹதீஸ்கள் உள்ளன. பொதுவாக அனைத்து ஹதீஸ் கிரந்தங்களும் சந்திக்கும் பிரச்சினையே இது. பிரச்சினை என்பதை விட இது கணக்கிடுபவர்களுக்கு இடையே காணப்படும் சில கூட்டவ் கழித்தலே காரணம்)
சுனன் அபூதாவூத்: மற்ற நூல்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? என்பதை கட்டாயம் அறிய வேண்டும். ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற நூல்கள் வரலாறு, அகீதா (நம்பிக்கை), மறுமை என அனைத்தையும் பேசும். ஆனால், இமாம் அபூதாவூத் அவர்களின் இலக்கு மிகத் தெளிவானது. இஸ்லாமியச் சட்டவியல் (ஃபிக்ஹ்) மற்றும் சட்டத் திட்டங்கள் (அஹ்காம்) சார்ந்த ஹதீஸ்களை மட்டுமே தொகுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாமியச் சட்ட அறிஞர்களுக்கான (ஃபுகஹாக்கள்) தேடலை எளிதாக்கிய கையேடு இது...
நமது தேடலில் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை மற்றும் தரப்பரிசோதனை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். இமாம் அபூதாவூத் அவர்கள் மக்கா வாசிகளுக்கு எழுதிய மடலில் தனது வழிமுறையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்:
இதில் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) மற்றும் ஹஸன் (அழகானது) தரத்திலான ஹதீஸ்கள் உள்ளன.
ஒரு ஹதீஸில் கடுமையான பலவீனம் இருந்தால், இமாம் அவர்கள் அதனை அங்கேயே சுட்டிக்காட்டி விடுவார்கள்.
சில ஹதீஸ்களைப் பதிவு செய்துவிட்டு அவர் மௌனம் சாதித்திருப்பார். அதை அவர் 'ஸாலிஹ்' (பயன்படுத்தத் தக்கது) என்கிறார்.
(நாம் பின்பற்றும் நுட்பமான ஹதீஸ் கலை விதிகளின்படி, ஆய்வு செய்யும் அறிஞர்கள் இந்த 'மௌனம் சாதிக்கப்பட்ட' ஹதீஸ்களையும் ஆழமாகப் பரிசோதித்தே சட்டங்களை உறுதி செய்வார்கள் என்பதை மார்க்க மாணவர்களாகிய நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்).
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், வியாபாரம், நீதித்துறை என மிக நேர்த்தியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட சட்டத்தைப் பற்றி தேட விரும்பினால், புகாரியை விட அபூதாவூத்தில் அதனை மிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஏனெனில் புகாரி, முஸ்லிமை விட (இவை உயர்தர ஆய்வாளர்களுக்கு சிறந்தவை) சட்ட தலைப்பிடுதலில் அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, இப்னு மாஜா போன்றோர் எளிமையை கையாண்டுள்ளனர்.
சமூக விமர்சனங்களோ அல்லது வரலாற்று ஆய்வுகளோ... எதுவாக இருந்தாலும், மூல ஆதாரங்களை நோக்கிப் பயணிப்பதே உண்மையான தேடல். அந்த வகையில், இஸ்லாமியச் சட்டங்களின் ஆணிவேரைப் புரிந்துகொள்ள 'சுனன் அபூதாவூத்' ஒரு காலத்தால் அழியாத பொக்கிஷம். உங்கள் கருத்துக்களையும், இந்த நூலில் நீங்கள் வாசித்த உங்களைக் கவர்ந்த குறிப்புகளையும் கீழே பகிருங்கள். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பயனுள்ள ஆய்வுகளைப் பகிர்வோம்.
அன்புடன்,
- Abdullah Ibnu Naseer
No comments:
Post a Comment