பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, February 27, 2026

ஸஹீஹ் இப்னு குஸைமா



ஸஹீஹ் இப்னு குஸைமா காலவெள்ளத்தில் தொலைந்துபோன ஒரு மாபெரும் அறிவுப் பெட்டகம் இப்படித்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் காரணம் உண்டு. ஹதீஸ் கலையின் வரலாற்றில் மிக பிரம்மாண்டமானதும், அதே சமயம் இஸ்லாமிய அறிவுலகுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பை நினைவூட்டி நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவதுமான ஒரு நூல் தான் இப்னு குஸைமா. புகாரி, முஸ்லிமுக்கு நிகரான தரத்தைக் கொண்ட, ஆனால் காலத்தின் சூறாவளியில் சிக்கித் தனது பெரும்பகுதியை இழந்து நிற்கும் ஸஹீஹ் இப்னு குஸைமா நூலின் சுவாரஸ்யமான மற்றும் கண்ணீர் வரவழைக்கும் வரலாற்றை இன்று விரிவாகப் பார்ப்போம்.

இமாம் அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா (ரஹ்). ஹிஜ்ரி 223-ல் குராசான் மாகாணத்தின் நைஸாபூர் நகரில் பிறந்தார். இவர் சாதாரண அறிஞர் என்று நினைத்துவிடாதீர்கள் 
 அன்றைய இஸ்லாமிய உலகின் மாபெரும் அறிஞர்களால் இமாம்களுக்கெல்லாம் இமாம் என்று முடிசூட்டப்பட்ட மாமேதை! இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோரின் சமகாலத்தவரான இவர், ஹதீஸ் கலையிலும், சட்டவியலிலும் மாபெரும் சிகரமாகத் திகழ்ந்தார்.

1. புகாரி, முஸ்லிமுக்கு அடுத்த இடம்: ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டுமே தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட நூல்களில் புகாரி மற்றும் முஸ்லிமுக்கு அடுத்தபடியாக, மிக உயர்ந்த மற்றும் தூய்மையான இடத்தை வகிப்பது ஸஹீஹ் இப்னு குஸைமா ஆகும்.

2.நேர்மை: இமாம் இப்னு குஸைமா அவர்களின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை. ஒரு அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையில் அல்லது நினைவாற்றலில் ஒரு சிறிய சந்தேகம் வந்தால்கூட, அந்த ஹதீஸைப் பதிவு செய்யும் போது, இந்த அறிவிப்பாளரின் நினைவாற்றல் சரியாக இருந்தால் மட்டுமே இது ஸஹீஹ் என்று தனது சந்தேகத்தை அங்கேயே வெளிப்படையாகப் பதிவு செய்துவிடுவார். இந்த அசாத்திய நேர்மை அவரை ஹதீஸ் கலையின் உச்சத்தில் அமர்த்தியது.

3. சட்டவியலின் ஆழம்: இந்த நூலின் உண்மையான பெயர் "முக்தஸர் அல்-முக்தஸர் மின் அல்-முஸ்னத் அஸ்-ஸஹீஹ்". இமாம் புகாரியைப் போலவே, இவரும் தனது அத்தியாயங்களின் தலைப்புகளிலேயே மாபெரும் சட்ட நுணுக்கங்களை வடித்து வைத்திருப்பார். ஒரு தலைப்பைப் படித்தாலே, இமாம் சொல்ல வரும் சட்டம் என்னவென்று விளங்கிவிடும் அளவுக்கு அது ஆழமானதாக இருக்கும்.

காணாமல் போன மாபெரும் பொக்கிஷம்!

இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு நூல், இன்று நம் கைகளில் முழுமையாக இருக்கிறதா என்றால்... இல்லை! இதுதான் இந்த நூலின் ஆகப்பெரிய சோகம். பல நூற்றாண்டுகளாக நடந்த பல்வேறு போர்களாலும், காலத்தின் சுழற்சியாலும் இந்த முழுமையான பிரம்மாண்டமான நூல் முற்றிலுமாக உலகத்தை விட்டே அழிந்து போனது! பல நூற்றாண்டுகளாக உலக அறிஞர்கள், முந்தைய இமாம்களின் (உதாரணமாக இப்னு ஹஜர் போன்றவர்களின்) மேற்கோள்களை வைத்து மட்டுமே இப்படி ஒரு நூல் இருந்தது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டில், பல நூற்றாண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த துருக்கியின் இஸ்தான்புல் நகரத்து 'தோப்காபி' (Topkapi) நூலகத்தின் பழைய சுவடிகளை (Manuscripts) அறிஞர்கள் தேடியபோது, தற்செயலாக இப்னு குஸைமா நூலின் ஒரு சிறு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது! இன்று நம்மிடம் இருப்பது எவ்வளவு? அந்தப் பழைய சுவடியிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹதீஸ் கலை அறிஞர் ஷேக் முஹம்மது முஸ்தபா அல்-அஃழமீ (ரஹ்) அவர்கள் நீண்ட பல வருடங்கள் ஆய்வு செய்து, இன்றுள்ள 'ஸஹீஹ் இப்னு குஸைமா'வை வெளியிட்டார். ஆனால், இது ஒட்டுமொத்த நூலின் வெறும் கால்வாசிப் பகுதி (1/4) மட்டுமே! (சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள்). நூலின் மீதமுள்ள முக்கால்வாசிப் பகுதிகள், என்றென்றைக்குமாக உலகத்தை விட்டு மறைந்து போய்விட்டன. (பெரும் இமாம்களான இப்னு ஹஜர் , இப்னு அஸீர் போன்றோர் இப்னு குஸைமாவின் காணாமல் போன பகுதிகளில் இருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றனர். எனவே இதில் 12,000 க்கும் அதிகமான ஹதீஸ்கள் இருந்திருக்கும் என்று நாம் குத்துமதிப்பான ஒரு கணக்கை எடுக்கலாம்)

ஒரு மாபெரும் இமாம், தனது வாழ்நாளெல்லாம் ஊர் ஊராகச் சென்று அணு அணுவாகச் சேகரித்த ஒரு பிரம்மாண்டமான அறிவுச் சொத்தின் பெரும்பகுதி நம்மை வந்தடையவில்லையே என்ற ஏக்கம், இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு மார்க்க மாணவனின் மனதிலும் எழாமல் இருக்காது. மீதமிருக்கும் அந்தக் கால்வாசிப் பகுதியே இன்று மார்க்கச் சட்டங்களுக்கு ஒரு மாபெரும் தூணாகச் செயல்படுகிறது என்றால், முழு நூலும் கிடைத்திருந்தால் அது எத்தகைய பேரதிர்வை ஏற்படுத்தியிருக்கும்!

என் கைகளில் தவழும் இந்த நூல் இப்னு குஸைமாவில் மட்டுமே இடம்பெற்றுள்ள அதாவது கூடுதலான - ஸவாயிதான ஹதீஸ்களை மட்டும் கொண்டுள்ள தொகுப்பாகும்.

- Abdullah Ibnu Naseer


Thursday, February 26, 2026

ஸயீத் இப்னு ஸைத் (ரலி).


வரலாற்றுப் பக்கங்களில் சிலருடைய தியாகங்கள் பெரும் சப்தத்தோடு முழங்கும்.சிலருடைய தியாகங்களோ சப்தமில்லாமல், ஆனால் ஆழமாகப் பதிந்திருக்கும். பதவியும் அதிகாரமும் தேடி வரும்போது, அதைத் துச்சமென மதித்து உதறித் தள்ளிய ஒரு மாவீரரை இஸ்லாமிய வரலாறு சந்தித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் உயிருடன் இருக்கும்போதே சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்ட பத்து பேரில் (அஷரத்துல் முபஷ்ஷரா) ஒருவர்... அவர்தான் ஸயீத் இப்னு ஸைத் (ரலி).

இவருடைய தந்தை ஸைத் இப்னு அம்ர், இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்காவின் அறியாமைக் காலத்துச் சிலைகளை வணங்க மறுத்து, இப்ராஹீம் (அலை) அவர்களின் உண்மையான மார்க்கத்தைத் தேடி அலைந்தவர். தன் தந்தை விட்டுச் சென்ற அந்தச் சத்தியத் தேடலின் பக்குவம் ஸயீத் (ரலி) அவர்களின் ரத்தத்திலேயே ஊறியிருந்தது. இஸ்லாம் என்ற அழைப்பு வந்த மறுகணமே, எவ்விதத் தயக்கமுமின்றித் தன்னை இறைவனிடம் ஒப்படைத்தார்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலம் அது. உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு சிங்கம் போல் சீறித் திரிந்த நேரம். உமரின் சொந்தத் தங்கையான ஃபாத்திமா பின்த் கத்தாப் அவர்களைத்தான் ஸயீத் (ரலி) மணந்திருந்தார். இவர்கள் இருவரும் ரகசியமாக இஸ்லாத்தை ஏற்று, குர்ஆனை ஓதி வந்தனர். இந்தச் செய்தியறிந்த உமர் (ரலி) கோபத்தின் உச்சியில் வாளோடு வந்து இவர்களின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.
தங்கையையும், மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்களையும் உமர் கடுமையாகத் தாக்கினார். இருவருக்கும் ரத்தம் வழிந்தது. அந்த இக்கட்டான தருவாயிலும், ஸயீத் (ரலி) அவர்கள் பயந்து பின்வாங்கவில்லை. ரத்தம் வழிய வழிய நெஞ்சை நிமிர்த்தி நின்றவாறு உமரைப் பார்த்துக் கூறினார்கள். உமரே! நீங்கள் என்ன செய்தாலும் சரி, சத்தியம் உங்கள் மார்க்கத்தில் இல்லை. நாங்கள் இஸ்லாத்தை விடமாட்டோம்! அந்த ரத்தமும், அந்த அசையாத உறுதியும்தான் உமரின் இரும்பு உள்ளத்தை முதல்முறையாக உலுக்கியது. "என்னை விட வலிமை குறைந்தவர்கள், என் வாளுக்கு முன்னால் கொள்கைக்காக இப்படி நிற்கிறார்களே!" என்ற அந்தச் சிந்தனைதான் உமரை குர்ஆனை வாசிக்கத் தூண்டியது. 

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய உமர் (ரலி) என்ற மாபெரும் தலைவரை, இஸ்லாத்திற்குள் கொண்டுவர முதல் தியாகம் செய்தவர் ஸயீத் இப்னு ஸைத் (ரலி) தான்! உமர் (ரலி) கலீஃபாவாக ஆனபோது, உலகின் பெரும் பகுதிகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன. உமரின் மைத்துனர் என்ற முறையில் ஸயீத் (ரலி) நினைத்திருந்தால் எந்த ஒரு பெரிய பதவியையும், சலுகையையும் பெற்றிருக்க முடியும். ஆனால், அதிகாரத்தின் வாடை கூட அவர் மீது பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

ஷாம் தேசத்துப் போர்களில் (குறிப்பாக யர்மூக் போர்க்களத்தில்) தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய இந்த சப்தமில்லாத மாவீரர், தமாஸ்கஸ் வெற்றி கொள்ளப்பட்டபோது, இஸ்லாமியப் படையின் தளபதி அபூ உபைதா (ரலி) அவர்களால் டமாஸ்கஸின் பொறுப்பாளராக (கவர்னராக) நியமிக்கப்பட்டார். ஆனால், சொகுசான அந்தப் பதவி அவருக்குப் பிடிக்கவில்லை. உடனே தளபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்யும் பாக்கியத்தை விட்டுவிட்டு, நான் மட்டும் பதவியில் அமர்ந்திருக்க விரும்பவில்லை. இந்தப் பதவிக்கு வேறு யாரையாவது நியமியுங்கள். நான் ஒரு சாதாரணப் படைவீரனாகவே களத்திற்கு வருகிறேன்!" என்று கூறி, உலகமே ஆசைப்படும் கவர்னர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, சாதாரண போர்வீரராகப் படையில் வந்து இணைந்துகொண்டார் அந்தத் தியாகி. (அதன் பிறகு தான் யஸீத் இப்னு அபூ ஸுப்யான் (ரலி) அவரின் மரணத்தின் பின் முஆவியா இப்னு அபூ ஸுப்யான் (ரலி) சிரியாவின் கவர்னர் ஆனார்கள்)

சுபஹானல்லாஹ்! இன்று ஒரு சிறு பதவிக்காகவும், தலைமைக்காகவும் கொள்கையை விற்கக் காத்துக்கிடக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பதவிகள் தேடி வந்தும் அதை உதறித் தள்ளிவிட்டு, இறைவனின் திருப்தியை மட்டுமே தேடிய ஸயீத் (ரலி) அவர்களின் வாழ்க்கை நமக்கு எவ்வளவு பெரிய பாடம்! இஸ்லாத்திற்காக நாம் எதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்? பதவியும் புகழும் வரும்போது, நம் ஈமான் ஆட்டம் காண்கிறதா? எந்தப் பதவியும், புகழும் இல்லாத சாதாரண வரிசையில் நின்று இறைவனுக்காக உழைக்க நம் மனம் தயாராக இருக்கிறதா?
விளம்பரங்கள் இல்லாத தியாகங்களை இறைவன் தன் அரியணையில் வைத்துப் போற்றுகிறான் என்பதற்கு ஸயீத் இப்னு ஸைத் (ரலி) அவர்களின் வரலாறே சாட்சி. 

சுவர்க்கத்தின் நற்செய்தி பெற்ற அந்த மாவீரரின் போல், புகழுக்காக அல்லாமல் இறைவனுக்காக மட்டுமே மார்க்கப் பணிகளைச் செய்யும் பாக்கியத்தை நமக்கும் இறைவன் வழங்குவானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #SaidIbnZayd #AsharaMubashara #SilentWarrior #Sacrifice #AbdullahIbnuNaseerWriteups

ஸஹீஹ் முஸ்லிம்


ஸிஹாஹ் ஸித்தாவில் எனக்கு விருப்பமான கிதாபை பற்றி தான் இன்று நாம் பார்க்க மோஙிறோம. ஹதீஸ் உலகின் அசைக்க முடியாத இரண்டு தூண்களில் ஒன்றான ஸஹீஹ் முஸ்லிம் நூல் வரலாற்றையும், மார்க்கச் சட்டங்களையும் எந்தவித சமரசமுமின்றி துல்லியமாக அணுக நினைக்கும் எந்தவொரு ஆய்வாளனுக்கும் புகாரிக்கு அடுத்து (சில நுட்பங்களில் புகாரியையே மிஞ்சும்) ஒரு மாபெரும் வழிகாட்டி இந்த நூல்தான். ஹதீஸ் கலை வரலாற்றில் இதன் கட்டமைப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இன்று சற்று மிக விரிவாகவே அலசுவோம். வாருங்கள்!

இமாம் அபுல் ஹுஸைன் முஸ்லிம் இப்னு அல்-ஹஜ்ஜாஜ் அந்-நைஸாபூரி (ரஹ்). ஹிஜ்ரி 204 அல்லது 206-ல் குராசான் மாகாணத்தின் புகழ்பெற்ற கல்வி மையமான நைஸாபூர் - தற்போதைய ஈரான்) நகரில் பிறந்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் புகாரி போன்ற மாமேதைகளிடம் நேரடியாகக் கல்வி பயின்றவர். குறிப்பாக, இமாம் புகாரியைத் தனது ஆசானாக ஏற்று, அவரிடம் ஹதீஸ் கலையின் நுட்பங்களைக் கற்றுக் குடித்தவர் இமாம் முஸ்லிம்.

இந்த நூல் ஒரே இரவில் தொகுக்கப்பட்டதல்ல. இமாம் முஸ்லிம் அவர்கள் தான் திரட்டிய சுமார் 3,00,000 (மூன்று லட்சம்) ஹதீஸ்களைத் தன் வாழ்நாளில் தொடர்ச்சியாக 15 வருடங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தி, அதிலிருந்து மிகவும் ஆதாரப்பூர்வமான சுமார் 4,000 ஹதீஸ்களை (மீண்டும் மீண்டும் வந்தவற்றைத் தவிர்த்து) மட்டுமே தேர்ந்தெடுத்து இந்த அல்-முஸ்னத் அஸ்-ஸஹீஹ் என்ற நூலை உருவாக்கினார்.

(ஸஹீஹ் முஸ்லிம் நூலில் எத்தனை ஹதீஸ்கள் எழுதப்பட்டுள்ளன என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உள்ளது. சிலர் 7275 என்றும் சிலர் 3000 என்றும் சிலர் 5731 என்றும் கூறுகின்றனர். ஏனெனில் ஹதீஸ்களை எண்ணுவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்கு காரணம்! இன்ஷா அல்லாஹ் இது பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்)

இமாம் புகாரியின் நூலுக்கும் இமாம் முஸ்லிமின் நூலுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டால்தான், இந்த நூலின் மகத்துவத்தை நாம் முழுமையாக உணர முடியும்.

1. ஹதீஸ்களைத் தேடும் ஆய்வாளர்களுக்கான சொர்க்கம். இமாம் புகாரி அவர்கள் ஒரு ஹதீஸை அதன் சட்டங்களுக்கு (ஃபிக்ஹ்) ஏற்ப பல்வேறு அத்தியாயங்களில் பிரித்துப் பதிவு செய்வார். ஒரு ஹதீஸின் ஒரு பகுதியைத் தொழுகை அத்தியாயத்திலும், மறு பகுதியை வியாபார அத்தியாயத்திலும் வைத்திருப்பார். ஆனால் இமாம் முஸ்லிம் அப்படிச் செய்ய மாட்டார். ஒரு ஹதீஸை எடுத்தால், அந்த ஹதீஸ் எத்தனை அறிவிப்பாளர் தொடர்களின் (இஸ்னாத்) மூலமாக வந்திருக்கிறது, அதன் வார்த்தைகளில் (மத்ன்) என்னென்ன மாற்றங்கள் உள்ளன என்பதை ஒரே இடத்தில் மொத்தமாகக் கொண்டு வந்து நிறுத்திவிடுவார். இதனால், ஒரு ஹதீஸின் முழுப் பின்னணியையும், வார்த்தை வித்தியாசங்களையும் ஒரே பார்வையில் ஒப்பிட்டுப் பார்க்க ஆய்வாளர்களுக்கு இது மிகப்பெரிய வசதி!

2. தலைப்புகளைக் கொடுக்காத இமாம். ஸஹீஹ் முஸ்லிமில் இன்று நாம் காணும் அத்தியாயத் தலைப்புகள் இமாம் முஸ்லிம் அவர்களால் வைக்கப்பட்டவை அல்ல! இமாம் முஸ்லிம் அவர்கள் ஹதீஸ்களை மட்டுமே தொகுத்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த புகழ்பெற்ற அறிஞர் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்தான் அந்த ஹதீஸ்களின் மையக்கருத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற மிகச் சிறந்த தலைப்புகளைச் சூட்டினார்.

3. வரலாற்றுச் சிறப்புமிக்க முகவுரை. குதூபுஸ் சித்தா நூல்களில் இமாம் முஸ்லிம் செய்த மிகச்சிறந்த காரியம், தனது நூலுக்கு அவர் எழுதிய மிக நீண்ட முகவுரையாகும். ஒரு ஹதீஸை எப்படி அணுக வேண்டும், அறிவிப்பாளர்களின் தரத்தை எப்படி எடைபோட வேண்டும், தான் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த நூலைத் தொகுத்தேன் என்ற ஹதீஸ் கலையின் விதிகளை (உஸுலுல் ஹதீஸ்) அதில் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

4. அன்அனா அறிவிப்புகளின் நிபந்தனை. இது ஒரு மிக நுட்பமான ஹதீஸ் கலை விதி. இரு அறிவிப்பாளர்கள் (உதாரணமாக A என்பவரும் B என்பவரும்) ஒருவரையொருவர் சந்தித்து ஹதீஸைக் கேட்டதாகத் தெளிவாகக் கூறாமல், அவர் கூற நான் கேட்டேன் என்பதற்குப் பதிலாக அவர் மூலமாக (அன்) என்று அறிவிக்கும்போது,

இமாம் புகாரியின் நிபந்தனை: அவர்கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்திருக்க வேண்டும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட வேண்டும்.

இமாம் முஸ்லிமின் நிபந்தனை: அவர்கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று உறுதியானாலே போதும். அவர்கள் சந்தித்தது நிரூபிக்கப்படாவிட்டாலும் நான் ஏற்றுக்கொள்வேன் என வாதிடுகிறார். இந்த நுட்பமான விதியைத் தனது முகவுரையில் இமாம் முஸ்லிம் மிகக் கடுமையாக வாதிட்டு நிறுவியுள்ளார்.

இமாம் முஸ்லிம் அவர்களின் மரணம் கூட அவரது ஆழமான தேடலில்தான் நிகழ்ந்தது. ஒருமுறை ஒரு ஹதீஸைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, அந்த ஹதீஸ் தனது சேகரிப்பில் இருப்பதை உணர்ந்த அவர், இரவு முழுவதும் ஒரு பேரீச்சம்பழக் கூடையை அருகில் வைத்துக்கொண்டு, அந்த ஹதீஸைத் தேடிக் கொண்டே பழங்களைச் சாப்பிட்டிருக்கிறார். விடியும் போது கூடை காலியாகி, அந்த அதிகப்படியான உணவின் தாக்கத்தாலேயே அவர் மரணமடைந்தார் (ஹிஜ்ரி 261) என்று வரலாறு கூறுகிறது. அறிவிற்காகத் தன்னை அர்ப்பணித்த மாபெரும் தியாகம் இது.

ஸஹீஹ் முஸ்லிம் அது மனித மூளையின் நேர்த்தியான கட்டமைப்புக்கும், அறிவுப்பூர்வமான ஆவணப்படுத்தலுக்கும் மிகச்சிறந்த உதாரணம். இஸ்லாமியத் தத்துவங்களையும், நபி வரலாற்றையும் ஆழமாகப் படிக்க நினைக்கும் நமக்கு, இமாம் முஸ்லிமின் இந்த அறிவுப் பெட்டகம் ஒரு வரப்பிரசாதம். தொடர்ச்சியான இந்த நூலறிமுகங்கள் உங்கள் சிந்தனைக்குத் தீனியிட்டிருக்கும் என நம்புகிறேன். ஸஹீஹ் முஸ்லிமின் இந்தத் தொகுப்பு முறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
அன்புடன்,

- Abdullah Ibnu Naseer

இமாம் ஆமிர் அஷ்-ஷஅபீ (ரஹ்).


ஹதீஸ் கலையில் சஹாபாக்களுக்குப் பிறகு தாபியீன்களின் பங்கு அளப்பரியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாத குறையைத் தீர்ப்பதற்காக, சஹாபாக்களைத் தேடித் தேடிச் சென்று அறிவைப் பருகியவர்கள்தான் இந்தத் தாபியீன்கள். அவர்களில் ஈராக் மண்ணின் அறிவுச் சூரியனாக, அறிஞர்களுக்கெல்லாம் மாபெரும் ஆசானாகத் திகழ்ந்தவர்தான் இமாம் ஆமிர் அஷ்-ஷஅபீ (ரஹ்).

பெயர்: ஆமிர் இப்னு ஷராஹீல் அஷ்-ஷஅபீ.
காலம்: உமர் (ரலி) அவர்களின் கிலாஃபத்தில் (சுமார் ஹிஜ்ரி 17-ல்) பிறந்தார். ஹிஜ்ரி 104-ல் மரணமடைந்தார்.
ஊர்: ஈராக்கின் கூஃபா நகரம்.

ஷஅபீ அவர்களின் ஆகப்பெரிய சிறப்பே இதுதான். வரலாற்றில் எந்தத் தாபியீயும் இவ்வளவு பெரிய சஹாபாக்களின் கூட்டத்தைச் சந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே. அவரே கூறுகிறார்: நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஐந்நூறு (500) பேரை நேரில் சந்தித்துள்ளேன்! அலி (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அன்னை ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி) என மாபெரும் சஹாபாக்களின் வகுப்புக்களில் அமர்ந்து நேரடியாகக் கல்வி பயின்றார். சஹாபாக்களின் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் இவர்.

ஷஅபீ அவர்களின் மனப்பாட சக்தி அன்றைய உலகையே மிரள வைத்தது. அவர் கையில் எப்போதுமே ஏடுகளோ, குறிப்பேடுகளோ இருந்ததில்லை. அவர் கூறுவார்: நான் இதுவரை எந்தவொரு கறுப்பையும் வெள்ளையில் (காகிதத்தில் மையால்) எழுதியதில்லை. என் காதுகள் எதைக் கேட்டதோ, அதை என் இதயம் அப்படியே மனப்பாடம் செய்துகொண்டது. ஒரு மனிதர் எனக்கு ஒரு ஹதீஸைச் சொன்னால், அதை அவர் எனக்கு இரண்டாவது முறை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை!

அந்த அளவுக்குக் கூர்மையான நினைவாற்றல்! குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி, அரபுகளின் கவிதைகள், போர் வரலாறுகள், கணிதம் என அனைத்திலும் வல்லவராக இருந்தார்.

ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது, ஆமிர் அஷ்-ஷஅபீ அவர்கள் ஒரு கூட்டத்தினருக்குப் போர் வரலாறுகளை (மகாஸி) விவரித்துக் கொண்டிருந்தார். அதை ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்த இப்னு உமர் (ரலி) கூறினார்: நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அந்தப் போர்களில் கலந்துகொண்டுள்ளேன். ஆனால், நேரில் பார்த்த என்னை விட, நேரில் பார்க்காத ஷஅபீ அதை மிகத் துல்லியமாக விவரிக்கிறார்! சஹாபாக்களே வியக்கும் அளவுக்கு அவரின் கல்வி ஆழமாக இருந்தது.

ஷஅபீ எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், தற்பெருமை சிறிதும் இல்லாதவர். அவரிடம் ஒருவர் வந்து ஒரு மார்க்கச் சட்டத்தைக் கேட்டார். அதற்கு ஷஅபீ, எனக்குத் தெரியாது என்றார். உடனே வந்தவர், நீங்கள் ஈராக்கின் மிகப்பெரிய முஃப்தியாயிற்றே, உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு ஷஅபீ மிக அழகாகப் பதிலளித்தார்: வானவர்கள் (மலக்குகள்) அல்லாஹ்விடம் 'நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது' என்று சொன்னபோது வெட்கப்படவில்லை. நான் மட்டும் 'தெரியாது' என்று சொல்ல ஏன் வெட்கப்பட வேண்டும்? எனக்குத் தெரியாது என்று சொல்வது கல்வியின் சரிபாதி என்ற புகழ்பெற்ற வாசகத்தை வாழ்ந்து காட்டியவர் அவர்.

உமைய்யா கலிஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் இவரைத் தனது தூதராகப் பைஸாந்திய (ரோம்) மன்னரிடம் அனுப்பி வைத்தார். அவரின் அறிவுக்கூர்மையைப் பார்த்த ரோம் மன்னர், அரபுகளில் இப்படி ஒரு அறிவாளியா! என்று வியந்தார். பின்னர் வந்த கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், கூஃபா நகரத்தின் முழுமையான நீதிபதியாக ஆமிர் அஷ்-ஷஅபீ அவர்களைத்தான் நியமித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை, 500 சஹாபாக்கள் வழியாகத் தன் நெஞ்சில் உள்வாங்கி, அடுத்த தலைமுறைக்கு எந்தவொரு குறையுமில்லாமல் கடத்திய பொக்கிஷப் பெட்டிதான் ஆமிர் அஷ்-ஷஅபீ. நாம் இன்று கையில் வைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களின் நம்பகத்தன்மை, இப்படிப்பட்ட நினைவாற்றல் மிக்க தாபியீன்களின் நெஞ்சங்களில்தான் பாதுகாக்கப்பட்டது என்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்க்க முடிகிறது!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamShabi #Kufa #Tabiin #HadithScholar #GoldenChain #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Wednesday, February 25, 2026

இமாம் குதைபா இப்னு ஸயீத் (ரஹ்).


ஹதீஸ் கலை வரலாற்றில் சில இமாம்களுக்கு ஒரு தனித்துவமான சிறப்பு இருக்கும். யாராவது ஒரு மாபெரும் அறிஞரை உருவாக்கிய பெருமை ஒரு ஆசானுக்கு இருக்கும். ஆனால், ஸிஹாஹ் ஸித்தா (ஆதாரப்பூர்வமான ஆறு ஹதீஸ் நூல்கள்) என்று நாம் கொண்டாடுகிறோமே, அந்த ஆறு நூல்களின் ஆசிரியர்களுக்கும் (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா) பாடம் சொல்லிக்கொடுத்த ஒரே ஆசிரியர் யார் தெரியுமா?

அவர்தான் இமாம் குதைபா இப்னு ஸயீத் (ரஹ்).
அனைத்து மாபெரும் நதிகளும் உற்பத்தி ஆகும் ஒரு பிரம்மாண்டமான மலையைப் போன்றவர் இவர்.

நீங்கள் இமாம் புகாரியின் ஸஹீஹ் புகாரியைத் திறந்தாலும் சரி, அல்லது ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதி என எந்த நூலைத் திறந்தாலும் சரி, அங்கே முதல் ஆளாக ஹத்தஸனா குதைபா இப்னு ஸயீத்... (நமக்கு குதைபா இப்னு ஸயீத் அறிவித்தார்) என்ற வார்த்தையை நீங்கள் கடக்காமல் போகவே முடியாது. ஹதீஸ் உலகில் இவரை அனைத்துச் சாலைகளும் சந்திக்கும் மையப் புள்ளி (Intersection point) என்று சொல்லலாம்.

பெயர்: குதைபா இப்னு ஸயீத் அல்-ஸகஃபீ அல்-பல்கீ.
பிறப்பு: ஹிஜ்ரி 149 அல்லது 150-ம் ஆண்டு பிறந்தார்.
ஊர்: குராஸான் மாகாணத்தில் உள்ள (இன்றைய ஆப்கானிஸ்தான்) பல்க் என்ற பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இறப்பு: ஹிஜ்ரி 240 (தனது 90-வது வயதில் மரணமடைந்தார்).

வரலாற்றில் குதைபா இப்னு ஸயீதுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் இதுதான். இஸ்லாமிய உலகின் தூண்களாகக் கருதப்படும் ஆறு இமாம்களும் இவரிடம் அமர்ந்து ஹதீஸ் படித்துள்ளார்கள்.

இமாம் புகாரி (ரஹ்)
இமாம் முஸ்லிம் (ரஹ்)
இமாம் அபூதாவூத் (ரஹ்)
இமாம் திர்மிதி (ரஹ்)
இமாம் நஸாயீ (ரஹ்)
இமாம் இப்னு மாஜா (ரஹ்)

இவர்கள் அனைவரும் தங்களின் நூல்களில் இமாம் குதைபா வழியாக ஏராளமான ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளனர். ஒரே ஒரு மாணவர் சிறந்தவராக உருவானாலே ஆசிரியருக்குப் பெருமை. ஆறு மாமேதைகளை உருவாக்கியவரின் தரத்தை எப்படி அளப்பது?

தனது இளம் வயதில், ஹதீஸ்களைத் தேடி ஈராக், மக்கா, மதீனா, எகிப்து, ஷாம் என உலகம் முழுவதும் சுமார் 17 ஆண்டுகள் பயணம் செய்தார். மதீனாவில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் அமர்ந்து பாடம் படித்தார். எகிப்தில் இமாம் லைஸ் இப்னு ஸஅத் (ரஹ்) அவர்களிடம் பாடம் படித்தார். அவர் உலகம் முழுவதும் சுற்றி ஹதீஸ்களைச் சேகரித்துவிட்டுத் தனது சொந்த ஊரான பல்க் நகருக்குத் திரும்பியதும், ஒட்டுமொத்த உலகமும் அவரைத் தேடி பல்க் நகரை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியது.

பெரும்பாலான ஹதீஸ் இமாம்கள் வறுமையில் வாடியவர்கள் என்று நாம் படித்திருப்போம். ஆனால் இமாம் குதைபா இதற்கு ஒரு விதிவிலக்கு.
அவர் ஒரு மாபெரும் செல்வந்தர். அவருக்குச் சொந்தமாக ஏராளமான ஒட்டகங்களும், விவசாய நிலங்களும் இருந்தன. தன்னைத் தேடி வெளியூர்களிலிருந்து வரும் ஹதீஸ் மாணவர்களுக்குத் தனது சொந்தச் செலவிலேயே உணவளித்து, தங்குமிடமும் கொடுத்து உபசரிப்பார். அறிவோடு சேர்த்து உணவையும் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர்!

ஹதீஸ் கலை விமர்சனங்களில் மிகவும் கண்டிப்பானவரான இமாம் யஹ்யா இப்னு மயீன், இமாம் அஹ்மத் பின் ஹன்பல் போன்றோரால் "ஸிகா" (நம்பகமானவர்) என்று ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் குதைபா. ஒருமுறை இமாம் அஹ்மத் பின் ஹன்பலிடம் சில மாணவர்கள் வந்து, நாங்கள் யாருடைய ஹதீஸ்களை எழுதலாம்? என்று கேட்டபோது, நீங்கள் குதைபா இப்னு ஸயீதிடம் செல்லுங்கள் என்று வழிகாட்டினார்.

அவர் தனது ஊரான பல்க்கில் இருந்தபோது, பல்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் 'ஜஹ்மியா' போன்ற வழிகெட்ட கொள்கைகள் பரவத் தொடங்கின. ஆனால், இமாம் குதைபா ஒரு மலை போல நின்று, சுன்னத்தான (நபிவழியான) கொள்கை இதுதான் என்று ஹதீஸ்களின் அடிப்படையில் மக்களுக்குச் சரியான அகீதாவைப் போதித்தார்.

ஒரு மரத்தின் வேர்கள் பல திசைகளில் பரவி இருப்பதைப் போல, ஹதீஸ் கலையின் ஆணிவேர்களான புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் அனைவரும் "குதைபா" என்ற ஒற்றை ஆணிவேரில் இருந்துதான் தங்களின் ஹதீஸ் தாகத்தைத் தணித்திருக்கிறார்கள். இன்று நாம் ஒரு ஹதீஸைப் படிக்கும்போது, அந்த ஆறு இமாம்களுக்கும் கிடைக்கும் நன்மையில் ஒரு பங்கு, சத்தமே இல்லாமல் ஆப்கானிஸ்தானில் உறங்கிக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் ஆசானுக்குச் சென்றுகொண்டே இருக்கிறதா இருக்கும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamQutaibah #QutaibahIbnSaid #Balkh #SihahSittah #HadithScholar #TeacherOfSix #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

சுனன் இப்னுமாஜா


என்னுடைய ஹதீஸ் சேகரிப்பில் ஸஹீஹ் முஸ்லிமுக்கு பிறகு அதிக தடவை வாசித்து கிரந்தம் என்றால் அது சுனன் இப்னுமாஜா கிரந்தமாகத் தான் இருக்கும்.  இஸ்லாமிய உலகின் புகழ்பெற்ற ஆறு பிரதான ஹதீஸ் தொகுப்புகளான குதுபுஸ் சித்தாவில் இறுதியாக, அதாவது ஆறாவது நூலாக இடம்பிடித்திருக்கும் இந்த நூல், பல வரலாற்று சுவாரஸ்யங்களையும், ஹதீஸ் கலையின் ஆழமான பரிமாணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. வாருங்கள், இந்த நூலின் தனித்துவங்களை விரிவாகப் பார்ப்போம்.

இமாம் அபூ அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யஸீத் இப்னு மாஜா அல்-கஸ்வீனி (ரஹ்). ஹிஜ்ரி 209-ல் ஈரானின் 'கஸ்வீன்' நகரில் பிறந்தார். தனது 21-வது வயதில் ஹதீஸ்களைத் தேடி ஈராக், பஸ்ரா, கூஃபா, பாக்தாத், மக்கா, சிரியா, எகிப்து என அக்கால இஸ்லாமிய உலகின் மாபெரும் கல்வி மையங்களுக்குப் பயணம் செய்து அரிய பல ஹதீஸ்களைத் திரட்டினார்.

ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ ஆகிய ஐந்து நூல்களை மட்டுமே பிரதானமாகக் கருதினர். ஆறாவது நூலாக இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் 'முவத்தா'வையோ அல்லது இமாம் தாரிமி (ரஹ்) அவர்களின் 'சுனன் தாரிமி'யையோதான் பலரும் குறிப்பிட்டனர். ஆனால், ஹிஜ்ரி 5-ஆம் நூற்றாண்டில் வந்த இமாம் இப்னுல் கைஸரானி (ரஹ்) போன்ற அறிஞர்கள்தான் 'சுனன் இப்னு மாஜா'வை ஆறாவது நூலாக அதிகாரப்பூர்வமாக இணைத்தார்கள். ஏன் தெரியுமா? மற்ற ஐந்து நூல்களிலும் இல்லாத பல புதிய, தனித்துவமான ஹதீஸ்கள் இதில் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம்!

நேர்த்தியான அத்தியாய அமைப்பு: இப்னு மாஜா நூலின் மிகப் பெரிய பலமே அதன் நேர்த்தியான கட்டமைப்புதான். ஃபிக்ஹ் சட்டங்களுக்கு ஏற்ப, தேடுபவர்கள் மிக எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையில் அத்தியாயங்களையும், தலைப்புகளையும் இமாம் அவர்கள் மிக அழகாகத் தொகுத்துள்ளார். மார்க்கப் பணிகளிலும், தாஃவா களத்திலும் செயல்படுபவர்களுக்கும், மாணவர்களுக்கு மார்க்கச் சட்டங்களை விளக்குபவர்களுக்கும் இந்த நூலின் கட்டமைப்பு ஒரு வரப்பிரசாதம்.
 
தனித்துவமான ஹதீஸ்கள்: புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட மற்ற ஐந்து நூல்களிலும் இடம்பெறாத சுமார் 1,300-க்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இமாம் இப்னு மாஜா தனது நூலில் பதிவு செய்துள்ளார். இவை 'ஸவாயித்' என அழைக்கப்படுகின்றன. இஸ்லாமிய வரலாற்றையும், சட்டங்களையும் விரிவாக ஆய்வு செய்ய இந்த ஸவாயித் ஹதீஸ்கள் பெருமளவு உதவுகின்றன.

ஹதீஸ்களின் தரம் குறித்த விமர்சனம்: ஒரு ஹதீஸ் ஆய்வாளனாக நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான புள்ளி இது. இந்த நூலில் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) மற்றும் ஹஸன் (அழகானது) தரத்திலான ஹதீஸ்கள் ஏராளமாக இருந்தாலும், மற்ற ஐந்து நூல்களை ஒப்பிடும்போது இதில் பலவீனமான (ளயீஃப்) ஹதீஸ்களின் எண்ணிக்கை சற்று அதிகம். சில மிகைப்படுத்தப்பட்ட, மிகவும் பலவீனமான செய்திகளும் இதில் ஊடுருவியுள்ளன. இதனாலேயே ஹதீஸ் கலை அறிஞர்கள் இதனை குதுபுஸ் சித்தாவின் 'ஆறாவது' இடத்திற்குத் தள்ளினர். (எனவே, இந்த நூலில் உள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளும் முன், ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த குறிப்பிட்ட ஹதீஸின் தரம் குறித்து என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை நாம் சரிபார்த்துக்கொள்வது அவசியமாகும்).

பலவீனமான செய்திகள் சில கலந்திருந்தாலும், இஸ்லாமியச் சட்டவியலுக்கும், நபிமொழிகளின் விரிவான தொகுப்புக்கும் இமாம் இப்னு மாஜா அவர்கள் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. மார்க்கத்தின் மூல ஆதாரங்களைத் தேடும் மாணவர்களுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத களஞ்சியம்.

(படத்தில் 1,2,4,5 என்று இருப்பதை நீங்கள் காணலாம். அது ஏனெனில் ரஹ்மத் பதிப்பகம் ஆரம்பத்தில் இப்னுமாஜாவை மூன்று அல்லது நான்கு பாகங்களாக வெளியிட தீர்மானித்திருந்தார்கள். பின்பு அதை 5 பாகங்களாக மாற்றி வெளியிட்டுள்ளார்கள். இரண்டாம் பாகத்தை இரண்டாக பிரித்து அவர்களால் மூன்றாம் பாகமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே நான் மூன்றாம் பாகத்தை வாங்கவில்லை) 

- Abdullah Ibnu Naseer

முஸ்னத் அஹ்மத்


சமீப நாட்களாக சுனன்' மற்றும் 'ஜாமிஉ' வகை நூல்களைப் பற்றி விரிவாகப் பார்த்து வருகிறோமா. இன்று நாம் பார்க்கவிருப்பது ஹதீஸ் துறை வரலாற்றிலேயே தொகுக்கப்பட்ட நூல்களில் ஆகப்பெரியதும், பிரம்மாண்டமானதும் ஆன முஸ்னத் அஹ்மத் நூலைப் பற்றியதாகும்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையின் இமயம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவரைப் பற்றிய வரலாற்றுக்குள் அதிகம் செல்லாமல், அவர் உலகிற்கு விட்டுச் சென்ற இந்த 'முஸ்னத்' என்ற மாபெரும் அறிவுப் பெட்டகத்தின் நுட்பங்களை மட்டும் அக்குவேறு ஆணிவேறாக இன்று அலசுவோம். வாருங்கள்!

📌 'முஸ்னத்' என்றால் என்ன? ஒரு கட்டமைப்பு வேறுபாடு:

இதுவரை நாம் பார்த்த நஸாயீ, இப்னுமாஜா, அபூதாவூத் போன்ற நூல்கள் அனைத்தும் சட்டவியல் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதாவது தொழுகை, நோன்பு, வியாபாரம் என தலைப்புகளைப் போட்டு, அதற்குப் பொருத்தமான ஹதீஸ்களை இமாம்கள் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் முஸ்னத் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. இதில் சட்டங்களின் அடிப்படையில் ஹதீஸ்கள் அமையாது. மாறாக, "அறிவிப்பாளர் (சஹாபி) அடிப்படையில்" அமையும்.

உதாரணமாக: அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவித்த அனைத்து ஹதீஸ்களும் ஒரு அத்தியாயத்தில் இருக்கும். அதில் தொழுகை, வரலாறு, சீரா என அனைத்தும் கலந்திருக்கும். அடுத்து உமர் (ரலி), அடுத்து உஸ்மான் (ரலி) என ஒவ்வொரு நபித்தோழரின் பெயரிலும் அத்தியாயங்கள் விரியும். ஹதீஸ் துறை மாணவர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சஹாபி என்னென்ன செய்திகளை அறிவித்துள்ளார் என்பதை ஒட்டுமொத்தமாக அறிய இது ஒரு மாபெரும் திறவுகோல்.

📌 நூலின் பிரம்மாண்டமும் அளவும்:

இமாம் அஹ்மத் அவர்கள் தனது வாழ்நாளில் செவிமடுத்த சுமார் 7,50,000 (ஏழரை லட்சம்) ஹதீஸ்களிலிருந்து வடிகட்டி, மிகக் கவனமாக இந்த நூலைத் தொகுத்தார். இதில் சுமார் 27,000 முதல் 30,000 வரையிலான ஹதீஸ்கள் (மீண்டும் வந்தவை உட்பட) இடம்பெற்றுள்ளன. இதில் சுவர்க்கத்தின் நன்மாராயம் கூறப்பட்ட பத்து சஹாபாக்களில் தொடங்கி, சுமார் 904 நபித்தோழர்கள் மற்றும் நபித்தோழியர்கள் அறிவித்த ஹதீஸ்கள் தனித்தனித் தொகுப்புகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

📌 முஸ்னத் அஹ்மத் முழுவதையும் இமாம் அஹ்மத் தான் எழுதினாரா? 

இது பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல். இன்று நம் கைகளில் இருக்கும் 'முஸ்னத் அஹ்மத்' நூலில் உள்ள அனைத்து ஹதீஸ்களுமே இமாம் அஹ்மத் அவர்கள் மட்டும் தொகுத்தவை அல்ல.

அடிப்படை: இமாம் அஹ்மத் அவர்கள் தொகுத்தது.
மகன் அப்துல்லாஹ்வின் சேர்க்கை: இமாம் அஹ்மத் அவர்களின் மரணத்திற்குப் பின், அவரது மகனான அப்துல்லாஹ், தனது தந்தை விட்டுச் சென்ற சில குறிப்புகளையும், தான் வேறு ஆசிரியர்களிடம் கற்ற சில ஆயிரக்கணக்கான ஹதீஸ்களையும் இதில் இணைத்தார்.

அபூபக்கர் அல்-கதீஈ-யின் சேர்க்கை: அப்துல்லாஹ்வின் மாணவரான இவர், தனது பங்கிற்குச் சில ஹதீஸ்களை இணைத்தே இந்த நூலை முழுமைப்படுத்தினார்.

📌 நூலில் உள்ள ஹதீஸ்களின் தரம் (ஸஹீஹா? ளயீஃபா?):

ஹதீஸ் துறையில் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டிய இடம் இது. முஸ்னத் அஹ்மத் நூலில் உள்ள அனைத்தும் 'ஸஹீஹ்' (ஆதாரப்பூர்வமானது) கிடையாது. இதில் ஸஹீஹ், ஹஸன் மற்றும் ஏராளமான ளயீஃப் (பலவீனமான) ஹதீஸ்களும் உள்ளன. இமாம் அஹ்மத் அவர்களின் நிபந்தனை என்னவென்றால், "முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட (மௌளூஉ) செய்திகள் மட்டும் இதில் வந்துவிடக் கூடாது" என்பதுதான். ஆனாலும், சில அறிவிப்பாளர்களின் தவறுகளால் ஒரு சில இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் இதில் ஊடுருவிவிட்டன என இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) போன்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (நூலை சரிப்பார்ப்பதற்குள் இமாமவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்பதும் தனி விஷயம்).

தற்காலத்தில், ஷேக் அஹ்மத் ஷாகிர் மற்றும் ஷேக் ஷுஐப் அல்-அர்னாஊத் ஆகிய மாபெரும் அறிஞர்கள் இந்த சுமார் 30,000 ஹதீஸ்களையும் பல வருடங்கள் ஆய்வு செய்து, ஒவ்வொன்றின் தரத்தையும் (ஸஹீஹ் / ளயீஃப்) மிகத் துல்லியமாகப் பிரித்துக் கொடுத்துள்ளனர். எந்தவொரு சட்டத்தையும் முஸ்னத் அஹ்மதிலிருந்து எடுக்கும்முன், ஹதீஸ் கலையின் துல்லியமான தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாம் அதை ஏற்க வேண்டும்.

📌 ஸீரா (நபி வரலாறு) மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கான பொக்கிஷம்:

சுனன் வகை நூல்களில் சட்டங்கள் மட்டுமே அதிகம் பேசப்படும். ஆனால், நபிகளாரின் விரிவான வாழ்க்கை வரலாறு, போர்கள், குர்ஆன் வசனங்களின் பின்னணி, மற்றும் சமூக வரலாற்று நிகழ்வுகளை ஆழமாகத் தேடும் ஒரு மார்க்க மாணவனுக்கு முஸ்னத் அஹ்மத் ஒரு வற்றாத ஜீவநதி. மூத்த மாணவர்களுக்கு ஸீரா போன்ற ஆழமான விஷயங்களைக் கற்பிக்கும்போது, பல வரலாற்று முடிச்சுகளை அவிழ்க்க முஸ்னத் அஹ்மத்தின் செய்திகள் பெருமளவு உதவுகின்றன.

முஸ்னத் அஹ்மத்! அது அன்றைய இஸ்லாமிய உலகின் அறிவுத் தேடலின் ஒரு மாபெரும் ஆவணம். பலவீனமான செய்திகள் சில இருந்தாலும், ஹதீஸ் கலையின் அஸ்திவாரங்களில் ஒன்றாக அது இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

(என்னிடம் உள்ள ஹதீஸ் நூற்கள் கிட்டத்தட்ட 6 இலிருந்து 10 ஆண்டுகள் வரை பழமையானவை. எனவே அவற்றின் அட்டை படங்கள் மங்கலடைந்து உள்ளன. ஆகவே தான் ஏஐ தொழில்நுட்பமூடாக அவற்றை மெருகூற்றி பகிர்கிறேன். எனவே படத்தில் சில பிழைகள் இடம்பெறுவதை தவிர்க்கமுடியவில்லை)

இந்த முஸ்னத் அஹ்மதின் முதல் பாகம் ரஹ்மத் பதிப்பகம் வெளியீடே என்னிடம் உள்ளது. மற்ற பாகங்கள் ஆலிம் பதிப்பக வெளியீட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Abdullah Ibnu Naseer

இமாம் அஹ்மத்


இமாம் அஹ்மத் மட்டும் அன்று பொறுமை காக்காமல் இருந்திருந்தால், இன்று இஸ்லாம் என்ற மார்க்கம் உருமாறிப் போயிருக்கும் என்று அன்றைய மாபெரும் அறிஞர்கள் கண்ணீரோடு சாட்சி சொல்கிறார்கள் என்றால், அவர் எப்படிப்பட்ட உறுதியானவராக இருந்திருக்க வேண்டும்?

பெயர்: அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் அஷ்-ஷைபானி.
பிறப்பு: ஹிஜ்ரி 164-ம் ஆண்டு, பக்தாதில் பிறந்தார்.
குழந்தைப் பருவம்: இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். இவரை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றார் தாய் ஸஃபிய்யா பின்த் மைமூனா. அந்தத் தாயின் தியாகம்தான், பின்னாளில் உலகைக் காக்கும் ஒரு இமாமை உருவாக்கியது. அதிகாலையிலேயே மகனை எழுப்பி, கடும் குளிரிலும் சுடுநீர் வைத்துக் கொடுத்து, குர்ஆன் வகுப்பிற்கும், ஹதீஸ் வகுப்பிற்கும் அந்தத் தாயே மகனை அழைத்துச் செல்வார். தன்னுடைய 15-வது வயதிலேயே ஹதீஸ் கலையில் முழுமையாக இறங்கினார் அஹ்மத்.

ஹதீஸைத் தேடி கூஃபா, பஸ்ரா, மக்கா, மதீனா என அலைந்த இமாம் அஹ்மத், யமன் நாட்டில் இருக்கும் மாபெரும் அறிஞர் 'அப்துர் ரஸ்ஸாக் அஸ்-ஸன்ஆனி' அவர்களைச் சந்திப்பதற்காகப் பக்தாதிலிருந்து நடந்தே (பல மாதங்கள்) யமனுக்குப் பயணம் செய்தார்! பயணத்தின் பாதியிலேயே கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டது. இமாம் அஹ்மத் நினைத்திருந்தால் யாரிடமாவது உதவி கேட்டிருக்கலாம். மக்கள் அள்ளிக் கொடுத்திருப்பார்கள். ஆனால், தன் சுயமரியாதையை விடாத அந்த இளைஞர், பயண வழியில் சுமை தூக்கும் கூலியாளாகவும், துணி நெய்யும் தொழிலாளியாகவும் வேலை செய்து, சிறுகச் சிறுகக் காசு சேர்த்து யேமனை அடைந்தார். அவரின் வறுமையைப் பார்த்து இமாம் அப்துர் ரஸ்ஸாக் ஒரு பை நிறைய தங்கக் காசுகளைக் கொடுத்தபோது, "என் மார்க்கக் கல்விக்கு விலை வேண்டாம்" என்று அதை நாசூக்காக மறுத்துவிட்டார் அந்த மாபெரும் மனிதர்!

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் பக்தாதில் இருந்தபோது இமாம் அஹ்மதின் திறமையைப் பார்த்து வியந்துபோனார். இருவருக்கும் இடையில் இருந்த ஆசான் - மாணவர் உறவு அளப்பரியது. இமாம் ஷாஃபியீ பக்தாத்தை விட்டு எகிப்து செல்லும் போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வார்த்தையைக் கூறினார்:

நான் பக்தாத்தை விட்டுச் செல்கிறேன். ஆனால் அங்கே அஹ்மத் இப்னு ஹன்பலை விடச் சிறந்த அறிவாளியையோ, சிறந்த மார்க்கப் பற்றாளனையோ கண்டதே இல்லை!

இமாம் அஹ்மதின் வாழ்க்கையை இந்தச் சம்பவத்தைத் தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது. அன்றைய அப்பாஸிய கலீஃபா அல்-மஃமூன் ஒரு வழிகெட்ட கொள்கையை (முஃதஸிலா) அரசக் கொள்கையாக அறிவித்தான். அதாவது, "குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தையல்ல. அது வெறும் படைப்பு (படைக்கப்பட்டது)" என்று நம்ப வேண்டும் என்றான்.

இதை ஏற்காத அறிஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். வாளுக்குப் பயந்து பல அறிஞர்கள் "ஆம், குர்ஆன் படைக்கப்பட்டதுதான்" என்று ஒப்புக்கொண்டு உயிர் தப்பினர். ஆனால் இமாம் அஹ்மத் சிங்கம் போலக் கர்ச்சித்தார். "குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை. அது படைக்கப்பட்டதல்ல. என் கழுத்தில் வாளை வைத்தாலும் நான் இதை மாற்றிக்கொள்ள மாட்டேன்!"

மஃமூனுக்குப் பிறகு வந்த கலிஃபா 'அல்-முஃதஸிம்' காலத்தில் இமாம் அஹ்மத் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார். சுமார் 28 மாதங்கள் இருட்டறையில் விலங்கிடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ரமலான் மாதம், நோன்பாளியாக நின்றுகொண்டிருந்த இமாம் அஹ்மதின் கைகளைச் சங்கிலியால் கட்டி, முரட்டுத்தனமான வீரர்களைக் கொண்டு சவுக்கால் அடித்தனர். அவரின் முதுகுத் தோல்கள் கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் மயங்கி விழுவார்; மீண்டும் எழுப்பி அடிப்பார்கள்.

இத்தனை கொடூரங்களுக்கு மத்தியிலும் அவர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியில் ஆட்சியாளர்களே அவரின் உறுதியைக் கண்டு பயந்துபோய் அவரை விடுதலை செய்தனர். அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, கலிஃபா 'அல்-முத்தவக்கில்' ஆட்சிக்கு வந்தார். அவர் இமாம் அஹ்மதை மிகவும் கண்ணியப்படுத்தி, மூட்டை மூட்டையாகப் பொற்காசுகளை அன்பளிப்பாக அனுப்பினார். ஆனால், இமாம் அஹ்மத் அந்தத் தங்கக் காசுகளைத் தொடக்கூட மறுத்துவிட்டார்!

அவருடைய மாமா மற்றும் மகன்கள் அரசுப் பொறுப்புகளை ஏற்றுப் பணம் சம்பாதித்தபோது, அவர்களின் வீட்டில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதைக்கூட இமாம் அஹ்மத் தவிர்த்துவிட்டார். அந்த அளவுக்கு உலக சுகபோகங்களைத் தூக்கி எறிந்து வாழ்ந்தார்.

சுமார் 7,50,000 ஹதீஸ்களை அலசி ஆராய்ந்து, அதிலிருந்து சுமார் 30,000 ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து 'முஸ்னத் அஹ்மத்' என்ற பிரம்மாண்டமான நூலை அவர் உருவாக்கினார். அவருடைய மகன் அப்துல்லாஹ் இதை முழுமையாகத் தொகுத்து உலகிற்குக் கொடுத்தார். இந்த நூல் ஹதீஸ் உலகின் ஆகப்பெரிய சொத்து! இன்னும் எண்ணற்ற பல நூற்களை இந்த உம்மத்திற்காக எழுதிச் சென்றார்கள்.

தனது வாழ்நாளெல்லாம் ஹதீஸுக்காகவும், சரியான கொள்கைக்காகவும் தன்னை உருக்கிக் கொண்ட அந்த மெழுகுவர்த்தி, ஹிஜ்ரி 241-ம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம், தனது 77-வது வயதில் பகுதாதில் அணைந்தது. அவர் வழிகெட்டவர்களைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லியிருந்தார்:

 "எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான வித்தியாசம், எங்கள் ஜனாஸாக்களில்தான் (இறுதிப் பயணத்தில்) தெரியும்!" (بيننا وبينكم يوم الجنائز)

அது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா?
இமாம் அஹ்மதின் ஜனாஸாவில் மட்டும் சுமார் 13 இலட்சம் மக்கள் (ஆண்கள் 8 இலட்சம், பெண்கள் 6 இலட்சம்) கலந்துகொண்டார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்! இஸ்லாமிய வரலாற்றில் அதுவரை அப்படியொரு மக்கள் கூட்டத்தை எந்த ஆட்சியாளரின் மரணமும் பார்த்ததில்லை. அவரின் ஜனாஸாவைப் பார்த்துவிட்டுப் பகுதாதில் வாழ்ந்த சுமார் 20,000 யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்!

நான் இன்று நிம்மதியாக வீடுகளில் அமர்ந்துகொண்டு "குர்ஆன் அல்லாஹ்வின் இறைவசனம்" என்று ஓதிக்கொண்டிருக்கிறேன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளை முஸ்னத் அஹ்மத் நூலூடாக வாசித்துக்கொண்டு இருக்கிறேன் என்றால், அதன் பின்னால் சவுக்கடிகளைத் தாங்கிய இமாம் அஹ்மதின் கிழிந்த முதுகு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அறிவோடு சேர்த்து, அசைக்க முடியாத கொள்கை உறுதியும் சேர்ந்ததால்தான், அவர் இன்றும் "இமாமு அஹ்லுஸ் சுன்னா" (சுன்னாவின் தலைவர்) என்று நெஞ்சார அழைக்கப்படுகிறார்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamAhmad #AhmadIbnHanbal #MusnadAhmad #Mihna #Baghdad #LionOfSunnah #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Tuesday, February 24, 2026

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி).


இளமையின் ஆசைகளையும், கனவுகளையும் தன் குடும்பத்தின் பொறுப்புகளுக்காக முகம் சுளிக்காமல் தியாகம் செய்த இளைஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? என் வாழ்க்கை, என் விருப்பம் என்று சுயநலம் தேடும் இன்றைய உலகிற்கு மத்தியில், தியாகம் என்பது போர்க்களத்தில் உயிர் கொடுப்பது மட்டுமல்ல, தன் குடும்பத்திற்காகத் தன் வாழ்நாளின் இன்பங்களை விட்டுக் கொடுப்பதும் மாபெரும் தியாகம்தான் என்பதை நிரூபித்தவர்தான் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி).

உஹத் போர்க்களம் முடிகிறது. இஸ்லாமியப் படையில் மாபெரும் இழப்பு. ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் போரில் ஷஹீத் ஆக்கப்படுகிறார்கள். இறப்பதற்கு முன் தந்தை தன் மகனிடம் மிகப்பெரிய செல்வத்தை விட்டுச் செல்லவில்லை. மாறாக, கழுத்தை நெரிக்கும் அளவிற்கான பெரும் கடனையும், திருமணமாகாத ஏழு (சில அறிவிப்புகளில் ஒன்பது) பெண் குழந்தைகளையும்தான்!

கற்பனை செய்து பாருங்கள்... விளையாட்டுப் பருவத்தைக் கூட முழுமையாகத் தாண்டாத 18 அல்லது 19 வயது இளைஞர் ஜாபிர். ஒரே நாளில் ஒரு பெரிய குடும்பத்தின் சுமை அந்த இளம் தோள்களில் விழுகிறது. தந்தையை இழந்த கண்ணீர் காய்வதற்குள், கடன்காரர்களின் நெருக்கடி ஒருபுறம், ஆதரவற்ற சகோதரிகளின் எதிர்காலம் மறுபுறம். அந்த இளைஞனுக்குத் திருமண வயது வருகிறது. எந்த ஒரு இளைஞனுக்கும் தன் திருமணத்தைப் பற்றி ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால் ஜாபிர் (ரலி) ஒரு நடுத்தர வயதுடைய, விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். இந்தச் செய்தி அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் காதுகளுக்குச் செல்கிறது.

ஒரு பயணத்தின் போது, ஜாபிர் (ரலி) அவர்களை அருகில் அழைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிவோடு கேட்கிறார்கள்:

ஜாபிர்! திருமணம் செய்து கொண்டீரா?

ஆம் இறைத்தூதரே என்றார் ஜாபிர்.

கன்னியையா? அல்லது திருமணமானவளையா? என்று நபிகளார் கேட்டார்கள்.

திருமணமானவளைத்தான் (விதவையைத்தான்) மணந்தேன்" என்று ஜாபிர் (ரலி) பதிலளித்தார்.

அண்ணலார் கேட்டார்கள், உம்மோடு கொஞ்சி விளையாடவும், நீர் அவளோடு கொஞ்சி விளையாடவும் ஒரு கன்னிப் பெண்ணை நீர் மணந்திருக்கக் கூடாதா?

அப்போது ஜாபிர் (ரலி) அளித்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதில், அவர் உள்ளத்தில் இருந்த முதிர்ச்சியையும் தியாகத்தையும் உலகிற்குக் காட்டியது.

இறைத்தூதரே! என் தந்தை உஹத் களத்தில் கொல்லப்பட்டு விட்டார். எனக்கு பல சகோதரிகள் உள்ளனர். அந்தச் சிறுமிகளைப் போன்றே வயதுடைய இன்னொரு சிறுபெண்ணை நான் வீட்டிற்கு அழைத்து வர விரும்பவில்லை. என் சகோதரிகளுக்குத் தலைவாரி விடவும், அவர்களைப் பராமரிக்கவும், அவர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுத் தரவும் பக்குவமான ஒரு மூத்த பெண்ணையே நான் தேர்ந்தெடுத்தேன்! என்றார்.

சுபஹானல்லாஹ்! தன் இளமைக்கால ஆசைகளைத் தன் சகோதரிகளின் கண்ணியத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எவ்வளவு அழகாகக் குழிதோண்டிப் புதைத்தார் அந்த இளைஞர்! ஜாபிர் (ரலி) அவர்களின் இந்தப் பதிலைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயம் நெகிழ்ந்தது. அந்தத் தியாக இளைஞனுக்காக உளமாரப் பிரார்த்தனை செய்தார்கள்.

தந்தையின் கடனை அடைக்க முடியாமல் ஜாபிர் (ரலி) தவித்தபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரில் வந்து ஜாபிருடைய பேரீச்சம் தோட்டத்தில் நடந்து, அந்தப் பழங்களில் 'பரக்கத்' (அருள்) வேண்டி துஆ செய்தார்கள். அந்த ஆண்டு விளைந்த பழங்களைக் கொண்டு தந்தையின் ஒட்டுமொத்த கடனும் அடைபட்டு, இன்னும் பல மாதங்களுக்குத் தேவையான பழங்களும் மீதமிருந்தன. ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்களின் மெலிந்த ஒட்டகத்தை நபிகளார் விலைபேசி வாங்கிவிட்டு, அதற்கான பணத்தையும் கொடுத்து, அந்த ஒட்டகத்தையும் அவருக்கே அன்பளிப்பாகத் திருப்பிக் கொடுத்தார்கள். இவையெல்லாம், தியாகத்தின் உருவமான அந்த இளைஞர் மீது நபிகளார் வைத்திருந்த எல்லையில்லா அன்பின் வெளிப்பாடுகள்!

இஸ்லாத்திற்காக நாம் எதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்? குடும்பத்தின் பொறுப்புகள் வரும்போது முகம் சுளிக்கிறோமா? அனாதைகளாக நிற்கும் நம் சொந்தங்களுக்கு உதவி செய்யத் தயங்குகிறோமா? என் வாழ்க்கை மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று குறுக்கிக் கொள்கிறோமா? தன் ஆசைகளை அழித்து, பொறுப்புகளைச் சுமந்த ஜாபிர் (ரலி) அவர்களை வரலாறு இன்றும் நாயகனாகப் போற்றுகிறது. 

மதீனாவின் மஸ்ஜிதுந் நபவியில் தூணோடு சாய்ந்து அமர்ந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஹதீஸ்களைக் கற்பிக்கும் பெரும் அறிஞராக அவரை அல்லாஹ் உயர்த்தினான். பிறருக்காக நாம் செய்யும் எந்தத் தியாகமும் இறைவனிடம் வீணாவதில்லை. குடும்பத்தினருக்காக வியர்வை சிந்துவதும், ஆசைகளைச் சுருக்கிக் கொள்வதும் கூட ஆகச்சிறந்த தர்மமே! ஜாபிர் (ரலி) அவர்களின் அந்தத் தியாக மனப்பான்மையை அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #JabirIbnAbdullah #Sacrifice #FamilyResponsibility #YouthInIslam #AbdullahIbnuNaseerWriteups

இமாம் அபூஸுர்ஆ அர்ராஸி (ரஹ்).


ஹதீஸ்களில் உள்ள மறைமுகமான குறைகளை கண்டுபிடிப்பதில் மருத்துவர் என்று இமாம் முஸ்லிம் அவர்களாலேயே போற்றப்பட்ட மாமேதைதான் இமாம் அபூஸுர்ஆ அர்ராஸி (ரஹ்). உலகப் புகழ் பெற்ற 'ஸஹீஹ் முஸ்லிம்' , அதை யாரிடம் காட்டிச் சரிபார்த்தார் தெரியுமா? இமாம் புகாரியிடமா? இல்லை. வேறு யாரிடமும் இல்லை. அவர் தனது நூலை எடுத்துக் கொண்டு ஈரான் தேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இமாமைத் தேடிச் சென்றார். அந்த இமாம் எந்தெந்த ஹதீஸ்களில் குறையிருக்கிறது என்று கை வைத்தாரோ, அதை எல்லாம் தயவுதாட்சண்யமின்றி நீக்கினார் இமாம் முஸ்லிம்.
இமாம் முஸ்லிமுக்கே சென்சார் போர்டு போலச் செயல்பட்ட அந்த மாபெரும் இமாம்தான் அபூஸுர்ஆ அர்ராஸி.

பெயர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்கரீம்.
சிறப்புப் பெயர்: அபூஸுர்ஆ
ஊர்: அன்றைய பாரசீகத்தின் (இன்றைய ஈரான்)
புகழ்பெற்ற அறிவு மையமான ரய் நகரத்தில் ஹிஜ்ரி 200-ம் ஆண்டு பிறந்தார். அதனால்தான் இவர் 'அர்ராஸி' என்று அழைக்கப்படுகிறார்.
காலம்: ஹிஜ்ரி 200 - 264. (இமாம் புகாரி, முஸ்லிம், அபூதாவூத் ஆகியோரின் சமகாலத்தவர்)

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இமாம் அபூஸுர்ஆவைச் சந்திக்க வந்த நிகழ்வு ஹதீஸ் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. அபூஸுர்ஆவைப் பார்த்தவுடன் இமாம் முஸ்லிம் ஓடிச் சென்று அவரின் நெற்றியில் முத்தமிட்டார். பிறகு நெகிழ்ச்சியோடு ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரே! முஹத்திதீன்களின் தலைவரே! ஹதீஸ்களின் குறைகளைக் கண்டுபிடிக்கும் தலைசிறந்த மருத்துவரே (தபீபல் ஹதீஸ்)! என்றெல்லாம் கூறினாராம்.

இமாம் அபூஸுர்ஆவின் மனப்பாட சக்தி மனித அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவர் கூறுகிறார்: "நான் குல்ஹுவல்லாஹு அஹத் (சூரா இக்லாஸ்) அத்தியாயத்தை எப்படி நெஞ்சில் மனப்பாடமாக வைத்துள்ளேனோ, அதேபோல இலட்சக்கணக்கான ஹதீஸ்களை என் நெஞ்சில் சுமந்துள்ளேன்.
 
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) இவரைப் பற்றிக் கூறும்போது: ரய் நகரத்திலிருந்து ஒரு இளைஞர் நம்மிடம் வந்துள்ளார். ஹதீஸ்களை மனனம் செய்ததில் அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததே இல்லை" என்று புகழ்ந்தார். அபூஸுர்ஆ தன்னிடம் தங்கியிருந்த காலங்களில், இமாம் அஹ்மத் தனது பர்ளுத் தொழுகைகளைத் தவிர மற்ற அனைத்து உபரியான வணக்கங்களையும் குறைத்துக்கொண்டு, அபூஸுர்ஆவுடன் ஹதீஸ் விவாதங்களில் மூழ்கியிருப்பாராம்!

இமாம் முஸ்லிம் தனது 'ஸஹீஹ்' நூலைத் தொகுத்தபோது, அதை அபூஸுர்ஆவிடம் சமர்ப்பித்தார். அபூஸுர்ஆ அந்த நூலை முழுமையாக வாசித்தார். ஆயிரக்கணக்கான ஹதீஸ்களில், சில ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டி, "இதில் மறைமுகமான குறை (இல்லத்) உள்ளது" என்றார். இமாம் முஸ்லிம் சிறிதும் தயங்காமல் அந்த ஹதீஸ்களை தனது நூலிலிருந்து தூக்கி எறிந்தார். அபூஸுர்ஆ எதையெல்லாம் "ஸஹீஹ்" என்று சான்றிதழ் அளித்தாரோ, அதை மட்டுமே தனது நூலில் தக்க வைத்துக் கொண்டார்.

அபூஸுர்ஆ அர்ராஸிக்கு நெருங்கிய நண்பராகவும், சக ஆய்வாளராகவும் இருந்தவர்தான் இமாம் அபூஹாதிம் அர்ராஸி (இவரை பற்றி நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்). இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஹதீஸைப் பலவீனம் என்று சொல்லிவிட்டால், அதை உலகமே ஏற்றுக்கொள்ளும். இவர்களை ஹதீஸ் உலகில் "அர்-ராஸியான்" (ரய் நகரத்து இரு நட்சத்திரிங்கள்) என்று அழைப்பார்கள்.

ஹிஜ்ரி 264-ம் ஆண்டு, இமாம் அபூஸுர்ஆ மரணப் படுக்கையில் இருக்கிறார். மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. அவரைச் சுற்றி இமாம் அபூஹாதிம், முஹம்மத் பின் முஸ்லிம் போன்ற மாபெரும் ஹதீஸ் அறிஞர்கள் நிற்கிறார்கள். மரணிக்கும் தறுவாயில் உள்ளவருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று கலிமாவை நினைவூட்ட (தல்ஹீன் செய்ய) வேண்டும். ஆனால், மாபெரும் இமாமான அவருக்கு எப்படி நாம் சொல்லிக்கொடுப்பது என்று அவர்களுக்குக் கூச்சமாக இருந்தது. எனவே, அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். அபூஸுர்ஆவின் முன் நின்று கொண்டு, கலிமாவுடைய ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரை தங்களுக்குள் வாசிக்கத் தொடங்கினார்கள். ஒரு அறிஞர் பாதி சங்கிலியைச் சொல்லிவிட்டுத் தயங்கி நின்றார். அப்போது மரணப் படுக்கையில் கண்மூடிக் கிடந்த இமாம் அபூஸுர்ஆ, சட்டெனக் கண்களைத் திறந்தார். தனது மூச்சுத் திணறலையும் பொருட்படுத்தாமல், அந்த ஹதீஸின் மீதி அறிவிப்பாளர் தொடரை அச்சுப் பிசகாமல் சரளமாக வாசித்தார்:

"...எனக்கு முஆத் பின் ஜபல் (ரலி) அறிவித்தார். ரசூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள்: 'யாருடைய இறுதி வார்த்தை லா இலாஹ இல்லல்லாஹ் என்று முடிகிறதோ, அவர் சொர்க்கம் புகுவார்.'

இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லி முடித்த மறுகணமே, இமாம் அபூஸுர்ஆவின் உயிர் பிரிந்தது! என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சுப்ஹானல்லாஹ்! எந்த ஹதீஸை வாழ்நாள் முழுவதும் உயிராக நேசித்துப் படித்தாரோ, அதே ஹதீஸை அறிவித்துக்கொண்டே அவர் மறு உலக வாழ்க்கைக்கு பயணமானார்.

ஹதீஸ்களை மனனம் செய்வது ஒரு கலை என்றால், அந்த ஹதீஸ்களுக்குள் ஊடுருவி இருக்கும் மிக நுட்பமான நோய்களைக் (குறைகளை) கண்டுபிடித்துக் குணப்படுத்தும் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் தான் இமாம் அபூஸுர்ஆ அர்ராஸி. அவர் ஹதீஸ்களைக் காக்கவில்லை மாறாக ஹதீஸ்கள் அவரை மரணத்திலும் காத்தன!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamAbuZurah #ArRazi #HadithScholar #Ilal #SahihMuslim #Rayy #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Monday, February 23, 2026

சுனன் நஸாயீ

ஸிஹாஹ் ஸித்தாவை எடுத்து புரட்டிப்பாருங்கள். மற்ற நூற்களை விட சுனன் நஸாயீ பெருமளவில் வேறுபட்டிருப்பதை நீங்கள் காண முடியும். புஹாரி முஸ்லிமை போல ஒரு ஹதீஸ் பல தடவை வருவதை காணலாம். அபூதாவூத் போல பலமான சுனன் வகை நூலாக இருப்பதையும் காணலாம். திர்மிதீ போல அறிவிப்பாளர் நிறைகுறை ஆராய்ந்திருப்பதையும் காணலாம். ஸிஹாஹ் ஸித்தாவில் உள்ள நூல்களிலேயே சுனன் வகைகளில் இது தான் மிகப்பெரியது. 

5662 ஹதீஸ்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வரலாற்றையும் சமூகத்தையும் விமர்சனப் பார்வையோடு அணுகும் நமக்கு, ஆதாரங்களின் நம்பகத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த நம்பகத்தன்மையில், பல அறிஞர்களின் பார்வையில் புஹாரி, முஸ்லிமுக்கு அடுத்தபடியாக, ஏன் சில நேரங்களில் அவர்களையே மிஞ்சும் அளவுக்கு மிகக் கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட ஒரு மாபெரும் அறிஞரின் படைப்புதான் இந்த நூல். வாருங்கள், விரிவாகப் பார்ப்போம்.

இமாம் அஹ்மத் இப்னு ஷுஐப் அன்-நஸாயீ (ரஹ்). ஹிஜ்ரி 214-ல் குராசான் (தற்போதைய துர்க்மெனிஸ்தான்) பகுதியில் உள்ள 'நஸா' என்ற ஊரில் பிறந்தார். தனது 15 வயதிலேயே ஹதீஸ்களைத் தேடி ஹிஜாஸ், ஈராக், எகிப்து, சிரியா என நீண்ட நெடிய பயணங்களை மேற்கொண்டார். ஹதீஸ் அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் இவரை விடக் கறாரான ஒருவரை வரலாற்றில் காண்பது அரிது.

சுனன் நஸாயீ நூலின் தோற்றப் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் இமாம் அவர்கள் தான் திரட்டிய ஹதீஸ்களைக் கொண்டு "அஸ்-ஸுனன் அல்-குப்ரா" (பெரிய தொகுப்பு) என்ற ஒரு பிரம்மாண்டமான நூலை எழுதினார். (இது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்) அதனை ரமல்லா (பாலஸ்தீனம்) நகரின் ஆளுநரிடம் சமர்ப்பித்தபோது, "இதில் உள்ளவை அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா (ஸஹீஹ்)?" என ஆளுநர் கேட்டார். அதற்கு இமாம், "இல்லை, ஸஹீஹும் உண்டு, ஹஸனும் உண்டு" என்றார். உடனே ஆளுநர், "அப்படியானால் இதில் உள்ள மிகத் துல்லியமான, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் தனியாகத் தொகுத்துத் தாருங்கள்" எனக் கோரினார். அதன் விளைவாக இமாம் நஸாயீ அவர்கள் குப்ராவிலிருந்து வடிகட்டி உருவாக்கியதே "அஸ்-ஸுனன் அஸ்-ஸுக்ரா" (சிறிய தொகுப்பு). இதற்கு "அல்-முஜ்தபா" (தேர்ந்தெடுக்கப்பட்டது) என்ற பெயரும் உண்டு. இன்று உலகெங்கும் 'சுனன் நஸாயீ' என நாம் படிப்பதும், 'குதூபுஸ் சித்தா'வில் இடம்பெற்றிருப்பதும் இந்த வடிகட்டப்பட்ட நூல்தான்.

 ஹதீஸ் அறிவிப்பாளர்களை ஏற்றுக்கொள்வதில் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களை விடவும் இமாம் நஸாயீ மிகவும் கடுமையான நிபந்தனைகளைக் கொண்டிருந்தார் எனப் பல வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு அறிவிப்பாளரிடம் சிறு குறை இருந்தாலும், அவரது ஹதீஸை நிராகரித்து விடுவார். இதனால், சுனன் நஸாயீயில் பலவீனமான (ளயீஃப்) ஹதீஸ்கள் மிக குறைவு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு ஹதீஸை எந்தத் தலைப்பின் கீழ் வைக்கிறார் என்பதிலேயே அவரது சட்டவியல் மூளை வெளிப்படும். புகாரிக்கு நிகராக, மிக நுட்பமான சட்டங்களைத் தனது அத்தியாயங்களின் தலைப்புகளிலேயே இமாம் நஸாயீ உணர்த்திவிடுவார்.
 
ஒரு ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு, அதில் அறிவிப்பாளர்கள் செய்திருக்கக் கூடிய மிக நுண்ணிய தவறுகளைக் (இல்லத்) கண்டுபிடித்து, "இந்த வார்த்தை தவறுதலாக வந்துள்ளது", "இந்த அறிவிப்பாளர் இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" என ஹதீஸ் கலையின் உச்சக்கட்ட ஆய்வை இந்நூலில் அவர் நிகழ்த்தியிருப்பார்.

வரலாற்று மாணவர்களுக்கு இமாம் நஸாயீயின் இறுதி மரணம் ஒரு பெரும் பாடமாகும். எகிப்தில் நீண்ட காலம் வாழ்ந்த அவர், தனது இறுதி காலத்தில் தமாஸ்கஸ் (சிரியா) சென்றார். அங்கே உமையாக்களின் செல்வாக்கு அதிகமிருந்ததால், அலி (ரழி) அவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு இருந்தது. அதை வன்மையாகக் கண்டித்த இமாம், அலி (ரழி) அவர்களின் சிறப்புகளைக் கூறும் "கஸாயிலுல் அலி" என்ற நூலை எழுதினார்.
"முஆவியா (ரழி) அவர்களைப் புகழ்ந்து எழுத மாட்டீர்களா?" என அங்குள்ளவர்கள் வற்புறுத்தியபோது, அவரை சிறப்பித்து பெரியளவில் ஹதீஸ்கள் இல்லையே என் இமாமவர்கள் விளக்க, பள்ளிவாசலிலேயே வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலின் காயங்களாலேயே மக்கா அல்லது ரமல்லாவிற்குச் செல்லும் வழியில் ஹிஜ்ரி 303-ல் அவர் ஷஹீத் (வீரமரணம்) ஆனார். சத்தியத்திற்காக உயிரைக் கொடுத்த ஒரு மாமேதையின் ரத்தம் இந்த நூலின் பின்னணியில் உள்ளது.

வெறுமனே சட்டங்களை மட்டும் சொல்லாமல், ஹதீஸ்களின் ஆழமான விமர்சனத்தையும், மாசற்ற நேர்மையையும் ஒருங்கே தாங்கி நிற்கும் ஒரு அறிவுப் பெட்டகம் சுனன் நஸாயீ. இஸ்லாமிய வரலாற்றையும், ஹதீஸ் கலையையும் ஆழமாக நேசிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம். உங்கள் எண்ணங்களையும், இந்த வரலாற்றுப் பின்னணி உங்களில் ஏற்படுத்திய தாக்கத்தையும் கமெண்டில் கூறுங்கள்.
அன்புடன்,

- Abdullah Ibnu Naseer

அபூ தல்ஹா (ரலி).


இன்றைய காலத்தில் நாம் தர்மம் (ஸதகா) என்று எதைக் கொடுக்கிறோம்? நமக்குத் தேவையில்லாத பழைய துணிகள், மிஞ்சிய உணவுகள், அல்லது நம் வங்கிக் கணக்கில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு சிறு தொகை. போதும், இதுவே பெரிய தியாகம்"க்ஷ என்று நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன் மதீனாவில் வாழ்ந்த அந்த மனிதர்கள் அப்படி இல்லை. அவர்கள் குர்ஆனின் வசனங்களை வெறும் காதுகளால் கேட்கவில்லை மாறாக இதயத்தால் கேட்டார்கள். அதனால் தான் அவர்களால் சரித்திரத்தைப் புரட்டிப் போட முடிந்தது.
அப்படி ஒரு மாமனிதர் தான் மதீனாவின் அன்சாரித் தோழரான அபூ தல்ஹா (ரலி).

அபூ தல்ஹா (ரலி) மதீனாவில் பேரீச்ச மரங்கள் அதிகம் கொண்ட பெரும் செல்வந்தர்களில் ஒருவர். அவருக்குச் சொந்தமான சொத்துக்களிலேயே மிகச்சிறந்தது, மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலுக்கு நேர் எதிரே அமைந்திருந்த பைருஹா என்ற ஒரு பிரம்மாண்டமான தோட்டம். அது சாதாரணத் தோட்டமல்ல. மதீனாவின் சுட்டெரிக்கும் வெயிலில், அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்தால் ஒரு குளுமை இருக்கும். அங்கே ஒரு கிணறு இருந்தது. அதன் தண்ணீர் தேனைப் போல இனிய சுவையுடையது.
எந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்தது என்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அடிக்கடி அந்தத் தோட்டத்திற்குச் சென்று இளைப்பாறுவார்கள், அந்த நன்னீரைப் பருகுவார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களுக்கு அந்தத் தோட்டம் என்றால் உயிர். அது அவர்களின் அந்தஸ்தின் அடையாளம், அவர்களின் இதயத்திற்கு நெருக்கமான செல்வம் அது.

ஒருநாள்... அமைதியாக இருந்த மதீனாவில் ஒரு இறைவசனம் இடிமுழக்கம் போல இறங்கியது.

❝நீங்கள் (உங்கள் செல்வத்தில்) எவற்றை அதிகம் நேசிக்கிறீர்களோ, அவற்றிலிருந்து (அல்லாஹ்வின் பாதையில்) தானம் செய்யாத வரை, நீங்கள் ஒருபோதும் உண்மையான நன்மையை அடையவே மாட்டீர்கள்!❞
(திருக்குர்ஆன் 3:92)

இந்த வசனம் அபூ தல்ஹா (ரலி) அவர்களின் இதயத்தில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. "நான் எதை அதிகம் நேசிக்கிறேன்?" என்று தன் உள்ளத்திடம் கேட்டார். உள்ளம் ஒரே பதிலைச் சொன்னது "பைருஹா தோட்டம்!" அடுத்த நொடி அவர் என்ன செய்தார் தெரியுமா? "இவ்வளவு விலை உயர்ந்த சொத்தை எப்படிக் கொடுப்பது? என் பிள்ளைகளுக்கு என்ன சேமிப்பது?" என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கவில்லை.

பதறியடித்துக்கொண்டு நேராக நபி (ஸல்) அவர்களிடம் ஓடினார். யா ரஸூலல்லாஹ்! 'நீங்கள் நேசிப்பதைக் கொடுக்காத வரை நன்மையை அடைய முடியாது' என்று அல்லாஹ் சொல்கிறான். என் சொத்துக்களிலேயே என் உயிருக்கு மேலாக நான் நேசிப்பது இந்த 'பைருஹா' தோட்டத்தைத் தான். இதோ! இதை அல்லாஹ்வுக்காகவும், அவனது தூதருக்காகவும் தர்மம் செய்துவிட்டேன். இதை அல்லாஹ்விடம் நான் சேமித்து வைக்கிறேன். நீங்கள் விரும்பியபடி இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஒரு நொடி அந்த இடமே அமைதியானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அவர்கள் கூறினார்கள்:

❝ஆஹா! ஆஹா! இதுவல்லவோ அதிக லாபம் தரக்கூடிய செல்வம்! இதுவல்லவோ அதிக லாபம் தரக்கூடிய செல்வம்!❞ (பக்! பக்! தாலிக மாலுன் ராபிஹ்!)

உலகப் பார்வையில் அவர் ஒரு பெரிய சொத்தை இழந்துவிட்டார். ஆனால், நபிகளாரின் பார்வையில் அவர் ஒரு நிலையான சொர்க்கத்தை விலைக்கு வாங்கிவிட்டார்!

இங்குதான் நபிகளாரின் தலைமைத்துவம் வெளிப்படுகிறது. அந்தத் தோட்டத்தைப் பொதுச் சொத்தாகவோ, அல்லது தன் சொந்தத் தேவைக்கோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூ தல்ஹாவே! உங்கள் தியாகத்தை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால், இந்தத் தோட்டத்தை உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும், உங்கள் மாமன் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பதையே நான் சிறந்ததாகக் கருதுகிறேன். (ஏனென்றால், தர்மம் என்பது முதலில் சொந்த உறவுகளிடமிருந்தே தொடங்க வேண்டும் என்ற உயர்ந்த பண்பை அங்கே நிலைநாட்டினார்கள்). அபூ தல்ஹா (ரலி) மறுபேச்சின்றி, அப்படியே செய்கிறேன் இறைத்தூதரே! என்று கூறி, அந்தப் பிரம்மாண்டமான தோட்டத்தைத் தன் உறவினர்களான ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி), உபை இப்னு கஅப் (ரலி) போன்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்.

அன்பானவர்களே! இந்த வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் என்ன? நம்முடைய 'பைருஹா' எது?
நாம் உயிராக நேசிக்கும் நம் ஸ்மார்ட்போனா?
நாம் ஆசையாக வாங்கி வைத்திருக்கும் அந்தப் புத்தாடையா? நம் வங்கிப் பெட்டகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சேமிப்பா? அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்கவில்லை. "நீங்கள் நேசிப்பதிலிருந்து ஒரு பகுதியையாவது கொடுக்கத் தயாராக இருக்கிறீர்களா?" என்று நம் ஈமானைப் பரிசோதிக்கிறான். தேவையற்றதைக் கொடுப்பது தர்மம். தேவையானதைக் கொடுப்பது தியாகம்.
உயிராக நேசிப்பதைக் கொடுப்பதுதான் உண்மையான ஈமான்! அபூ தல்ஹா (ரலி) காட்டிய அந்த வழியில், நாம் நேசிக்கும் பொருட்களிலிருந்து அல்லாஹ்வுக்காகச் செலவு செய்யும் பாக்கியத்தை இறைவன் நமக்கும் தந்தருள்வானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbuTalha #Sacrifice #Charity #Quran #AbdullahIbnuNaseerWriteups

இமாம் தப்ரானி (ரஹ்).


ஒரு மனிதர் 100 ஆண்டுகள் வாழ்கிறார். அந்த 100 ஆண்டுகளையும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... என்ற வார்த்தைகளைத் தேடுவதற்காகவே அர்ப்பணிக்கிறார் என்றால், அது சாதாரண விஷயமா? ஹதீஸ் உலகில் இவரை முஸ்னித் அத்-துன்யா (உலகத்தின் ஹதீஸ் சங்கிலி) என்று அழைப்பார்கள். நீண்ட காலம் வாழ்ந்து, பல அரிய ஹதீஸ்களை நமக்குத் தொகுத்துத் தந்த அந்த மாமனிதர்தான் இமாம் தப்ரானி (ரஹ்).

ஹதீஸ்களைத் தொகுப்பதில் நாம் இதுவரை சுனன், முஸ்னத் போன்ற முறைகளைப் பார்த்தோம். ஆனால், ஹதீஸ்களை அகராதி (Dictionary) பாணியில், அதாவது அகரவரிசைப்படி (Alphabetical Order) தொகுக்கும் ஒரு புதிய மாடலை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இமாம் தப்ரானியையே சாரும். அவர் எழுதிய நூல்களின் பெயர் முஃஜம்.

யார் இந்த தப்ரானி?

பெயர்: சுலைமான் பின் அஹ்மத் பின் அய்யூப். 
பிறப்பு: ஹிஜ்ரி 260-ம் ஆண்டு, ஷாம் (சிரியா/பாலஸ்தீனம்) பகுதியில் உள்ள தபரியா என்ற ஊரில் பிறந்தார். அதனால்தான் இவர் தப்ரானி எனப்படுகிறார்.
வாழ்நாள்: இவர் மிகச்சரியாக 100 ஆண்டுகள் வாழ்ந்து ஹிஜ்ரி 360-ல் மரணமடைந்தார்.
கல்விப் பயணம்: தன்னுடைய 13-வது வயதில் ஹதீஸ் தேடத் தொடங்கியவர், சுமார் 33 ஆண்டுகள் உலகை வலம் வந்தார். ஹிஜாஸ், யேமன், எகிப்து, ஈராக், பாரசீகம் என அவர் செல்லாத ஹதீஸ் மையங்களே இல்லை. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஷைக்குகளிடம் (ஆசிரியர்கள்) நேரடியாகப் பாடம் படித்தார்.

இமாம் தப்ரானி எழுதிய நூற்களிலேயே மிகச் சிறந்தது அவரின் மூன்று 'முஃஜம்' நூல்கள்தான். இன்றுவரை ஹதீஸ் ஆய்வாளர்களுக்கு இவை மாபெரும் பொக்கிஷங்கள்.

அல்-முஃஜம் அல்-கபீர் (பெரிய முஃஜம்):
 
இது ஒரு சாதாரண நூல் அல்ல. ஒரு பிரம்மாண்டமான கலைக்களஞ்சியம் இது. இதில் சஹாபாக்களின் (நபித்தோழர்கள்) பெயர்களை அகரவரிசைப்படி அடுக்கி, ஒவ்வொரு சஹாபியும் அறிவித்த ஹதீஸ்களை அவர்களின் பெயருக்குக் கீழே தொகுத்துள்ளார். இதில் சுமார் 60,000 ஹதீஸ்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது! (துரதிர்ஷ்டவசமாக இதன் சில பகுதிகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன, ஆனாலும் இன்றும் பல பாகங்கள் அச்சில் உள்ளன). இதில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸ்களை மட்டும் அவர் சேர்க்கவில்லை. ஏனென்றால், அதற்காக மட்டுமே தனியாக ஒரு பிரம்மாண்டமான நூலை அவர் எழுதியிருந்தார்.

அல்-முஃஜம் அல்-அவ்ஸத் (நடுத்தர முஃஜம்). இமாம் தப்ரானிக்கு மிகவும் பிடித்த நூல் இதுதான். இந்த நூல் என் உயிருக்கு நிகரானது என்று அவரே கூறுவார். இதில் தனது ஆசிரியர்களின் பெயர்களை (சுமார் 2,000 ஷைக்குகள்) அகரவரிசைப்படி எழுதி, அவர்களிடம் கேட்ட ஹதீஸ்களைத் தொகுத்துள்ளார்
 இதில் பெரும்பாலும் அரிதான ஹதீஸ்களும், அறிவிப்பாளர் வரிசையில் உள்ள நுணுக்கங்களும் இடம்பெற்றிருக்கும்.

அல்-முஃஜம் அஸ்-ஸகீர் (சிறிய முஃஜம்). இது ஒரு வழிகாட்டி (Index) போன்றது. தனது 1,000 ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் தனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த ஒரே ஒரு ஹதீஸை மட்டும் இதில் பதிவு செய்துள்ளார்.

இவ்வளவு பெரிய அறிவுக் கடலாக அவர் மாறியதற்குப் பின்னால் மிகப்பெரிய தியாகம் இருந்தது. ஒருமுறை இமாம் தப்ரானியிடம், இவ்வளவு ஹதீஸ்களை நீங்கள் எப்படித் திரட்டினீர்கள்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் நான் முப்பது வருடங்கள் ஒரு சாதாரண பாயில்தான் படுத்துறங்கினேன் என்று சொன்னார்.

படுக்கை வசதியைக் கூடப் புறக்கணித்துவிட்டு, இரவு பகலாக ஹதீஸ்களைத் தேடி எழுதியதால்தான், அவரால் இத்தனை ஆயிரம் ஹதீஸ்களைப் பதிவு செய்ய முடிந்தது.

இவர் 100 ஆண்டுகள் நீண்ட காலம் வாழ்ந்ததால், இவர் காலத்து முதிய இமாம்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். எனவே, இமாம் அஹ்மத், இமாம் புகாரி காலத்துச் செய்திகளை, மிகக் குறைந்த அறிவிப்பாளர்கள் மூலம் நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உலக மக்கள் அனைவரும் தப்ரானியைத் தேடி 'இஸ்ஃபஹான்' (ஈரானில் உள்ள நகரம்) நகருக்குப் படையெடுத்தார்கள். அவர் ஒரு மாபெரும் அறிவுப் பாலம்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கண்கள் பூக்கப் பூக்க ஹதீஸ் சுவடிகளைப் படித்துப் படித்து, இமாம் தஹபியைப் போலவே இவரும் தனது இறுதிக்காலத்தில் பார்வையை இழந்தார்.
ஆனாலும் அவரின் ஹதீஸ் வகுப்புகள் நிற்கவில்லை. அவரின் மனப்பாட சக்தி மாணவர்களை வழிநடத்தியது. இறுதியாக ஹிஜ்ரி 360-ம் ஆண்டு, இஸ்ஃபஹான் நகரில் அந்த ஹதீஸ் நூறாண்டுச் சூரியன் அஸ்தமித்தது.

நாம் ஒரு ஹதீஸைப் படிக்கும்போது தப்ரானியில் பதிவாகியுள்ளது என்று சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், அந்த ஒரு ஹதீஸைக் கொண்டு வருவதற்காக, ஒரு மனிதர் 33 ஆண்டுகள் ஊர் ஊராக அலைந்து, 30 ஆண்டுகள் பாயில் படுத்துறங்கித் தேடியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது அந்த ஹதீஸின் மதிப்பு பலமடங்கு உயர்கிறது!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamTabarani #AlMujamAlKabir #Isfahan #HadithScholar #Centenarian #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

இமாம் நவவி


ஒரு மனிதர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது முக்கியமே இல்லை. வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தார் என்பதே முக்கியம் என்பதற்கு வரலாற்றில் ஆகச்சிறந்த உதாரணம் இமாம் நவவி அவர்கள். அவர் வாழ்ந்தது வெறும் 45 ஆண்டுகள்தான். ஆனால், அவர் எழுதிய நூல்களின் பக்கங்களை, அவர் வாழ்ந்த நாட்களால் வகுத்துப் பார்த்தால், அவர் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் பல பக்கங்களை எழுதியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்! அந்த அளவிற்கு அவருடைய நேரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்திருந்தான்.

பெயர்: யஹ்யா பின் ஷரஃப்.
சிறப்புப் பெயர்: முஹ்யித்தீன் (மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்), அபூ ஜகரிய்யா.
ஊர்: சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகருக்கு அருகிலுள்ள 'நவா' (Nawa) என்ற கிராமத்தில் ஹிஜ்ரி 631-ம் ஆண்டு பிறந்தார். (இந்த 'நவா' என்ற ஊரின் பெயரால்தான் இவர் நவவி என்று அழைக்கப்படுகிறார்).

மற்ற சிறுவர்கள் இவரை விளையாடக் கூப்பிடுவார்கள். ஆனால் இவரோ, "நான் விளையாடப் படைக்கப்படவில்லை" என்று கூறிவிட்டு, குர்ஆன் ஓதுவதிலும், படிப்பதிலுமே மூழ்கியிருப்பார் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவர் பல நூல்களை எழுதியிருந்தாலும், குறிப்பாக நான்கு நூல்கள் உலகப் புகழ் பெற்றவை:

ரியாலுஸ் ஸாலிஹீன்: நற்பண்புகள், ஒழுக்க மாண்புகள், அன்றாட வாழ்வில் ஒரு முஸ்லிம் எப்படி நடக்க வேண்டும் என்பதை விளக்கும் மிக அற்புதமான ஹதீஸ் தொகுப்பு. 

அல்-அர்பஈன் அந்-நவவிய்யா: இஸ்லாத்தின் ஒட்டுமொத்த சுருக்கத்தையும் வெறும் 42 ஹதீஸ்களில் வடித்தெடுத்த அற்புதம் இது. இஸ்லாமிய அடிப்படைகளைக் கற்க விரும்பும் ஒவ்வொரு மாணவனும் முதலில் மனப்பாடம் செய்யும் நூல் இதுதான்.

அல்-மின்ஹாஜ் - ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்: இமாம் முஸ்லிம் அவர்களின் 'ஸஹீஹ் முஸ்லிம்' நூலுக்கு எழுதப்பட்ட உலகப் புகழ்பெற்ற விரிவுரை இதுதான். ஹதீஸ்களில் உள்ள சட்ட நுணுக்கங்கள், அறிவிப்பாளர் தொடர்பான ஆழமான ஆய்வுகளை இதில் பதிவு செய்துள்ளார். இந்த விரிவுரை இல்லையென்றால் ஸஹீஹ் முஸ்லிமைப் புரிவது மிகக் கடினம் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

அல்-மஜ்மூஃ: இது ஃபிக்ஹ் (சட்டக்கலை) துறையில் எழுதப்பட்ட மாபெரும் கடல். ஷாஃபி மத்ஹபின் சட்டங்களை ஆதாரங்களோடு ஆழமாக அலசும் நூல். இமாம் நவவி இதை முழுமையாக எழுதி முடிப்பதற்குள் மரணித்துவிட்டார். பின்னர் வந்த அறிஞர்கள் இதை முழுமைப்படுத்தினர்.

அல்-அத்கார்: காலை முதல் இரவு வரை, பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு முஸ்லிம் ஓத வேண்டிய துஆக்களை (பிரார்த்தனைகளை) ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து தொகுத்த மிக முக்கியமான நூல்.

இமாம் நவவி வெறும் நூல்களை மட்டும் எழுதிக்கொண்டிருக்கவில்லை. அவர் மிகப்பெரிய வீரராகவும் இருந்தார். அன்றைய மாபெரும் ஆட்சியாளராக இருந்த 'சுல்தான் ருக்னுத்தீன் பைபர்ஸ்' ஒருமுறை மக்களிடம் அநியாயமாக வரி வசூலித்தார். அப்போது சுல்தானின் கண்களுக்கு நேராகப் பார்த்து, "இது மார்க்கத்திற்கு முரணானது, தடுத்து நிறுத்துங்கள்" என்று துணிச்சலாகக் கடிதம் எழுதியவர் இமாம் நவவி. சுல்தான் இவரை நாடு கடத்தியபோதும், அவர் தன் நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை.

வரலாற்றில் எத்தனையோ அறிஞர்கள் நூல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் இமாம் நவவியின் நூல்களுக்கு மட்டும் எப்படி இந்த அளவு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்தது? அறிஞர்கள் சொல்கிறார்கள்: "அது அவரிடம் இருந்த இக்லாஸ் (பகட்டில்லாத தூய்மையான எண்ணம்). அவர் புகழுக்காகவோ, பணத்துக்காகவோ எழுதவில்லை. அல்லாஹ்வுக்காகவே எழுதினார். அதனால்தான் அல்லாஹ் அவரது எழுத்துக்களை உலக மக்களின் நெஞ்சங்களில் பதிய வைத்துவிட்டான்."

தனது 45-வது வயதில், ஹிஜ்ரி 676-ம் ஆண்டு, தனது சொந்த ஊரான நவாவிலேயே நோயுற்று இமாம் நவவி மரணமடைந்தார். அவர் மரணித்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த டமாஸ்கஸ் நகரமும் கண்ணீரில் மூழ்கியது. நாம் எவ்வளவோ நேரங்களை வீணடிக்கிறோம். ஆனால், இமாம் நவவி தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்று பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் 45 வயதில் மரணித்தாலும், இன்றுவரை உலகில் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பள்ளியில் "அன் அபீ ஹுரைரத (ரலி) கால... கால ரசூலுல்லாஹி (ஸல்)..." என்று 'ரியாலுஸ் ஸாலிஹீன்' வாசிக்கப்படும்போதெல்லாம், அதற்கான நன்மைகள் இமாம் நவவியின் பட்டோலையில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamNawawi #RiyadUsSaliheen #FortyHadith #SahihMuslim #Damascus #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Sunday, February 22, 2026

ஜாமிஉத் திர்மிதீ


ஹதீஸ் கிரந்தங்களிலே எனக்கு மிக மிக விருப்பமான ஒரு கிதாப் பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். அது தான் ஜாமிஉத் திர்மிதீ. சிலர் இதனை சுனன் (மார்க்க சட்டங்களை உள்ளடக்கிய தொகுப்பு) என்பர். ஆனால் இது ஜாமிஉ (பல்துறை செய்திகளை கொண்ட தொகுப்பு) என்பதே சரி.

சுனன் அபூதாவூத் நூலைச் சட்டவியலின் திறவுகோல் என்று பார்த்தோம். ஆனால், திர்மிதீ நூலோ முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சுவாரஸ்யமான ஒரு பரிமாணத்தைக் கொண்டது. ஹதீஸ் கலையையும், ஒப்பீட்டுச் சட்டவியலையும் (Comparative Fiqh) ஒரே நேர்கோட்டில் இணைக்கும் ஒரு பிரம்மாண்டமான பாலம்தான் இந்த நூல். வாருங்கள், இதன் ஆழத்தை சற்றே சுவைப்போம்.

இமாம் முஹம்மது இப்னு ஈஸா அத்-திர்மிதீ (ரஹ்). ஹிஜ்ரி 209-ல் உஸ்பெகிஸ்தானில் உள்ள 'திர்மித்' (Termez) என்ற ஊரில் பிறந்த இவர்கள், ஹதீஸ் கலையின் சக்கரவர்த்தியான இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் மிகச் சிறந்த மாணவர். தனது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் பார்வையை இழந்த இந்த மாமேதை, தனது அறிவுக் கூர்மையால் உலகிற்கே ஒளியூட்டினார்.

பொதுவாக ஹதீஸ் நூல்களை பல வகைகளாகப் பிரிப்பார்கள். சட்டங்களை மட்டும் பேசினால் அது 'சுனன்'. ஆனால், அகீதா (நம்பிக்கை), சட்டங்கள், வரலாறு, தப்ஸீர், நற்பண்புகள், மறுமை என அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கிய நூல்களுக்கே 'ஜாமிஉ' என்று பெயர். அந்த வகையில் இது ஒரு முழுமையான தொகுப்பு.

ஹதீஸ் கலை மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் திர்மிதீ ஏன் ஒரு வழிகாட்டி என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். 3891 ஹதீஸ்களை (சில பதிப்புகளில் எண் எண்ணிக்கை மாறலாம்) பல விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

ஹதீஸின் தரத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தல். ஒரு ஹதீஸைப் பதிவு செய்தவுடன் இமாம் திர்மிதீ அவர்கள் சும்மா கடந்து சென்றுவிட மாட்டார்கள். உடனே, "இந்த ஹதீஸ் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது), ஹஸன் (அழகானது), அல்லது ளயீஃப் (பலவீனமானது)" என்று அதன் தரத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துவிடுவார்கள். 'ஹஸன்' என்ற சொற்பிரயோகத்தை ஹதீஸ் கலையில் பிரபலப்படுத்தியதே இவர்தான்.
 
இதே தலைப்பில் வேறு யார் பேசியுள்ளார்கள்? (வாஃபில் பாப்).ஒரு தலைப்பில் ஒரு ஹதீஸைப் பதிவு செய்த பின்பு, இதே கருத்தில் உமர், அலி, ஆயிஷா (ரழி) போன்ற பிற நபித்தோழர்களிடமிருந்தும் ஹதீஸ்கள் வந்துள்ளன" என சுருக்கமாகப் பட்டியலிடுவார். விரிவான ஆய்வுக்கு இது மிகப்பெரிய திறவுகோல்!

சட்டமேதைகளின் கருத்து வேறுபாடுகள். இதுதான் இந்நூலின் மாபெரும் உச்சம். ஒரு ஹதீஸைக் கூறிவிட்டு, இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாம் ஷாஃபிஈ, இமாம் அஹ்மத், இமாம் இஸ்ஹாக் ஆகியோர் என்ன சட்டம் வகுத்தார்கள்? ஸஹாபாக்களின் நிலைப்பாடு என்ன? என்பதை ஒப்பீட்டு ஆய்வாக (Comparative Fiqh) அழகாகப் பதிவு செய்திருப்பார்.

தனது நூலின் சிறப்பைப் பற்றி இமாம் திர்மிதீ அவர்களே கூறும் ஒரு புகழ்பெற்ற வார்த்தை உண்டு:
யார் வீட்டில் இந்த நூல் இருக்கிறதோ, அவர் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போன்றது.

வரலாற்றையும், மார்க்கச் சட்டங்களையும், அவை தோற்றம் பெற்ற பின்னணியையும் ஆழமாக அறிய முற்படும் ஒவ்வொரு அறிவார்ந்த சமூகமும் படிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு ஜாமிஉத் திர்மிதீ. சமூக விமர்சனங்களுக்கும், சிந்தனைத் தெளிவுக்கும் இந்த மூல ஆதாரங்களை நோக்கி நாம் திரும்புவது காலத்தின் கட்டாயம். இந்த வரலாற்றுச் சுவடுகள் உங்கள் சிந்தனைக்குத் தீனியிட்டிருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். இன்ஷா அல்லாஹ், அறிவார்ந்த தேடல் தொடரும்.
அன்புடன்,

- Abdullah Ibnu Naseer

Saturday, February 21, 2026

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


ஒரு மனிதரை எவ்வளவு ஆழமாக நேசிக்க முடியும்? அவர் உடுத்திய ஆடை போல உடுத்தலாம், அவர் பேசியதைப் போலப் பேசலாம். ஆனால், அவர் நடந்து சென்ற பாதையில், அவர் எந்த இடத்தில் தன் வாகனத்தைத் திருப்பினாரோ, அதே இடத்தில் தன் வாகனத்தையும் திருப்பி, அவர் எந்த மரத்தடியில் இளைப்பாறினாரோ, அதே மரத்தடியில் தானும் இளைப்பாறும் அளவுக்கு ஒருவரால் காதலிக்க முடியுமா?

வரலாற்றில் அப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார்! அவர் தான் இஸ்லாமிய உம்மத்தின் ஈடு இணையற்ற அறிஞர், அண்ணலாரின் அச்சுப் பிசகாத பிரதிபலிப்பு... அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
கம்பீரத்தின் மறுஉருவமான உமர் (ரலி) அவர்களின் அருமைப் புதல்வர் இவர். ஆனால், தந்தையின் நிழலில் ஒண்டிக் கொள்ளாமல், தன் அறிவாலும், சுன்னாவின் மீதான வெறித்தனமான காதலாலும் வரலாற்றில் தனக்கென ஒரு தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினாலே, சுன்னாவைப் பின்பற்றுவதில் அவருக்கு இருந்த அசாத்திய உறுதிதான் முதலில் நினைவுக்கு வரும். ஒருமுறை அவர் பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். திடீரென ஒரு இடத்தில் தன் ஒட்டகத்தை வட்டமடிக்கச் செய்தார். எந்தக் காரணமும் இல்லாமல் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பல வருடங்களுக்கு முன் இதே இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகம் இப்படி வட்டமடித்ததை நான் பார்த்தேன். அது ஏன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நபிகளார் செய்ததை நானும் செய்கிறேன் என்றார். பயணத்தின் நடுவே ஒரு குறிப்பிட்ட மரத்தைப் பார்த்தால், அதன் கீழே சென்று சிறிது நேரம் தூங்குவார். ஏன் இங்கே படுக்கிறீர்கள்? என்றால், ஒருமுறை நபிகளார் இங்கே தூங்கினார்கள் என்பார். அந்த மரம் பட்டுப்போகாமல் இருக்க, தன் கையாலேயே அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். நபிகளார் மக்காவில் எந்த இடத்தில் தொழுதார்களோ, அதே இடத்தில் ஒரு சென்டிமீட்டர் கூட மாறாமல் தன் பாதங்களை வைத்துத் தொழுவார்.

இன்று நாம் அறிவியலையும் லாஜிக்குகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்னு உமரின் லாஜிக் ஒன்றே ஒன்றுதான் என் உயிரினும் மேலானவர் இதைச் செய்தார், அதனால் நான் செய்கிறேன்!

சுன்னாவின் மீது காதல் இருந்தால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஞானமும் வேண்டும். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பிறகு அதிக ஹதீஸ்களை (2,630) அறிவித்த இரண்டாவது மாபெரும் அறிஞர். இவ்வளவு பெரிய மேதையாக இருந்தும், ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுப்பதில் அவர் காட்டிய எச்சரிக்கை சிலிர்க்க வைக்கும். ஒருமுறை அவரிடம் ஒருவர் வந்து ஒரு மார்க்கக் கேள்வியைக் கேட்டார். இப்னு உமர் (ரலி) சாதாரணமாக, எனக்குத் தெரியாது (அல்லாஹு அஃலம்) என்று சொல்லிவிட்டார். வந்தவர் ஆச்சரியத்துடன், நீங்கள் உமரின் மகன்! மிகப் பெரிய அறிஞர்! உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர், ஆம், எனக்குத் தெரியாது என்று சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. என் முதுகை நரகத்திற்கான பாலமாக ஆக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை! என்றார்.

அரை மணி நேர யூடியூப் வீடியோவைப் பார்த்துவிட்டு, இணையத்தில் முஃப்திகளாக மாறி ஃபத்வா கொடுக்கும் இன்றைய தலைமுறைக்கு இதைவிடப் பெரிய செருப்படி இருக்க முடியாது!

உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹீதான மரணத்திற்குப் பிறகு, இஸ்லாமிய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிளந்தது. அலி (ரலி) ஒரு பக்கமும், முஆவியா (ரலி) மறுபக்கமும் நின்றார்கள் (சிஃப்பீன், ஜமல் போர்கள்).  பலர் அவரிடம் வந்து, நீங்கள் உமரின் வாரிசு, உங்களிடம் எல்லாத் தகுதியும் இருக்கிறது. நீங்களே அடுத்த கலீஃபாவாக (ஜனாதிபதியாக) வந்துவிடுங்கள்" என்று கெஞ்சினார்கள். ஆனால் அவர் அத்தனை அதிகாரங்களையும் தூக்கி எறிந்தார். என் காரணத்தால் ஒரு முஸ்லிமின் மூக்கில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் சிந்துவதை விட, இந்த ஒட்டுமொத்த உலகமும் அழிந்து போவது எனக்கு மேல்!" என்று கூறி, எந்தப் பக்கமும் சாராமல், அதிகாரத்தை விடத் தன் மார்க்கமே பெரிது என்று நடுநிலை வகித்தார். தான் கொல்லப்படும் வரை (ஆம் இப்னு உமர் இயற்கை மரணமடையவில்லை. ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப்பின் கட்டளையின் பேரில் விஷம் தோய்ந்த ஈட்டி அவரின் கால்களில் குத்தப்பட்டது. இதனால் நோய்வாய்ப்பட்டே இப்னு உமர் இறந்தார்.) 
இந்த கொள்கையில் உறுதியாகவே இருந்தார். 

எண்பத்து நான்கு (84) ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்தார். அவர் பார்த்த சாம்ராஜ்யங்கள் பல. அவர் காலடியில் கொட்டப்பட்ட செல்வங்கள் பல. ஆனால், அவர் இறந்தபோது ஒரு சாதாரண மனிதராக, நபிகளார் எப்படி வாழ்ந்து காட்டினாரோ, அதே எளிமையோடு விடைபெற்றார். இன்றைய காலத்தில் சுன்னா என்றால் வெறும் தாடி வைப்பதும், ஆடையைக் கரண்டைக்கு மேல் உடுத்துவதும் மட்டும்தான் என்று நாம் சுருக்கிவிட்டோம். ஆனால், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையைப் படித்தால் புரியும்... சுன்னா என்பது வெறும் தோற்றத்தில் மட்டும் இருப்பதில்லை. அது ரத்தத்தில் கலக்க வேண்டிய ஒரு வாழ்க்கை முறை! அந்த நடமாடும் சுன்னாவோடு, நம்மையும் இறைவன் சுவர்க்கத்தில் ஒன்றிணைப்பானாக! ஆமீன்.

- ✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbdullahIbnUmar #Sunnah #Sacrifice #AbdullahIbnuNaseerWriteups

இமாம் தஹபி


தஹப் என்றால் அரபு மொழியில் தங்கம் என்று பொருள். இமாம் தஹபியின் தந்தை ஒரு பொற்கொல்லர். அவர் தங்கத்தை உரசிப் பார்த்து தரம் பிரிப்பார். ஆனால், அவரது மகனோ ஹதீஸ் அறிவிப்பாளர்களை உரசிப் பார்த்து, "இவர் தங்கம் போன்றவர், இவர் தகரம் போன்றவர்" என்று தரம் பிரித்தார்! அவரின் சிறப்பே பெயரிலும் தங்கம்; அவரின் எழுத்துக்களும் தங்கம்!

1. பிறப்பும் கல்வியும் (டமாஸ்கஸின் மாணிக்கம்)
பெயர்: முஹம்மது பின் அஹ்மத் பின் உஸ்மான்.
சிறப்புப் பெயர்: ஷம்ஸுத்தீன் (மார்க்கத்தின் சூரியன்), அத்-தஹபீ
பிறப்பு: ஹிஜ்ரி 673-ம் ஆண்டு, சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பிறந்தார்.
கல்வி: தனது 18-வது வயதிலேயே ஹதீஸ் கலையில் ஆழமாகக் காலடி வைத்தார். சிரியா, எகிப்து, ஹிஜாஸ் எனப் பயணம் செய்து சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் கல்வி பயின்றார்.

இமாம் தஹபி வாழ்ந்த காலம் இஸ்லாமிய அறிவுலகின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. அப்போது டமாஸ்கஸில் மூன்று மாபெரும் தூண்கள் இருந்தார்கள்.

இமாம் இப்னு தைமியா (மாபெரும் சிந்தனையாளர், மார்க்க அறிஞர்).
இமாம் அல்-மிஸ்ஸி (ஹதீஸ் கலை மாமேதை).
இமாம் தஹபி (ஹதீஸ் மற்றும் வரலாற்றுத் துறை நாயகன்).

இந்த மூவரும் சமகாலத்தவர்கள், நெருங்கிய நண்பர்கள். இப்னு தைமியாவின் சிந்தனைத் தாக்கமும், அல்-மிஸ்ஸியின் ஹதீஸ் ஆய்வுத் தாக்கமும் தஹபியிடம் பெருமளவு காணப்பட்டது என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இமாம் தஹபி ஒரு நடமாடும் நூலகம் என்று கூறலாம். அவர் எழுதிய நூற்களின் பட்டியலைப் பார்த்தாலே தலைசுற்றும். ஹதீஸ் மற்றும் வரலாற்றுத் துறையில் அவர் படைத்த முக்கிய நூற்கள்:

தாரீக் அல்-இஸ்லாம் (இஸ்லாமிய வரலாறு):
இது இவரின் பிரம்மாண்டமான படைப்பு. இஸ்லாமிய வரலாற்றை நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல், தன் காலம் (ஹிஜ்ரி 700-கள்) வரை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். சுமார் 50-க்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட மாபெரும் கலைக்களஞ்சியம் இது.

சியர் அஃலாமின் நுபுலா: அறிஞர்கள், ஆட்சியாளர்கள், இமாம்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் அற்புத நூல். மொத்தம் 20-க்கும் மேற்பட்ட பாகங்கள். இன்று நாம் இமாம்களைப் பற்றிப் பேசும் பெரும்பாலான தகவல்கள் இந்த நூலிலிருந்து பெறப்பட்டவைதான். ஒருவரைப் பற்றி விவரிக்கும்போது அவரது நிறைகுறைகளை மிக அழகாக அலசுவார்.

மீஸானுல் இஃதிதால் (நீதத்தின் தராசு): ஹதீஸ் கலையில் இது ஒரு அணு ஆயுதம்! ஹதீஸ்களை அறிவித்த பலவீனமான" அறிவிப்பாளர்களைப் பற்றி மட்டும் அலசும் நூல் இது. சுமார் 9,000-க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்களை இதில் தோலுரித்துக் காட்டியுள்ளார். இந்த நூல் இல்லாமல் ஹதீஸ் விமர்சனக் கலையை எவரும் முழுமையாகப் படிக்க முடியாது.

தத்கிரத் அல்-ஹுஃப்பாத்: ஹதீஸ்களை மனனம் செய்த மாபெரும் இமாம்களின் (ஹாபிழ்கள்) வாழ்க்கை வரலாற்றை மட்டும் குறிக்கும் தனித்துவமான நூல்.

அல்-கபாயிர் (பெரும் பாவங்கள்): இது பாமர மக்களுக்காக அவர் எழுதிய நூல். இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பெரும் பாவங்கள் என்னென்ன என்பதை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் மிக எளிமையாக விளக்கியுள்ளார். இன்றும் உலகெங்கும் அதிகம் வாசிக்கப்படும் நூல் இது.

4. முஸ்தத்ரக்கின் அறுவை சிகிச்சை (தல்ஹீஸுல் முஸ்தத்ரக்) சென்ற பதிவுகளில் ஒன்றில் இமாம் ஹாகிம் எழுதிய 'முஸ்தத்ரக்' நூலைப் பற்றிப் பார்த்தோம். அதில் அவர் பலவீனமான ஹதீஸ்களை எல்லாம் 'ஸஹீஹ்' என்று தவறாகக் கூறியிருந்தார்.
அந்த நூலை முழுமையாக 'எக்ஸ்-ரே' எடுத்து, "இது ஸஹீஹ் அல்ல, இது இட்டுக்கட்டப்பட்டது (மவ்ளூ)" என்று இமாம் ஹாகிமின் தவறுகளைத் திருத்தி எழுதியவர்தான் இமாம் தஹபி. தஹபியின் இந்தச் சுருக்கம் இல்லையென்றால், இன்று முஸ்தத்ரக் நூல் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இமாம் தஹபியின் ஆகச்சிறந்த பண்பு அவரது நேர்மை. வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்தவர்களைப் புகழ்வார்கள், பிடிக்காதவர்களை மட்டம் தட்டுவார்கள். ஆனால் தஹபி ஒரு உண்மையான தராசு போன்றவர். தனக்குக் கொள்கை ரீதியாக முரண்பட்ட அறிஞர்களைப் பற்றி எழுதும்போது கூட, அவர்களின் கல்வி ஞானத்தைப் பாராட்டுவார். அதேசமயம், தனது சொந்த ஆசிரியராகவே (உ-ம்: இப்னு தைமியா) இருந்தாலும், அவரிடம் உள்ள சில கடுமைகளை விமர்சிக்கவும் அவர் தயங்கியதில்லை. சத்தியம் மட்டுமே அவருக்கு முக்கியமாக இருந்தது.

தனது வாழ்நாள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்கங்களைப் படித்து, எழுதிய அந்த மாமேதையின் கண்கள், அவரின் இறுதிக்காலத்தில் (ஹிஜ்ரி 741-ல்) பார்வையை இழந்தன. அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகள் பார்வையற்ற நிலையிலேயே மாணவர்களுக்குப் பாடம் போதித்தார்.
இறுதியாக, ஹிஜ்ரி 748-ம் ஆண்டு டமாஸ்கஸ் மண்ணில் அந்தப் பொன்மகன் மரணமடைந்தார்.

ஹதீஸ் கலை என்பது வெறும் செய்திகளைச் சுமப்பதல்ல. அச்செய்திகளைச் சுமந்த மனிதர்களின் நாடித் துடிப்பை அறிவது. அந்த மனிதர்களின் நாடித் துடிப்பை மிகத் துல்லியமாக அளந்து சொன்ன 'ஸ்கேனிங் மெஷின்' தான் இமாம் தஹபி! அவர் விட்டுச்சென்ற அந்த 'தராசு' இன்றும் நீதத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamDhahabi #SiyarAalamAlNubala #MizanAlItidal #HadithCritic #Damascus #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

சுனன் அபூதாவூத்


நான் வாங்கிய முதல் சுனன் ஹதீஸ் கிதாப்! ஆம் அது சுனன் அபூதாவூத். 2018 இல் செப்டம்பர் அல்லது அக்டோபர் காலப்பகுதியில் (எந்த மாதம் என்பதை மறந்துவிட்டேன். என் 15வது வயதில்) வாங்கினேன். 

அந்த காலத்தில் தான் சுனன், ஜாமிஉ, முஸ்னத் வகையறாக்கள் பற்றியும் அறிந்து வைத்திருந்தேன். எனவே சுனன் பிரிவில் முதலாவதாக எழுதப்பட்ட அபூதாவூத் எனக்கு விருப்பமான கிரந்தமாக மாறியிருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. 

(இன்ஷா அல்லாஹ் சுனன், ஜாமிஉ, முஸ்னத் அதே போல முதவாதிர், ஸஹீஹ், ஹசன் பற்றியும் நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்) 

இனி இன்று நூலறிமுகம் தொடரில் சுனன் அபூதாவூத் நூலை பற்றி பார்ப்போம். 

சுனன் அபூதாவூத் - இஸ்லாமியச் சட்டவியலின் (ஃபிக்ஹ்) திறவுகோல் எனலாம். வரலாற்றையும், சமூக நிகழ்வுகளையும் நாம் ஆழமாகப் படிக்கும்போது, நமக்கு வழிகாட்டும் மிக முக்கியமான அடிப்படைகள் ஹதீஸ் கலைப் படைப்புகள். எனது பைதுல்-ஹிக்மா நூலகத்தில் உள்ள நூல்களைப் புரட்டும்போதெல்லாம், என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு பிரம்மாண்டமான தொகுப்புதான் சுனன் அபூதாவூத். இஸ்லாமியச் சட்டங்கள் எவ்வாறு ஹதீஸ்களிலிருந்து பெறப்பட்டன என்ற வரலாற்றைத் தேடும் எந்தவொரு ஆய்வாளனுக்கும், இந்த நூல் ஒரு மாபெரும் கடல் போன்றது. வாருங்கள், இந்த நூலின் சிறப்புகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த நூலை எழுதிய இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்களின் முழுப்பெயர் சுலைமான் இப்னு அல்-அஷ்அத் அஸ்-ஸிஜிஸ்தானி. ஹிஜ்ரி 202-ல் சிஜிஸ்தானில் பிறந்த இவர்கள், ஹதீஸ்களைத் தேடி மக்கா, மதீனா, ஈராக், எகிப்து, சிரியா என அன்றைய இஸ்லாமிய உலகின் பல தேசங்களுக்குப் பயணம் செய்தார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் தலைசிறந்த மாணவர்களில் இவரும் ஒருவர்.

இமாம் அவர்கள் சாதாரணமாக இந்த நூலைத் தொகுத்துவிடவில்லை. தனது வாழ்நாளில் அவர் திரட்டிய சுமார் 5,00,000 (ஐந்து லட்சம்) ஹதீஸ்களைக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தி, வடிகட்டி, அதிலிருந்து வெறும் 4,800 ஹதீஸ்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இந்த சுனன் தொகுப்பை உருவாக்கினார். (என்னிடம் இருக்கும் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ள அபூதாவூத் அரபு & தமிழ் மொழிப்பெயர்ப்பில் 4590 ஹதீஸ்கள் உள்ளன. பொதுவாக அனைத்து ஹதீஸ் கிரந்தங்களும் சந்திக்கும் பிரச்சினையே இது. பிரச்சினை என்பதை விட இது கணக்கிடுபவர்களுக்கு இடையே காணப்படும் சில கூட்டவ் கழித்தலே காரணம்)

சுனன் அபூதாவூத்: மற்ற நூல்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? என்பதை கட்டாயம் அறிய வேண்டும். ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற நூல்கள் வரலாறு, அகீதா (நம்பிக்கை), மறுமை என அனைத்தையும் பேசும். ஆனால், இமாம் அபூதாவூத் அவர்களின் இலக்கு மிகத் தெளிவானது. இஸ்லாமியச் சட்டவியல் (ஃபிக்ஹ்) மற்றும் சட்டத் திட்டங்கள் (அஹ்காம்) சார்ந்த ஹதீஸ்களை மட்டுமே தொகுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாமியச் சட்ட அறிஞர்களுக்கான (ஃபுகஹாக்கள்) தேடலை எளிதாக்கிய கையேடு இது...

நமது தேடலில் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை மற்றும் தரப்பரிசோதனை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். இமாம் அபூதாவூத் அவர்கள் மக்கா வாசிகளுக்கு எழுதிய மடலில் தனது வழிமுறையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்:
 
இதில் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) மற்றும் ஹஸன் (அழகானது) தரத்திலான ஹதீஸ்கள் உள்ளன.
 
ஒரு ஹதீஸில் கடுமையான பலவீனம் இருந்தால், இமாம் அவர்கள் அதனை அங்கேயே சுட்டிக்காட்டி விடுவார்கள்.

சில ஹதீஸ்களைப் பதிவு செய்துவிட்டு அவர் மௌனம் சாதித்திருப்பார். அதை அவர் 'ஸாலிஹ்' (பயன்படுத்தத் தக்கது) என்கிறார்.

(நாம் பின்பற்றும் நுட்பமான ஹதீஸ் கலை விதிகளின்படி, ஆய்வு செய்யும் அறிஞர்கள் இந்த 'மௌனம் சாதிக்கப்பட்ட' ஹதீஸ்களையும் ஆழமாகப் பரிசோதித்தே சட்டங்களை உறுதி செய்வார்கள் என்பதை மார்க்க மாணவர்களாகிய நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்).

தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், வியாபாரம், நீதித்துறை என மிக நேர்த்தியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட சட்டத்தைப் பற்றி தேட விரும்பினால், புகாரியை விட அபூதாவூத்தில் அதனை மிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஏனெனில் புகாரி, முஸ்லிமை விட (இவை உயர்தர ஆய்வாளர்களுக்கு சிறந்தவை) சட்ட தலைப்பிடுதலில் அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, இப்னு மாஜா போன்றோர் எளிமையை கையாண்டுள்ளனர்.

சமூக விமர்சனங்களோ அல்லது வரலாற்று ஆய்வுகளோ... எதுவாக இருந்தாலும், மூல ஆதாரங்களை நோக்கிப் பயணிப்பதே உண்மையான தேடல். அந்த வகையில், இஸ்லாமியச் சட்டங்களின் ஆணிவேரைப் புரிந்துகொள்ள 'சுனன் அபூதாவூத்' ஒரு காலத்தால் அழியாத பொக்கிஷம். உங்கள் கருத்துக்களையும், இந்த நூலில் நீங்கள் வாசித்த உங்களைக் கவர்ந்த குறிப்புகளையும் கீழே பகிருங்கள். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பயனுள்ள ஆய்வுகளைப் பகிர்வோம்.

அன்புடன்,

- Abdullah Ibnu Naseer

Friday, February 20, 2026

இமாம் அபூபக்ர் அல்-பஸ்ஸார்.


பொதுவாக முஸ்னத் வகை நூல்கள் என்றால் என்ன? அபூபக்கர் (ரலி) அறிவித்தவை, உமர் (ரலி) அறிவித்தவை என்று நபித்தோழர்களின் பெயர்களின் கீழ் ஹதீஸ்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் பெரும்பாலும் சரி, தவறு பற்றிய விமர்சனங்கள் இருக்காது. ஒரு தகவல் களஞ்சியம் போல இருக்கும். ஆனால், ஒரு இமாம் வந்தார். நான் ஹதீஸ்களை அடுக்கி மட்டும் வைக்கமாட்டேன். ஒவ்வொரு ஹதீஸையும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் போல வெட்டி ஆராய்ச்சி செய்வேன் என்றார்.

அவர்தான் இமாம் அபூபக்ர் அல்-பஸ்ஸார்.
1. யார் இந்த பஸ்ஸார்?

பெயர்: அஹ்மத் பின் அம்ர் பின் அப்துல் காலிக் அல்-பஸ்ஸார்.
ஊர்: ஈராக்கின் புகழ்பெற்ற 'பஸ்ரா' நகரத்தைச் சேர்ந்தவர்.
காலம்: ஹிஜ்ரி 3-ம் நூற்றாண்டு (இறப்பு: ஹிஜ்ரி 292). இவர் இமாம் நஸாயீ, இமாம் அபூயஃலா ஆகியோரின் சமகாலத்தவர்.
பயணப் பிரியர்: ஹதீஸ் கலைக்காகத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவழித்தவர். ஈராக், ஈரான் (இஸ்ஃபஹான்), சிரியா, எகிப்து, ஹிஜாஸ் (மக்கா-மதீனா) என உலகைச் சுற்றிவிட்டு, இறுதியில் பாலஸ்தீனத்தில் வந்து தங்கினார்.

இவருடைய நூல் முஸ்னத் அல்-பஸ்ஸார் என்று அழைக்கப்பட்டாலும், அறிஞர்கள் இதற்கு வைத்த செல்லப்பெயர் "அல்-பஹ்ருஸ்-ஸக்கார்" (நிரம்பி வழியும் கடல்). ஏன் இந்தப் பெயர்? இது ஒரு சாதாரண முஸ்னத் நூலல்ல. ஒரு ஹதீஸைக் கொண்டு வருவார். கொண்டு வந்துவிட்டு சும்மா இருக்க மாட்டார். இந்த ஹதீஸ் இந்த நபித்தோழர் வழியாக இந்த ஒரு பாதையில் மட்டும்தான் வந்துள்ளது" என்று அதன் தனித்துவத்தைச் சொல்வார். அல்லது, இந்த அறிவிப்பாளர் தொடரில் இவர் இருக்கிறார். அவரைப் பற்றி அறிஞர்களின் கருத்து இது..." என்று விமர்சிப்பார். சில நேரங்களில் அந்த ஹதீஸில் உள்ள மறைமுகமான குறைகளை சுட்டிக்காட்டுவார். சுருக்கமாகச் சொன்னால், இது ஹதீஸ் தொகுப்பு நூல் மட்டுமல்ல; ஒரு ஹதீஸ் ஆய்வுக் கூடம் என்றும் சொல்லலாம். 

இமாம் பஸ்ஸாரின் சிறப்பு இதுதான். அவர் ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "லா நஃலமுஹு இல்லா மின் ஹாதல் வஜ்ஹ்" (இந்தப் பாதையைத் தவிர வேறு வழியில் இந்த ஹதீஸ் வந்ததாக நமக்குத் தெரியவில்லை). இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் எவ்வளவு அரியது (ஃஙரீப்) என்பதை உலகுக்கு உணர்த்தினார். ஹதீஸ் கலையில் "இலல்" (நுண்ணிய குறைகள்) பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவரது நூல் ஒரு தங்கச் சுரங்கம். இமாம் பஸ்ஸார் ஒரு மிகப்பெரிய ஹதீஸ் حافظ (நினைவாற்றல் மிக்கவர்). நேர்மையானவர்.
இருப்பினும், அவர் மீது ஒரு சிறிய விமர்சனமும் உண்டு. அவர் தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் நிறையப் பயணம் செய்தார். பயணங்களின்போது கையில் புத்தகங்கள் இல்லாமல், தனது நினைவாற்றலை மட்டுமே நம்பி ஹதீஸ்களை அறிவித்தார். இதனால், முதுமை மற்றும் பயணக் களைப்பு காரணமாக, சில ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் அவருக்குச் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டன.

இமாம் தாரகுத்னீ கூறுகிறார்: பஸ்ஸார் நேர்மையானவர், நம்பகமானவர். ஆனால் பயணங்களில் புத்தகங்கள் இல்லாததால் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டன. இருப்பினும், அவர் வேண்டுமென்றே தவறு செய்யவில்லை என்பதால், அறிஞர்கள் அவரை ஒரு முக்கிய ஆதாரமாகவே கருதுகிறார்கள்.

தனது வாழ்நாள் முழுவதும் ஹதீஸ் தேடி அலைந்த அந்த ஞானி, இறுதியாக பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் வந்து தங்கினார். அங்கேயே ஹிஜ்ரி 292-ம் ஆண்டு மரணமடைந்தார்.

இமாம் அஹ்மத், இமாம் அபூயஃலா போன்றோர் ஹதீஸ்களைப் பாதுகாக்கும் சேமிப்புக் கிடங்குகளை கட்டினார்கள். ஆனால் இமாம் பஸ்ஸார், அந்தச் சேமிப்புக் கிடங்கில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தரச்சான்றிதழ் வழங்கும் அதிகாரியாகச் செயல்பட்டார். 

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamBazzar #MusnadBazzar #Basra #HadithCritic #Ilal #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Wednesday, February 18, 2026

இமாம் தாரகுத்னீ


ஒரு வைர வியாபாரிக்குத்தான் தெரியும் வைரத்தில் எங்கே கீறல் விழுந்திருக்கிறது என்று. பாமர மக்களுக்கு அது ஜொலிக்கும் கல்லாகத் தெரியும். ஆனால் நிபுணர்களுக்குத்தான் தெரியும் அது போலியா அல்லது உண்மையானதா என்று. ஹதீஸ் உலகில் அப்படிப்பட்ட ஒரு "வைர வியாபாரி" தான் இமாம் தாரகுத்னீ. மற்ற இமாம்கள் "இது ஸஹீஹான ஹதீஸ்" என்று சேகரித்தார்கள்.
ஆனால் இமாம் தாரகுத்னீ, "இந்த ஹதீஸ் பார்ப்பதற்கு ஸஹீஹ் போலத் தெரியும். ஆனால் இதன் மூன்றாவது அறிவிப்பாளருக்கு நினைவாற்றல் குறைவு. எனவே இது பலவீனம்" என்று ஹதீஸை 'எக்ஸ்-ரே' (X-Ray) எடுத்துப் பார்ப்பார்.

இவரைத் தாண்டி எந்த ஹதீஸும் தப்பிக்க முடியாது! யார் இந்த தாரகுத்னீ?

பெயர்: அபுல் ஹஸன் அலீ பின் உமர்.
ஊர்: ஈராக்கின் பக்தாத் நகரில் உள்ள 'தார் அல்-குத்ன்'  என்ற பகுதிக் குடியிருப்பு. (அதனால் தான் தாரகுத்னீ என்று அழைக்கப்படுகிறார்).
காலம்: ஹிஜ்ரி 306 - 385.
சிறப்பு: இவர் ஒரு நடமாடும் நூலகம். சிறுவயதிலேயே ஈராக், ஷாம் (சிரியா), எகிப்து எனப் பயணம் செய்து ஹதீஸ்களை அள்ளி வந்தார்.

இவரின் நினைவாற்றலைக் கண்டு உலகமே மிரண்டது. எகிப்தில் ஒருமுறை ஒரு ஷேக் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். தாரகுத்னீ அதை எழுதிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒருவர், "ஏன் எழுதவில்லை?" என்று கேட்டார். அதற்கு தாரகுத்னீ, "நீங்கள் எழுதியதை விட என் நெஞ்சில் பதிந்தது அதிகம்" என்று சொல்லி, அந்த ஷேக் நடத்திய அத்தனை ஹதீஸ்களையும் வரி பிசகாமல் ஒப்பித்தார்!

இமாம் தாரகுத்னீ எழுதிய நூற்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது இதுதான். ஏன் இது ஸ்பெஷல்?
பொதுவாக 'சுனன்' நூற்களில் (அபூதாவூத், நஸாயீ போன்றவை) சட்டத்திற்குத் தேவையான ஹதீஸ்கள் இருக்கும். ஆனால் தாரகுத்னீயின் பாணி வேறு.
மக்கள் மத்தியில் ஆதாரமாகச் சொல்லப்படும் ஹதீஸ்களை எடுத்து வருவார். பிறகு, "இந்த ஹதீஸ் பலவீனமானது. இதைக் கொண்டு சட்டம் வகுக்கக் கூடாது" என்று அதன் குறைகளைத் தோலுரித்துக் காட்டுவார். இதன் நோக்கம். பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு ஃபத்வா கொடுப்பவர்களை எச்சரிப்பது. ஒவ்வொரு ஹதீஸின் கீழும், அந்த அறிவிப்பாளர் தொடரில் உள்ள சிக்கல்களை ஒரு வக்கீல் போல அலசுவார். இன்று ஹதீஸ் ஆய்வாளர்கள் ஒரு ஹதீஸை ஆய்வு செய்ய வேண்டுமென்றால், முதலில் புரட்டும் நூல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

ஹதீஸ் கலையிலேயே மிகவும் கடினமான துறை 'இலல்' (நுண்ணிய குறைகள்). தாரகுத்னீ எழுதிய "அல்-இலல் அல்-வாரிதா" என்ற நூல், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனை. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நூல் முழுவதையும் அவர் மனப்பாடமாகவே டிக்டேட் செய்தார்! மாணவர்கள் கேட்பார்கள் இமாமே! இந்த ஹதீஸ் பற்றி என்ன சொல்கிறீர்கள்? தாரகுத்னீ புத்தகத்தைப் பார்க்காமலே சொல்வார். "இந்த ஹதீஸை இன்னார் அறிவித்தார். ஆனால் அதில் இன்னார் தவறு செய்தார். சரியான அறிவிப்பு இதுதான்... இப்படி ஆயிரக்கணக்கான ஹதீஸ்களின் நுணுக்கங்களை நினைலிலிருந்தே கொட்டிய அந்த அறிவைக் கண்டு இமாம் தஹபி போன்றவர்களே சிலிர்த்துப் போனார்கள்.

இமாம் புகாரியும், முஸ்லிமும் ஹதீஸ் உலகின் இரு கண்கள். ஆனால், அவர்கள் மனிதர்கள் தானே? அவர்களும் தவறு செய்திருக்கலாம் அல்லவா? என்ற துணிச்சலான கேள்வியை முன்வைத்தவர் தாரகுத்னீ. அவர் "அல்-இஸ்தித்ராக் வத்-ததப்பஃ என்றொரு நூல் எழுதினார். அதில், புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் உள்ள சுமார் 200 ஹதீஸ்களை எடுத்து, "இவற்றில் இந்த இந்தக் குறைகள் உள்ளன" என்று விமர்சித்தார். (பிற்கால அறிஞர்கள் இவரின் விமர்சனங்களில் பலவற்றுக்குப் பதில் அளித்துவிட்டாலும், இவரின் அந்தத் துணிச்சல் ஹதீஸ் கலைக்குக் கிடைத்த ஆரோக்கியமான வளர்ச்சி).

சென்ற பதிவில் பார்த்த இமாம் ஹாகிம் (முஸ்தத்ரக் எழுதியவர்), இவரின் மாணவர்.
ஹாகிம் கூறுகிறார் அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாரகுத்னீயைப் போன்று இன்னொருவரை என் கண்கள் பார்த்ததே இல்லை. அவருக்குப் பிறகு அவருக்கு நிகரானவர் யாருமில்லை.

ஹிஜ்ரி 385-ம் ஆண்டு, பக்தாத் நகரில் அந்த அறிவுச் சூரியன் மறைந்தது. இமாம் தாரகுத்னீ மட்டும் இல்லையென்றால், பலவீனமான செய்திகள் எல்லாம் "வஹீ" (இறைச்செய்தி) என்ற பெயரில் மார்க்கத்திற்குள் நுழைந்திருக்கும். அவர் ஒரு பாதுகாவலர் என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

நாம் இன்று நிம்மதியாக "இது ஸஹீஹ், இது ளயீஃப்" என்று பேசுகிறோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால், இமாம் தாரகுத்னீ போன்றவர்கள் தங்கள் வாழ்நாளையே கரைத்து உருவாக்கிய உழைப்பு இருக்கிறது. கட்டிடம் அழகாக இருக்கிறது என்று ரசிக்கிறோம்; ஆனால் அதன் அஸ்திவாரத்தில் உள்ள விரிசல்களைக் கண்டுபிடித்துச் சொன்ன இன்ஜினியர் இவர்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamDaraqutni #SunanDaraqutni #HadithCritic #Ilal #Baghdad #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups