#சிறப்புத்_தீர்மானம்
#ஃபோன்_உரையாடலை
அனுமதியின்றி பதிவு செய்வதை கைவிட வேண்டும்.
*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) தீர்மானம்!*
*10/12/2019 அன்று சென்னையில் கூடிய NTF மாநில நிர்வாக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானம்:*
தொலைபேசி உரையாடலை எதிர் முனையில் பேசுவோரின் அனுமதியின்றி பதிவு செய்வது குறித்தும் அதனால் ஏற்படும் தீயவிளைவுகள் குறித்தும் நிர்வாகக் குழுவில் கவலையுடனும் சமூகப் பொறுப்புடனும் விவாதிக்கப்பட்டது.
போனில் தொடர்பு கொண்டு பேசும் ஒருவர், அமானிதமான செய்திகளையும், சில நேரங்களில் கோபதாபங்களுடனும், எதார்த்தமாகவும் பேசுவார். நம்மோடு பேசுபவர் அதைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்காமல் பலவற்றையும் மனம் திறந்து பேசுவார்.
அமானிதம் என்று நம்பி உரையாடுவதைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு அதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் தவறான, நாகரீகமற்ற செயலாகும். இப்படியான நபர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகிவிடும். சகோதரத்துவம் சீர்குலையும். இது நல்ல பண்பாடும் அல்ல.
எதிரிகள், துரோகிகளின் போன் கால் ஆடியோவை ஆதாரங்களுக்காகவும் சாட்சியங்களுக்காகவும் பதிவு செய்வதைப் போன்று, மற்றவர்களின் போன் கால் ஆடியோவை பதிவு செய்து சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் செயலை அனைவரும் கைவிட வேண்டும்.
குறிப்பிட்ட நபரின் வாக்கு மூலம் நமக்கு தேவைப்பட்டால் அவரிடம் இதைப் பதிவு செய்து கொள்ளலாமா? பரப்பலாமா என்று அனுமதி கேட்டு அவர் அனுமதித்தால் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பாக நமது NTF சகோதரர்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வருகின்ற எல்லா கால்களையும் பதிவு செய்பவர்கள், தாங்கள் விழிப்புடன் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் இவர்கள் நம்பகத்தன்மையை இழக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயலை அறிந்தவர்கள் இவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதைத் தவிர்ப்பார்கள். இவர்களிடம் பெருந்தன்மை, மன்னிக்கும் குணம், கருணை, இனிய இயல்பு ஆகியவை எடுபட்டுப் போய் விடும். பிறரது குறைகளைத் தேடித் திரியும் மன நோய்க்கு ஆளாகுவார்கள். இதனால் மறுமை வாழ்க்கை பாழாகும் என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் செய்து தங்கள் சக நிர்வாகிகள், மாநில பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் உரையாடலைப் பதிவு செய்ய மாட்டோம் என்று அனைத்து மாநில நிர்வாகிகளும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மேலும் தானாகப் பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்துவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்தனர்.
மாநில நிர்வாகிகளால் எவரது உரையாடலும் பதிவு செய்யப்படாது என்று மக்களுக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதை மாவட்ட, கிளை நிர்வாகிகளும் கொள்கைச் சகோதரர்களும் உறுதியாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
13. حَدَّثَنَا مُسَدَّدٌ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، عَنْ شُعْبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ ، قَالَ : حَدَّثَنَا قَتَادَةُ ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ".
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நூல் : புகாரி:13.
3038. حَدَّثَنَا يَحْيَى ، حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ شُعْبَةَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى الْيَمَنِ، قَالَ : " يَسِّرَا وَلَا تُعَسِّرَا، وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلَا تَخْتَلِفَا ".
அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், 'நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்' என்று (அறிவுரை) கூறினார்கள்.
நூல் : புகாரி : 3038.
*இவண்,* *A.S.அலாவுத்தீன்*
*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(NTF)*
*மாநிலப் பொதுச் செயலாளர்.*
No comments:
Post a Comment