ஒரு வைர வியாபாரிக்குத்தான் தெரியும் வைரத்தில் எங்கே கீறல் விழுந்திருக்கிறது என்று. பாமர மக்களுக்கு அது ஜொலிக்கும் கல்லாகத் தெரியும். ஆனால் நிபுணர்களுக்குத்தான் தெரியும் அது போலியா அல்லது உண்மையானதா என்று. ஹதீஸ் உலகில் அப்படிப்பட்ட ஒரு "வைர வியாபாரி" தான் இமாம் தாரகுத்னீ. மற்ற இமாம்கள் "இது ஸஹீஹான ஹதீஸ்" என்று சேகரித்தார்கள்.
ஆனால் இமாம் தாரகுத்னீ, "இந்த ஹதீஸ் பார்ப்பதற்கு ஸஹீஹ் போலத் தெரியும். ஆனால் இதன் மூன்றாவது அறிவிப்பாளருக்கு நினைவாற்றல் குறைவு. எனவே இது பலவீனம்" என்று ஹதீஸை 'எக்ஸ்-ரே' (X-Ray) எடுத்துப் பார்ப்பார்.
இவரைத் தாண்டி எந்த ஹதீஸும் தப்பிக்க முடியாது! யார் இந்த தாரகுத்னீ?
பெயர்: அபுல் ஹஸன் அலீ பின் உமர்.
ஊர்: ஈராக்கின் பக்தாத் நகரில் உள்ள 'தார் அல்-குத்ன்' என்ற பகுதிக் குடியிருப்பு. (அதனால் தான் தாரகுத்னீ என்று அழைக்கப்படுகிறார்).
காலம்: ஹிஜ்ரி 306 - 385.
சிறப்பு: இவர் ஒரு நடமாடும் நூலகம். சிறுவயதிலேயே ஈராக், ஷாம் (சிரியா), எகிப்து எனப் பயணம் செய்து ஹதீஸ்களை அள்ளி வந்தார்.
இவரின் நினைவாற்றலைக் கண்டு உலகமே மிரண்டது. எகிப்தில் ஒருமுறை ஒரு ஷேக் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். தாரகுத்னீ அதை எழுதிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒருவர், "ஏன் எழுதவில்லை?" என்று கேட்டார். அதற்கு தாரகுத்னீ, "நீங்கள் எழுதியதை விட என் நெஞ்சில் பதிந்தது அதிகம்" என்று சொல்லி, அந்த ஷேக் நடத்திய அத்தனை ஹதீஸ்களையும் வரி பிசகாமல் ஒப்பித்தார்!
இமாம் தாரகுத்னீ எழுதிய நூற்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது இதுதான். ஏன் இது ஸ்பெஷல்?
பொதுவாக 'சுனன்' நூற்களில் (அபூதாவூத், நஸாயீ போன்றவை) சட்டத்திற்குத் தேவையான ஹதீஸ்கள் இருக்கும். ஆனால் தாரகுத்னீயின் பாணி வேறு.
மக்கள் மத்தியில் ஆதாரமாகச் சொல்லப்படும் ஹதீஸ்களை எடுத்து வருவார். பிறகு, "இந்த ஹதீஸ் பலவீனமானது. இதைக் கொண்டு சட்டம் வகுக்கக் கூடாது" என்று அதன் குறைகளைத் தோலுரித்துக் காட்டுவார். இதன் நோக்கம். பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு ஃபத்வா கொடுப்பவர்களை எச்சரிப்பது. ஒவ்வொரு ஹதீஸின் கீழும், அந்த அறிவிப்பாளர் தொடரில் உள்ள சிக்கல்களை ஒரு வக்கீல் போல அலசுவார். இன்று ஹதீஸ் ஆய்வாளர்கள் ஒரு ஹதீஸை ஆய்வு செய்ய வேண்டுமென்றால், முதலில் புரட்டும் நூல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.
ஹதீஸ் கலையிலேயே மிகவும் கடினமான துறை 'இலல்' (நுண்ணிய குறைகள்). தாரகுத்னீ எழுதிய "அல்-இலல் அல்-வாரிதா" என்ற நூல், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனை. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நூல் முழுவதையும் அவர் மனப்பாடமாகவே டிக்டேட் செய்தார்! மாணவர்கள் கேட்பார்கள் இமாமே! இந்த ஹதீஸ் பற்றி என்ன சொல்கிறீர்கள்? தாரகுத்னீ புத்தகத்தைப் பார்க்காமலே சொல்வார். "இந்த ஹதீஸை இன்னார் அறிவித்தார். ஆனால் அதில் இன்னார் தவறு செய்தார். சரியான அறிவிப்பு இதுதான்... இப்படி ஆயிரக்கணக்கான ஹதீஸ்களின் நுணுக்கங்களை நினைலிலிருந்தே கொட்டிய அந்த அறிவைக் கண்டு இமாம் தஹபி போன்றவர்களே சிலிர்த்துப் போனார்கள்.
இமாம் புகாரியும், முஸ்லிமும் ஹதீஸ் உலகின் இரு கண்கள். ஆனால், அவர்கள் மனிதர்கள் தானே? அவர்களும் தவறு செய்திருக்கலாம் அல்லவா? என்ற துணிச்சலான கேள்வியை முன்வைத்தவர் தாரகுத்னீ. அவர் "அல்-இஸ்தித்ராக் வத்-ததப்பஃ என்றொரு நூல் எழுதினார். அதில், புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் உள்ள சுமார் 200 ஹதீஸ்களை எடுத்து, "இவற்றில் இந்த இந்தக் குறைகள் உள்ளன" என்று விமர்சித்தார். (பிற்கால அறிஞர்கள் இவரின் விமர்சனங்களில் பலவற்றுக்குப் பதில் அளித்துவிட்டாலும், இவரின் அந்தத் துணிச்சல் ஹதீஸ் கலைக்குக் கிடைத்த ஆரோக்கியமான வளர்ச்சி).
சென்ற பதிவில் பார்த்த இமாம் ஹாகிம் (முஸ்தத்ரக் எழுதியவர்), இவரின் மாணவர்.
ஹாகிம் கூறுகிறார் அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாரகுத்னீயைப் போன்று இன்னொருவரை என் கண்கள் பார்த்ததே இல்லை. அவருக்குப் பிறகு அவருக்கு நிகரானவர் யாருமில்லை.
ஹிஜ்ரி 385-ம் ஆண்டு, பக்தாத் நகரில் அந்த அறிவுச் சூரியன் மறைந்தது. இமாம் தாரகுத்னீ மட்டும் இல்லையென்றால், பலவீனமான செய்திகள் எல்லாம் "வஹீ" (இறைச்செய்தி) என்ற பெயரில் மார்க்கத்திற்குள் நுழைந்திருக்கும். அவர் ஒரு பாதுகாவலர் என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
நாம் இன்று நிம்மதியாக "இது ஸஹீஹ், இது ளயீஃப்" என்று பேசுகிறோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால், இமாம் தாரகுத்னீ போன்றவர்கள் தங்கள் வாழ்நாளையே கரைத்து உருவாக்கிய உழைப்பு இருக்கிறது. கட்டிடம் அழகாக இருக்கிறது என்று ரசிக்கிறோம்; ஆனால் அதன் அஸ்திவாரத்தில் உள்ள விரிசல்களைக் கண்டுபிடித்துச் சொன்ன இன்ஜினியர் இவர்!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamDaraqutni #SunanDaraqutni #HadithCritic #Ilal #Baghdad #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment