பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, December 7, 2019

பில்லி, சூனியம், ஏவல், மாயம், மந்திரம்

பில்லி, சூனியம், ஏவல், மாயம், மந்திரம் என்று சொல்லப்படும் ஸிஹ்ர் மூலம் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எல்லா சமுதாயத்திலும் இருப்பது போல் அதிகமான முஸ்லிம்களிடமும் உள்ளது.

சூனியம் என்பது தந்திரம் செய்து ஏமாற்றுவது தானே தவிர சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்து உடையவர்களும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளனர். நாமும் இந்தக் கருத்தில் தான் இருக்கிறோம்.

இந்த இரண்டு நம்பிக்கைகளில் எது சரியானது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நாம் அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

சிஹ்ர் எனும் எனும் சூனியத்தைப் பற்றி அறிவதற்கு முன்னால் சில அடிப்படையான செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சூனியம் குறித்து தெளிவான விளக்கம் பெற முடியும்.

இம்மார்க்கத்தை அல்லாஹ் இரண்டு வகைகளாகப் பிரித்து நமக்குத் தந்திருக்கின்றான்.

முதலாவது ஈமான் எனும் நம்பிக்கை.
இரண்டாவது இஸ்லாம் எனும் செயல்பாடுகள்.
இவ்விரு சொற்களின் நேரடிப் பொருளில் இருந்தே இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஈமான் என்றால் நம்புதல் என்று பொருள். நம்புதல் என்பது மனம் சம்மந்தப்பட்டதாகும்.

இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல் என்பது பொருள். கட்டுப்படுதல் என்பது நடவடிக்கைகள் சம்மந்தப்பட்டதாகும்.

அல்லாஹ்வைப் பற்றியும், வானவர்களைப் பற்றியும், வேதங்களைப் பற்றியும், தூதர்களைப் பற்றியும், இறுதிநாளைப் பற்றியும், விதியைப் பற்றியும் எப்படி நம்ப வேண்டும் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்புவது ஈமான் எனப்படும்.

இவ்வாறு நம்பிக்கை கொண்ட பின் அவசியம் செய்ய வேண்டிய செயல்பாடுகளைச் செய்வது இஸ்லாம் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டையும் இவ்வாறு வேறுபடுத்திக் காட்டியுள்ளதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து நாம் அறியலாம்.

102 حدثنى أبو خيثمة زهير بن حرب حدثنا وكيع عن كهمس عن عبد الله بن بريدة عن يحيى بن يعمر ح وحدثنا عبيد الله بن معاذ العنبرى – وهذا حديثه – حدثنا أبى حدثنا كهمس عن ابن بريدة عن يحيى بن يعمر قال كان أول من قال فى القدر بالبصرة معبد الجهنى فانطلقت أنا وحميد بن عبد الرحمن الحميرى حاجين أو معتمرين فقلنا لو لقينا أحدا من أصحاب رسول الله -صلى الله عليه وسلم- فسألناه عما يقول هؤلاء فى القدر فوفق لنا عبد الله بن عمر بن الخطاب داخلا المسجد فاكتنفته أنا وصاحبى أحدنا عن يمينه والآخر عن شماله فظننت أن صاحبى سيكل الكلام إلى فقلت أبا عبد الرحمن إنه قد ظهر قبلنا ناس يقرءون القرآن ويتقفرون العلم – وذكر من شأنهم – وأنهم يزعمون أن لا قدر وأن الأمر أنف. قال فإذا لقيت أولئك فأخبرهم أنى برىء منهم وأنهم برآء منى والذى يحلف به عبد الله بن عمر لو أن لأحدهم مثل أحد ذهبا فأنفقه ما قبل الله منه حتى يؤمن بالقدر ثم قال حدثنى أبى عمر بن الخطاب قال بينما نحن عند رسول الله -صلى الله عليه وسلم- ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبى -صلى الله عليه وسلم- فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرنى عن الإسلام. فقال رسول الله -صلى الله عليه وسلم- « الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتى الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. قال فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرنى عن الإيمان. قال « أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره ». قال صدقت. قال فأخبرنى عن الإحسان. قال « أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك ». قال فأخبرنى عن الساعة. قال « ما المسئول عنها بأعلم من السائل ». قال فأخبرنى عن أمارتها. قال « أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون فى البنيان ». قال ثم انطلق فلبثت مليا ثم قال لى « يا عمر أتدرى من السائل ». قلت الله ورسوله أعلم. قال « فإنه جبريل أتاكم يعلمكم دينكم

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை; எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரியவில்லை. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முட்டுக்கால்களை நபியவர்களின் முட்டுக்கால்களோடு இணைத்துக் கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள் மீது வைத்தார்.

பிறகு “முஹம்மதே! இஸ்லாம் என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லமான கஅபா சென்று ஹஜ் செய்வதுமாகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் “உண்மைதான் சொன்னீர்” என்றார்.

அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், “ஈமான் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையும், வானவர்களையும், வேதங்களையும், தூதர்களையும், இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்” என்று கூறினார்கள். 3:3, 3:48, 3:50, அதற்கும் அம்மனிதர் “உண்மைதான் சொன்னீர்” என்றார்.

பின்னர், வந்தவர் ஜிப்ரீல் (அலை) என்றும், உங்கள் மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுத் தருவதற்காக மனித வடிவில் வந்தார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நூல் முஸ்லிம் -1

நம்ப வேண்டிய ஆறு விஷயங்களை மனதில் நம்புவது ஈமான் என்றும், வணக்க வழிபாடுகளைச் செய்வது இஸ்லாம் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

இம்மார்க்கம் ஈமான், இஸ்லாம் என இரு வகைகளாக நமக்குத் தரப்பட்டுள்ளது என்பதைப் பின் வரும் வசனத்தில் இருந்தும் நாம் அறிந்து கொள்ளலாம்.

“நம்பிக்கை (ஈமான்) கொண்டோம் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். “நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொள்ளவில்லை. நம்பிக்கை (ஈமான்) உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம் (இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கிறோம்) என்று கூறுங்கள்” என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 49:14

தொழுகை, நோன்பு உள்ளிட்ட கடமைகளைச் செய்து வந்த சில கிராமவாசிகள் அல்லாஹ்வையும், நம்ப வேண்டிய இதர விஷயங்களையும் நம்ப வேண்டிய முறைப்படி நம்பாமல் இருந்தனர். இதனால் தான் ”ஈமான் கொண்டோம் எனக் கூறாதீர்கள். ஏனெனில் உங்கள் உள்ளங்களில் ஈமான் நுழையவில்லை” என்று அல்லாஹ் கூறுகிறான். வெளிப்படையாக வணக்க வழிபாடுகளை நீங்கள் செய்வதால் இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று கூறிக் கொள்ளுங்கள் என்று கூறி இஸ்லாத்தையும் ஈமானையும் அல்லாஹ் பிரித்துக் காட்டுகிறான்.

ஈமான் என்பது உள்ளத்தில் கொள்ள வேண்டிய நம்பிக்கைக்கும், இஸ்லாம் என்பது வெளிப்படையான வணக்க வழிபாடுகளுக்கும் சொல்லப்படும் என்பதை இதிலிருந்தும் நாம் அறிந்து கொள்ளலாம்.

பின்வரும் வசனத்தில் இருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.

திருக்குர்ஆன் 16:106

ஈமான் எனும் நம்பிக்கை உறுதியாக இருக்கும் நிலையில் ஏதோ ஒரு அச்சுறுத்தலுக்காக வாயளவில் ஒருவர் இறைநம்பிக்கையைப் பாதிக்கும் சொல்லைக் கூறினால் அவர் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனம் கூறுகிறது. வெளிப்படையாக ஒருவர் சொல்வது தவறான சொற்களாக இருந்தும் அவரது நம்பிக்கை உறுதியாக இருக்கும் போது அவரது மறுமை வாழ்வு பாதிப்பதில்லை என்பதை இதிலிருந்து அறிகிறோம்.

இஸ்லாம் என்ற செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் அல்லாஹ் அதனை மன்னித்து விடுவான்.

ஈமான் என்ற நம்பிக்கையில் குறைபாடு இருந்தால் அல்லாஹ் அதனை மன்னிக்க மாட்டான்.

மக்கத்துக் காஃபிர்கள் கஅபாவை தவாஃப் செய்தனர்; ஹஜ் செய்தனர்; ஹாஜிகளுக்கு ஊழியம் செய்தனர்; அல்லாஹ்வை திக்ரு செய்தனர்; தான தர்மங்கள் செய்தனர். ஆனாலும் அவர்களின் இந்தச் செயல்களுக்கு அல்லாஹ்விடம் எந்தக் கூலியும் கிடைக்காது.

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பினாலும், அல்லாஹ்வுக்கு இருப்பது போன்ற சில ஆற்றல்கள் குட்டித் தெய்வங்களுக்கும் உண்டு என்று அவர்கள் நம்பினார்கள். இது அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையைப் பாதித்ததால் தான் அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன.

அல்லாஹ்வை ஒரு புறம் நம்பிக் கொண்டு இன்னொரு புறம் அல்லாஹ்வைப் போன்ற சக்தி யாருக்காவது இருக்கிறது என்று நம்பினால் அவர்களின் நல்லறங்கள் அழிந்து விடும். அல்லாஹ்வுடைய ஏராளமான பண்புகளில் ஒரே ஒரு பண்பு அல்லாஹ்வைப் போல் ஒருவருக்கு உண்டு என நம்பினாலும் அது இணைகற்பித்தல் என்பதால் அவர்களின் எல்லா நல்லறங்களும் பாழாகிவிடுகின்றன.

இது குறித்து அல்லாஹ் பல வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான்.

திருக்குர்ஆன் 5:72

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.

திருக்குர்ஆன் 6:82

நம்பிக்கையுடன் அநீதியைக் கலப்பது என்றால் என்ன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் இது தான்.

حدثنا أبو الوليد، قال: حدثنا شعبة، ح قال: وحدثني بشر بن خالد أبو محمد العسكري، قال: حدثنا محمد بن جعفر، عن شعبة، عن سليمان، عن إبراهيم، عن علقمة، عن عبد الله، قال: لما نزلت: {الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم} (6:82) قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: أينا لم يظلم؟ فأنزل الله عز وجل: إن الشرك لظلم عظيم (31:13)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எவர் நம்பிக்கை (ஈமான்) கொண்டு பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர் எனும் (6:82 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள் எங்களில் (தமக்குத் தாமே) அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர் தாம் இருக்கிறார்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ், இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும் எனும் (31:13 ஆவது) வசனத்தை அருளினான்.

நூல் : புகாரி 32

அல்லாஹ்வை நம்பும் மக்கள் அந்த நம்பிக்கையுடன் இணைவைப்பைக் கலந்து விட்டால் அவர்களுக்கு மறுமையில் ஈடேற்றம் இல்லை என்று இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65,66

நாம் எதை நம்பினாலும் அந்த நம்பிக்கை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் வகையில் இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எதையாவது நாம் நம்பும் போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் சாயல் இருக்குமானால் நமது நல்லறங்கள் அழிந்து விடும் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொழுகை, நோன்பு, ஜகாத், இன்ன பிற அனைத்துக் காரியங்களிலும் ஒருவன் சரியாக இருந்து விட்டு, அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றை நம்பினால் அவனது செயல்களுக்கு எந்த விதக் கூலியையும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

மேலும் நமது எந்த நம்பிக்கையாவது திருக்குர்ஆன் வசனங்களை மறுக்கும் விதத்தில் இருக்குமானால் அப்போதும் நமது நல்லறங்கள் அழிந்து விடும் எனவும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

நமது வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யெனக் கருதியோரின் செயல்கள் அழிந்து விடும். அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படுவார்களா?

திருக்குர்ஆன் 7:147

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதில் இணைகற்பித்தல் கலந்துள்ளது என்பதாலும், திருக்குர்ஆனின் பல வசனங்களை மறுக்கும் நிலையும் ஏற்படுவதாலும் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இது ஈமான் சம்மந்தப்பட்ட விஷயம் என்ற அதிக அக்கறையுடன் இதை அணுகினால் தான் இதன் விபரீதம் தெரிய வரும்.

No comments:

Post a Comment