பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, October 11, 2019

நபிகளார் சந்தித்த உயிரிழப்புகள்

நபிகளார் சந்தித்த உயிரிழப்புகள்

பூகம்பத்தால் 1000க்கும் மேற்பட்டோர் பலி, சுனாமியில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி, இரயில் விபத்தில் 100பேர் பலி, சாலை விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலி, கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு, வெயிலின் கொடுமைக்கு மூவர் பலி, இவைகளெல்லாம் அன்றாடம் செய்தித்தாள்களில் இடம் பெறக்கூடிய செய்திகள்.

இறப்புச் செய்தியை வெளியிடாமல் எந்த நாளும் செய்தித்தாள்கள் வருவதில்லை என்கிற அளவுக்கு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அறிகிறோம். இப்படி உயிரிழப்புகள் நேரிடும் வேளையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கதறல்களையும் உள்ளக் குமுறல்களையும் வார்த்தைகளால் வடிக்க முடிவதில்லை. அதிலும் இறந்தவர் இளம் வயதுடையவராகவோ அல்லது குழந்தைகளாகவோ இருந்து விட்டால் குடும்பத்தார் போடும் கூப்பாட்டிற்கு அளவே இருப்பதில்லை.

ஒருவரின் உறவினரோ குடும்பத்தாரோ உயிரிழக்கின்ற நேரத்தில் துக்கம் தொண்டையை அடைக்கும் போது மனிதர்கள் நெறிதவறி சென்றுவிடுகிறார்கள் வரம்பு கடந்த வார்த்தைகளை கக்குகிறார்கள்

அவர்கள் புலம்புகின்ற வார்த்தைகளில் சில:

‘ஐயோ! இறைவா உனக்கு கண் இல்லையா…? உனக்கு என் தம்பி தான் கிடைத்தானா…? உனக்கு கருணையே இல்லையா…?’ இன்னும் சிலர் இப்படி இறைவனையே சபிக்கின்ற அளவுக்கு வரம்பு கடந்து நடந்து கொள்கிறார்கள். ஆனால் இத்தகைய நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இவ்வுலகத்துக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட மாமனிதர் மனிதருள் மாணிக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதை போதித்துள்ளார்கள். போதித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்க்கையில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படும்போது எப்படி பொறுமையாக இருப்பது என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள்.

இது போன்றநேரங்களில் அவர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதில்லை நெறிதவறி எந்த வார்த்தையையும் கூறியதுமில்லை.

இதோ அவர்கள் சந்தித்த உயிரிழப்புகளில் சில…

மனைவிகளின் மரணம்

கதீஜா (ரலி)

கதீஜா (ரலி) அவர்கள்தான் நபியவர்களின் முதல் மனைவி ஆவார்கள். இவர்கள் நபியவர்களின் அன்பிற்கு பாத்தியமானவராகத் திகழ்ந்தார்கள் இன்னும் இவர்கள் மூலமாகத் தான் நபியவர்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளது. கதீஜா (ரலி) அவர்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்துவிட்டார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செல்வதற்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் மரணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அன்பிற்குரிய மனைவிமார்களின் முதலிடம் அன்னை கதீஜா (ரலி) அவர்களே ஆவார்கள். நபிகளாரின் அன்பிற் குரிய இன்னொரு மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பெறாமைப்படும் அளவிற்கு அவர்கள் மீது அன்பு வைத்திருந்தார்கள் நபிகளார்.

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் (இதர) மனைவிமார்களில் வேறெவரின் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவு கூர்வதை நான் கேட்டு வந்தேன். என்னை நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்து கொள்வதற்கு முன்பே கதீஜா (ரலி) இறந்து விட்டிருந்தார்.

மேலும், முத்து மாளிகை ஒன்று (சொர்க்கத்தில்) கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இன்னும் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில்) சிறிது கதீஜா அவர்களின் தோழிகளிடையே அவர்களுக்குப் போதுமான அளவிற்கு அன்பளிப்பாகப் பங்கிட்டு விடுவது வழக்கம் (இதனாலெல்லாம் எனக்குள் ரோஷம் பிறந்தது.)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (3816)

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்ட தில்லை. நான் (நபி -ஸல்- அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘உலகில் கதீஜாவைத் தவிர வேறெந் தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே’ என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ‘அவர் (புத்திசாலியாக) இருந்தார் (சிறந்த குண முடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது’ என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (3818)

நபிகளார் அவர்கள், அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு மேற்கூறப்பட்ட நபிமொழிகள் சான்று. இத்தனை அன்பு வைத்திருந்தவர்களையும் நபிகளாரிடம் அல்லாஹ் பிரித்துவிட்டான்.

ஜைனப் பின்த் குஸைமா (ரலி)
இவர்களும் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆவார்.

ஹிஜ்ரி மூன்றாமாண்டு ரமளான் மாதம் நபி(ஸல்) அவர்கள் ஜைனப் பின்த் குஸைமா அவர்களை திருமணம் செய்தார்கள் ஹிஜ்ரி 4ம்ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் ஜைனப் மரணித்தார்கள்.

நூல் அல் இஸாபா: 11230

சுமார் எட்டு மாதங்கள் மட்டுமே நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்துள்ளார்கள். அப்போது அவர்களின் வயது முப்பது ஆகும். மற்ற மனைவியருடன் ஒப்பிடும்போது அன்னை ஜைனப் அவர்கள் குறைந்த வயதிலேயே மரணித்து விட்டார்கள்

நபி(ஸல்) அவர்கள் அன்னை ஜைனப் (ரலி) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி பகீஃ என்ற பொதுமைய வாடியில் அடக்கம் செய்தார்கள்.

(தபகாத் இப்னு ஸஅத், பாகம்: 8, பக்கம்: 115)

எனவே நபி(ஸல்) அவர்களின் இரு மனைவிமார்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்துள்ளார்கள்.

மகள்களின் மரணம்

ஜைனப் (ரலி) அவர்களின் மரணம்

நபி(ஸல்) அவர்களுக்கு ஜைனப் என்ற பெயரில் இரு மனைவியும் ஒரு மகளும் இருந்துள்ளார்கள்.

(நபி(ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு தமது பதினெட்டாம் வயதில் மரணித்தார்கள். சின்ன வயதிலேயே அவர்கள் இந்த உலகை விட்டு சென்று விட்டார்கள்

(பைஹகீ: 6834)

நபி(ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரலி) அவர்களை அடக்கம் செய்த போது நாங்கள் அங்கே இருந்தோம் நபி(ஸல்) அவர்கள் தமது இரு கண்களிலும் கண்ணீர் வழிய கப்ரருகே அமர்ந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நூல்கள்: புகாரி 1285, அஹ்மத் 12904

ருக்கையா (ரலி)

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ருக்கையா (ரலி) அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களை கவனித்துக் கொள்ளுமாறும் போரில் பங்கெடுத்த கூலியும் வெற்றிப் பொருட்களில் பங்கும் உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்ருப்போர் முடிந்து திரும்பி வருவதற்கு முன்னரே ருக்கையா(ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள்.

(பைஹகீ: 12ஃ498)

பத்ருபோர் ஹிஜ்ரி 2ம் ஆண்டில் நடைபெற்றது. இந்த ஆண்டில்தான் மரணித்துள்ளார்கள் இவர்களும் மிகச்சிறிய வயதிலேயே மரணித்துள்ளார்கள்.

உம்மு குல்ஸும் (ரலி)

உஸ்மான் (ரலி) அவர்களை மணந்த பிறகு சுமார் ஆறு ஆண்டுகள் உம்மு குல்ஸும் (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள் ஹிஜ்ரி 9ம்ஆண்டு ஷஅபான் மாதத்தில் மரணித்தார்கள்

நபி(ஸல்) அவர்களுக்கு நான்கு மகள்கள்

1. ஜைனப்(ரலி) 2. ருக்கையா(ரலி)

3. உம்மு குல்ஸும் (ரலி) 4. பாத்திமா(ரலி)

இவர்களில் பாத்திமா (ரலி) அவர்களைத்தவிர மற்றஅனைவரும் நபியவர்கள் உயிருடன் இருக்கும்போதே மரணித்துள்ளார்கள்.

பாத்திமா(ரலி) அவர்கள் நபியவர்கள் மரணித்து ஆறுமாதங்கள் கழித்து மரணித்தார்கள்.

மகன்களின் மரணம்

நபி (ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்கள் மூலமாக ஆண் குழந்தைகள் இருந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு கதீஜா அவர்கள் மூலம் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விஷயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை.

அப்துல்லாஹ், தாஹிர், தய்யிப் ஆகியோர் விஷயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இந்த மூன்று பேரும் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் என்று சிலரும் அப்துல்லாஹ் என்ற ஆண் குழந்தைதான் தாஹிர் என்றும் தய்யிப் என்றும் அழைக்கப்பட்டார் என்று சிலரும் கதீஜா அவர்களுக்கு காஸிம் என்கிற ஆண் குழந்தை தவிர வேறு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று சிலரும் கூறுகின்றனர் (அல்லாஹ் மிக அறிந்தவன்).

எப்படியிருப்பினும் நபி (ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்கள் மூலமாக ஆண் குழந்தை இருந்தது திண்ணம்.

காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர் தய்யிப்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னரே மரணித்து விட்டனர்.

நூல்: அல் இஸாபா 5452

இப்ராஹீமின் மரணம்

நபி (ஸல்) அவர்களுக்கு மாரியா மூலமாக இப்ராஹீம் என்கிற ஆண் குழந்தை இருந்துள்ளது.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் இப்ராஹீம் என்ற ஆண் குழந்தையை அன்னை மாரியா (ரலி) அவர்கள் பெற்றெடுத்தார்கள்.

நூல்: ஸஃப்வத்துஸ் ஸஃப்வா, பாகம்: 1, பக்கம் 147

இப்ராஹீம் வளர்க்கப்பட்டு வந்த அபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டுக்கு நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித்தாயின் கணவர் நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முத்தமிட்டார்கள் மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம் அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழிந்தன. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் அல்லாஹ்வின் தூதரே, ‘தாங்களா அழுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவ்ஃ பின் புதல்வரே! இது கருணையில் உள்ளதாகும்’ என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது.

எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் கூற மாட்டோம் இப்ராஹீமே! நிச்சயமாக உனது பிரிவால் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி), நூல்கள்: புகாரி 1303, முஸ்லிம்: 4634

இப்ராஹீம் 16 அல்லது 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தார் பகீஃ என்ற பொது மையவாடியில் நபியவர்களின் மற்ற பெண் பிள்ளைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

நூல்கள்: ஸஃப்வத்துஸ் ஸஃப்வா, பாகம் 1, பக்கம் 148,

முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 6605

பேரப்பிள்ளைகளின் மரணம்

நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப் (ரலி)) தம் மகன் மரணத் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப் பியதோடு, ‘எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!’ என் றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப்போன பழைய தோற்துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. ‘அல்லாஹ் வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?’ எனசஅத் (ரலி) அவர்கள் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் விதைத்த இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா(ரலி), நூல்: புகாரி 1284

ருக்கையாவின் மகன் அப்துல்லாஹ் (ரலி)

நபிகளாரின் மகள் ருக்கையா (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் ஆறு வயதை எட்டியபோது ஒரு சேவல் அவரது முகத்தில் கொத்தியது. அதனால் முகம் வீங்கியது. சிகிச்சைகள் பலனளிக்காமல் ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஜமாதுல் அவ்வல் மாதம் மரணித்தார்கள். அவரது ஜனாஸாவிற்கு நபி(ஸல்) தொழுகை நடத்தினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார்கள்

அல் இஸ்திஆப்: 3343

இவர்கள் மட்டுமல்லாமல் நபிகளாரின் பெரிய தந்தை அபூதாலிப், சிறிய தந்தை ஹம்ஷா மற்றும் வளர்ப்பு மகன் ஸைத் பின் ஹாரிஸா ஆகியோர் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்து விட்டார்கள். அதே போன்று பல சஹாபாக்கள் போரில் கொல்லப்பட்டார்கள்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபிகளாருடைய மனைவிகள் மரணிக்கிறார்கள், மகள்கள் மரணிக்கிறார்கள் மகன்கள் மரணிக்கிறார்கள், பேரப்பிள்ளைகள் மரணிக்கிறார்கள். இன்னும் நெருங்கிய உறவினர்கள் என்று சங்கிலித் தொடராக மரணம் ஏற்படுகின்றது. அதை சிந்தித்து பார்க்கும் போது தொடர்ச்சியாக உயிர்கள் சென்றவண்ணம்      இருந்துள்ளது.

இத்துனை மரணங்களையும் சந்தித்த நபியவர்கள் வரம்பு மீறியதில்லை. மடத்தனமான வார்த்தைகளை பேசியதில்லை மாறாக பொறுமையாக இருக்கின்றார்கள் எதையும் தாங்கும் இதயமாக திகழ்ந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்…

முஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமான வரை நான் கைப்பற்றி பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர்பார்த்திருந்தால் அவனுக்கு என்னிடம் கூலி சொர்க்கத்தை தவிர வேறில்லை.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 6424

எனவே நாமும் இது போன்ற இழப்புகளைச் சந்தித்தால் பொறுமையோடு அதை எதிர் கொள்ள வேண்டும் அப்படிப்பட்ட மனவலிமையை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக!

No comments:

Post a Comment