ஒரு மனிதர் 100 ஆண்டுகள் வாழ்கிறார். அந்த 100 ஆண்டுகளையும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... என்ற வார்த்தைகளைத் தேடுவதற்காகவே அர்ப்பணிக்கிறார் என்றால், அது சாதாரண விஷயமா? ஹதீஸ் உலகில் இவரை முஸ்னித் அத்-துன்யா (உலகத்தின் ஹதீஸ் சங்கிலி) என்று அழைப்பார்கள். நீண்ட காலம் வாழ்ந்து, பல அரிய ஹதீஸ்களை நமக்குத் தொகுத்துத் தந்த அந்த மாமனிதர்தான் இமாம் தப்ரானி (ரஹ்).
ஹதீஸ்களைத் தொகுப்பதில் நாம் இதுவரை சுனன், முஸ்னத் போன்ற முறைகளைப் பார்த்தோம். ஆனால், ஹதீஸ்களை அகராதி (Dictionary) பாணியில், அதாவது அகரவரிசைப்படி (Alphabetical Order) தொகுக்கும் ஒரு புதிய மாடலை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இமாம் தப்ரானியையே சாரும். அவர் எழுதிய நூல்களின் பெயர் முஃஜம்.
யார் இந்த தப்ரானி?
பெயர்: சுலைமான் பின் அஹ்மத் பின் அய்யூப்.
பிறப்பு: ஹிஜ்ரி 260-ம் ஆண்டு, ஷாம் (சிரியா/பாலஸ்தீனம்) பகுதியில் உள்ள தபரியா என்ற ஊரில் பிறந்தார். அதனால்தான் இவர் தப்ரானி எனப்படுகிறார்.
வாழ்நாள்: இவர் மிகச்சரியாக 100 ஆண்டுகள் வாழ்ந்து ஹிஜ்ரி 360-ல் மரணமடைந்தார்.
கல்விப் பயணம்: தன்னுடைய 13-வது வயதில் ஹதீஸ் தேடத் தொடங்கியவர், சுமார் 33 ஆண்டுகள் உலகை வலம் வந்தார். ஹிஜாஸ், யேமன், எகிப்து, ஈராக், பாரசீகம் என அவர் செல்லாத ஹதீஸ் மையங்களே இல்லை. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஷைக்குகளிடம் (ஆசிரியர்கள்) நேரடியாகப் பாடம் படித்தார்.
இமாம் தப்ரானி எழுதிய நூற்களிலேயே மிகச் சிறந்தது அவரின் மூன்று 'முஃஜம்' நூல்கள்தான். இன்றுவரை ஹதீஸ் ஆய்வாளர்களுக்கு இவை மாபெரும் பொக்கிஷங்கள்.
அல்-முஃஜம் அல்-கபீர் (பெரிய முஃஜம்):
இது ஒரு சாதாரண நூல் அல்ல. ஒரு பிரம்மாண்டமான கலைக்களஞ்சியம் இது. இதில் சஹாபாக்களின் (நபித்தோழர்கள்) பெயர்களை அகரவரிசைப்படி அடுக்கி, ஒவ்வொரு சஹாபியும் அறிவித்த ஹதீஸ்களை அவர்களின் பெயருக்குக் கீழே தொகுத்துள்ளார். இதில் சுமார் 60,000 ஹதீஸ்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது! (துரதிர்ஷ்டவசமாக இதன் சில பகுதிகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன, ஆனாலும் இன்றும் பல பாகங்கள் அச்சில் உள்ளன). இதில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸ்களை மட்டும் அவர் சேர்க்கவில்லை. ஏனென்றால், அதற்காக மட்டுமே தனியாக ஒரு பிரம்மாண்டமான நூலை அவர் எழுதியிருந்தார்.
அல்-முஃஜம் அல்-அவ்ஸத் (நடுத்தர முஃஜம்). இமாம் தப்ரானிக்கு மிகவும் பிடித்த நூல் இதுதான். இந்த நூல் என் உயிருக்கு நிகரானது என்று அவரே கூறுவார். இதில் தனது ஆசிரியர்களின் பெயர்களை (சுமார் 2,000 ஷைக்குகள்) அகரவரிசைப்படி எழுதி, அவர்களிடம் கேட்ட ஹதீஸ்களைத் தொகுத்துள்ளார்
இதில் பெரும்பாலும் அரிதான ஹதீஸ்களும், அறிவிப்பாளர் வரிசையில் உள்ள நுணுக்கங்களும் இடம்பெற்றிருக்கும்.
அல்-முஃஜம் அஸ்-ஸகீர் (சிறிய முஃஜம்). இது ஒரு வழிகாட்டி (Index) போன்றது. தனது 1,000 ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் தனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த ஒரே ஒரு ஹதீஸை மட்டும் இதில் பதிவு செய்துள்ளார்.
இவ்வளவு பெரிய அறிவுக் கடலாக அவர் மாறியதற்குப் பின்னால் மிகப்பெரிய தியாகம் இருந்தது. ஒருமுறை இமாம் தப்ரானியிடம், இவ்வளவு ஹதீஸ்களை நீங்கள் எப்படித் திரட்டினீர்கள்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் நான் முப்பது வருடங்கள் ஒரு சாதாரண பாயில்தான் படுத்துறங்கினேன் என்று சொன்னார்.
படுக்கை வசதியைக் கூடப் புறக்கணித்துவிட்டு, இரவு பகலாக ஹதீஸ்களைத் தேடி எழுதியதால்தான், அவரால் இத்தனை ஆயிரம் ஹதீஸ்களைப் பதிவு செய்ய முடிந்தது.
இவர் 100 ஆண்டுகள் நீண்ட காலம் வாழ்ந்ததால், இவர் காலத்து முதிய இமாம்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். எனவே, இமாம் அஹ்மத், இமாம் புகாரி காலத்துச் செய்திகளை, மிகக் குறைந்த அறிவிப்பாளர்கள் மூலம் நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உலக மக்கள் அனைவரும் தப்ரானியைத் தேடி 'இஸ்ஃபஹான்' (ஈரானில் உள்ள நகரம்) நகருக்குப் படையெடுத்தார்கள். அவர் ஒரு மாபெரும் அறிவுப் பாலம்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கண்கள் பூக்கப் பூக்க ஹதீஸ் சுவடிகளைப் படித்துப் படித்து, இமாம் தஹபியைப் போலவே இவரும் தனது இறுதிக்காலத்தில் பார்வையை இழந்தார்.
ஆனாலும் அவரின் ஹதீஸ் வகுப்புகள் நிற்கவில்லை. அவரின் மனப்பாட சக்தி மாணவர்களை வழிநடத்தியது. இறுதியாக ஹிஜ்ரி 360-ம் ஆண்டு, இஸ்ஃபஹான் நகரில் அந்த ஹதீஸ் நூறாண்டுச் சூரியன் அஸ்தமித்தது.
நாம் ஒரு ஹதீஸைப் படிக்கும்போது தப்ரானியில் பதிவாகியுள்ளது என்று சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், அந்த ஒரு ஹதீஸைக் கொண்டு வருவதற்காக, ஒரு மனிதர் 33 ஆண்டுகள் ஊர் ஊராக அலைந்து, 30 ஆண்டுகள் பாயில் படுத்துறங்கித் தேடியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது அந்த ஹதீஸின் மதிப்பு பலமடங்கு உயர்கிறது!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamTabarani #AlMujamAlKabir #Isfahan #HadithScholar #Centenarian #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment