பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, October 6, 2019

ஹதீஸ் மறுப்பு - 4

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -4)

குர்ஆன் என்பதும் வஹிதான். ஹதீஸ் என்பதும் வஹிதான்.

ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்கிறேன்...

நாம் பார்த்துக் கொண்டிருப்பது "குரானுக்கு ஹதீஸ் முரண்படுமா?" என்ற கேள்வியை மட்டும்தான். இந்த கேள்வியின் விபரீதத்தை உணர்த்துவதற்காக மட்டுமே இதை விரிவாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

குர்ஆன் என்ற வஹியின் மூலமாக ஒரு சட்டம் சொல்லப்படுகிறதென்றால், அந்த சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்டுத்துவது என்பதை ஹதீஸ் என்ற வஹி விரிவாக கூறும்.

"திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்!..." (5:38)

இது குர்ஆன் எனும் வஹியில் உள்ள சட்டம்.

திருட்டு என்றால் என்ன?

"ஒருவரின் உடைமையானதை அவருடைய அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது" என்பதுதான் திருட்டு எனப்படுகிறது.

** LKG படிக்கும் குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் பிறரின் பேனா, பென்சிலை அவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்கு  எடுத்து வருவதும் திருட்டுதான்.

** ஒருவரின் விளைநிலைத்தில் இருந்து அவரது அனுமதியில்லாமல் விளைச்சலை எடுப்பதும் திருட்டுதான்.

** ஒருவரின் வியாபார ஸ்தலத்தில் இருக்கும் பொருட்களை அவருடைய அனுமதியில்லாமல் எடுப்பதும் திருட்டுதான்.

** சாலையில் செல்லும் ஒருவரின் உடைமைகளை பறித்துக் கொண்டு ஓடுவதும் திருட்டுதான்.

** வீட்டின் ஓட்டைப்பிரித்து பொருட்களை அள்ளிச் செல்வதும் திருட்டுதான்.

பென்சில் திருட்டில் ஈடுபட்ட LKG படிக்கும் குழந்தையின் கையையும் வெட்ட வேண்டும், திருட்டையே தொழிலாக்கிக் கொண்ட திருடனின் கையையும் வெட்ட வேண்டும். இது சரியா?

குர்ஆன் எனும் வஹியின்படி அப்படித்தான் அர்த்தம் கிடைக்கிறது. [குர்ஆன் மட்டும் போதும் என்று கூறும் அஹ்லே குர்ஆன் கூட்டத்தினர், பென்சில் திருட்டிற்கும் கையை வெட்டத்தான் வேண்டும். செய்வார்களா???]

கைவெட்டு என்ற குர்ஆனின் இந்த சட்டத்தை நபி(ஸல்) அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள்?

"என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்" என்று கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள். திருட்டிற்கான தண்டனையில் சமரசம் என்பது  அன்னாரின் நடைமுறையில் இல்லை.

ஆயினும், திருடப்பட்ட பொருளின் மதிப்பு தீனார் எனும் தங்க நாணயத்தின் கால் பகுதிக்கு மேல் இருந்தால்தான் கைவெட்டு கூடும் என்றார்கள்.

இந்த ஹதீஸ் இருப்பதால்தான் பென்சில் திருட்டிற்கெல்லாம் கைவெட்டப்படுவதில்லை.

குர்ஆனில் கூறப்பட்ட ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கூடுதல் விளக்கமாகவே நபிகளாரின் நடைமுறை இருந்திருக்கிறது.

அதாவது, குர்ஆன் என்ற வஹியின் கூடுதல் விளக்கம்தான் ஹதீஸ் என்ற வஹி. குர்ஆனுக்கு கூடுதல் விளக்கமாகத்தான் ஹதீஸ் இருக்கும்.

ரைட். விஷயத்துக்கு வருவோம்...

TNTJ வின் கொள்கைபடி இந்த கைவெட்டு தண்டனை தொடர்பான ஹதீஸ்களை மறுக்கவும் முடியும்.

திருடப்பட்ட பொருளின் கைவெட்டுக்குரிய மதிப்பு எது என்பதில் ஒரு தெளிவான வரையறையை ஹதீஸ்களில் காணமுடியவில்லை.

** தீனாரின் கால் பகுதி
** மூன்று திர்ஹம்
** தோல் கேடயம்
** தோல் கவசம்
** தலைக் கவசம்
** கயிறு

என பல்வேறு அளவில் பொருளின் மதிப்பு கூறப்பட்டு இருக்கிறது.

மேலும், சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு உரியது. அதில் யாருக்கும் அதிகாரம் இல்லை. அதை பின்வரும் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

"அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை..." (25:2)

"அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்''...(18:26)

"(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை..." (3:128)

இந்த வசனங்களுக்கு முரணாக அல்லாஹ் இயற்றிய சட்டத்தில் தன்னுடைய கருத்தை நுழைப்பதற்கு நபிகளார் விரும்பமாட்டார்கள் அதனால், அல்லாஹ்வின் அதிகாரத்தில் கையை வைக்கும் இந்த ஹதீஸ்களை நபி(ஸல்) அவர்கள் அறிவித்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூற முடியும்.

ஆகவே, கைவெட்டு தண்டனையில் கூறப்படும் பொருட்களின் மதிப்பு தொடர்பான அனைத்து ஹதீஸ்களும் குர்ஆனுக்கு முரண்படுகின்றன (நவூதுபில்லாஹ்).

மேற்கண்ட ஹதீஸ்களை மறுத்துவிட்டால் பென்சில் திருட்டிற்கும் கைவெட்டு தண்டனை என்ற முடிவிற்குத்தான் TNTJ வரமுடியும். [இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதால் பென்சில் திருட்டிற்கும் கைவெட்டு உண்டு என்று கூறினாலும் பிரச்சினை இல்லைதானோ!!!]

குர்ஆன் என்ற வஹியுடன் ஹதீஸ் என்ற வஹியை முரண்படுத்தினால் இறைச் சட்டங்களும் கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடும் என்பதற்கு திருட்டுக்கு கைவெட்டு தண்டனையே ஒரு பெரிய உதாரணம்தான்.

"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா" என்று TNTJ வால் கேட்கப்பட்டு இறுதியில் அது ஏற்படுத்திய ஒரு மோசமானை விளைவை இங்கு பதிய விரும்புகிறேன்.

TNTJ வில் இருக்கும் பலருடனும் நட்பு ரீதியினாலான என்னுடைய தொடர்பை அல்லாஹ் தொடரச்செய்திருக்கிறான். அந்த சகோதரர்களுள் ஒருவர் என்னிடம் ஒரு ஹதீஸை அனுப்பி அது வஹியே அல்ல என்றும் அதை நபி(ஸல்) அவர்களின் பெயரில் யாரோ பொய்யுரைத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

உம்மு சுலைம்(ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா? என்ற கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளிப்பது அவளின் மீது கடமைதான்.)' என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தவாறு, 'பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு எவ்வாறு குழந்தை (தாயின்) சாயலில் பிறக்கிறது?' என்று கேட்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி : 6091)

இதே ஹதீஸ் கூடுதல் வார்த்தைகளுடன் ஸஹீஹ் முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கிறது. அந்த கூடுதல் வார்த்தைகள்...

பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 521)

"கடமையான குளிப்பு" தொடர்பான சட்டத்தை கூறும் ஹதீஸில் குழந்தையின் சாயல் தொடர்பான செய்தியும் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது.

"குழந்தையின் சாயல்" தொடர்பான இந்த செய்தியை காரணம்காட்டி இது வஹியே அல்ல என்றார் அந்த சகோதரர்.

குழந்தையின் சாயலுக்கும் பெண்னின் இச்சை நீருக்கும் சம்பந்தமேயில்லை என்று பலபக்க கட்டுரை எழுதி அதை விஞ்ஞான பூர்வமாக அனுகியிருந்தார். மருத்துவ விஞ்ஞானிகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த, பல செய்திகளை இணையத்தில் தேடி தொகுத்து வைத்திருந்தார்.

"குந்தையின் சாயல்" தொடர்பான ஹதீஸை TNTJ மறுத்து விட்டதா என்று அவரிடம் கேட்டேன்.

"இல்லை" என்றார். மேலும், அது தன்னுடைய ஆய்வு என்றும் கூறினார்.

குழந்தையின் சாயல் தொடர்பாக குர்ஆனில் ஏதாவது வசனம் இருந்து அந்த வசனத்திற்கு மாற்றமாக இந்த ஹதீஸ் இருக்கிறதோ? என்றும் அவரிடம் கேட்டேன்.

குழந்தையின் சாயல் தொடர்பாக வசனம் ஏதும் குர்ஆனில் இல்லை என்றும், விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது என்ற காரணத்தால்தான் இந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அப்போது, குர்ஆனுக்கு முரண்பாடாக இருந்தால்தானே அந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்று TNTJ கூறுகிறது. குர்ஆனின் வசனங்களுடன் மோதாத ஒரு ஹதீஸை "விஞ்ஞானத்துடன் முரண்படுகிறது" என்று கூறி அந்த ஹதீஸை மறுக்கச் சொல்வது நியாயமா என்றும் கேட்டேன்.

அப்போதுதான், அவர் மடை திறந்த வெள்ளமாக வார்த்தைகளை அள்ளி வீசத் தொடங்கினார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

part - 3

https://m.facebook.com/story.php?story_fbid=746615352428269&id=100012394330588

No comments:

Post a Comment