பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, February 24, 2026

இமாம் அபூஸுர்ஆ அர்ராஸி (ரஹ்).


ஹதீஸ்களில் உள்ள மறைமுகமான குறைகளை கண்டுபிடிப்பதில் மருத்துவர் என்று இமாம் முஸ்லிம் அவர்களாலேயே போற்றப்பட்ட மாமேதைதான் இமாம் அபூஸுர்ஆ அர்ராஸி (ரஹ்). உலகப் புகழ் பெற்ற 'ஸஹீஹ் முஸ்லிம்' , அதை யாரிடம் காட்டிச் சரிபார்த்தார் தெரியுமா? இமாம் புகாரியிடமா? இல்லை. வேறு யாரிடமும் இல்லை. அவர் தனது நூலை எடுத்துக் கொண்டு ஈரான் தேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இமாமைத் தேடிச் சென்றார். அந்த இமாம் எந்தெந்த ஹதீஸ்களில் குறையிருக்கிறது என்று கை வைத்தாரோ, அதை எல்லாம் தயவுதாட்சண்யமின்றி நீக்கினார் இமாம் முஸ்லிம்.
இமாம் முஸ்லிமுக்கே சென்சார் போர்டு போலச் செயல்பட்ட அந்த மாபெரும் இமாம்தான் அபூஸுர்ஆ அர்ராஸி.

பெயர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்கரீம்.
சிறப்புப் பெயர்: அபூஸுர்ஆ
ஊர்: அன்றைய பாரசீகத்தின் (இன்றைய ஈரான்)
புகழ்பெற்ற அறிவு மையமான ரய் நகரத்தில் ஹிஜ்ரி 200-ம் ஆண்டு பிறந்தார். அதனால்தான் இவர் 'அர்ராஸி' என்று அழைக்கப்படுகிறார்.
காலம்: ஹிஜ்ரி 200 - 264. (இமாம் புகாரி, முஸ்லிம், அபூதாவூத் ஆகியோரின் சமகாலத்தவர்)

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இமாம் அபூஸுர்ஆவைச் சந்திக்க வந்த நிகழ்வு ஹதீஸ் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. அபூஸுர்ஆவைப் பார்த்தவுடன் இமாம் முஸ்லிம் ஓடிச் சென்று அவரின் நெற்றியில் முத்தமிட்டார். பிறகு நெகிழ்ச்சியோடு ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரே! முஹத்திதீன்களின் தலைவரே! ஹதீஸ்களின் குறைகளைக் கண்டுபிடிக்கும் தலைசிறந்த மருத்துவரே (தபீபல் ஹதீஸ்)! என்றெல்லாம் கூறினாராம்.

இமாம் அபூஸுர்ஆவின் மனப்பாட சக்தி மனித அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவர் கூறுகிறார்: "நான் குல்ஹுவல்லாஹு அஹத் (சூரா இக்லாஸ்) அத்தியாயத்தை எப்படி நெஞ்சில் மனப்பாடமாக வைத்துள்ளேனோ, அதேபோல இலட்சக்கணக்கான ஹதீஸ்களை என் நெஞ்சில் சுமந்துள்ளேன்.
 
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) இவரைப் பற்றிக் கூறும்போது: ரய் நகரத்திலிருந்து ஒரு இளைஞர் நம்மிடம் வந்துள்ளார். ஹதீஸ்களை மனனம் செய்ததில் அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததே இல்லை" என்று புகழ்ந்தார். அபூஸுர்ஆ தன்னிடம் தங்கியிருந்த காலங்களில், இமாம் அஹ்மத் தனது பர்ளுத் தொழுகைகளைத் தவிர மற்ற அனைத்து உபரியான வணக்கங்களையும் குறைத்துக்கொண்டு, அபூஸுர்ஆவுடன் ஹதீஸ் விவாதங்களில் மூழ்கியிருப்பாராம்!

இமாம் முஸ்லிம் தனது 'ஸஹீஹ்' நூலைத் தொகுத்தபோது, அதை அபூஸுர்ஆவிடம் சமர்ப்பித்தார். அபூஸுர்ஆ அந்த நூலை முழுமையாக வாசித்தார். ஆயிரக்கணக்கான ஹதீஸ்களில், சில ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டி, "இதில் மறைமுகமான குறை (இல்லத்) உள்ளது" என்றார். இமாம் முஸ்லிம் சிறிதும் தயங்காமல் அந்த ஹதீஸ்களை தனது நூலிலிருந்து தூக்கி எறிந்தார். அபூஸுர்ஆ எதையெல்லாம் "ஸஹீஹ்" என்று சான்றிதழ் அளித்தாரோ, அதை மட்டுமே தனது நூலில் தக்க வைத்துக் கொண்டார்.

அபூஸுர்ஆ அர்ராஸிக்கு நெருங்கிய நண்பராகவும், சக ஆய்வாளராகவும் இருந்தவர்தான் இமாம் அபூஹாதிம் அர்ராஸி (இவரை பற்றி நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்). இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஹதீஸைப் பலவீனம் என்று சொல்லிவிட்டால், அதை உலகமே ஏற்றுக்கொள்ளும். இவர்களை ஹதீஸ் உலகில் "அர்-ராஸியான்" (ரய் நகரத்து இரு நட்சத்திரிங்கள்) என்று அழைப்பார்கள்.

ஹிஜ்ரி 264-ம் ஆண்டு, இமாம் அபூஸுர்ஆ மரணப் படுக்கையில் இருக்கிறார். மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. அவரைச் சுற்றி இமாம் அபூஹாதிம், முஹம்மத் பின் முஸ்லிம் போன்ற மாபெரும் ஹதீஸ் அறிஞர்கள் நிற்கிறார்கள். மரணிக்கும் தறுவாயில் உள்ளவருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று கலிமாவை நினைவூட்ட (தல்ஹீன் செய்ய) வேண்டும். ஆனால், மாபெரும் இமாமான அவருக்கு எப்படி நாம் சொல்லிக்கொடுப்பது என்று அவர்களுக்குக் கூச்சமாக இருந்தது. எனவே, அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். அபூஸுர்ஆவின் முன் நின்று கொண்டு, கலிமாவுடைய ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரை தங்களுக்குள் வாசிக்கத் தொடங்கினார்கள். ஒரு அறிஞர் பாதி சங்கிலியைச் சொல்லிவிட்டுத் தயங்கி நின்றார். அப்போது மரணப் படுக்கையில் கண்மூடிக் கிடந்த இமாம் அபூஸுர்ஆ, சட்டெனக் கண்களைத் திறந்தார். தனது மூச்சுத் திணறலையும் பொருட்படுத்தாமல், அந்த ஹதீஸின் மீதி அறிவிப்பாளர் தொடரை அச்சுப் பிசகாமல் சரளமாக வாசித்தார்:

"...எனக்கு முஆத் பின் ஜபல் (ரலி) அறிவித்தார். ரசூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள்: 'யாருடைய இறுதி வார்த்தை லா இலாஹ இல்லல்லாஹ் என்று முடிகிறதோ, அவர் சொர்க்கம் புகுவார்.'

இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லி முடித்த மறுகணமே, இமாம் அபூஸுர்ஆவின் உயிர் பிரிந்தது! என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சுப்ஹானல்லாஹ்! எந்த ஹதீஸை வாழ்நாள் முழுவதும் உயிராக நேசித்துப் படித்தாரோ, அதே ஹதீஸை அறிவித்துக்கொண்டே அவர் மறு உலக வாழ்க்கைக்கு பயணமானார்.

ஹதீஸ்களை மனனம் செய்வது ஒரு கலை என்றால், அந்த ஹதீஸ்களுக்குள் ஊடுருவி இருக்கும் மிக நுட்பமான நோய்களைக் (குறைகளை) கண்டுபிடித்துக் குணப்படுத்தும் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் தான் இமாம் அபூஸுர்ஆ அர்ராஸி. அவர் ஹதீஸ்களைக் காக்கவில்லை மாறாக ஹதீஸ்கள் அவரை மரணத்திலும் காத்தன!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamAbuZurah #ArRazi #HadithScholar #Ilal #SahihMuslim #Rayy #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment