பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 10, 2019

மரணச் செய்தியை அறிவித்தல

*மரணச் செய்தியை அறிவித்தல்*

ஒருவர் மரணித்து விட்டால் அது பற்றி மக்களுக்கு அறிவிப்பது தவறில்லை. அது விரும்பத்தக்கது ஆகும். ஏனெனில் இறந்தவரின் ஜனாஸா தொழுகையில் அதிகமான மக்கள் பங்கு பெறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

‘இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1576

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் கதீத் என்ற இடத்தில் மரணித்து விட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் ‘குரைப்! மக்கள் எவ்வளவு பேர் கூடியுள்ளனர் என்று பார்த்து வா!’ என்றார்கள். நான் சென்று பார்த்த போது மக்கள் திரண்டிருந்தனர். இதை இப்னு அப்பாஸிடம் தெரிவித்தேன். ‘நாற்பது பேர் அளவுக்கு இருப்பார்களா?’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘அப்படியானால் ஜனஸாவை வெளியே கொண்டு செல்லுங்கள்! எந்த முஸ்லிமாவது மரணித்து அவரது ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் பங்கெடுத்துக் கொண்டால் அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம் 1577

அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொள்வது சிறப்பானது என்றால் மக்களுக்கு அறிவிப்புச் செய்தால் தான் இது சாத்தியமாகும். அதுவும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டால் தான் இன்றைய சூழ்நிலையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத நாற்பது பேர் தேறுவார்கள். எனவே மரணச் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது தான் சிறந்ததாகும்.

நஜ்ஜாஷி மன்னரின் மரணச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1245, 1318, 1328, 1333, 3880

மரணத்தை அறிவிக்கக் கூடாது என்ற கருத்திலமைந்த ஹதீஸ்கள் யாவும் குறைபாடு உடையதாகும்.

‘மரண அறிவிப்புச் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும்’

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் (906) ஹதீஸ் உள்ளது.

இதை அறிவிக்கும் அபூ ஹம்ஸா மைமூன் அல்அஃவர் பலவீனமானவர்.

‘நான் மரணித்து விட்டால் என்னைப் பற்றி அறிவிப்புச் செய்யாதீர்கள்! ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். மரண அறிவிப்புச் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன்’ என்று ஹுதைபா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: பிலால் பின் யஹ்யா

நூல்: திர்மிதி 907

பிலால் என்பார் ஹுதைபாவிடம் எதையும் செவியுற்றதில்லை என்பதால் ஹுதைபா கூறியதை இவர் அறிவிக்க முடியாது. எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

No comments:

Post a Comment