பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 25, 2026

முஸ்னத் அஹ்மத்


சமீப நாட்களாக சுனன்' மற்றும் 'ஜாமிஉ' வகை நூல்களைப் பற்றி விரிவாகப் பார்த்து வருகிறோமா. இன்று நாம் பார்க்கவிருப்பது ஹதீஸ் துறை வரலாற்றிலேயே தொகுக்கப்பட்ட நூல்களில் ஆகப்பெரியதும், பிரம்மாண்டமானதும் ஆன முஸ்னத் அஹ்மத் நூலைப் பற்றியதாகும்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையின் இமயம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவரைப் பற்றிய வரலாற்றுக்குள் அதிகம் செல்லாமல், அவர் உலகிற்கு விட்டுச் சென்ற இந்த 'முஸ்னத்' என்ற மாபெரும் அறிவுப் பெட்டகத்தின் நுட்பங்களை மட்டும் அக்குவேறு ஆணிவேறாக இன்று அலசுவோம். வாருங்கள்!

📌 'முஸ்னத்' என்றால் என்ன? ஒரு கட்டமைப்பு வேறுபாடு:

இதுவரை நாம் பார்த்த நஸாயீ, இப்னுமாஜா, அபூதாவூத் போன்ற நூல்கள் அனைத்தும் சட்டவியல் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதாவது தொழுகை, நோன்பு, வியாபாரம் என தலைப்புகளைப் போட்டு, அதற்குப் பொருத்தமான ஹதீஸ்களை இமாம்கள் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் முஸ்னத் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. இதில் சட்டங்களின் அடிப்படையில் ஹதீஸ்கள் அமையாது. மாறாக, "அறிவிப்பாளர் (சஹாபி) அடிப்படையில்" அமையும்.

உதாரணமாக: அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவித்த அனைத்து ஹதீஸ்களும் ஒரு அத்தியாயத்தில் இருக்கும். அதில் தொழுகை, வரலாறு, சீரா என அனைத்தும் கலந்திருக்கும். அடுத்து உமர் (ரலி), அடுத்து உஸ்மான் (ரலி) என ஒவ்வொரு நபித்தோழரின் பெயரிலும் அத்தியாயங்கள் விரியும். ஹதீஸ் துறை மாணவர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சஹாபி என்னென்ன செய்திகளை அறிவித்துள்ளார் என்பதை ஒட்டுமொத்தமாக அறிய இது ஒரு மாபெரும் திறவுகோல்.

📌 நூலின் பிரம்மாண்டமும் அளவும்:

இமாம் அஹ்மத் அவர்கள் தனது வாழ்நாளில் செவிமடுத்த சுமார் 7,50,000 (ஏழரை லட்சம்) ஹதீஸ்களிலிருந்து வடிகட்டி, மிகக் கவனமாக இந்த நூலைத் தொகுத்தார். இதில் சுமார் 27,000 முதல் 30,000 வரையிலான ஹதீஸ்கள் (மீண்டும் வந்தவை உட்பட) இடம்பெற்றுள்ளன. இதில் சுவர்க்கத்தின் நன்மாராயம் கூறப்பட்ட பத்து சஹாபாக்களில் தொடங்கி, சுமார் 904 நபித்தோழர்கள் மற்றும் நபித்தோழியர்கள் அறிவித்த ஹதீஸ்கள் தனித்தனித் தொகுப்புகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

📌 முஸ்னத் அஹ்மத் முழுவதையும் இமாம் அஹ்மத் தான் எழுதினாரா? 

இது பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல். இன்று நம் கைகளில் இருக்கும் 'முஸ்னத் அஹ்மத்' நூலில் உள்ள அனைத்து ஹதீஸ்களுமே இமாம் அஹ்மத் அவர்கள் மட்டும் தொகுத்தவை அல்ல.

அடிப்படை: இமாம் அஹ்மத் அவர்கள் தொகுத்தது.
மகன் அப்துல்லாஹ்வின் சேர்க்கை: இமாம் அஹ்மத் அவர்களின் மரணத்திற்குப் பின், அவரது மகனான அப்துல்லாஹ், தனது தந்தை விட்டுச் சென்ற சில குறிப்புகளையும், தான் வேறு ஆசிரியர்களிடம் கற்ற சில ஆயிரக்கணக்கான ஹதீஸ்களையும் இதில் இணைத்தார்.

அபூபக்கர் அல்-கதீஈ-யின் சேர்க்கை: அப்துல்லாஹ்வின் மாணவரான இவர், தனது பங்கிற்குச் சில ஹதீஸ்களை இணைத்தே இந்த நூலை முழுமைப்படுத்தினார்.

📌 நூலில் உள்ள ஹதீஸ்களின் தரம் (ஸஹீஹா? ளயீஃபா?):

ஹதீஸ் துறையில் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டிய இடம் இது. முஸ்னத் அஹ்மத் நூலில் உள்ள அனைத்தும் 'ஸஹீஹ்' (ஆதாரப்பூர்வமானது) கிடையாது. இதில் ஸஹீஹ், ஹஸன் மற்றும் ஏராளமான ளயீஃப் (பலவீனமான) ஹதீஸ்களும் உள்ளன. இமாம் அஹ்மத் அவர்களின் நிபந்தனை என்னவென்றால், "முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட (மௌளூஉ) செய்திகள் மட்டும் இதில் வந்துவிடக் கூடாது" என்பதுதான். ஆனாலும், சில அறிவிப்பாளர்களின் தவறுகளால் ஒரு சில இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் இதில் ஊடுருவிவிட்டன என இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) போன்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (நூலை சரிப்பார்ப்பதற்குள் இமாமவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்பதும் தனி விஷயம்).

தற்காலத்தில், ஷேக் அஹ்மத் ஷாகிர் மற்றும் ஷேக் ஷுஐப் அல்-அர்னாஊத் ஆகிய மாபெரும் அறிஞர்கள் இந்த சுமார் 30,000 ஹதீஸ்களையும் பல வருடங்கள் ஆய்வு செய்து, ஒவ்வொன்றின் தரத்தையும் (ஸஹீஹ் / ளயீஃப்) மிகத் துல்லியமாகப் பிரித்துக் கொடுத்துள்ளனர். எந்தவொரு சட்டத்தையும் முஸ்னத் அஹ்மதிலிருந்து எடுக்கும்முன், ஹதீஸ் கலையின் துல்லியமான தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாம் அதை ஏற்க வேண்டும்.

📌 ஸீரா (நபி வரலாறு) மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கான பொக்கிஷம்:

சுனன் வகை நூல்களில் சட்டங்கள் மட்டுமே அதிகம் பேசப்படும். ஆனால், நபிகளாரின் விரிவான வாழ்க்கை வரலாறு, போர்கள், குர்ஆன் வசனங்களின் பின்னணி, மற்றும் சமூக வரலாற்று நிகழ்வுகளை ஆழமாகத் தேடும் ஒரு மார்க்க மாணவனுக்கு முஸ்னத் அஹ்மத் ஒரு வற்றாத ஜீவநதி. மூத்த மாணவர்களுக்கு ஸீரா போன்ற ஆழமான விஷயங்களைக் கற்பிக்கும்போது, பல வரலாற்று முடிச்சுகளை அவிழ்க்க முஸ்னத் அஹ்மத்தின் செய்திகள் பெருமளவு உதவுகின்றன.

முஸ்னத் அஹ்மத்! அது அன்றைய இஸ்லாமிய உலகின் அறிவுத் தேடலின் ஒரு மாபெரும் ஆவணம். பலவீனமான செய்திகள் சில இருந்தாலும், ஹதீஸ் கலையின் அஸ்திவாரங்களில் ஒன்றாக அது இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

(என்னிடம் உள்ள ஹதீஸ் நூற்கள் கிட்டத்தட்ட 6 இலிருந்து 10 ஆண்டுகள் வரை பழமையானவை. எனவே அவற்றின் அட்டை படங்கள் மங்கலடைந்து உள்ளன. ஆகவே தான் ஏஐ தொழில்நுட்பமூடாக அவற்றை மெருகூற்றி பகிர்கிறேன். எனவே படத்தில் சில பிழைகள் இடம்பெறுவதை தவிர்க்கமுடியவில்லை)

இந்த முஸ்னத் அஹ்மதின் முதல் பாகம் ரஹ்மத் பதிப்பகம் வெளியீடே என்னிடம் உள்ளது. மற்ற பாகங்கள் ஆலிம் பதிப்பக வெளியீட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Abdullah Ibnu Naseer

No comments:

Post a Comment