பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 24, 2019

நபிகளாருக்கு ஸஃபர் மாதத்தில் தான் நோய் ஏற்பட்டதா?

*நபிகளாருக்கு ஸஃபர்  மாதத்தில் தான் நோய் ஏற்பட்டதா?*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஃபர்  மாதத்தில் புதன் கிழமையில் நோய் ஏற்பட்டதால் அன்றைய நாள் பீடை நாள் என்று கூறுகிறார்கள். நபிகளாருக்கு சஃபர் மாதத்தில் தான் நோய் ஏற்பட்டதா?

பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல நேரங்களில் நோய் ஏற்பட்டிருந்தாலும் இறுதி காலத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாக நபிமொழிகளில் அதிகம் கூறப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

நூல் : புகாரி  1330

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்த போது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கினர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

நூல் : புகாரி  198

இது போன்ற ஹதீஸ்கள் இருந்தாலும் எந்த நாளில் எந்த மாதத்தில் இந்த நோய் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்  வரிசையில் எந்தச் செய்தியும் இடம் பெறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள்.
அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ

நூல் : தலாயிந் நுபவா – பைஹகீ

இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர்  நபித்தோழர்  அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் ஸஃபர் மாதம் 11 ஆம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் கைஸ்
நூல் : தபகாத்துல் குப்ரா

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஹம்மத் பின் கைஸ் என்பவர்  நபித்தோழர்  அல்ல. எனவே இந்தச் செய்தியும் தொடர்பு அறுந்த *பலவீனமான செய்தி* என்பதில் ஐயமில்லை.

மேலும் இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூமிஃஷர்  என்பவர்  பலவீனமானவராவார். மற்றொரு அறிவிப்பாளர் முஹம்மத் பின் உமர்  என்ற அல்வாகிதி என்பவர்  பொய் சொல்பவர்  என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.
எனவே இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது.

நபிகளார்  இறுதிக் காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்டது உண்மை. ஆனால் *அது ஸஃபர்  மாதம் என்பதற்கும் புதன் கிழமை* என்பதற்கும் ஆதாரம் இல்லை. மேலும் குறிப்பிட்ட நாளில் நோயுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

No comments:

Post a Comment