*மவ்லூது குறித்த மடமைகளுக்கு, ஏகத்துவத்தின் பதிலடி!*
1980 களுக்கு முன்னால் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி மவ்லிது எனும் இணைவைப்பு பாடலை பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
அப்போது சுடர் விட்ட ஏகத்துவ தொடர் பிரச்சாரத்தின் விளைவால் இந்த பித்தலாட்டங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.
*மவ்லிது என்பது அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தந்த வணக்கம் அல்ல.*
அது இஸ்லாத்தை அழித்தொழிக்கும் இணைவைப்பு பாடல் என்பதை மக்கள் அறிந்துக் கொண்டனர். அதிலிருந்து விலகத் தொடங்கினர்
*மவ்லிது வியாபாரம் சரிந்தது*
தற்போது, விழிப்புடன் இருக்கும் மக்களிடத்தில் மவ்லிதின் மகத்துவத்தை(?) கொண்டு சேர்க்க பல முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.
அதில், ஒன்று ஸஹாபாக்களின் பெயராலும், முந்தைய அறிஞர்களின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களிடத்தில் உண்மை போல் கொண்டு செல்கின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் சுவனத்தில் எனது தோழராக இருப்பார் என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
யார் நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கண்ணியப்படுத்துகிறாரோ அவரே இஸ்லாத்தை உயிர்ப்பித்தவர் ஆவார் என்று உமர்(ரலி) கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் பத்ரு மற்றும் ஹுனைன் யுத்தங்களில் கலந்துக் கொண்டவர் போலாவார் என உஸ்மான்(ரலி) கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கன்னியப்படுத்தியவரும், அது ஒதப்படுவதற்கு காரணமாக திகழ்ந்தவரும் ஈமானுடனே மரணிப்பார். மேலும் விசாரணை எதுவுமின்றி சுவனத்தில் நுழைவார் என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறு நான்கு கலீஃபாக்கள் மவ்லிதை பற்றி கூறிவிட்டார்கள் என்று தற்போது மவ்லிதை தூக்கி பிடிப்பவர்கள் பரப்பிவருகின்றனர்.
இந்த செய்திகளின் தரத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், இமாம் கதீப் மற்றும் கஸ்ஸாலி காலத்தில் எழுதப்பட்டது என்று சொல்லப்படும் மவ்லிது எவ்வாறு ஸஹாபாக்கள் காலத்திற்கு சென்றது என்று கேட்க விரும்புகிறோம்.
மேலும், சுவனத்திற்கு நற்சான்று வழங்க நபித்தோழர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?
அது அல்லாஹ்விற்கு மட்டும் இருக்ககூடிய அதிகாரம். அதில் ஸஹாபாக்களை கூட்டாக்குகின்றனர்.
ஒரு இணைவைப்பை நியாயப்படுத்த இன்னொரு இணைவைப்பை அறிமுகப்படுத்துகின்றனர்.
மேலும், இந்த செய்திகளை உண்மையில் ஸஹாபாக்கள்தான் கூறினார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
இப்னு ஹஜர் அல்ஹைதமீ (இவர் இப்னு ஹஜர் அஸ்கலானீ இல்லை) என்பவர் தனது அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் (பக்கம் 6 ல்) இந்த செய்திகளை கொண்டு வந்துள்ளார்.
இவர் ஹிஜ்ரி 909 ல் பிறந்து 974 ல் மரணித்தவர். எல்லா அனாச்சாரங்களையும் நியாயப்படுத்தி பரேலவிச கொள்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் இவரே.
பிற்காலத்தில் வாழ்ந்த் ஒருவர் முற்காலத்தில் வாழ்ந்தவர்களின் செய்தியை கொண்டு வருகிறார் எனில் அது எந்த மூல நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்த வேண்டும். அல்லது அதற்கான அறிவிப்பாளர் தொடரை கொண்டு வர வேண்டும்.
அவ்வாறு எதுவும் செய்யாமல் வெறுமனே இந்த செய்திகளை மாத்திரம் கொண்டு வந்துள்ளார்.
இந்த நூல் அல்லாத வேறு எந்த மூல ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி இடம்பெறவில்லை.
ஸஹாபாக்கள் காலத்திற்கு பல நூறாண்டிற்கு பிறகு வந்தவருககு எப்படி இந்த செய்தி கிடைத்தது என்று எந்த சான்றும் இல்லை.
இவ்வாறு அறிவிப்பாளர் தொடரும், ஆதாரமும் இல்லாத முழுக்க முழுக்க புனையப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவே இவை உள்ளது.
ஸஹாபாக்களை நஜாத்காரர்கள் அவமதிக்கிறார்கள். நாங்கள்தான் அவர்களை பெரிதும் மதிக்கின்றோம் என்று மவ்லிது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டு ஸஹாபாக்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை பிரச்சாரம் செய்து தங்களின் மதிப்பை(?) வெளிப்படுத்துகின்றனர்.
இமாம்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பாருங்கள்.
உஹது மலை அளவுக்கு தங்கம் என்னிடம் இருந்தால் அதை நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக செலவிட ஆசைபடுகிறேன் என்று ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறினார்கள்.
யார் மவ்லிது ஓதி, அதை மகத்துவப்படுத்தவதற்காக உணவை தயார்செய்து, தன் சகாக்களை ஒன்றினைத்து, விளக்கேற்றி, புத்தாடை அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் முதல் பிரிவினரான நபிமார்களுடன் சேர்ப்பான். மேலும் உயர் பதவிகளிலும் அவர் இருப்பார் என்று மஃரூஃப் அல்கர்கீ அவர்கள் கூறினார்கள்.
யார் நபியவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக தன் சகாக்களை ஒன்றினைத்து, உணவை தயாரித்து, தனிமையில் நற்காரியம் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமைநாளில் உண்மையாளர்கள், உயிர்தியாகிகள், நல்லோர் ஆகியோருடன் எழுப்புவான். அவர் இன்பமயமான சுவனத்தில் இருப்பார் என்று இமாம் ஷாஃபீ கூறினார்கள்.
ஒருவர் மவ்லிது ஓதுவதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்கிறார் எனில் அவர் சுவனத்தின் தோட்டத்தின் தேர்வு செய்தவராவார். ஏனெனில், அவர் நபி மீதுள்ள பிரியத்தினாலே அந்த இடத்தை தேர்வு செய்தார் என்று ஸிர்ரியுஸ் ஸிக்த்தி என்பவர் கூறினார்.
மவ்லிது ஓதப்படும் இடத்தினை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவ்விடத்தில் உள்ளவர்கள் மீது ஸலாவாத் கூறுகின்றனர். அல்லாஹ் தனது திருப்பொருத்தம் மற்றும் அருளைக் கொண்டு அவ்விடத்தை சூழ்ந்துகொள்கின்றான். மேலும், எந்த முஸ்லிமின் இல்லத்தில் மௌலிது ஓதப்படுகிறதோ அந்த இல்லத்தை தீயால் எரிதல் மற்றும் அனைத்து வகை சோதனைகள் கஷ்டங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாக்கிறான். அவ்வீட்டில் உள்ளவர்கள் மரணமடைந்தால் கூட அவர்களின் கப்ரு விசாரணை லேசாக்கப்படும் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ கூறினார்.
ஒருவர் உணவு பதார்த்தங்களை வைத்து மவ்லிது ஒதுகிறார் எனில் அந்த உணவிலும் அனைத்து பொருளிலும் பரக்கத் ஏற்படும். அதை யார் உண்ணுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னப்பு வழங்குகிறான். தண்ணீர் வைத்து மவ்லிது ஒதப்பட்டு யார் அந்த தண்ணீரை பருகிறாரோ அவரின் உள்ளத்தில் ஆயிரம் வகையான ஒளியும் அருளும் நுழைகிறது. மேலும் ஆயிரம் வகையான நோய் அவரைவிட்டு வெளியேறுகிறது. தங்கம் அல்லது வெள்ளியினாலான நாணயத்தின் மீது மவ்லிது ஒதி அந்நாணயத்தை மற்ற நாணங்களுடன் கலந்து வைத்தால் நபியினுடைய பரக்கத் அதில் இறங்குகிறது. வறுமை அவரை அணுகாது என்று இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ கூறினார்.
இவையும் அந்த அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் செய்திகளாகும்.
நபி மீது இட்டுகட்டி நபித்தோழர்கள் மீது இட்டுக்கட்டியவர்கள் சாதாரண அறிஞர்கள் மீது இட்டுக்கட்ட தயங்குவார்களா என்ன?
இவை அனைத்தும் அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய்களாகவே உள்ளது.
ஏனெனில், இந்த செய்திகளை தனது புத்தகத்தில் கொண்டு வந்திருக்கும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்தவர்.
ஆனால் இவர் குறிப்பிட்டிருக்கும் இமாம்களில் நான்கு பேர் இவரை விட பல நூற்றாண்டுகள் முந்தி வாழ்ந்துள்ளனர்.
1. இமாம் ஹஸன் அல்பஸரீ ஹிஜ்ரி 110 ல் மரணித்தார்.
2. இமாம் மஃரூஃப் அல்கர்கீ ஹிஜ்ரி 200 ல் மரணித்தார்.
3. இமாம் ஷாஃபீ ஹிஜ்ரி 204 ல் மரணித்தார்.
4. இமாம் ஸிர்ரியுஸ் ஸிக்த்தீ ஹிஜ்ரி 251 ல் மரணித்தார்.
5. இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ ஹிஜ்ரி 606 ல் மரணித்தார்
6. இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ ஹிஜ்ரி 911 ல் மரணித்தார்
இவர் குறிப்பிட்ட அனைத்து இமாம்களுமே இவரை விட பல ஆண்டுகள் முந்தியவர்கள்.
இமாம் சுயூத்தீயினுடைய மரணம் இவருடைய வாழ்வுக்கு ஓரளவு நெருக்கமாக இருப்பது போன்று தெரிந்தாலும் இவர் இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் மரணித்துவிட்டார்.
இவர் அவர் சொன்ன கருத்தை குழந்தை பருவத்திலேயே கேட்டு புத்தகத்தில் பதிவு செய்துக்கொண்டார்(!) என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த மவ்லிது பக்தர்கள்!
நாம் ஏற்கனவே கேட்டது போல் இவரை விட பல்லாண்டுகள் முந்தி வாழ்ந்த இமாம்களின் கருத்தை இவர் எங்கிருந்து பெற்றார்?
அதற்கான சான்று என்ன?
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். அத்தகைய எந்த புத்தகத்திலும் அவர்கள் இந்த கருத்தினை பதிவுசெய்யவில்லையே!
அவர்கள் பதிவு செய்யாத கருத்து பல நூற்றாண்டுகள் கழித்து இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?
இப்படி எந்த குறிப்பும் இல்லாமல் இந்த செய்திகள் புனையப்பட்ட ஜோடிக்கப்பட்ட செய்திகளாகவே உள்ளது.
ஒரு கருத்தை பிந்திவந்தவர்கள் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். எனவே, மக்கள் பெரிதும் நேசிக்கும் ஸஹாபாக்களின் பெயராலும், மக்களுக்கு மத்தியில் அதிகம் பிரபல்யமாக இருக்கும் இமாம்களின் பெயராலும் சொன்னால் ஓரளவு மக்கள் கேட்பார்கள் என்பதற்காகவே இந்த செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்திகளின் தரம் என்னவென்று தெரிந்தும் மக்களை மடையர்களாக்கும் நோக்கில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரால் இயங்குபவர்கள் பரப்பி வருகின்றனர்.
ஆதாரமற்ற தங்களின் கருத்தை மக்களுக்கு மத்தியில் திணிக்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் மீதும், இமாம்களின் மீதும், ஏன் நபியின் மீதும் கூட இட்டுக்கட்ட இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கும் இட்டுகட்டபட்ட செய்திகளை பரப்பி அவர்களை அவமதிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதற்குமான பல சான்றுகளில் இதுவும் ஒரு சான்றாகும்.
"என்மீது யார் பொய்சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர் ஜூபைர் ரலி
நூல் : புகாரி 107
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக
யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.
இதை சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 109
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
_என்றும் இறைப்பணியில்..._
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
No comments:
Post a Comment