பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, February 13, 2026

மரணத்தோடு முடிந்து விடுவதில்லை பெற்றோருடனான உறவு*

*மரணத்தோடு முடிந்து விடுவதில்லை பெற்றோருடனான உறவு*

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக!

அன்புள்ள சகோதரர்களே!
இஸ்லாம் மனித உறவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். அதில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் *பெற்றோர்கள்*. 

உயிருடன் இருக்கும்போது அவர்களுக்குப் பணிவிடை செய்வது சொர்க்கத்தின் திறவுகோல் என்பதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம்.

ஆனால், நம்மிடம் பலரும் கேட்கும் ஒரு வேதனையான கேள்வி: *பாய், என் பெற்றோர் உயிருடன் இருந்தபோது நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை. இப்போது அவர்கள் இறந்துவிட்டார்கள். என் குற்ற உணர்ச்சியைப் போக்கவும், அவர்களுக்கு நன்மை சேர்ப்பிக்கவும் நான் இப்போது என்ன செய்ய முடியும்?*

இதற்கான அழகான, ஆறுதலான பதிலைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தந்துள்ளார்கள். *மரணத்தோடு பெற்றோருடனான உறவு முடிந்துவிடுவதில்லை; அது தனது வடிவத்தை மாற்றிக்கொள்கிறது.*

அல்லாஹ் குர்ஆனில் பெற்றோருக்கான கடமையை தனது வணக்கத்தோடு இணைத்துக் கூறுகிறான்:

> *தன்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உமது இறைவன் ஆணையிட்டுள்ளான்*

> *அவ்விருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ உம்மிடம் முதுமைப் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்களைச் ‘சீ’ என்று (சடைந்தும்) கூறாதீர்! அவர்களை விரட்டாதீர்*! கண்ணியமிக்க சொல்லையே அவர்களிடம் கூறுவீராக! (17:23)

அவர்கள் உயிருடன் இல்லாத நிலையிலும் அவர்களுக்கு நன்மை செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். இதோ நபிகளார்  காட்டிய 5 வழிகள்:

அபூ உஸைத் மாலிக் பின் ரபீஆ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்தபோது, பனூ சுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து, 

> *அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர் இறந்த பிறகு நான் அவர்களுக்குச் செய்யக்கூடிய நன்மை ஏதேனும் எஞ்சியுள்ளதா?* என்று கேட்டார்.

> அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: *ஆம்! (ஐந்து விஷயங்கள் உள்ளன):*

> 1. *அவர்களுக்காகப் பிரார்த்திப்பது*

> 2. *அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது *

> 3. *அவர்கள் இறந்த பிறகு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது.*

> 4. *அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது.*

> 5. *அவர்கள் மூலமாகவே தவிர இணைக்க முடியாத இரத்த உறவுகளைப் பேணி நடப்பது.*
(இப்னுமாஜா 3664, அபூதாவூத் 5142, அஹ்மத் 15533)

|| *இந்த ஐந்து விஷயங்களையும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.* ||

---

 1. *அவர்களுக்காகப் பிரார்த்திப்பது & 2. பாவமன்னிப்புத் தேடுவது*

சகோதரர்களே! ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது அமல்கள் அனைத்தும் நின்றுவிடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டும் அவனைத் தொடர்ந்து சென்றடைகின்றன. அதில் ஒன்று, 

> *தனக்காகப் பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான (நல்ல) பிள்ளை"** என்று நபிகளார்  கூறினார்கள். (முஸ்லிம் 3084)

நாம் செய்யும் ஒவ்வொரு துஆவும், கேட்கும் ஒவ்வொரு பாவமன்னிப்பும் கப்ரில் இருக்கும் நமது பெற்றோருக்கு பயனளிக்கும்

அல்லாஹ் குர்ஆனில் நமக்குக் கற்றுத்தந்த மிகச் சிறந்த துஆவை நாம் எப்போதும் ஓத வேண்டும்:

> *رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا*
> *என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது அவ்விருவரும் என்னை(ப் பரிவுடன்) வளர்த்தது போல் நீ அவர்களுக்குக் கருணை காட்டுவாயாக!* என்று பிரார்த்திப்பீராக!  (17:24)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது பெற்றோருக்காகக் கேட்ட துஆவையும் அல்லாஹ் பதிவு செய்துள்ளான்:

> *எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக!*  (14:41)

எனவே, ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தனிமையிலும் அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தி துஆ செய்வோம். அது அவர்களின் மறுமை அந்தஸ்தை உயர்த்தும். இன்ஷாஅல்லாஹ் 

3. *அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது*

பெற்றோர் உயிருடன் இருந்தபோது *யாருக்கேனும் வாக்குறுதி அளித்திருந்தால்*, அல்லது ஏதேனும் அவர்கள் *தர்மம் செய்வதாக எண்ணி இருந்தால்*, அல்லது *யாருக்கேனும் கடன் வைத்திருந்தால் அதை நிறைவேற்றுவத பிள்ளைகளின் கடமையாகும்*.

அவர்களின் *மரண சாசனம்* மார்க்கத்திற்கு முரணாக இல்லாத வரை அதை நிறைவேற்றுவது, அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உபகாரமாகும்.

4. *அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது*

இது இஸ்லாம் கற்றுத்தரும் மிக உயர்ந்த பண்பாடு. பெற்றோர் இறந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களின் தொடர்புகளைத் துண்டித்துவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

> *நிச்சயமாக நன்மைகளில் மிகச் சிறந்தது, தந்தை இறந்த பிறகு, தந்தை நேசித்தவர்களுடன் (நண்பர்களுடன்) உறவைப் பேணுவதாகும்.* (முஸ்லிம் 6496)

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், மக்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு கிராமப்புற மனிதரைச் சந்தித்தார். அவருக்குத் தனது வாகனத்தைக் கொடுத்ததுடன், தனது தலைப்பாகையையும் அன்பளிப்பாகக் கொடுத்தார். இதைக் கண்ட மற்றவர்கள், "இவருடைய தந்தை, என் தந்தை உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார். தந்தையின் நட்பைப் பேணுவதே மிகச் சிறந்த நன்மை" என்று கூறினார்கள்.

உங்கள் பெற்றோரின் நண்பர்களைத் தேடிச் சென்று நலம் விசாரிப்பது, உங்கள் பெற்றோரை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதன் சான்றாகும்.

 5. *இரத்த உறவுகளைப் பேணி நடப்பது*

பெற்றோர் மூலமாக நமக்குக் கிடைத்த உறவுகள் (சின்னத்தா, பெரியஅத்தா, தாய் மாமா, தாய்/தந்தையின் சகோதர/தரிகள்,) ஆகியோரைப் பேணி நடக்க வேண்டும். பெற்றோர் உயிருடன் இருந்தபோது குடும்பத்தை எப்படி ஒற்றுமையாக வைத்திருந்தார்களோ, அதே ஒற்றுமையை அவர்கள் இறந்த பிறகும் பிள்ளைகள் காக்க வேண்டும்.

> *இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்* என்பது நபிமொழி. (முஸ்லிம் 6524)

குடும்ப உறவுகளைப் பேணுவது நமது பெற்றோரின் வளர்ப்பிற்குச் செய்யும் மரியாதையாகும்.

அன்பானவர்களே!
பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்குச் சேவை செய்வது எப்படி முக்கியமோ, அதே அளவு முக்கியமானது அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்குச் செய்ய வேண்டிய இந்த ஐந்து கடமைகளும்.

ஒருவேளை அவர்கள் உயிருடன் இருந்தபோது நீங்கள் அவர்களிடம் சரியாக நடக்கத் தவறியிருக்கலாம். கவலைப்படாதீர்கள்! அல்லாஹ் மகா கருணையாளன். இப்போது இந்த ஐந்து விஷயங்களைச் சரிவரச் செய்வதன் மூலம், *பெற்றோருக்கு நன்மை செய்த பிள்ளைகள்* என்ற பட்டியலில் நாமும் இடம் பெறுவோம் என்று நம்புவோம்.

வல்ல அல்லாஹ் நம் பெற்றோரின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக! நாமும் நம் பெற்றோருக்காகத் தொடர்ந்து துஆச் செய்யும் ஸாலிஹான பிள்ளைகளாக வாழ்ந்து மரணிக்க அருள் புரிவானாக!

https://eagathuvam.com/மரணத்தோடு-முடிந்து-விடு/

No comments:

Post a Comment