பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, December 7, 2019

பேச்சாளர்களே தாழ்வு மனப்பான்மையை தவிர்த்திடுங்கள்:மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்கும், தாங்கள் சிறந்த பேச்சாளர்களாக ஆவதற்கும் அனைவருமே விரும்புகின்றனர். ஆனால் பிரச்சாரம் என்று வருகின்ற போது பல விஷயங்கள் அவர்களுக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது தாழ்வு மனப்பான்மை தான். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் மிகச்சிறந்த பணியைக் கையில் எடுத்திருக்கும் ஏகத்துவவாதிகளுக்கு இந்தத் தாழ்வு மனப்பான்மை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள் மக்களில் இரு வகைகளாக உள்ளனர்.

1. ஆலிம் படிப்பை முழுவதுமாக படித்து முடித்தவர்கள் (அவர்கள் 3 வருட பாட திட்டத்தையோ அல்லது 1 வருட பாடத்திட்டத்தையோ முடித்தவர்களாக இருக்கலாம்.)

2. ஆலிம் கோர்ஸ் பயிலாமல் பயான் பேசுவதில் ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் மார்க்கத்தை ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி போன்ற இதழ்களில் வருகின்ற கட்டுரைகளின் மூலமோ அல்லது தங்களுக்குத் தேவையான தலைப்புகளை ஆடியோ, வீடியோவின் மூலம் பேச்சாளர்கள் பேசியவற்றை குறிப்பு எடுத்துக் கொண்டோ அல்லது நமது வெளியீடுகளில் உள்ள புத்தகங்களின் உதவியினாலோ தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டு மக்களுக்கு மத்தியில் மார்க்கத்தை எடுத்துச் சொல்வார்கள்.

இந்த இரு சாராரையும் தன் கைப்பிடிக்குள் வைத்து ஆட்டிப்படைத்து உரை நிகழ்த்துவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து கொண்டிருக்கின்றது தாழ்வுமனப்பான்மை.

ஆலிமாக இருப்பவர்கள் தங்களுக்கு மேலுள்ள சிறப்புப் பேச்சாளர்களைப் பார்த்து, இவர்களைப் போல் நம்மால் ஏன் ஆக்ரோஷமாக, மக்களால் விரும்பப்படக்கூடிய வகையில் பேச முடிவதில்லை. நமது கருத்துக்கள் மக்களுக்கு மத்தியில் ஏன் பேசப்படுவதில்லை என்று தனக்குள்ள திறமையைக் குறைத்து மதிப்பிட்டு, பிற பேச்சாளர்களோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருக்கின்றனர்.

ஆலிம் கோர்ஸ் பயிலாமல் மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்கள் நாம் ஒரு ஆலிம் கிடையாதே! நமக்கு அரபி இலக்கணம், மஸாயில் சட்டங்கள், குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடும் போது வருகின்ற உச்சரிப்புப் பிழைகள், ஸஹீஹான ஹதீஸ்கள் எவை? பலவீனமான ஹதீஸ்கள் எவை? என்றெல்லாம் தெரியாதே! என்று தன்னை மார்க்கம் படித்த ஆலிம்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தனது திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் நீங்கள் மார்க்க அடிப்படையில் எடுக்கும் முயற்சி நிச்சயம் உங்களுக்குப் பலனை ஈட்டித்தரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. தெரியாது என்று சொல்லிக்கொண்டு ஒதுங்கிச் செல்லாமல் நாமும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, “என்னைப்பற்றி ஒரு செய்தி கிடைத்தாலும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள்” என்ற மாநபியின் பிரகடனத்தை ஏற்று அதற்காக அனுதினமும் முயற்சி எடுத்து, தங்களால் இயன்ற அளவு மார்க்கத்தை எத்திவைத்துக் கொண்டிருக்கின்ற உங்களது முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும். இவ்வகையில் ஆலிமை விட நீங்கள் ஒரு படி உயர்ந்து தான் நிற்கின்றீர்கள்.

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்.

திருக்குர்ஆன்17:19

இது போன்ற உங்களுக்குள் இருக்கும் குறைபாடுகளை உங்களுக்கு ஷைத்தான் நினைவூட்டி உங்களது முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றான். எனவே அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் உங்கள் மீது உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை அதிகப்படுத்திக்கொண்டு தவறுகளாக நீங்கள் கருதுபவற்றை திருத்திக்கொண்டு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்களானால் நீங்களும் சாதனை படைக்கலாம்.

நீங்கள் இரு சாராரும் உண்மையிலேயே இறைவனிடத்தில் கூலியை எதிர்ப்பார்ப்பீர்களாயின் இது போன்ற விஷயங்கள் உங்களது அழைப்புப் பணிக்கு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

மக்கள் எதையும் பேசட்டும்; நமக்கு அவை தேவையில்லை என்று உலக விஷயங்களில் தமது இலட்சியத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுபவர்களை நாம் காண்கின்றோம். உலகத்திற்காக வாழ்பவர்களே பிறரது விமர்சனங்களைக் காதில் வாங்காமல் தன் விருப்பம் போல் செயல்படும் போது மறுமை லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இறைவழியில் செயல்படும் நாம் இது போன்ற விமர்சனங்களைத் தூக்கியெறிய வேண்டாமா?

நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூலியை வீணாக்க மாட்டோம். நம்பிக்கை கொண்டு, (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையின் கூலியே சிறந்தது.

திருக்குர்ஆன் 12:56,57

மேலும் இரு நபர்கள் ஒரே மேடையில் பயான் பேசும் போது, ஒருவரது பயான் ரசிக்கத்தக்க வகையில் உயர்ந்த நடையில் இருந்தது என்று மக்கள் குறிப்பிட்டால், இனி அந்தப் பேச்சாளரோடு நாம் பேசக்கூடாது என்று நினைக்கின்றோம். நம்மை விட சுமாராகப் பேசுவோருடன் நாம் பேசினால் நமது மனது புண்படாது என்றும் கருதுகின்றோம். இது தவறாகும்.

ஏனெனில் பிறரோடு நமது திறமையை ஒப்பிட்டுப் பார்க்கின்ற நாம், நமது பேச்சிற்கும், அவரது பேச்சிற்கும் மத்தியில் எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தன? எந்தெந்த இடத்திலெல்லாம் நாம் சறுக்கினோம்? மக்கள் எந்தெந்த இடத்திலெல்லாம் அவரது பேச்சை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்தனர் என்பதை சுதாரித்துக் கொண்டு, நமது உரைகளில் உள்ள தவறுகளைக் களைந்து நம்மை நாம் முறைப்படுத்திக்கொண்டால் அதுவே நாம் சிறந்த பேச்சாளராக ஆவதற்கு வழிவகுக்கும்.

எனவே நாம் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்போம் என்ற சிந்தனைப் போக்கும், விடாமுயற்சியும் தான் நம்மை சிகரத்திற்கு கொண்டு செல்லும் படிக்கட்டுகளாகும். இறைநம்பிக்கை, தன்னம்பிக்கை, விடாமுயற்சியைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் நீங்களும் சிறந்த பேச்சாளராக வருவீர்கள் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.

திருக்குர்ஆன் 3:139

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 3:160

எனவே தொடர் பயிற்சியையும், விடாமுயற்சியையும் விட்டு விட்டு, பிறரைப் பார்த்து புழுங்குவதிலோ, கவலைப்படுவதிலோ உங்களுக்கு எவ்விதப் பயனுமில்லை. உங்களிடத்தில் உள்ள தாழ்வு மனப்பான்மையையும், பதற்றத்தையும் தூக்கியெறிந்து விட்டு முழு கவனத்துடன் அழைப்புப் பணியில் ஈடுபட்டால் நீங்கள் தான் சிறந்த பேச்சாளர்கள்.

ஆனைக்கும் அடி சறுக்கும்

சிலரது பேச்சு ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே ஸ்டைலில் ஏற்ற இரக்கமில்லாமலும், சிலரது பேச்சில் உரத்த சப்தமும் ஆக்ரோஷமும் மட்டும் தான் இருக்குமே தவிர கருத்தாழமில்லாமலும் இருக்கும். சிலரது பேச்சில் கருத்தாழமிருக்கும். ஆனால் ஆக்ரோஷமில்லாமல் இருக்கும்.

சிலர் மக்களுக்குப் புரிகின்ற நடைமுறைத் தமிழில் பேசாமல் இலக்கணத் தமிழில் பேசுவதையும், சிலரது பேச்சு முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருப்பதையும், சிலரது பேச்சில் தலைப்புக்குச் சம்பந்தமான குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அதிகமில்லாமல் சொந்தக் கருத்துக்கள் மட்டுமே நிறைந்து காணப்படுவதையும் காண்கின்றோம்.

இவையனைத்துமே பேச்சில் கலந்திருக்க வேண்டும். இவ்வாறு பேச்சாற்றல் வழங்கப்பட்டவர்கள் ஒரு சிலரே! இவற்றில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அந்தப் பேச்சு மக்களிடத்தில் எடுபடுவதில்லை. எல்லோருடைய பேச்சுக்களிலும் இது போன்று ஏதேனும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எல்லோரும் அதனைப் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள், தனக்கு மட்டும் தான் இது போன்ற குறை இருக்கின்றது, மற்றவர்கள் தன்னை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவர்கள், திறமைசாலிகள் என்று எண்ணிக் கொள்கின்றனர். இச்சிந்தனை ஒருவருக்குள் நுழைந்தால் அது அவரை ஒரு போதும் வெற்றி பெறச் செய்யாது.

எனவே குறைகளைச் சரிசெய்ய வேண்டுமே தவிர நான் இனி பேச மாட்டேன்; நான் பேசுவது மக்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்துவதில்லை; நான் சொல்கின்ற கருத்து அவர்களுக்குப் புரிவதில்லை; நான் பயான் பேசியதில் எனக்கே திருப்தி இல்லை என்று கூறி பிரச்சாரப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடக் கூடாது. இதற்காகக் கவலைப்படுவது தவறில்லை. அதில் மூழ்கிப்போய் தாழ்வுமனப்பான்மை கொள்வதே தவறாகும். இவ்வாறு நீங்கள் வருந்துவது இறைவன் உங்களுக்கு கொடுத்த சிறப்பம்சங்களை மறுக்கும் நிலையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

7619 – وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ وَلاَ تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ فَهُوَ أَجْدَرُ أَنْ لاَ تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ ». قَالَ أَبُو مُعَاوِيَةَ « عَلَيْكُمْ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.

நூல்: முஸ்லிம் 5671

அல்லாஹ் எல்லா மனிதருக்கும் திறமைகளைக் கொடுத்துள்ளான். எந்த ஒரு மனிதராக இருந்தாலும் அவருக்குள்ளும் ஏதேனும் ஒரு சில திறமைகள் இருக்கத்தான் செய்யும். தனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை அவர் தான் தோண்டி எடுக்க வேண்டும். தனக்குள் இப்படிப்பட்ட திறமைகளும் இருக்கின்றது என்பதைப் பலர் உணர்வதில்லை. உணர்ந்தால் மட்டும் தான் அதை வெளிக்கொண்டு வர முடியும். அதுபோல எல்லோருக்கும் எல்லா திறமைகளும் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில குறைகள் எல்லோரிடத்திலும் இருக்கும். நம்மிடத்தில் இருக்கும் குறைகளை அலட்டிக் கொள்ளாமல் நமக்கிருக்கும் திறமைகளை நினைத்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

பொறாமையும், தாழ்வுமனப்பான்மையும்

ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக்குறைவுக்குப் பெயர் தான் பொறாமை. இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியமாகும். பிறருக்குக் கிடைத்துள்ள செல்வம், ஆற்றல், திறமை போன்றவற்றைக் கண்டு அவை அவரிடமிருந்து நீங்க வேண்டும் என நினைப்பது மோசமான பண்பாகும். ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் போது இது போன்ற கெட்ட எண்ணங்கள் அவனது மனதிற்குள் ஊடுறுவுவதை நம்மால் காணமுடிகின்றது.

73- حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَلَى غَيْرِ مَا ، حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ قَالَ : سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

நூல்: புகாரி 73

பிறரிடமுள்ள கல்வி, செல்வம் ஆகியவை என்னிடமிருந்தால் நானும் அவரைப் போன்று நல்லறங்கள் செய்வேன் என ஆர்வம் காட்டுவது சிறந்ததாகும். வணக்க வழிபாடுகள், நல்லறங்கள் விஷயங்களில் இத்தகைய போட்டி ஏற்படுவது ஆரோக்கியமானது தான். ஆனால் அதுவே பாவமான காரியங்களில் ஏற்படுவது தவறானதாகும்.

இவ்வாறு தடுக்கப்பட்ட பொறாமை என்ற செயல்கூடக் கல்வி விஷயத்தில் கூடும் என்று இஸ்லாம் கூறுகின்றது. மார்க்க ஞான விஷயத்தில் பொறாமைப்படுவதில் தவறில்லை. அதே சமயம் தாழ்வு மனப்பான்மை கொள்வதே தவறாகும்.

தாழ்வு மனப்பான்மையைத் தவிர்த்திடுவோம். எம். எஸ். ஜீனத் நிஸா, ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

No comments:

Post a Comment