பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, December 7, 2019

வஸீலா தேடுவது தவறா❓

அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களிடம் எதையும் கேட்கக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைத்தாலும் அவற்றுக்கு எந்த மறுப்பும் சொல்ல முடியாதவர்கள் பொருத்தமில்லாத வாதங்கள் மூலம் தமது நிலையை நியாயப்படுத்த முயல்கின்றனர்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 5:35)

என்று கூறுகிறான்.

அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிடும் காரணத்தினால் தான் நாங்கள் அவ்லியாக்களிடம் வஸீலா தேடுகிறோம் என்று வாதிடுகின்றனர்.

அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிட்டிருக்கும் போது அதை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது.

ஆனால் வஸீலா என்பது என்னவென்பதில் இவர்கள் தவறு செய்கிறார்கள்.

வஸீலா என்பதன் பொருள் துணைச் சாதனம். கடலில் பயணம் செய்ய உதவும் கப்பல் வஸீலா எனப்படும். மேலே ஏறுவதற்கு உதவும் ஏணி அதற்கான வஸீலா எனப்படும். அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனங்களைத் தேடுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளனவே தவிர, ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.

அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனது கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவனிடம் கேட்க வேண்டும். அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளைக் கட்டி அழுங்கள் என்பது இதன் பொருள் அல்ல.

இதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே ஆதாரம் உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.

நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மற்றும் யுக முடிவு நாள் வரை வரக்கூடிய முஸ்லிம்களும் அடங்குவர்.

முஸ்லிம்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ் பிறப்பிக்கிறான். முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும். இந்தக் கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இக்கட்டளையின் படி இறைவனை அஞ்சியாக வேண்டும். அஞ்சினார்கள்.

இரண்டாவது கட்டளை அல்லாஹ்வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும். இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.

வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள் செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால் பொருந்திப் போகிறது.

வஸீலா என்பது நல்லடியார்களைப் பிடித்துக் கொள்வது என்று பொருள் கொண்டால் இந்தக் கட்டளை நபிகள் நாயகத்துக்கும் இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.

‘முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள்’ அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்

இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான்களுக்குக் கூட இந்தக் கட்டளை உள்ளது. அந்த மகான்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் அவர்கள் வஸீலாவாக்கவில்லையென்றால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?

எனவே வஸீலாவுக்கு இடைத்தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். நான் உங்களின் கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி வருகின்றேனே எனக்காக உதவக் கூடாதா? என்று கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.

‘இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள்’ என்று கேட்டால் நம்மைப் பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார். ‘இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும்’ என்று கேட்பார்.

‘இன்னார் பொருட்டால் இதைத் தா’ என்று இறைவனிடம் இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாக உள்ளது.

‘நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா’ என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்குக் கோபம் வராதா? ‘நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்! நீ எனக்கு என்ன செய்தாய்?’ என்று அல்லாஹ் கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.

ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக் காட்டி இன்னொருவர் உதவி கேட்பதை விட கோமாளித்தனம் எதுவும் இருக்க முடியாது. நம்மிடம் அப்படி யாரேனும் கேட்டால் நமக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கோமாளித்தனமாகக் கேட்டால் அவனுக்குக் கோபம் வராது என்று நம்புகிறார்களே! இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகத்தின் பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை.

எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கன்னியத்தைக் குறைக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment