பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 31, 2019

மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா?*

⭕ *மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா?*

மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் ரஎனும் பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மார்க்கத்தை அறியாத மக்கள் மவ்லிது ஓதுகின்றனர்.

*மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது. பித்அத் ஆகும்.*

பாடல்களைப் பாடி வழிபடுதல்
பாடல்களைப் பாடி அதன் மூலம் கடவுளை எழுப்பி வழிபடுவதென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதுபோல் கிறித்தவர்களும் பாட்டுப் பாடி கடவுளை வழிபடுவர். பாட்டுப் பாடி வழிபடல், வணங்குதல் என்பது இஸ்லாத்தில் இல்லை. 

ஆனால் இந்த மவ்லிதுவாதிகளோ மவ்லிது என்ற பெயரில் புதுப்புது மெட்டுக்களில் பாட்டுப் பாடி அதை வணக்கம் என்று நினைக்கின்றனர். இதன் மூலம் பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்களாகி விடுகின்றனர்.

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகி விடுகின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத்

மவ்லிது ஓதுவதன் மூலம் பிற மதத்தினருக்கு ஒப்பாகி விடுகின்றனர். மேலும் இஸ்லாத்தில் ஒரு புது வணக்கத்தைப் புகுத்தியவர்களாக, அதாவது பித்அத்தைச் செய்தவர்களாக ஆகின்றனர்.

பித்அத்தும் பறிக்கப்படும் ஷஃபாஅத்தும் மவ்லிது ஓதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் எனும் பரிந்துரை கிடைக்கும் என்று மக்கள் பெருமளவில் நம்புகின்றார்கள். அவர்கள் இந்த நம்பிக்கையைப் புரிந்து கொண்டு மவ்லவிமார்களும் மவ்லிது ஓதினால் மறுமையில் ஷஃபாஅத் கிடைக்கும் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றார்கள்.

ஆனால் உண்மையில் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்காது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் மார்க்கத்தில் பித்அத்துகளைப் புகுத்தி, மாற்றங்களைச் செய்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாபம் தான் கிடைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் அடக்கத்தலத்திற்கு வந்து, "இறை நம்பிக்கை கொண்ட கூட்டத்தின் இல்லத்தாரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்து விடுவோம் (என்று கூறி) நிச்சயமாக நான் நம்முடைய சகோதரர்களை உலகிலேயே கண்டு கொள்ள விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் கிடையாதா'' என்று நபித் தோழர்கள் கேட்டனர். "இன்னும் (உலகில்) உருவாகவில்லையே அவர்கள் தான் நம்முடைய சகோதரர்கள் என்கிறேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
 
உங்களுடைய சமுதாயத்தில் இன்னும் உருவாகாதவர்களை (மறுமையில்) நீங்கள் எப்படித் தெரிந்து கொள்வீர்கள் என்று நபித்தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கன்னங்கருத்த குதிரைகளுக்கிடையில் முகத்திலும், கால்களிலும் வெள்ளை நிறத்தைக் கொண்ட குதிரை ஒருவருக்கு இருந்தால் அவர் அக்குதிரையைத் தெரிந்து கொள்ள மாட்டாரா?'' என்று திருப்பிக் கேட்டார்கள்.

நபித்தோழர்கள், "ஆம்! கண்டு கொள்வார்'' என்று பதில் கூறினார்கள். நிச்சயமாக அந்தச் சகோதரர்கள் உளூவின் காரணமாக முகம் மற்றும் கைகளில் வெண்சுடர் வீச வருவர். (இதன் மூலம் அவர்களை நான் தெரிந்து கொள்வேன்) நான் உங்களுக்கு முன்னதாக நீர் தடாகத்திற்கு வந்து விடுவேன். அறிந்து கொள்ளுங்கள். வழி தடுமாறி வந்த ஒட்டகம் விரட்டப்படுவது போன்று, என்னுடைய தடாகத்தை விட்டும் மக்கள் விரட்டப்படுவர். வாருங்கள் என்று அவர்களை நான் கூப்பிடுவேன். அப்போது, "இவர்கள் உங்களுக்குப் பின்னால் மார்க்கத்தை மாற்றி விட்டார்கள்'' என்று என்னிடம் தெரிவிக்கப்படும். தொலையட்டும்! தொலையட்டும்! என்று நான் கூறி விடுவேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்

மார்க்கத்தில் மவ்லிது போன்ற புதுமையைப் புகுத்தியவர்கள் வழிதடுமாறி வந்த ஒட்டகங்கள் போல் தடாகத்திலிருந்து துரத்தியடிக்கப் படுகின்றார்கள். இப்படி துரத்தியடிக்கப் படுபவர்களுக்கு எப்படி ஷஃபாஅத் கிடைக்கும்? லஃனத் – சாபம் தான் கிடைக்கும். அதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.

செய்திகளில் சிறந் அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவை தான் காரியங்களில் மிகவும் கெட்டவையாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் தான் மிகக் கெட்ட காரியங்களாகும். இந்தக் காரியங்கள் அனைத்துமே வழிகேடுகள். அவை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.

மவ்லிது ஓதுவது நன்மையைப் பெற்றுத் தராது என்பது ஒருபுறமிருக்க நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் மிகப் பெரும் பாவமாகவும் அமைந்துள்ளது.

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்! அவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே கடவுளாகச் சித்தரித்து இயற்றப்பட்ட கவிதைகள் இந்த மவ்லிதுகளில் இடம் பெற்றுள்ளன.

எப்படி ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக அனுப்பப்பட்ட ஈஸா (அலை) அவர்கள் கடவுளாக ஆக்கப்பட்டார்களோ, அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை விட்டு எவ்வாறு அம்மக்கள் வெளியேறினார்களோ அதுபோல் மவ்லிது பக்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் மவ்லிதுகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் கடவுளாக ஆக்கி இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டார்கள். அதாவது மதம் மாறி விட்டார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் தனது பாதையை விட்டும் மாறிச் சென்ற தனது சமுதாயத்திற்கு எதிராக சாட்சி சொல்வது போல் இத்தகையவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் சாட்சியமளிக்கின்றார்கள். இதன் மூலம் இடது பக்கம் இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார்கள். இதையே பின்வரும் ஹதீஸ் காட்டுகின்றது.
நீங்கள் (மறுமை நாளில்) செருப்பு அணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள்.

மறுமை நாளில் முதன்முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் (அலை) ஆவார்கள். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், "இவர்கள் என் தோழர்கள், இவர்கள் என் தோழர்கள்'' என்று கூறுவேன். அப்போது, "நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தங்கள் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள். அப்போது நல்லடியார் (ஈஸா நபியவர்கள்) கூறியதைப் போல், "நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனும் (5:117, 118) இறைவசனத்தைக் கூறுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3349

எனவே இந்த மவ்லிது என்ற பித்அத் மூலம் ஷஃபாஅத்தை இழந்து சாபத்தை அடைவதுடன் நிரந்தர நரகத்திற்குரியவர்களான இடது பக்கவாசிகளுடன் சேர்க்கப்படும் பரிதாப நிலை ஏற்படுகின்றது. எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் மட்டும் வணங்கி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
_என்றும் இறைப்பணியில்..._
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

No comments:

Post a Comment