ஒரு கட்டிடத்தைக் கட்டுவது கடினம். ஆனால் அந்தக் கட்டிடம் இடிந்துவிடாமல் இருக்க, அதற்குப் பக்கபலமாகத் தூண்கள் கொடுத்துத் தாங்கிப் பிடிப்பது அதைவிட முக்கியம். இமாம் முஸ்லிம் (ரஹ்) 'ஸஹீஹ் முஸ்லிம்' என்ற கட்டிடத்தைக் கட்டினார்.
அதற்குத் தூணாக நின்று, முஸ்லிம் சொன்னது உண்மைதான் என்று மாற்றுப் பாதையில் வந்து சாட்சி சொன்னவர் தான் இமாம் அபூ அவானா அல்-இஸ்ஃபராயினி.
ஹதீஸ் உலகில் இவரை "சிறிய முஸ்லிம்" என்றே செல்லமாக அழைக்கலாம்!
1. யார் இந்த அபூ அவானா?
பெயர்: யஃகூப் பின் இஸ்ஹாக்.
சிறப்புப் பெயர்: அபூ அவானா.
ஊர்: பாரசீகத்தின் (இன்றைய ஈரான்) இஸ்ஃபராயின்என்ற நகரம்.
காலம்: ஹிஜ்ரி 230 - 316. (இமாம் முஸ்லிமுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர்).
பயணம்: ஹதீஸ் தேடுவதற்காக ஐந்து முறை ஹஜ் செய்தார். ஷாம் (சிரியா), எகிப்து, ஈராக், குராஸான் என உலகம் முழுவதும் சுற்றினார்.
இவர் பரம்பரை பணக்காரர். தனது சொத்துக்கள் முழுவதையும் ஹதீஸ் தேடுவதற்காகவும், ஏழை மாணவர்களுக்காகவும் செலவிட்டார்.
முஸ்னத் / முஸ்தக்ரஜ் அபூ அவானா! இதுதான் இவரின் வாழ்நாள் சாதனை. இதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் முஸ்தக்ரஜ் என்று சொல்ல வேண்டும். அது என்ன 'முஸ்தக்ரஜ்'? இதை எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் ஊடாக சொல்கிறேன்.
இமாம் முஸ்லிம்: எனக்கு 'அ' என்பவர் சொன்னார், அவருக்கு 'ஆ' சொன்னார், அவருக்கு 'நபி (ஸல்)' சொன்னார்கள்" என்று ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார்.
இமாம் அபூ அவானா: அதே ஹதீஸை எடுப்பார். ஆனால் இமாம் முஸ்லிம் வழியாகச் செல்ல மாட்டார்.
வேறொரு பாதையில், எனக்கு 'X' சொன்னார், அவருக்கு 'Y' சொன்னார், அவருக்கு 'ஆ' சொன்னார்... என்று அதே ஹதீஸை, அதே நபித்தோழரிடம் கொண்டு போய் சேர்ப்பார்.
ஆக இமாம் முஸ்லிம் பதிவு செய்த ஹதீஸை பொறுத்தமட்டில் அவர் மட்டும் தனித்து அறிவிக்கவில்லை. வேறொரு பாதையிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது என்று நிரூபணமாகும். ஒரே ஹதீஸுக்கு இரண்டு சாட்சிகள் கிடைப்பது போல இது மிக வலுவானதாக மாறும். இமாம் முஸ்லிம் சுருக்கமாகச் சொன்ன சில செய்திகளை, இவர் விரிவாகப் பதிவு செய்வார். இந்த அடிப்படையில், ஸஹீஹ் முஸ்லிமில் உள்ள பெரும்பாலான ஹதீஸ்களுக்கு, இவர் வேறொரு பலமான அறிவிப்பாளர் தொடரைக் கண்டுபிடித்து எழுதிய நூல் தான் முஸ்னத் அபூ அவானா.
இவரின் நூலின் இன்னொரு சிறப்பு, இமாம் முஸ்லிம் சில ஹதீஸ்களைச் சுருக்கியிருப்பார்.
ஆனால் அபூ அவானா, அதே ஹதீஸை முழுமையாக, கூடுதல் விபரங்களுடன் பதிவு செய்திருப்பார்.
இன்று சட்ட அறிஞர்கள், ஒரு ஹதீஸின் முழுமையான வடிவத்தைத் தெரிந்துகொள்ள அபூ அவானாவின் நூலைத்தான் நாடுவார்கள்.
இமாம் முஸ்லிமின் நூலை அந்தக்காலத்தில் மக்கள் அதிகம் கவனிக்கவில்லை. புஹாரிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஆனால், ஸஹீஹ் முஸ்லிம் ஒரு பொக்கிஷம் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் அபூ அவானா தான். அதனால்தான் அறிஞர்கள் ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸ்களை, அதே தரத்தில் (Quality), ஆனால் மாற்றுப் பாதையில் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும் என்று கூறுகிறார்கள்.
இமாம் தாரகுத்னியைப் போலவே இவரும் ஒரு நினைவு இயந்திரம் என்று சொல்லலாம். இவருடைய மாணவர் ஒருவர் கூறும்போது இஸ்ஃபராயின் நகரத்தில் அபூ அவானாவைப் போல ஒரு மேதையை நாங்கள் பார்த்ததில்லை. அவர் இமாம் ஷாஃபியின் சட்ட ஆய்வு முடிவுகளயுய், ஹதீஸின் நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் கூறுகிறார்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஸஹீஹ் முஸ்லிமுக்குச் சேவகம் செய்த அந்த அறிஞர், ஹிஜ்ரி 316-ம் ஆண்டு, தனது சொந்த ஊரான இஸ்ஃபராயினில் காலமானார். நாம் ஒரு செய்தியை ஒருவர் சொன்னால் நம்புவோம். இருவர் சொன்னால் உறுதியாக நம்புவோம். இமாம் முஸ்லிம் சொன்ன செய்திகளுக்கு, "நானும் சாட்சி!" என்று கையை உயர்த்தியவர் தான் இமாம் அபூ அவானா.
ஸஹீஹ் முஸ்லிமின் ஒவ்வொரு ஹதீஸின் பின்போடும் இவரின் உழைப்பு மறைந்திருக்கிறது!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamAbuAwanah #MusnadAbuAwanah #Mustakhraj #SahihMuslim #Isfarayin #HadithScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment