பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, October 6, 2019

ஹதீஸ் மறுப்பு - 3

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -3)

ஒரு ஹதீஸை குர்ஆனுக்கு முரணாக மாற்றியும், முரணாக காட்டப்பட்ட ஒரு ஹதீஸை குர்ஆனுக்கு உடன்பாடாக மாற்றியும் ஒரு சோதனையை Part-2 ல் செய்து பார்த்தோம்.

இனி, TNTJ வின் ஹதீஸ் மறுப்பை விரிவாகப் பார்ப்போம்.

ஹதீஸ் மறுப்பு என்பதை ஒரு தவறான நோக்கத்திற்காக TNTJ கையில் எடுக்கவில்லை. சூனியத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.

சூனியம் தொடர்பான அனைத்து ஹதீஸ்களையும் மறுத்தால் மட்டுமே மக்களை அந்த நம்பிக்கையில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்ற உயரிய சிந்தனையில்தான் ஹதீஸ் மறுப்பை கையில் எடுத்தது TNTJ.

சூனிய ஹதீஸ்களை மட்டும் மறுத்தால் தனது இயக்கத்தவர்களிடம் கூட அது விமர்சனத்திற்குள்ளாகும் என்பதால்தான் அதோடு சேர்த்து சில ஹதீஸ்களையும் மறுத்தது TNTJ.

அந்த ஹதீஸ்களை மறுப்பதற்கு ஒரு கேள்வியை அது ஆயுதமாக கையில் எடுத்தது. அந்த கேள்விதான்...

*"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா?"*

இந்த கேள்விதான் அது கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம்.

[இந்த கேள்வியைத்தான் நாம் விரிவாகப் பார்க்கப் போகிறோம். இன்ஷா அல்லாஹ்]

இதற்குப் பிறகு,

"குரானுக்கு முரண்பட்டால் அது ஹதீஸா?"

என்று அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பித்தது.

இறுதியில்,

"குரானுக்கு முரண்படுவது ஹதீஸே அல்ல"
என்று தீர்ப்பெழுதியது TNTJ.

ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.

"Call the dog mad and then kill it"

"நாயை பைத்தியம் என்று அழைத்துவிட்டு பின்னர் அதை கொல்" என்பதுதான் அதன் விளக்கம்.

ஒரு நாயை அடித்துக் கொல்வதற்கு முன்பாக அந்த நாய்க்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று தொடர்ச்சியாக கூறிவிட்டு, அதை ஒரு நாளில் அடித்துக்கொன்றால் அந்த செயல் விமர்சனத்திற்குள்ளாகாது என்பதுதான் அந்த சொல்லாடலின் கருத்தாக இருக்கிறது.

இந்த வேளையைத்தான் ஹதீஸ்களின் விஷயத்தில் TNTJ செய்கிறது. அதை நாம் பார்க்கப்போகிறோம்.

முதலில், அந்த கேள்வியைப் பார்ப்போம்...

*"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா?"*

சில கேள்விகள் கேட்கப்படுபரைப் பொறுத்துதான் முக்கியத்துவம் பெறுகின்றன.

புத்தி குறைவாக உள்ளவர் என்று நாம் கருதும் ஒருவரின் அறிவுபூர்மான கேள்விகள் கூட குப்பைமேட்டுக்கு சென்றுவிடும்.

ஆனால், புத்திஜீவி என்று நாம் கருதும் ஒருவரின் அறிவற்ற கேள்விகூட சில சமயங்களில் கோபுரம் ஏறிவிடும்.

ஒரு அறிவார்ந்த இயக்கமாக கருதப்படும் TNTJ விடமிருந்து வெளிப்பட்டு கோபுரம் ஏறிய ஒரு அறிவற்ற கேள்விதான்
"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா?" என்ற கேள்வி.

இதைப் படிக்கும் சிலருக்கு கோபம் வரக்கூடும். இதை ஏன் அறிவற்ற கேள்வி என்கிறாய் என்று நீங்கள் கோபப்படுவதை என்னால் உணரமுடிகிறது.

TNTJ வின் மீது காழ்ப்புணர்ச்சியோடு இதை எழுதுகிறாய் என்று எனக்கு தீர்ப்பளித்துவிடாதீர்கள். அல்லாஹ்விடமே நமது தீர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்தவனாகவே இதை எழுதுகிறேன்.

அந்த கேள்வியை அறிவற்ற கேள்வி என்று சொல்வது ஏன்?

இந்த கேள்விக்கு பதில் சொல்வதாக இருந்தால் முதலில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிந்தாக வேண்டும்.

(1) குர்ஆன்
(2) ஹதீஸ்

குர்ஆன் என்றால் என்ன?

முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு தூதுத்துவம் கிடைக்கப்பெற்றதில் இருந்து அன்னார் இறக்கும் வரை "வஹி"யின் மூலம் அல்லாஹ்விடமிருந்து வந்த "அல்லாஹ்வின் வார்த்தை" தான் குர்ஆன்.

ஹதீஸ் என்றால் என்ன?

முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு தூதுத்துவம் கிடைக்கப்பெற்றதில் இருந்து அன்னார் இறக்கும் வரை அல்லாஹ்விடமிருந்து வந்த "வஹி"யின் மூலம் அவர் சொன்னதும்/செய்ததும்/அங்கீகரித்ததும்தான் ஹதீஸ்.

குர்ஆனும் "வஹி"தான்,
ஹதீஸும் "வஹி"தான்.

"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா?" என்று கேட்பதும், "வஹி"க்கு "வஹி" முரண்படுமா? என்று கேட்பதும் சமமானதே!

"வஹி"க்கு "வஹி" முரண்படுமா? என்று கேட்பதும், "அல்லாஹ் தனக்கே முரண்படுவானா?" என்று கேட்பதும் சமமானதே!

அல்லாஹ்வின் வல்லமையை மனிதத் தன்மையோடு ஒப்பிட்டு கேள்விகள் எழுப்பப்படும்போது அவற்றிற்கு நம்முடைய பதில் என்னவாக இருக்க வேண்டும்?

இந்த கேள்வியை ஒரு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்வோம்...

ஐந்து வயதுடைய எனது அண்ணன் மகள் என்னிடம், "அல்லாஹ் என்ன டிரஸ் போடுவான்?" என்று ஒரு கேள்வி கேட்டாள்.

என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பதிலை சொல்லி வைப்போம் என்று, "அல்லாஹ் டிரஸ் போடமாட்டான்" என்று கூறினேன்.

"டிரெஸ் போடாம இருந்தா அது பேட் ஹேப்பிட் (Bad habit) ஆச்சே? ஷேம்! ஷேம்!! பப்பி ஷேம்!!! என்றாள்.

என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தேன்.

அப்போதுதான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன்.

அல்லாஹ்வின் பண்பை மனிதத் தன்மையுடன் ஒப்பிட்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் கூறக்கூடிய பதிலும் மனிதத்தன்மைக்குரியதாகவே இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.

இறுதியில், தன்னைப் பற்றி அல்லாஹ்வே கூறும் வசனத்தைக் கூறி அந்த கேள்வியை முடித்து வைத்தேன்.

اللَّهُ الصَّمَدُ (111:2)

அல்லாஹ் தேவைகளற்றவன். (112:2)

மனிதர்களுடைய பண்பாக இருக்கும் எந்த ஒன்றைவிட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.

உணவு, உடை, உறக்கம், உறைவிடம் என்பன போன்ற மனிதர்களுக்கு தேவைப்படும் எந்த ஒன்றையும் விட்டு அல்லாஹ் தேவைகளற்றவன்.

முரண்பாடு என்பது மனிதத் தன்மைக்குரியது. அல்லாஹ்வின் பண்புக்கு உரியது அல்ல.

அல்லாஹ் முரண்படுவானா? முரண்பட மாட்டானா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டால், இதற்கு நாம் பதிலளிப்பதை விட, தன்னைப் பற்றி அல்லாஹ் கூறியதையே பதிலாக அளிப்பதுதான் சரியாக இருக்கும்.

அல்லாஹ் தேவைகளற்றவன். (112:2)

முரண்பாடு என்ற மனிதத் தன்மையை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.

"அல்லாஹ் தனக்கே முரண்படுவானா?"
"வஹி"க்கு "வஹி" முரண்படுமா?
"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா?"

என்று கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்:

اللَّهُ الصَّمَدُ (111:2)

*அல்லாஹ் தேவைகளற்றவன்.* (112:2)

"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா?" என்று கேட்கப்படும் கேள்விக்கான பதில்
"குர்ஆன் என்ற வஹியும், ஹதீஸ் என்ற வஹியும் முரண்படுவதற்கான தேவை ஏதுமில்லை" என்பதுதான் பதில்.

அப்படியென்றால், நமது கையில் புத்தகவடிவில் இருக்கும் குர்ஆனும் அதே புத்தக வடிவில் இருக்கும் ஹதீஸ்களும் ஒரே தரத்தில்தான் உள்ளனவா?

ஹதீஸ்களில் உள்ளது போன்றே ஸஹீஹ், ஹஸன், லயீப் என்ற தரத்தில் குர்ஆன் வசனங்கள் இருக்கிறதா?

என்பன போன்ற நிறைய கேள்விகள் உங்கள் மனதில் எழுந்து இந்த பதிவின் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்படக்கூடும். அந்த வெறுப்பு நியாயமானதே. நமக்கு கற்பிக்கப்பட்டதை நாம் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அதை அசைத்துப் பார்க்கும் புது விஷயம் எதையாவது படிக்கும்போது இந்த எண்ணம் ஏற்படுவது இயல்பே.

உங்கள் வெறுப்பை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் வாசியுங்கள்...

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment