மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்
உலகத்தில் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்களில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற தூதர்கள் தாவூத் (அலை) அவர்களும், அவரது மகன் சுலைமான் (அலை) அவர்களும் ஆவர். அவ்விரு தூதர்களுக்கும் அளித்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். ‘நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று அவ்விருவரும் கூறினர்.
அல்குர்ஆன் 27:15
பறவைகளின் மொழி அறிந்தவர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். ‘மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்’ என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 27:16
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்’ பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.
‘அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன் அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்’ (என்றும் கூறினார்).
(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. ‘உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’ என்று கூறியது.
‘நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது’
அல்குர்ஆன் 27:20-23
ஜின்களின் அரசர்
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
அல்குர்ஆன் 27:17
ஜின்களின் பணிகள்
தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.
அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. ‘தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்’ (என்று கூறினோம்.)
அல்குர்ஆன் 34:12, 13
காற்று ராஜா
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அல்குர்ஆன் 34:12
வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.
அல்குர்ஆன் 21:81
அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.
அல்குர்ஆன் 38:36
எறும்புகளின் பேச்சையும் அறிபவர்
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது’ என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். அல்குர்ஆன் 27:18, 19
செம்பு ஊற்று
அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம்.
அல்குர்ஆன் 34:12
இம்மாபெரிய அதிகாரத்தையும் ஆட்சியையும், இறைத் தூதையும் ஒருசேர இணையப் பெற்ற ஒரு பாக்கியமிக்க, பாராண்ட மன்னர் சுலைமான், நான் கடவுள்’ என்று ஒருபோதும் வாதித்ததில்லை. இதோ அவர் எறும்புகளின் பேச்சை ரசித்தவாறு பணிந்து, கனிந்து உதிர்த்த பிரார்த்தனையைப் பாருங்கள்.
‘என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!’ என்றார்.
அல்குர்ஆன் 27:19
இம்மாமன்னரையும் மரணம் தழுவிக் கொண்டது.
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் ‘நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே’ என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.
அல்குர்ஆன் 34:14
இது ஒரு நல்லடியாரின் வாழ்க்கை! ஒரு நபியின் வாழ்க்கை! நல்ல முன்மாதிரியை, நல்ல எடுத்துக்காட்டைக் கொண்டது.
இப்போது ஒரு தீய அடியானைப் பற்றி இங்கு பார்ப்போம். ஆணவ அரசனான அவன் தான் ஃபிர்அவ்ன்! அவனும் தன்னைக் கடவுள் என்று வாதிட்டான்.
(மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான். நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.
அல்குர்ஆன் 79:23-25
அவனை அல்லாஹ் கடலில் மூழ்கடித்து அவனது உடலைப் பாதுகாத்து வைத்துள்ளான். தன்னைக் கடவுள் என்று சொன்னவனின் கதியைப் பாருங்கள் என்று கூறி அதைப் பாடமாக்கி வைத்துள்ளான்.
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:90, 91
போலிக் கடவுளின் உடல் இங்கே! உயிர் எங்கே? அவனது உயிர் என்னிடம் தான் உள்ளது என்று உண்மையான கடவுள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றான்.
ஃபிர்அவ்னாவது ஓர் ஆட்சியாளன். ஆனால் சாய்பாபாவோ சாதாரண குடிமகன் தான். இவர் தன்னைக் கடவுள் என்று கூறியது வெட்கக் கேடு! இவரையும் கடவுளாக பக்தர்கள் நம்புவது ஒரு கேலிக் கூத்து!
No comments:
Post a Comment