பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, October 12, 2019

நபிகளார் தேடிய பாதுகாப்பு

நபிகளார் தேடிய பாதுகாப்பு

சுவனம், மறுமையில் சிறந்த அந்தஸ்து, உலகில் செல்வம், குழந்தைச் செல்வம், அறிவு போன்ற பல விஷயங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம். நன்மையான காரியங்களை இறைவனிடம் கேட்பது எவ்வாறு அவசியமானதோ, அதைப் போன்று, சில நேரங்களில் அதை விட முக்கியமாக, பல செயல்களை, பல காரியங்களை விட்டு இறைவனிடம் பாதுகாப்பும் தேடுவது முக்கியமானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு தீமைகளை விட்டும், காரியங்களை விட்டும் இறைவனிம் பாதுகாப்பு தேடினார்கள். அவற்றை குறித்து வரிசையாக காண்போம்.

எனது செயலின் தீமையிலிருந்து

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டிவந்த பிரார்த்தனைகள் குறித்துக் கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து, வ மின் ஷர்ரி மா லம் அஃமல்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் எனப் பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
(முஸ்லிம் 5259)

கப்ருடைய வேதனை மற்றும் பல

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். ‘தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
( புகாரி 832)

கெட்ட சிந்தனையிலிருந்து

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, ‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘உன் இறைவனைப் படைத்தவர் யார்?’ என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும்.
(புகாரி 3276)

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன் அறிந்தவன்.
(திருக்குர்ஆன் 7:200)

ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பிறகு, ‘நான் இக் குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் – என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள்.
( புகாரி 3134)

குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக!
(திருக்குர்ஆன் 16:98)

ஆண் பெண் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் குப்ஸி வல்கபாயிஸி என்று கூறுவார்கள்.

(பொருள்: இறைவா! ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்
(முஸ்லிம் 613)

அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் தண்டனைலிருந்தும் பாதுகாப்பு

ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர்கள் அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
(பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா!
உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.)
(முஸ்லிம் 839 )

நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும்போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம, வ மின் அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.(பொருள்: இறைவா, உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், சவக்குழியின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
( முஸ்லிம் 1030)

பயணத்தின் போது பாதுகாப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் (“அல்லாஹு அக்பர்”) கூறுவார்கள். பிறகு “சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்” என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா,இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: “ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்” (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்)
(முஸ்லிம் 2612)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் “அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்”

என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது.

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
(முஸ்லிம் 5247)

கெட்ட கனவு கண்டால்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஒருவர் கனவு ஒன்றைக் கண்டு அதில் எதையேனும் அவர் வெறுத்தால், அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அப்படிச் செய்தால் அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், அதைப் பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க வேண்டாம். அழகிய கனவு ஒன்றை அவர் கண்டால், அவர் ஆனந்தமடையட்டும். அதைப் பற்றி தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
(முஸ்லிம் 4552)

கருமித்தனத்திலிருந்தும்  சோம்பலிலிருந்தும் தள்ளாத வயதிலிருந்தும் பாதுகாப்பு

நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வல்கசலி, வ அர்த லில் உமுரி, வ அதாபில் கப்ரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்” எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! கருமித்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாத வயதிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
(முஸ்லிம் 5245)

பதினொரு காரியங்களை விட்டு பாதுகாப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன்.

அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.

இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.) (முஸ்லிம் 5266)

இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் நட்டமடைந்தவனாகி விடுவேன்” என்று அவர் கூறினார்.
(திருக்குர்ஆன் 11:47)

இது போன்ற காரியங்களை விட்டும் நாமும் இறைவனிடம் பாதுகாப்பு தேடுவோம்!

No comments:

Post a Comment