பள்ளியில் அமர்வதற்கு முன்னால் தொழுதல்
பள்ளிவாசலுக்கு ஒருவர் சென்றால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் பள்ளியில் அமரக் கூடாது. கடமையான தொழுகையையோ அல்லது கடமையான தொழுகையின் முன் சுன்னத்தையோ நிறைவேற்றினாலும் இக்கடமை நிறைவேறி விடும். தொழுகை இல்லாத நேரங்களில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். ‘உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்கள்: புகாரீ 1167, முஸ்லிம் 1166
உளூச் செய்த பின் தொழுதல்
ஒருவர் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் இரண்டு ரக்அத்கள் அல்லது விரும்பிய அளவு தொழுவது சிறப்பிற்குரியதாகும்.
ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபி (ஸல்) அவர்கள், ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்பு சப்தத்தைச் சொர்க்கத்தில் நான் கேட்டேன்’என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்’என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1149, முஸ்லிம் 4497
No comments:
Post a Comment