இறைவனிடம் கையேந்துங்கள்
நூலின் பெயர் : இறைவனிடம் கையேந்துங்கள்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
விலை ரூபாய் : 5.00
மார்க்கத்தின் எச்சரிக்கை!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.
பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது, அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது.
இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது தேவைகளை முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட அதிகமான மக்கள் விளங்காமல் உள்ளனர்.
தாங்களாகவே செய்து கொண்ட கற்சிலைகளிடமும், இறந்து விட்ட பெரியார்களின் சமாதிகளிலும் போய் பிரார்த்திக்கின்றனர். இதற்குக் காரணம், இறைவனின் பண்புகளைப் பற்றியும், அவனது வல்லமை பற்றியும் அறியாமல் இருப்பது தான்.
எனவே இறைவனின் பண்புகளை எடுத்துக் காட்டி, அவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை விளக்குவதுடன், இறைவனிடம் நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கான நிபந்தனைகள் என்ன? அதற்கு இடைத்தரகர்கள் தேவையா? என்பன போன்ற அம்சங்களையும் இந்நூலில் கீழ்க்காணும் தலைப்புக்களில் விளக்கியுள்ளோம்.
பிரார்த்தனை தான் வணக்கம்
இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்
இறைவன் அருகில் இருக்கிறான்
பிரார்த்தனையின் ஒழுங்குகள்
ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும்
அவசரப்படக் கூடாது
பாவமானதைக் கேட்கக் கூடாது
மரணத்தைக் கேட்கக் கூடாது
இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்
மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது
வலியுறுத்திக் கேட்க வேண்டும்
அனைத்தையும் கேட்க வேண்டும்
இரகசியமாகவும், பணிவாகவும்
இரவின் கடைசி நேரம்
ஸஜ்தாவின் போது
மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ
பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்
இறைவனிடம் கையேந்துங்கள்!
பிரார்த்தனை தான் வணக்கம்
இவ்வுலகில் வாழும் மனிதர்களில் எவரும் அனைத்து நலன்களையும் பெற்றவர்களாக இல்லை. தான் விரும்பிய, ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்ற ஒரே ஒரு மனிதரைக் கூட உலகில் காண முடியாது. மிக உயர்ந்த பதவியைப் பெற்றவர் அனைத்து இன்பங்களையும் பெற்று மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் போது அவருக்கு வாரிசு இல்லை என்ற மனக்குறையோ, அல்லது பெயரைக் கெடுப்பவனாக வாரிசு பிறந்து விட்டானே என்ற மனக்குறையோ, மனைவியால் மகிழ்ச்சி இல்லையே என்ற மனக்குறையோ, விரும்பியதை உண்ண முடியவில்லையே என்ற மனக்குறையோ, இன்னும் இது போன்ற நூற்றுக் கணக்காண குறைகள் அவருக்கு இருப்பதை அறிய இயலும் அளவின்றி பெருஞ்செல்வத்தைப் பெற்றவர், உடல் வலிமை பெற்றவர், மழலைச் செல்வங்களைப் பெற்றவர், இன்னும் எத்தனையோ பாக்கியங்கள் பெற்றவர்கள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் கருதலாம். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களுக்குக் கிடைக்காத பாக்கியங்களைப் பட்டியல் போட்டுக் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். நினைத்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கும்.
இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பிரார்த்தனை தான். சர்வ வல்லமையுடைய இறைவனிடம் அந்தக் குறைகளை முறையிடும் போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி நிறைவேறாவிட்டால் கூட, பெரிய இடத்தில் பிரச்சனையை ஒப்படைத்து விட்டோம்; அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது.
இதனால் தான் இஸ்லாம் பிரார்த்தனைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது.
பிரார்த்தனை தான் வணக்கமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665
திர்மிதீ 2895, 3170, 3294 அபூதாவூத் 1364
பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை என்ற பொருள் பட நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணர்வதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் பிரார்த்தனையில் கூடுதலாகவே உள்ளது எனலாம்.
No comments:
Post a Comment